நெய்யில் பிரட்டிய Bread துண்டுகள் சேர்த்த வெஜ்பிரியாணி/தயிர்வெங்காயம், சுடச்சுட வெள்ளை வெளேர்ன்னு பச்சரிசி சோறு, பருப்பு&நெய், முருங்கை&கத்தரி சாம்பார், வத்தக்குழம்பு, முட்டைக்கோசு+காரட்+பீன்ஸ் தேங்காய் போட்ட பொரியல், வாழைக்காய்/சேனைக்கிழங்கு மீன் வறுவல், வெண்டை+மொச்சை+கொத்தவரை புளிக்கூட்டு, உருளை+பட்டாணி குருமாக்கறி, ரசம், அப்பளம், பாயாசம், பச்சைமிளகாய் ஊறுகாய், மோர் இவை தான் என் பால்யத்தில் Standard கல்யாணச் சாப்பாடாக இருந்தது.
வாழை இலை போட்டு தண்ணீர் தெளித்து, வலதுகைப் பக்கமாக உப்பும் ஊறுகாயும் வைத்து தான் பரிமாறத் தொடங்குவார்கள். இதனுடன் பூந்தி லட்டு/ஜாங்கிரி/ பாதுஷா இவற்றில் ஏதோ ஒன்று. கல்யாணபந்திக்கென்றே ஒரு விசேஷ குட்டி சைசில். இந்த ஸ்வீட்டைப் பிட்டு வாயில் போட்டுக்கொண்டே இலையில் வரிசையாகப் பரிமாறப்படும் சாப்பாட்டை வேடிக்கை பார்ப்பது, அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யம், இந்த நொடியே கண்ணுக்குத் தெரிவது போன்ற ஒரு பேரனுபவமாக இருக்கும்.
முதலில் வரும் வெஜ் பிரியாணியில் நமக்கு விழும் பிரட் துண்டுகளின் எண்ணிக்கை தான் அந்த சாப்பாட்டின் மொத்த அனுபவத்துக்கான டீசர். பின்னாலேயே வரிசையாக ஒவ்வொரு காயாக வரத்தொடங்கும். வாழைக்காயா/சேனைக்கிழங்கா எதில் மீன் வறுவல் என்பது ஒவ்வொரு கல்யாணச்சாப்பாட்டின் போதும் சஸ்பென்ஸ் தான். குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு சாப்பிடுபவர்களுக்கு கண்டிப்பாக இரண்டு அப்பளம் வழங்கப்படும்.
பருப்பு நெய் சாப்பிட்டுட்டு இருக்கப்பவே அதுக்கு மேலேயே சாம்பார் போட்டுருவாங்க. சாம்பார் சாதத்தை அது மேலும் கொஞ்சம் மெருகேற்றி விடும். வெஜ் பிரியாணியோடு குருமாக்கறியை முடித்திருப்போம் என்பதால் இந்த பருப்பு/சாம்பார் சாதங்களோடு வாழை/சேனை மீன் வறுவல்/ புளிக்கூட்டு இவற்றைத் தொட்டுக் கொள்வோம்.
அடுத்து வரும் வத்தக்குழம்புக்கென்று ஒரு தனித்தகுதி உண்டு. சமையல்காரர் தன் கலையில் நிஜ சாமுராயா இல்லையா என்பதை இக்குழம்பு தான் நிர்ணயிக்கும். சுண்டை/மணித்தக்காளி வத்தல் போட்டு நல்லெண்ணெய் மிதக்க, புளிப்பான, கெட்டிக்குழம்பை சுடு சாதத்தில் பிசைந்து ஒரு உருண்டை வாயில் போடும் அந்த நொடி தான் அன்றைய சாப்பாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் தருணம். கவனித்தீர்களேயானால், மற்ற காய்கள் எல்லாம் இதுவரை தின்று தீர்ந்த நிலையில், மூலையில் காத்திருக்கும் முட்டைகோசு+இன்னபிற+தேங்காய்ப்பூ பொரியல் இந்த குழம்பு சாதத்துக்கென்றே ஆனது.இந்தக் குழம்பிற்குப் பின்னர் வரும் ரசம், எப்பேற்பட்டதாயினும் வெறும் வருகைப் பதிவு "உள்ளேன் அய்யா" வகை உணர்வையே தரும். வத்தக்குழம்பு/ ரசம் சாதத்துடன் பாதி அப்பளத்தை முடித்து விட்டு பாதி மீதி வைத்துக் கொள்வோம்.
அடுத்ததாக இலையை வழித்து ஓரமாக ஒதுக்கி விட்டு, அப்பளத்தை நொறுக்கிப் போட்டுக் கொண்டு நிமிர்வதற்கு முன்,அதன் மேல் பாயாசம் ஊற்றி விடுவார்கள். சேமியாவிற்கு நடுவே ஜவ்வரிசிகள் மிதப்பதைப் பார்ப்பதே குதூகலம் என்றால் சாப்பிடுவதைப் பற்றி தனியாக சொல்லவும் வேண்டுமா? என்னதான் இலையை வழித்து ஒதுக்கி இருந்தாலும் அந்த பாயாசத்தில் லேசாக ரச வாசனையும் சுவையும் வரும்.
பாயாசம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே மோருக்கு சோறு வேணுமான்னு கேட்டுக்கிட்டே ஒருத்தர் வருவார். சிலர் "சைடுல கொஞ்சமாக வைங்கன்னு" சொல்லி வாங்கிகொள்வார்கள். பின்னாடியே கறிவேப்பிலை தாளித்துப் போட்ட நீர் மோர் வாளியோடு இன்னொருவர். பெரும்பாலும் அந்தமோரை மட்டும் கையில் ஊற்றச்சொல்லி உறிஞ்சிக் குடிப்பது தான் நடக்கும். சில அனுபவஸ்தர்கள் ஏற்கனவே தண்ணீர் டம்பளரைக் காலி செய்து விட்டு அதில் இரண்டு மூன்று கரண்டியாக மோர் விடச்சொல்லி வாங்கிக் கொள்வார்கள்.
அந்த முதல் பத்தி வலது கை ஓர மிளகாய் ஊறுகாய் என்பது இலையில் சிறிது வீணானாலும், அடுத்தடுத்த நாட்களில் கல்யாண வீட்டுக்காரரின் முக்கியசொந்தக்காரர்களுக்கு பார்சல் அனுப்புவதற்காகவே பிறந்தது. காரமும் புளிப்பும் இனிப்புமாக "அப்படியே சாப்பிடலாம்" ரகத்தில் அள்ளும்.செய்யும் போதே சமையல்காரரிடம் "சேர்த்து செய்ங்க" என்று சொல்லியிருப்பார்களோ இல்லை அவரே புரிந்துகொள்வாரோ, எல்லா கல்யாணத்திலும் மிஞ்சும். பகிரப்படும்.
மண்டபத்தின் fanக்கு அடியில் இடம் பிடித்து உட்கார்ந்து, வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு
"சாப்பாடு ரொம்ப நல்லார்ந்துச்சு" என்று ஒரு கூட்டம் பேசிக்கொண்டு இருக்கும் போது கல்யாணப் பெண் அழுது கொண்டே மாப்பிள்ளை வீட்டுக்கு வேனில் கிளம்பும்.
இன்றைக்கு, கல்யாணப் பந்தியை caterers பிடித்துக் கொண்டார்கள். மாப்பிள்ளை வீட்டுக்குக் கிளம்பும் போது பெண்கள் முன்பு போல அழுவதும் இல்லை.

No comments:
Post a Comment