Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, 18 December 2013

கடசில என்னையும் நீயா நானா பத்தி பதிவெழுத வெச்சுட்டாங்களே.... :(

http://www.youtube.com/watch?v=Y83cTOlltlE&feature=youtu.be&desktop_uri=%2Fwatch%3Fv%3DY83cTOlltlE%26feature%3Dyoutu.be&app=desktop

அந்த பெர்சனல் ஸ்பேஸ் நீயா நானா பார்த்துட்டேன். 
முன்குறிப்பு: விஜய் டிவியில் பார்க்கறத விட அடுத்த நாள் யூடியூபில் பாக்கறது ஈசியா இருக்கு. விளம்பரமின்றி... ஆனா லைவ் ட்விட்டர் அப்டேட் பண்ண முடியாது. அது பரவால்ல...மறுநாள் பதிவெழுதிக்கலாம்ன்னா யூடியூபில் பாக்கறது நேர மிச்சம்.

பொண்டாட்டிஸ் பெர்சனல் ஸ்பேஸ் குடுக்க மாட்டேங்கறாங்களாம்... மேட்னஸ்(madness)ன்னு என்னவோ ஒண்ணு இருக்காம் (இந்த வார்தையை சொன்னதுக்கு பரிசு வேற). அத கல்யாணம் ஆனதும் தொலைச்சுட்டு புருஷனோட மேட்னஸ்ல தலை இடுராங்களாம்... சப்பா... உலக மகா பீலிங்க்ஸ்... 

கணவர்களே... நாங்கல்லாம் மேட்னசை தொலைக்கவெல்லாம் இல்ல... கல்யாணம் ஆனதும் எங்க மேட்னெஸ்சே நீங்களா ஆயிடுறீங்க.... அதான் எங்க பிரச்சனையே... எங்க எல்லா ரசனைகளையும் பின்னுக்கு தள்ளிட்டு.... உங்க கூட செலவழிக்கும் நேரங்கள் தான் எங்கள் மேட்னஸ் லிஸ்டில் முதலிடத்துக்கு வந்துடுது....

"நம்ம மட்டும் ஜாலியா இல்ல... இவன் மட்டும் என்ஜாய் பண்றான்"ன்ற வயிதெரிச்சல் தான் அவங்களோட நண்பர்கள், கிரிக்கட் ஆர்வம், FDFS முதலான அவங்க பெர்சனல் ஸ்பேஸ்ல தலையிட வெக்குதாம். அது வயித்தெரிச்சல் இல்ல .. "கல்யாணம் ஆனதும் நமக்கு உலகமே இவன் தான்னு ஆகிடுது.... ஆனா நானில்லாத/எனக்கு இடமில்லாத நிறைய உலகங்கள் இவனுக்கு இருக்கேன்னு" எங்களுக்கு வர்ற ஆதங்கம். "எங்களோட எல்லா சந்தோஷ தருணங்கள்லயும் நீங்க கூட இருக்கனும்"ன்னு நாங்க நெனைக்கறது மாதிரி உங்களுக்கு இல்லையேன்னு வர்ற கழிவிரக்கம்.

அதுல ஒருத்தர் சொல்றார். சாயங்காலம் ஆபீஸ் முடிச்சு வந்து ஃப்ரென்சுக்கு போன் பேசணுமாம்... பிரவுஸ் பண்ணனுமாம்.... அதான் பெர்சனல் ஸ்பேஸாம்... எதிர்த்தாப்புல உக்காந்து இருந்த நிறைய மனைவியர் ஹோம் மேக்கர்ஸ். நாள் முழுக்க வீடு, குழ்ந்தைகள்ன்னு இருக்கவங்க நீங்க ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்குள்ள வந்தோன, "ஏங்க சாப்பிட்டீங்களா.. லஞ்ச் நல்லா இருந்துச்சான்னு கேக்கராங்கன்னா அது உங்க மேல உள்ள அக்கறை பாஸ். பதிலுக்கு "நீ நேரத்துக்கு சாப்டியா.... பசங்க படுத்தினாங்களா... லஞ்ச் நல்லா இருந்துச்சு.... "ன்னு அவங்க கூட பேசாம உங்களுக்கு என்னய்யா ப்ரவுசிங்... ஃபிரெண்ட்ஸ் கூட பேச்சு...கிரிக்கட் மேட்சு? இதுக்கு கோபி வேற சப்போர்ட். அடிங்......

கோபி சார் ஒரு லேடிய மடக்கறதா நெனச்சு ஒரு கேள்வி கேட்டார்.
"உங்க குழந்தை தன் நண்பர்களோட நாலு மணி நேரம் ஜாலியா விளையாண்டா சந்தோசப்படுவீங்க தான? அப்ப என் புருஷன் வெளாண்டா மட்டும் கடுப்பாறீங்க?"
அடடா... என்ன ஒரு கொடுமையான லாஜிக் இது?
குழந்தைகளுக்கு விளையாடறது தான் வேலை....இந்த குடும்பஸ்தர்கள் இருக்க வேலைய எல்லாம் விட்டுட்டு விளையாடறதும் அதுவும் ஒண்ணா?

அது கூட இருக்கட்டும்....குழந்தைகள் வெளையாடிட்டு சொன்ன நேரத்துக்கு 
வீட்டுக்கு திரும்பலன்னா முதுகுல நாலு போடறோமே? அத மாறி இந்த கணவர்களுக்கும் போடலாமா?

சச்சின் டெண்டுல்கரை அஞ்சலி படுத்தாம விளையாட விட்டதுனால தான் அவர் இன்னைக்கு இந்த உயரத்த தொட்டார்ன்னு ஏதோ கமென்ட் படிச்சேன். யோவ்... சச்சினுக்கு கிரிக்கட் தொழில். நீங்க ஆபீஸ் போற மாதிரி... "ஏங்க ஆபீசுக்கு லீவு போடுங்க... நம்ம ரெண்டு பேரும் பேசிட்டு இருப்போம்" ன்னு எந்த பொண்டாட்டியும் சொல்றதில்ல..... சச்சினே கூட ஒரு டூர் சீரிஸ் முடிச்சு வந்ததும் பொண்டாட்டி புள்ளைங்களை பாக்காம... " ஐ ஹேவ் எ பாஷன் பார் சாப்ட்வேர் ப்ரோக்ராமிங். சண்டே சண்டே பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து ப்ரோக்ராமிங் பண்ணப் போறேன்னு" சொன்னார்ன்னா.. அஞ்சலி கடுப்பா தான் ஆவாங்க....

ஒரு பேட்டர்ன் கவனிச்சீங்களா? அங்க உக்காந்து இருந்தவங்க யாரும் புதுசா கல்யாணம் ஆனவங்க இல்ல.... வயசானவங்களும் இல்ல.... ஒன்றோ இரண்டோ குழந்தை பெற்ற முப்பது டு நாற்பத்தைந்து வயதிற்குள் உள்ளவங்க தான்.... இந்த வயசு ஆண்களின் பொதுவான ரவுசு தான் இந்த பெர்சனல் ஸ்பேஸ். அதாவது லவ் பண்றப்போவும் சரி, புதுசா கல்யாணம் ஆகி , குழந்தை எல்லாம் பெறும் முன்பும் சரி... இவங்கள்ல நிறைய பேரு கேர்ள் பிரெண்ட்/பொண்டாட்டிக்கு பிறகு தான் மத்ததெல்லாம் ன்னு தான் இருந்து இருப்பாங்க.... ஆனா ரெண்டு புள்ளைங்க பெத்து ஒரு நடுத்தர வயதுக்கு வந்ததும் பொண்டாட்டி பின்னுக்கு போய்டுவா... பேஷன், மேட்னஸ் எல்லாம் முன்ன வந்துடும். 

உங்களுக்கெல்லாம் "நடுத்தர வயதைக்கடந்து முதுமைக்குள் நுழைதல்" என்ற ஆப்போடு கடவுள் காத்து இருக்கார். அப்போ என்னல்லாம் மாறி இருக்கும்?
1.உங்க பொண்டாட்டிஸ் உங்க பேஷன், பிரெண்ட்ஸ், கிரிக்கட், FDFS எல்லாத்தையும் புரிந்தோ/எல்லாத்தோடையும் போராடி களைத்து இந்தாள் இப்படித்தான்ன்னு ஒரு முடிவுக்கு வந்தோ உங்களை ஃப்ரீயா விட்டுருப்பாங்க.... அதாவது நீ எதனாலும் கட்டிட்டு அழு; உன்னைய கேக்கல இனி" ன்னு....
2.குழந்தைகள் வளர்ந்து படிப்பு, நண்பர்கள்ன்னு அவங்க பெர்சனல் ஸ்பேஸ் தேடி போய் இருப்பாங்க. உங்க மனைவிகளுக்கு நிறைய நேரம் இருக்கும். அதனால் அவங்க படிக்கறது பாடறதுன்னு அவங்களோட பழைய மேட்னஸ் எல்லாத்தையும் தூசு தட்டி இருப்பார்கள்.
3.உங்களோட வீகென்ட் கிரிக்கட் ஆடின நண்பர்கள் எல்லாம் "மச்சி பையன் காலேஜ் அட்மிசன்ல பிசியா இருக்கேன்" ன்னு சொல்லிடுவாங்க.
4.உங்க பெர்சனல் ஸ்பேசில் இருந்த கிரிக்கட்டும் புட்பாலும் உங்களுக்கு போர் அடித்து போய் இருக்கும். 

இருபதுகளின் ஸ்வீட் நத்திங்க்ஸ் மாதிரி ஐம்பதுகளின் ஸ்வீட் சம்திங்க்ஸ்க்கு மனைவி மட்டுமே அப்போதைக்கு உங்களுக்கு வேண்டி இருக்கும். 

அப்போவும், தான் அப்ப தான் தூசி தட்டி இருந்த மேட்னஸ் எல்லாத்தையும் தூக்கி கடாசிட்டு உங்க பொண்டாட்டிகள் தான் உங்களுக்காக வருவாங்க....அப்போ இதே தம்பதியரை கூப்பிட்டு எதிர்க்க எதிர்க்க உக்கார வெச்சு கோபி ஒரு நீயா நானா வைக்கணும்...

Thursday, 28 February 2013

Shake 'em up with ScootyGiri



சென்ற திங்கள் கிழமை மாலை சுமார் ஐந்து மணியளவில் நான் ஒரு யமஹா பைக்கை உடைச்சுட்டேன்.

பஸ் முழுக்க இடம் இருந்தாலும் டீனேஜ் பொண்ணுங்களை இடிச்சுட்டு நிக்கற சில பெருசுஸ் மாதிரி ஆபீசின் அவ்ளோ பெரிய பார்க்கிங்கில் என் ஸ்கூட்டி பக்கத்துல ஒருத்தன் இல்ல ர் யமஹாவை நிறுத்தி இருந்தார்.

நான் சாயங்காலம் வீட்டுக்கு போற அவசரத்துல வண்டிய எடுக்க யமஹால இடிச்சு...நம்ப மாட்டீங்க... நிஜமாவே யமஹா கீழ விழுந்துச்சு.

அப்பன்னு அங்கே ஒரு வெட்டுக்கிளி, குருவி கூட இல்ல....(எத்தனை நாளைக்கு தான் ஈ காக்கான்னு...ஒரு சேஞ்சுக்கு...) உடனே நான் என் வண்டிய அப்டியே நிறுத்திட்டு செக்யூரிடிகிட்ட போனேன்.

இந்த மாதிரி "அங்க வண்டி விழுந்துச்சு...கொஞ்சம் என்கூட வாங்க..."ன்னு கூப்பிட்டு போய் வண்டிய தூக்கி வெச்சா ...

நீங்களே சொல்லுங்க... பொதுவா ஒரு பைக் இடது பக்கமா விழுந்தா என்னவெல்லாம் உடைய வாய்ப்பு இருக்கு?சைட்  வியூ மிரர், இல்ல ரொம்ப பலமா விழுந்தா லெப்ட் இன்டிகேடர், கிக் ஸ்டார்டர், லெக் சப்போர்ட் இதெல்லாம். ஆனா இந்த பைக்ல இதெல்லாம் பத்திரமா இருக்க, ஹெட்லைட் கண்ணாடி காலி.....சுக்கு ஆயிரமா... சில்லு சில்லா... இன்னும் இந்த உவமையில் என்னவெல்லாம் இருக்கோ..அத்தனையாவும் போச்சு ..

செக்யூரிடியிடம் என் நம்பர், இமெயில் முதலானவைகளை கொடுத்து பைக்காரர் வந்தால் என்னை தொடர்பு கொள்ள சொல்லிவிட்டு வீட்டுக்கு போய்ட்டேன்;

"போன முறை நம்ம பார்க்கிங்கில் நம்ம கார்ல எவனோ கோடு ...கோடு ன்னு கூட சொல்ல முடியாது..கிட்டதட்ட ரோடே போட்டுட்டு சொல்லாம கொள்ளாம ஓடிட்டான்.டூ வீலர்க்கே இவ்வளவு ஓவர் ரியாக்சன் பண்ண ஆள் நீயா தான் இருப்ப...நல்லா வருவ ...." ன்னு கதிர்.

"யமஹா வண்டி ஹெட்லைட் கண்ணாடி எவ்வளவு இருக்கும்"ன்னு ட்விட்டர் பேஸ்புக்ல எல்லாம் விசாரிச்சுட்டு மறுநாள் ஆபீஸ் வந்தேன்.

வந்து கொஞ்ச நேரத்துலயே  எதிர்பார்த்த மாதிரி ஆபீஸ் மெசஞ்சரில் "பைக் க்ரீவன்ஸ் பத்தி பேசணும். கால் மீ" என்றொரு மெஸேஜ். கால் பண்ணிட்டு, நேர்ல பேசறேன்னு சொல்லி ஏழாவது மாடிக்கு போனேன்.அவன நீங்க பாக்கணுமே...பைக்  ஓட்றவன் எல்லாரும் அஜீத் இல்ல....அவ்ளோ தான் சொல்ல முடியும்.

நீள முடி (பையன் தான்), ப்லாரசன்ட் கலர் சட்டை, முக்கா பேண்ட், கவ் பாய் ஷூ.... (அடிச்சிட போறான்...ன்னு கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டே சொன்னேன்)

"இந்த மாதிரி ஒடஞ்சுட்டு...காசு குடுத்துடறேன்"

"அது சாதாரணமா கடைல வாங்கின பைக் இல்ல...ஒரு ஒரு பார்ட்டும் பாத்து பாத்து வாங்கி அசெம்பில் பண்ணது (நீயே அசெம்பில் பண்ண மாதிரி தான் இருக்க....இப்ப புரியுது....மத்ததெல்லாம் ஒடையாம ஹெட்லைட் கண்ணாடி ஒடஞ்ச மர்மம்) அந்த கண்ணாடி மட்டும் தனியா கெடைக்காது. முழு லைட்டையும் மாத்தணும். அப்றோம் ஃ ப்யூயல் டாங்க்கு நெளிஞ்சுருக்கு.
இண்டிகேட்டர் கூட வேலை செய்யலை...இப்புடி எப்டி நடந்துச்சு....எனக்கு ஆச்சர்யமா இருக்கு..." - அவன் சொல்லிட்டே போக என்கிட்டே ரீஇம்பர்ஸ் பண்ணி ஒரு புது பைக்கே வாங்க திட்டம் தீட்டற மாதிரி இருந்துச்சு எனக்கு....

"சரி மன்னிச்சுடு.ரொம்ப பக்கத்துல பார்க் பண்ணதால இடிச்சுடுச்சு...நீ உன் பைக்க காமி..நான் எதுக்கெல்லாம் காசு குடுக்கணும்ன்னு பேசி தீத்துக்குவோம்"
(ஆங்கில உரையாடல் என்பதால் ஒருமையில் மொழிபெயர்த்துட்டேன்)

"எனக்கு கூட இப்படி நடக்கலாம் ...எதுக்கு மன்னிப்பெல்லாம்...(ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) இன்பாக்ட் உடைஞ்சதையே நான் கவனிக்கலை...செக்யூரிட்டி வந்து மேடம் போன் பண்ண சொன்னாங்கன்னு சொல்ற வரைக்கும்...ஹெட்லைட்ட மட்டும் மாத்தி குடு " (அவன் கூட போன் பண்ண சொல்றவங்கல்லாம் கௌசல்யா இல்லன்னு நெனச்சுருப்பான்)

"இல்ல நீயே மாத்திடு...நான் காசு தந்துடறேன்"

சொல்லிட்டு வந்துட்டேன்.

நேத்து இன்னொரு மெயில்.
"லக்கிலி அந்த கண்ணாடி கிடைச்சுடுச்சு.மாத்திட்டேன் கண்ணாடி 166/- மெக்கானிக் சார்ஜ் 66/-...நீ 200/- குடுத்தா போதும்"  (வான்டடா வந்து ஆஜர் ஆனதால எனக்கு பத்து பெர்சண்ட் தள்ளுபடி)

இன்னைக்கு பணம் குடுத்துட்டு வந்ததும் பின்னாடியே இன்னொரு மெசேஜ்.

"Appreciated…legitimate ppl are hardly ever found in this globe…thnks" (என் கால் நகம் பேர்ந்துடாம, பல்லு ஒடையாம, இருநூறு ரூபாய்க்கு போஸ்ட்க்கு மேட்டர் தேத்தி குடுத்ததுக்கு நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..)

இன்னைக்கு ஒரு ராயல் என்பீல்ட் பக்கத்துல வண்டி நிறுத்தி இருக்கேன். ஆமா ராயல் என்பீல்ட் ஹெட்லைட் கண்ணாடி என்ன விலை?

Wednesday, 9 March 2011

ஒரு மூக்கு கதை

மூக்கில் என்னவெல்லாம் போடலாம்?பெண்கள் மூக்குத்தி போடலாம். கணவனுக்கு பிடித்தால். மூக்கே குத்தாமல் நயன்தாரா மாதிரி வளையம் போட்டுக்கலாம். சளி பிடித்தால் விக்ஸ் போடலாம். கொஞ்சம் அதிரடியான ஆளாக இருந்தால் டைகர் பாம் ஜண்டு பாம் கூட போடலாம்.மூக்குப்பொடி போடலாம்.மூக்கின் மேல் கண்ணாடி போடலாம். அடுத்தவர் விஷயத்தில் நாம மூக்கையே கூட போடலாம். ஆனால் மூக்குக்குள் ஆரஞ்சு பழ கொட்டையை போடலாமோ? எங்க அர்ஜுன் போட்டுக்கிட்டான்.



முந்தா நாள் இரவு, குடும்பமாக ஹாலில் உட்கார்ந்து இருந்தோம்.டிவியில் அயர்லாந்துடன் இந்தியா மேட்ச்.'யூசுப் பத்தனை அனுப்பாமல் டோனி ஏன் பேட்டிங் பண்ண வந்தான்?' என்று ட்வீட்டிக்கொண்டு சைடில் ஆபீஸ் வேலை. சோபாவில் உட்கார்ந்து இருந்த அர்ஜூன் திடீர்ன்னு "அம்மா மூக்கு..."ன்னான்.

வயிற்றில் அர்ஜுன் இருந்த பத்து மாதமும் கடவுளுக்கு வித விதமான கோரிக்கை வைப்பேன். அதில் ஒன்று என் குழந்தைக்கு எனக்கு மாதிரி சப்பை மூக்கு இருக்க கூடாதென்பது. ஆனால் கேட்டதற்கு மாறாக அதே மாதிரி மூக்கு. நூலை போல் சேலை.

"அம்மா நீ எனக்கு சின்ன வயசில் மூக்கை நல்லா நீவி விட்டு இருந்தா இப்போ இப்டி சப்பையா இருந்து இருக்காதில்ல?" அடிக்கடி எங்கம்மாவிடம் இதை கேட்பேன்.

"ஏதோ நீவி விட்டதால தான் இந்த அளவாவது இருக்கு.பொறந்தப்போ மூக்கு இருக்க வேண்டிய எடத்துல ரெண்டே ரெண்டு ஓட்டை மட்டும் தான் இருந்துச்சு தெரிஞ்சுக்கோ" தவறாமல் இப்படி பதில் சொல்வாங்க எங்கம்மா.

எனக்கு சுபா என்றொரு தோழி இருந்தாள். எனக்கு நேர்மாறாக அவளுக்கு ரொம்ப பெரிய மூக்கு. நாங்கள் இருவரும் அடிக்கடி சொல்லிக்கொள்வோம். "கடவுள் நம்ம ரெண்டு பேர் மூக்குலயும் ஒரு ஒரு இன்ச்ல வெளாடிட்டார்"ன்னு...பிரேமலதான்னு ஒரு ஸ்கூல் மேட். அவளுக்கு திடீர்ன்னு விபரீத கற்பனைகள் வரும். திடீர்ன்னு ஒரு நாள் "மனுஷனுக்கு மூக்கே இல்லன்னா முகத்துக்கு சோப்பு, பவுடர்லாம் போடும் போது நடுவுல இடிக்காது" ன்னா. "த்ரீ இடியட்ஸ்" படத்துல அமீர்கானுக்கு கடைசி சீன் வரை கிஸ் பண்றப்போ மூக்கு இடிக்குமான்னு உலக மகா சந்தேகம் இருக்கும்.

சரி கதைக்கு வருவோம்.

"அம்மா மூக்கு..."

"மூக்குக்கு என்னடா?"

"கண்ணாடி எடுத்துட்டு வாங்க, பாக்கணும்"

"ஆமா இப்போ எதுக்கு கண்ணாடி?"

"ஆரஞ்சு விதையை மூக்குள்ள போட்டுக்கிட்டேன்"

"என்னது?"

.

.

.

பதறி போய் மூக்குக்குள் டார்ச் அடித்து பார்த்தால் ஒரு ஆரஞ்சு விதை இருப்பது தெரிந்தது. எனக்கு மூச்சடைத்தது. ஞாயிற்றுக்கிழமை அதுவும் அந்த நேரத்தில் எங்கள் ஏரியாவில் டாக்டர் கிடைப்பதென்பது அயர்லாந்துடன் டாஸ் ஜெயித்தும் பவுலிங் என்றாரே டோனி அது மாதிரி ஒரு முரண். 24*7ஆஸ்பத்திரி உதவியை தான் நாட வேண்டும். அவர் வேறு ஊரில் இல்லை. நானே ஏதாவது முயற்சி செய்து ஆரஞ்சு விதையை எடுக்க பார்க்கலாமா என்று யோசித்தேன். ஒரு துணியை சுருட்டி மூக்கின் இன்னொரு துளையில் விட்டால் தும்மல் போட்டு அந்த விதை வெளியில் வந்து விடலாம் என்ற நப்பாசையில் முயற்சித்து கொண்டிருந்தேன்.பதட்டத்தில் கை நடுக்கம். இப்படி பண்ணிவிட்டானே என்று கோவம்.

கீழ்வீட்டில் ஒரு பெண். அனஸ்தீசியா நிபுணர்.சமயோசிதமாக அவரிடம் ஓடி இருக்கிறார் என் மாமியார். 'இந்த மாதிரி நிலைமை என்ன செய்யலாம்' என்று கேட்டதும் அவர் இவனை அவர் வீட்டுக்கு கொண்டு வர சொன்னாராம். அங்கே எடுத்து கொண்டு போனதும் இவன் பயந்து அழ ஆரம்பித்து விட்டான். அவர்கள் வீட்டில் forceps வைத்து இருந்தார்கள். ஒரு பவர்புல் டார்ச்சை வைத்து இவன் மூக்கிற்குள் லைட் அடித்து பார்த்து, 'அப்படியே உள்ளே தள்ளிவிட்டால் தொண்டைக்குள் போய் விடும், துப்பி விடலாம் அல்லது முழுங்கி விடலாம்' என்றார். எனக்கு என்னவோ அவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு விடுமோ என்று பயமாக இருந்தது. 'முடிந்தால் வெளியில் எடுத்து விடுங்களேன்' என்றேன்.

அவர் போர்செப்சை இவன் மூக்கிற்கும் கொண்டு போனதும் இவன் பயந்து அழ ஆரம்பித்து விட்டான். ஒரு வழியாக இவன் கண்களை மூடிக்கொண்டு போர்செப்சை மூக்கிற்குள் கொண்டு போயும், இவன் திமிறிய திமிறில் மூக்கிற்குள் பட்டு ரத்தம் கொட்டிவிட்டது. அடுத்தவர் வீட்டில் வைத்து பொங்கிக்கொண்டு வரும் அழுகையை அடக்குவது மிக சிரமம்.எப்படியோ சமாளித்தேன்.

ஆரஞ்சு கொட்டையை எடுத்து விட்டு, இவன் மூக்கை துடைத்து ஆன்டிசெப்டிக் ஜெல் எல்லாம் போட்டு விட்டார்கள். இவனும் சற்று அமைதி ஆனான். அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது கவனித்தேன். ஒரு போர்டு வைத்து தினம் ஒரு குறள் என்று எழுதி வைத்து இருந்தார்கள்.

அன்றைய குறள்
காலத்தினார் செய்த நன்றி...


மறுநாள் ஆபிசில் ஒரு பெண்ணிடம் 'அர்ஜுன் இப்டி பண்ணிட்டான்' என்று
புலம்பிக்கொண்டு இருந்தேன்.

"All kids do this yaa. I also put a greenpea in my nose when I was small. You ask you mom; you would have done something similar" என்றாள். உடனே எங்கம்மாவிற்கு போன் செய்தேன்.

'அம்மா நேத்து ராத்திரி அர்ஜூன்....'

'...அச்சச்சோ அப்றோம்?'

..
..
..
"பாரும்மா...அவங்கப்பா வேற ஊர்ல இல்லாத நேரத்துல என்னை எப்டி படுத்தி வெக்கறான்னு"

"ச்ச குழந்தையை திட்டாதே. நான் கூட சின்ன புள்ளையா இருந்தப்போ இப்படித்தான் மருதாணி விதையை மூக்குல போட்டுக்கிட்டேனாம்; உங்க அம்மாச்சி சொல்வாங்க"

*******

Tuesday, 31 August 2010

Meal with Monkeys

அலுவலகத்தின் இணைய மாதாந்திரி, "Potpourri " யின் ஆகஸ்ட் எடிஷனில் வெளியானது.

Have you ever shared a meal with a monkey? Well, I have and not just once!


About seven years ago, five of us, happily planned a day out to Nandi hills.

This story is not about where Nandi Hills is and how we went there etc. You always have internet to help with those details. There is one piece of information that you can’t fine on the internet: Carry a long stick when you go there. Let me tell you why…

We, 5 girls, were staying together back then and we cooked/packed chapattis and chole for a grand lunch up hill. As we got down at the top of the hill, we were all really hungry. The first thing we did was to open our lunch pack. We were thick friends, so thick that we planned to eat together from the same plate. So there it was, one plate of food and five hands attacking it. Suddenly we realized there was a sixth hand, much faster than the rest, which looked quite different than the manicured, nail polished hands, so to say! Only God Nandeeshwar knows when Mr. Monkey silently joined us. And he enjoyed our cuisine, as we all ran meters away from our food and him.

I said not just once! This time, about 2 months back, Nandi Hills with my family… Curd rice and potato fry. On our way, I was describing my earlier experience, and hence we decided to finish lunch down hill and then drive up. To our misconception, about twenty monkeys surrounded us as we just opened the box. This time no sharing meal!! They just took away the all the food including the box.

Later I gathered that the monkeys are scared of sticks and it seems the longer the stick, the farther they stay. So, unless you want to share your meal with the monkeys, carry a long stick along.

Earlier Nandi Hills was called Ananda Giri meaning The Hill of Happiness and it indeed is.

Tuesday, 3 August 2010

Police Story

 'எங்க பரம்பரையிலேயே யாரும் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் தலை வைச்சு கூட படுத்தது இல்லை'
எங்கள் குடும்பத்தில் யாரும் இப்படி சொல்லிக்கொள்ள முடியாது. ஏன்னா, நான் நேற்று போலீஸ் ஸ்டேஷன் சென்றேன்.

ஒரு அட்ரஸ் வெரிபிகேசன் விஷயமாக நேற்று காலை சுமார் பதினொரு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினோம். நான், கணவர், குழந்தை.போலீஸ் ஸ்டேஷன் அட்ரஸ் "எல்லோ பேஜஸ்" மூலமாக அறிந்து கொண்டு, அந்த ஏரியாவில் சென்று ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் எப்படி போக வேண்டும் என்று விசாரித்தோம். "இப்படியே நேரா போங்க, இடது பக்கம் வரும்" என்றார்;அவரை பார்க்க போலீஸ் மாதிரியே இருந்தார். எனக்குள் ஏதோ ஒரு பயங்கர ஆர்வமும் டென்சனும் கலந்த ஒரு பீலிங் இருந்தது.

தமிழ் சினிமா பார்த்து பார்த்து போலீஸ் ஸ்டேஷன் என்றால் இப்படி இருக்கும் என்று என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு பிம்பம் இருந்து இருக்கும் போலும். பொன்னம்பலம் சாயலில் ஒரு இன்ஸ்பெக்டர் மேஜை மீது கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருப்பார்; ஜெயிலுக்குள் கம்பிக்கு பின்னிருந்து இரண்டு மூன்று தலை எட்டி பார்க்கும். நாம் 'அட்ரஸ் வெரிபிகேசன்க்காக வந்து இருக்கேன்' என்று சொன்னதும், "போ போ; அப்படி உக்காரு; கூப்பிடறோம்" என்று விரட்டி அடிப்பார்கள். இப்படி ஏதேதோ யோசித்து கொண்டு போன எனக்கு அந்த கட்டடத்தை, பெரிய கட்டடம் என்று சொல்வதற்கில்லை; ஒரு சிறிய வீடு சைசில் இருந்த ஸ்டேசனை பார்த்ததும் முதல் அதிர்ச்சி, சினிமாவில் வர்ற மாதிரி செவப்பு கலரில் இல்லை. மஞ்சள் கலர் பெயின்ட், அதுவும் பெயிண்ட் அடித்து பல வருடம் ஆகி இருக்கும் போலும்.

வாசலில் ஒரு பக்கம் சிலர் நின்று கொண்டு இருந்தார்கள். மற்றொரு பக்கம் கிட்டத்தட்ட இருபது டூ வீலர்கள் அழுக்கடைந்து போய் நின்று கொண்டு இருந்தன. திருட்டு கேசில் பிடிதததோ, நோ பார்கிங்கில் அள்ளியதோ தெரியலை. பாதி உடைந்த நிலையில் ஒரு சேர் அந்த டூ வீலர்களின் மீது கிடந்தது.

வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தோம்.கதவருகில் நின்று கொண்டு ஒரு போலீஸ்காரர் கையில் பலாப்பழத்தின் ஒரு பகுதியை வைத்து கொண்டு அதில் இருக்கும் சுளைகளை லாவகமாக பிய்த்து பிய்த்து தின்று கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் பீச்சில் பலூன் சுடுவோமே, அதே மாதிரி சைசில் ஒரு நீளமான துப்பாக்கி, சுவரில் சாய்த்து வைக்க பட்டு இருந்தது. அதன் குழல் பகுதியில் அவருடைய தொப்பியை மாட்டி இருந்தார்.

'ஹலோ சார்' என்றார் கதிர்.

'வாங்க வாங்க' திருமண வீட்டில் வரவேற்பதை போல வரவேற்றார் கன்னடத்தில்.

'பலாச்சுளை சாப்பிடுங்க' எனக்கு யாரோ முகத்தில் பலா சக்கை வைத்து அறைந்ததை போல் இருந்தது.

'பரவாகில்லா சார்; ஒரு அட்ரஸ் வெரிபிகேசன் செய்யணும்" கதிர் அவருக்கு தெரிந்த கன்னடத்தில்.

'மொதல்ல நீங்க பலாச்சுளை எடுத்துக்கோங்க, பையனுக்கும் கொடுங்க'

'இல்ல சார், அவனுக்கு சளி பிடித்து இருக்கிறது' கதிர் ஒரு சுளையை பிய்த்து எடுத்து கொண்டார்.

'மேடம் உங்களுக்கு...' என்னிடம் நீட்டினார்.

'இல்லை வேணாம் தேங்க்ஸ்'

'இப்படி உக்காருங்க; குமார் வருவார்; வந்ததும் பேசுங்க' என்று ஒரு பெஞ்சை காண்பித்து விட்டு சுளையில் பிசியானார்.

அந்த பெஞ்சில் ஏற்கனவே ஒரு இளைஞன் (ஆப்ரிக்கர் என்று நினைக்கிறேன்; பெங்களூரில் நிறைய ஆப்ரிக்கர்கள் தென்படுகிறார்கள்) உட்கார்ந்து இருந்தான். நாங்களும் உட்கார்ந்து கொண்டோம்.ஸ்டேசன் முழுக்க ஒரே பலாப்பழ வாசனை. உள்ளே இருந்த அத்தனை பெண்/ஆண் போலீஸ் கையிலும் பலாப்பழத்தின் ஒரு ஒரு பகுதி.லாவகமாக உரித்து உள்ளே தள்ளி கொண்டு இருந்தார்கள்.

நாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து சுற்றி முற்றி பார்த்தேன். கம்பிக்கதவு போட்ட அறை கண்ணில் படவே இல்லை. ஒரு மேஜை போட்டு அதில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். எங்களை அடுத்து ஒரு அறை. அறை முழுக்க ஒரே பைல்கள். பேப்பர்கள். அந்த பக்கம் இன்ஸ்பெக்டர் என்று போர்ட் போட்டு அரை(half) கதவு போடப் பட்டு இருந்தது. உள் அறையில் இருந்து வந்து ஒருவர் என்னிடம் 'பேர் என்ன?' என்று கேட்டு விட்டு 'சற்று பொறுங்கள்' என்று சொல்லி விட்டு போனார். அவர் யூனிபார்மில் இல்லை. மப்டி போலும்.


நாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்துக்கு பின்னால், ஒரு போர்டில், 'Civilians Rights' என்று FIR பற்றின ரூல்ஸ் எழுதி வைத்து இருந்தார்கள்.Non Fatal Accidents க்கு FIR காப்பி வேண்டும் என்றால் 50Rs கட்ட வேண்டுமாம்.Fatal என்றால் 81Rs.நாம் ஏதாவது கேஸ் கொடுத்தால், ஒவ்வொரு மாதமும் அதில் என்ன progress என்று status update கேட்கலாமாம்.

அப்போது இன்னொரு போலீஸ்காரர், மிகவும் வயதானவர், உள்ளே நுழையும் முன், ஸ்டேஷன் வாசலை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தார். எங்களை பார்த்து புன்னகைத்தார். பிறகு அங்கே இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டார். வாசலில் நின்று கொண்டிருந்த மூவரும், அவரிடம் வந்து அமர்ந்தனர். 'Anticipated bail' என்று ஏதோ பேசிக்கொண்டார்கள்.

திடீர் என்று வாசலில் நாங்கள் சந்தித்த பலாச்சுளை போலீஸ், பரபரப்பாக தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு, துப்பாக்கியை கையில் எடுத்து தோள் மீது சாய்த்துக்கொண்டு விறைப்பாக நின்றார். போலீஸ் ஸ்டேசன் ஒரே பரபரப்பாகி எல்லாரும் எழுந்து கொண்டார்கள். நாங்களும் என்ன செய்வதென்று தெரியாமல் எழுந்து கொண்டோம். ஆர்வமாகி வெளியே எட்டி பார்த்தேன். வந்தது பெரிய போலீஸ் போலும். பலாச்சுளை போலீஸ் சல்யுட் அடித்தார். பெரிய போலீஸ் நேராக உள்ளே வந்து எங்களுக்கு அடுத்து இருந்த அறையை கடந்து இன்ஸ்பெக்டர் என்று எழுதி இருந்த அறைக்குள் நுழைந்து விட்டார்.சற்று முன் வந்தமர்ந்த வயதான போலீஸ், எங்களை நோக்கி "உக்காருங்க" என்பதாக சைகை செய்தார்.

ஒரு பெண்மணி, சற்று கலவரமான முகத்துடன், கையில் ஒரு சிறுவனை பிடித்தபடி வந்தார். அவனுக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம். அவரும் அந்த பலாச்சுளை போலீசிடம் போய் ஏதோ விசாரிக்க, அவர் நாங்கள் அமர்ந்து இருந்த பெஞ்சை காட்டி, 'அங்கே போய் உட்காருங்க, என்றார். உடனே இந்த ஆப்ரிக்க இளைஞன் எழுந்து கொண்டு அந்த பெண்ணை அமர சொன்னான். அவரும் வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடந்தது. அர்ஜுன் பொறுமை இழந்து, "அம்மா வீட்டுக்கு கிளம்பலாம்மா" என்று சொல்ல ஆரம்பித்து இருந்தான். நானும் வேடிக்கை பார்ப்பதும் வாட்ச் பார்ப்பதுமாக சற்று சலித்து இருந்தேன்.

'நீங்க உள்ளே வாங்க' எங்களை காத்திருக்க சொன்ன மப்டி போலீஸ்  வெளிப்பட்டு எங்களை அழைத்து கொண்டு போனார். ஒரு சிறிய மேசை, நாற்காலி. பிரிண்டர்.'எங்கள் ஸ்டேசன் ரொம்ப சிறியது; ஆனால் வேலை அதிகம்.அதனால் தான் உங்களை இவ்வளவு நேரம் காக்க வைக்க வேண்டியதாகி விட்டது; உட்காருங்கள்' என்றார்.

ஒருவர் தான் உட்கார முடியும்; நான் உட்கார்ந்து கொண்டேன்.

உடனே அவர் அங்க இருந்த ஒரு பெரிய மர பெட்டி மீது இருந்த பைல்களை எல்லாம் நகர்த்தி வைத்து கதிரையும் அர்ஜூனையும் உட்கார்ந்து கொள்ள சொன்னார். அவருக்கு அருகில் இருந்த இன்னொரு பெட்டியை திறந்து ஏதோ தீவிரமாக தேட ஆரம்பித்தார்.

அவர் குனிந்து கொண்டு தேட ஆரம்பித்தும், நான் இன்ஸ்பெக்டர் அறைப்பக்கம் நைசாக எட்டி பார்த்தேன். அங்கு ஹோட்டல் ரெசப்ஷனில் எல்லாம் போட்டு இருப்பார்களே, உயரமான வட்ட வடிவ மேசை; அந்த மாதிரி ஒரு மேசை, அதில் ஒரு கம்ப்யுட்டர்; இன்ஸ்பெக்டர்; எதிர்த்தாப்பல அந்த anticipated bail பற்றி பேசியவர்கள். அவர்களிடம் கேப்டன் விஜயகாந்த் மாதிரி ஏதோ புள்ளிவிவரம் எல்லாம், கைகளை ஆட்டி ஆட்டி சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த அளவுக்கு கன்னடம் தெரியாததால் என்ன பேசினார் என்று தெரிய வில்லை.

இதற்குள் இங்கு நம்மிடம் பேசிக்கொண்டு இருந்தவர், அவர் தேடி கொண்டு இருந்த பைல் காணவில்லை என்பதை கண்டு பிடித்து, யாரிடமோ போனில் பேசி விட்டு "குமார் பைல் எடுத்து கொண்டு வெளியில் சென்று விட்டாராம்; அதனால் இப்போது உங்கள் வேலை முடியாது" என்ற மிக பெரிய உண்மையை எடுத்து உரைத்தார்.

'சரிங்க ரொம்ப நன்றி' என்று சொல்லிவிட்டு நாங்களும் நாங்கள் கிளம்பி விட்டோம்...

பெஞ்சில் என்னோடு உட்கார்ந்து இருந்த பெண்ணும் அவருடைய பையனும், அந்த ஆப்ரிக்க இளைஞனும் தங்களில் யாரை அடுத்து கூப்பிடுவார்கள் என்று பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

Tuesday, 27 July 2010

ஒரு ஊருல ஒரு குரங்கு....

சரியான விடையை தெரிவு செய்க.


இவர்களுள் யார் மிக சிறந்த கொடைவள்ளல்

1)முல்லைக்கு தேர் தந்த பாரி

2)மயிலுக்கு போர்வை தந்த பேகன்

3)குரங்குக்கு செருப்பு தந்த கிருத்திகா

4)கிருத்திகாவின் செருப்பை திருப்பி தந்த குரங்கு

மூன்றாவது விடையை டிக் செய்ய வேண்டுமானால் அதற்கு முன் நீங்கள்
கீழே உள்ள கதையை தெரிந்து கொண்டு விடுதல் இன்றியமையாததாகிறது.

கதையை ஆரம்பிக்கும் முன் கதையின் சப்போர்டிங் ஆக்ட்ரஸ் கிருத்திகா பற்றி சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.

சிறுவயதில் பூந்தளிர் என்ற புத்தகம் படித்து இருப்பீர்கள். ஆங்கிலத்தில் tinkle என்று கிடைக்கும்.அதில் கபீஷ் என்றொரு குரங்கு கதாபாத்திரம் வரும். அந்த குரங்கு ஹனுமானிடம் வேண்டி தன்னுடைய வாலை தேவையான அளவு நீட்டி மடக்கும் வரம் வாங்கிக்கொண்டு விடும்.

அந்த எலாஸ்டிக் வாலை வைத்துக்கொண்டு சேட்டைகள் பண்ணிக்கொண்டு இருந்த அது, ஒரு நாள் ஹனுமானிடம் போய், 'எனக்கு குரங்கா இருந்து இருந்து போர் அடிக்குது, என்னை மனுஷனா பொறக்க வெய்யுங்க'ன்னு கேட்டுச்சாம். உடனே ஹனுமான் "சரி நீ பூமில போய் கிருத்திகாவா பொறந்துக்கோ" ன்னு சொல்லிட்டாராம்.

இந்த கிருத்திகா காலேஜில் என்னுடைய கிளாஸ்மேட்.மனித பிறவி
எடுத்துட்டாளே தவிர அவளுக்கு பூர்வ ஜென்ம நினைவு இருந்தது.கிளாசில்
கடைசி பெஞ்சுக்கு முன் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அவள்
செய்யாத சேட்டை இல்லை. பெரும்பாலும் அவள் மாட்டிக்க மாட்டாள்.
நாங்க யாராவது தான் சிரித்து வைத்து மாட்டுவோம்.

எங்கள் வகுப்பில் எல்லாரும் சேர்ந்து செஞ்சிக்கோட்டை(அமர்க்களம்
படத்துல அது வேண்டும், இது வேண்டும் என்று அஜீத் ஆக்ரோஷமா பாடி
ஆடுவாரே அந்த இடம்) ஒரு நாள் சுற்றுலா சென்றோம்.
கீழே பஸ்ஸை நிறுத்தி விட்டு மலை உச்சிக்கு ஏறிக்கொண்டு இருந்தோம்.

கிருத்திகா கையில் பிரித்த குட் டே பிஸ்கட் பாக்கெட். காலில் புத்தம்
புது செருப்பு. கதைகளில் எல்லாம் எழுதுவார்களே...புது மெருகு
குலையாத என்று...அந்த மாதிரி விலை கூட அழியாது இருந்தது.

இங்க தான் கதையின் முக்கிய கதாபாத்திரம் உள்ளே நுழைகிறது.
இல்லை தாவுகிறது... கிருத்திகாவின் கையில் இருந்த பிஸ்கட்டை
பார்த்து ஆவலானது போலும்...அவளோ குரங்கை பார்த்த அதிர்ச்சியில்
உறைந்து போனவள், பிஸ்கெட்டை தூக்கி போட்டு விட தோன்றாமல்,
ஓட ஆரம்பிக்க...புத்தம் புது செருப்பு ஒன்று கழண்டு விழுந்து விட,
குரங்கு 'கிடைத்த வரைக்கும் சரி' என்று ஒரு செருப்பை வாரிக்கொண்டு
ஓடியே விட்டது.

இருங்கள். உடனே அவசரப்பட்டு மூன்றாவது விடையை தெரிவு செய்து
விடாதீர்கள்.

எங்கே விட்டேன்? ஆம், குரங்கு ஒரு செருப்பை தூக்கி கொண்டு ஓடி
விட்டதோ...நம்ம கிருத்திகா ஒற்றை கால் செருப்புடன், ஆனால்
பிஸ்கட் பாக்கெட்டை மறந்தும் கூட விட்டு விடாமல் நிற்கிறாள்.
செருப்பு போன சோகம் அவளுக்கு, பிஸ்கட் பிழைத்த சந்தோஷம்
எங்களுக்கு. இப்படி ஒரு உணர்ச்சி கலவையுடன் மலை ஏறும்
பயணத்தை தொடர்ந்தோம்.
 
பொறுங்கள். மலையில் இருந்து இறங்கும் போது தான்  கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.

'ஒரு செருப்பை வைத்து என்ன செய்ய போற டீ...அதையும் தூக்கி
போடு...' என்று நாங்கள் எல்லாரும் எவ்வளவோ சொல்லியும் அவள்
கேட்காமல் ஒரு செருப்பை கையில் தூக்கி கொண்டே வந்து கொண்டு
இருந்தாள். இறங்கி வரும் போது பார்த்தால், எந்த இடத்தில் அபேஸ்
பண்ணிக்கொண்டு போனதோ, அதே இடத்தில், அவளுடைய செருப்பு.
"இந்தா வெச்சுக்கோ" என்று விட்டு விட்டு போய் இருந்தது குரங்கு.

இப்போது மேலே உள்ள மூன்றாவது விடைக்கு கீழே ஹைலைட் பண்ணி
பாருங்கள்.

கிருத்திகாவிற்கு குரங்குக்கு செருப்பு கொடுத்த அனுபவம் தான் இருக்கிறது. எனக்கோ, குரங்கோடு ஒன்றாக உட்கார்ந்து ஒரே தட்டில்
சாப்பிட்ட அனுபவமே இருக்கிறது. அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Sunday, 30 May 2010

Potpourri - May edition

எங்கள் அலுவலகத்தின் இந்த மாத இதழில் வெளி வந்தது.

While in France
----------------
“You are not supposed to eat rice with spoon”. I literally choked when he said this, on my first ever flight, and in my first ever trip abroad. I did not know the ‘western eating etiquettes’ until this man, seated next to me, an Indian but settled in Paris for about 17 years, objected. “You will represent India and you should know how to eat”…he continued making me conscious along his boozy sips. “Rice with a Fork and the Fork in left hand… mind you”. Luckily during my next meal, he wasn't’ awake.

Food is close to anyones heart. When you are away from home for a while, anything that was slightly Indian would do wonders to your taste buds. In the most happening street of the most romantic city, the Champs Elysees (say it like Champsaleezey; not as tough as ‘Khan from the epiglottis’), I have once for ever eaten the national dish of France - ‘Crepe’ which looks like our dear ‘Dosa’.
Having craved for home food for a while, I jumped on it, to know that it’s just wheat flour without salt spread on hot pan; and with choices of veg. toppings like cheese, spinach, and mushroom and yes, even CHOCOLATE... The rest is for your imagination about someone who ate a wheat dosa minus salt with a chocolate topping.

I happened to dine at one of my colleagues’ house and the chicken served was way too soft and delicious. I could not resist asking for the recipe from his wife. To which, she said, ‘it's a duck brought from the north of France and cooked with the traditional French spices after marinating it in white wine for three days’. Now take that!!

Saturday, 17 April 2010

ஒரு தலைப்பில்லாத பதிவு

சரியான விடையை தேர்வு செய்க,

ஒரு பெண் ட்ராஃபிக் நிறைந்த ரோட்டில் ஸ்கூட்டியோடு கீழே விழும் அந்த எதிர்பாராத தருணத்தில் அவளுக்கு முதலில் யார் நினைவு வரும்?

1.அம்மா

2.கணவன்

3.குழந்தை

விழுந்தது யார்?
நானே தான்.

எங்கே?
ஆபீசில் இருந்து வீட்டுக்கு வரும் போது.

எப்போ?
நேற்று மாலை.

எப்படி?
அது ஒரு சர்வீஸ் ரோடு. வெள்ளிக்கிழமை மாலை என்பதால் எல்லாருக்குமே வீட்டுக்கு போக வேண்டிய அவசரம்.நானும் எனது ஸ்கூட்டியில் போய்க் கொண்டு இருந்தேன். இடது ஓரத்தில் தான். அப்போது என்னை வலது புறமாக ஒரு வண்டி ஒவர்டேக் செய்யவும், நான் சற்று இடது புறமாக ஒதுங்க, என் வண்டி வழுக்கியது போல இருந்தது; பேலன்ஸ் பண்ண முயன்ற அதே சமயத்தில், இடது பக்கம் நடந்து போய்க்கொண்டு இருந்த ஒருவர்,அவருடைய வலது புறமாக ஒதுங்க,என் வண்டியின் ப்ரேக்கில் அவருடைய கை இடித்தது. குழப்புகிறதா? எனக்கும் தான். எது எப்படியோ, நான் எனது வலது பக்கமாக கீழே விழுந்து விட்டேன், வண்டியோடு...

அட, எதுவும் பெரிதாக ஆக வில்லை. இப்படி பதிவு தட்டிக்கொண்டு இருக்கிறேன் என்றால்,உருப்படியாக இருக்கிறேன் என்று தானே அர்த்தம்.
கொஞ்சம் அதிர்ச்சி, அதை விட சற்று கொஞ்சமாக, உடல் வலி.முழுதாக எழுந்து விட்டேன்.வலது பக்கம் சில கீறல்கள்.எனக்கும், என்னை விட
அதிகமாக வண்டிக்கும்... வண்டியின் வலது பக்க ப்ரேக் லிவர் உடைந்து விழுந்து விட்டது.


நான் வண்டியுடன் விழுந்து கிடந்தது, பாவம் பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிகளுக்கு தான் இடைஞ்சல் ஆகிவிட்டது. டூ வீலர்கள் அப்படியே என்னை சுற்றிகொண்டு சென்று விட்டன. நான்கு சக்கர வண்டிகளுக்கு தான் வழி ப்ளாக் ஆகி போனது. ஹாரன் அடித்து த்ள்ளி விட்டார்கள். ஹாரன்கள் சத்தம், “சரி விழுந்தாச்சு, சட்டு புட்டு ன்னு எந்திரி...'என்பதாக ஒலித்தது.

அவர்களை குறை கூறவில்லை.அவர்களிடத்தில் நான் இருந்தாலும் அதையே தான் செய்து இருப்பேனாக இருக்கும். பெங்களூரில், ரோட்டில் யாராவது விழுந்து கிடப்பதென்பது, ட்ராஃபிக் ஜாமை போல், ஒரு சகஜமான விஷயம் ஆகிவிட்டது. என் வண்டி இடித்த அந்த மனிதர் தான், அவருடைய கையை தடவிக்கொண்டே என் வண்டியை தூக்கி தந்தார்.நான் எழும் போது, உடைந்து கிடந்த ப்ரேக் லீவரை எடுத்து கொண்டேன்.வரலாற்றுக்கு நியாபக சின்னங்கள் முக்கியம் இல்லையா?

இப்படி விழுந்து எழுவதில் நமக்கும் நிறைய லாபம் இருக்கிறது தெரியுமோ? - எனக்கு நேற்று தான் தெரிய வந்தது.

- ’பரவாயில்லையே, இப்படி விழுந்து எழுந்தும் கூட, பதட்டப்படாமல், வீடு வரைக்கும் வண்டி ஓட்டிட்டு வந்த்துட்டியே’ என்று கணவரை ஆச்சர்யப்படுத்தலாம்.

- ’நான் அன்றைக்கு ஒரு நாள் நண்பர்களுடன், ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன்.ரொம்ப நல்லா இருந்தது.அங்கே போய் சாப்பிடலாம் வா” கீழே விழுந்ததில் சற்று, மன வருத்தமாய் இருக்கும் நமது “ஃபீல் குட்” நிமித்தம், மாரத்தஹள்ளியின் ஏதோ ஒரு சந்தில் இருக்கும் ஹோட்டலுக்கு
போய் சூப்பர் சாப்பாடு சாப்பிட நேரலாம்.

-சாப்பிடும் போது வழக்கம் போல், “அம்மா சுச்சு..."என்று குழந்தை அழைக்க, “நீ உக்காரு, நான் அழைத்து போறேன்” என்று வழக்கத்தை மீறி நடக்கும் விஷயங்கள் நம்மை, “ஃபீல் பெட்டர்” ஆக்கலாம்.

-இனி அடுத்த நான்கு நாட்களுக்கு, போறவங்க, வர்றவங்க, ஃபோன் பண்றவங்க கிட்டயும்,ஆபிசில் காபி குடிக்கும் போதும், லன்ச் சாப்பிடும் போதும்,
“ஆக்டுவல்லி நான் அன்னைக்கு தான் மொத தடவையா வண்டிலேர்ந்து கீழ விழுந்தேன்...”
என்று கஜினி கல்பனா மாதிரி கதை சொல்லலாம்.

- ”நான் கூட இப்படித்தான் வண்டி வாங்கின புதிதில், மணல் சறுக்கி...” 
 முதல் காதல், முதல் முத்தம் ரேஞ்சில் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும்
”முதலில் விழுந்த” அனுபவத்தை கேட்கலாம்.

-இதோ இப்படி பதிவை எழுதி, பதிவைப் படிக்கும் நண்பர்களின்/உறவினர்களின், ’ஹைய்யா!’ ’ஐய்யோ!’ ’அப்படியா?’ ’என்னாச்சு?’ ’இப்போ எப்டி இருக்க?’ ’பாத்து போகக்கூடாதா?’ க்களுக்கு பதில் அளிக்கலாம்.

இப்படி எத்தனையோ லா(ப)ம்.

என்றைக்கும் இல்லாமல், நேற்று ஆபீசில் இருந்து கிளம்பும் போதே இரு நண்பர்கள், “பார்த்து போ, பத்திரம்” என்றார்கள். அவர்களுக்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும்.

சரி,பதிவின் ஆரம்பித்தில் கேட்ட கேள்விக்கு விடை, குழந்தை.

Friday, 4 December 2009

சைக்கிள்


எந்த வயதில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால் கற்றுக்கொள்ள ஆரம்பித்த சமயத்தில், சொல்லிக்கொடுத்து கொண்டிருந்த என் சித்தி பின்னால் பிடித்து இருந்த பிடியை விட்டு விட, நானும் நேராக போய்க்கொண்டே இருந்ததும்,ஒரு இடத்தில் 'திருப்பு திருப்பு' என்று சித்தி கத்தியதை கேட்டு, 'ஹான்ட் பாரை திருப்பனுமா ??'என்று நான் திரும்பி பார்த்து கேட்டதில் balance தடுமாறி சைக்கிளோடு சேர்ந்து ரோட்டோரம் இருந்த சாக்கடையில் விழுந்ததும் மறக்கவே இல்லை.

நன்றாக ஓட்ட கற்றுக்கொண்டதும் எங்கள் ஊரில் வாடகைக்கு சைக்கிள் கிடைக்கும். மணிக்கு ஒரு ரூபாய். லேடீஸ் சைக்கிள் என்றால் இரண்டு ரூபாய். சனி ஞாயிறு மாலைகளில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து வீட்டு முன் உள்ள திட்டானியில் சுற்றி சுற்றி ஓட்டுவது வழக்கம் ஆனது.அதிலும் அப்படி சுற்றி ஓட்டும்போது திரும்ப வேண்டிய இடங்களில் லாவகமாக திரும்புவது ரொம்ப பெருமையா இருக்கும்,பக்கத்து வீட்டு வெங்கிடு அண்ணா, அவனோட தம்பி செந்தில், தங்கை செல்வி, என்னோட தம்பி எல்லாரும் தான் என்னோட சைக்கிள் சாகசத்துக்கு ஆடியன்ஸ். ஒரு கையை விட்டு விட்டு ஓட்டுவது, ரெண்டு கையையும் விட்டு ஓட்ட முயற்சிப்பது, வேகமா பெடல் பண்ணிட்டு அப்புறம், காலை பெடலில் இருந்து எடுத்து விடுவது, இப்படி ஒரு மணி நேரமும் ஒரே த்ரில்லிங்கா இருக்கும் ...

ஏழாவது படித்து கொண்டிருந்தேன். என் கசின் ஒருத்தி திடீர் என்று ஒரு நாள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஸ்கூல்க்கு வந்தாள்.அவளுடைய மாமா வாங்கி கொடுத்து இருந்தார். சிவப்பு கலர் கேப்டன் லேடீஸ் சைக்கிள். அன்றிலிருந்து எனக்கு சொந்தமாக சைக்கிள் வாங்கி அதில் பின்புறம் கேரியரில் புத்தகப்பையும், முன்னால் ஹேன்ட் பாரில் சாப்பாடு பையும் வாட்டர் பாட்டிலும் தொங்க விட்டுக்கொண்டு ஸ்கூல் போவதாக கனவு வர ஆரம்பித்தது. பாவம் எனக்கு மாமா வேற இல்ல. எங்க அம்மா கூட பொறந்ததெல்லாம் தங்கைகள். ஒரு வழியாக அரையாண்டு தேர்வு, இலக்கிய மன்ற போட்டி என்று நிறைய சாதனைகளுக்கு பிறகு, வீட்டில் எனக்கு சைக்கிள் sanction செய்யப்பட்டது.


BSA SLR . மெரூன் கலர். கேப்டன் சைக்கிள் சினேகா ரகம் என்றால் , BSA SLR ஐ கரீனா கபூர் ரகம் என்று சொல்லலாம். ஒரு டெம்ப்ளேட் சைக்கிளாக இல்லாமல் உயரமாக,ஸ்லீக்காக இருக்கும்.ப்ரேக் வயர் வெளியில் தெரிவதே ஒரு தனி ஸ்டைல். சைக்கிள் செயின்க்கு ஒரு பக்கம் மட்டும் தான் கவர் இருக்கும். செண்டர் ஸ்டாண்டு இருக்காது. சைடு ஸ்டாண்டு மட்டும் தான். நிறுத்தி வைத்து இருக்கும் போது ஒயிலாக சாய்ந்து நிற்கும்.இப்படி எல்லா விதத்திலும் (பின்?)நவீனத்துவம் வாய்ந்த மாடல். "பார்க்க அழகா தான் இருக்கு, ஆனா ஸ்ட்ராங்கா இருக்குமா(உன் வெயிட் தாங்குமா?)" என்ற கேள்விகளை எல்லாம் புறந்தள்ளி அது தான் வேண்டும் என்று அடம் பிடித்தேன்.

1991 பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வீட்டுக்கு சைக்கிள் வந்தது. நாலு நிமிடத்தில் குறுக்கு வழியில் போய் விட முடிந்த பள்ளிக்கு, சுற்றிக்கொண்டு சைக்கிளில் போக ஆரம்பித்தேன். நல்ல நிழலாக பார்த்து நிறுத்தி விடுவேன். இண்டர்வல்லில் வந்து சைக்கிள் மீது எதாவது காக்கா கக்கா போய் வெச்சு இருக்கா? பப்பி உச்சா போய் வெச்சுருக்கான்னு எல்லாம் பார்த்து பார்த்து கழுவி விட்டு போவேன்.சனிக்கிழமை தோறும் நான் தலைக்கு குளிக்கிறேனோ இல்லையோ சைக்கிள் கழுவுவது தவறாது. முதலில் ஒரு காய்ந்த துணி வைத்து தூசி எல்லாம் துடைத்து பிறகு ஒரு ஈர துணியில் துடைத்து, மறுபடி காய்ந்த துணி வைத்து துடைத்து,செயின்க்கு எண்ணெய் போட்டு,பளபளவென்று மணப்பெண் மாதிரி ஆக்கி விடுவேன்.

அந்த வருட சித்திரை திருவிழாவிற்கு எங்கள் ஊரில் சிறுமிகள் சைக்கிள் பந்தயத்தில்(கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓட்ட வேண்டும் ) எனக்கு இரண்டாம் பரிசு வாங்கி கொடுத்தது என் சைக்கிள். அப்போது கிராமங்களில் அறிவொளி இயக்கம் என்று ஒரு கல்வி விழிப்புணர்வு இயக்கம் இயங்கி வந்தது. அதில் "சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி" என்ற பாடலுடன் ஒரு கான்செப்ட் வரும். அதற்கு நானும் என் சைக்கிளும் தான் மாடல்(கள்).ஹிந்தி டியூஷன், பனிரெண்டாம் வகுப்பில் கணக்கு டியூஷன், கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வரும் போது நண்பர்கள் வீடுகள், இப்படி எங்கு செல்வதற்கும் எனக்கு ஒரு துணைக்கு ஆள் போல் ஆகி போனது என் சைக்கிள். ஆனால் ஒரே ஒரு சிரமம் தான்.சைக்கிள் வந்த பிறகு என் தம்பியையும் மிகவும் மதிக்க வேண்டியது கட்டாயமாகி போனது எனக்கு. அவனுக்கு என் மீது கோபம் வரும் போதெல்லாம், சைக்கிளில் ரெண்டு டயரும் காத்து இறங்கி போய் நிக்கும்.ஏதாவது ஒரு இடத்தில் பெயிண்ட் சுரண்ட பட்டு இருக்கும்.


2001 ஜூலை மாதத்தின் ஏதோ ஒரு நாள்.
அப்போது வரைக்கும் சைக்கிள் என்று நினைத்தாலே இதமாக மட்டுமே உணர்ந்து கொண்டு இருந்த என்னை, கலவரமாக்கும் அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது அன்று.டைடல் பார்க்கில் ஆபீஸ். வேளச்சேரியில் தங்கி இருந்தேன். ஒரு VIP வீட்டில் இருந்து மூன்றாம் வீடு எங்கள் ஹாஸ்டல்.அதனால் எப்போதும் வெளிச்சமாக செக்யூரிட்டியோடு இருக்கும் தெரு. பொதுவாக நான் நிமிர்ந்து நேராக பார்த்து கொண்டு தான் நடப்பேன். பாரதியார் சொன்னதற்காக இல்லை. ரீட்டா ராணி சிஸ்டரை பார்த்து கற்றுக்கொண்டது. ஒன்பதாம் வகுப்பு படித்த போது எங்கள் பள்ளியில் ஆங்கிலம் கற்றுத்தந்த ஒரு கன்னியாஸ்திரீ. இவர்கள் நடக்கும் போது நேர்கொண்ட பார்வையுடன், கால் மட்டும் தான் நகரும். மற்றபடி ஒரு விறைப்போடு ஏதோ சிலை ஒன்று நடந்து போவதை போல் இருக்கும். நடையில் ஒரு தன்னம்பிக்கையை பார்த்தது இவர்களிடம் தான். நீங்கள் ரீட்டா ராணி சிஸ்டரை பார்த்ததில்லை என்பதால், இன்னொரு உதாரணம் சொல்கிறேன். "வீர் ஜாரா" படத்தில் பாகிஸ்தானி வக்கீலாக வரும் ராணி முகர்ஜி நடப்பதை போல். சிஸ்டரை போல நடக்க வேண்டும் என்று முயற்சி செய்து வரவழைத்துக்கொண்டேன். நேரான பார்வையுடன் நிமிர்ந்த நடையை. ஆனால் அன்றைக்கு ஏதோ ஆபீசில் மூட் அவுட். ஏதோ யோசனையில் குனிந்து கொண்டே நடந்து போய் கொண்டு இருந்தேன். எதிரில் வந்த சைக்கிளை உணர்வதற்குள், சைக்கிளில் இருந்த ஆசாமி என் கழுத்தில் இருந்த சங்கிலியை இழுத்து விட்டான். அதிர்ச்சியில் கத்த கூட தோன்ற வில்லை எனக்கு. சரி அவன் என்ன ஆனான், செயின் என்ன ஆனது,இல்ல,என் கழுத்து தான் என்ன ஆனது என்பதெல்லாம் இப்போ தேவை இல்லாத விஷயம். ஆனால் அன்றிலிருந்து குழந்தைகள் ஓட்டும் மூன்று சக்கர சைக்கிளை பார்த்து கூட பயப்பட ஆரம்பித்தேன். ஒரு போபியா.அதிலும் ரோட்டில் நடந்து போகும் போது, பகலில் கூட எதிரில் யாராவது சைக்கிளில் வந்தால், Freeze -release விளையாடும் போது யாரோ என்னை freeze சொல்லிவிட்டதை போல், ஆடாமல் அசையாமல் நின்று விடுவேன். அந்த சைக்கிள் கடந்து போன பிறகு தான் எனக்கு உணர்வு திரும்பும்.

இது இப்படி இருக்க, போன வாரத்தின் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த போது, எதிரில் ஒரு சைக்கிள். அந்த சைக்கிள் என் பக்கத்தில் வந்த அந்த நொடியில், எனக்கு தூக்கி வாரிப்போட, "ஆஆஆ" என்று போட்டேனே ஒரு சத்தம். சைக்கிளில் வந்தவர் பெரியவர், பாவம், நிறுத்தி இறங்கிவிட்டார்.

"ஏனு ஆகித்தம்மா?" என்னை விட அதிக பதற்றம், அவருடைய முகத்தில்.
மண்டையில் அடி பட்டு பழச மறந்தவங்களுக்கு மறுபடி அடி பட்டால், தெளிஞ்சுடுமே, அதே மாதிரி அந்த "ஏனு ஆகித்தம்மா"வில் தெளிந்தது எனது போபியா.
"ஒன்றுமில்லை, சாரி". சங்கடமாக நகர்ந்து விட்டேன்.

ஒரு வேளை அந்த பெரியவரும் நேற்று பொட்டி முன்னால் உட்கார்ந்து "யாவ வயசல்லி சைக்கில் ஒடுஸ்தே அந்த கொத்தில்லா." என்ற கட்டுரை ஆரம்பித்து,"இப்போதெல்லாம் சைக்கிளில் போகும்போது எதிரில் யாராவது நடந்து வந்தாலே, freeze ஆகி விடுகிறேன்" என்று கன்னடத்தில் தட்டி இருப்பாராய் இருக்கும்.

Wednesday, 11 November 2009

ஒரு சந்திப்பு, ஒரு சினிமா, ஒரு புத்தகம், கொஞ்சம் டிவி.

இது ஒரு time-pass பதி(கிர்)வு.
******************************
சில வருடங்களாக அமெரிக்காவில் இருந்து வரும், நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. ஆங்கிலம் பேசும் போது அமெரிக்க accent வருகிறது அவர்களுக்கு. Father is like faedher, People is like Peeble, Water is like Wader.

"Coca cola கொடுத்தால், "Sorry, we dont drink Soda" (soda is like Sodae)என்று சொல்கிறார்கள்.

"என்னது சோடாவா? எங்க ஊருல சோடான்னா பச்சை கலர் பாட்டில்ல கோலிகுண்டு போட்டு இருக்கும். சோடா குடிக்கும் போது அந்த கோலிக்குண்டு சோடா பாட்டில் மூடி வரை வந்து டக் ன்னு இடிக்கும் ஆனா வெளிய வராது. ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்" சொல்ல நினைத்தேன்.

ஆனால் சொன்னது - "சரி சோடா வேணாமா? தண்ணி தரேன்."

நான் கூட சில நாட்களாக, accent கற்று கொண்டு Fletcher மாதிரி (ச்சி...தா...ம்ரம்) பேசலாமா ன்னு யோசிக்குறேன்.

*******************************
கல்லூரி படத்தில், சோகம், கோபம், கருணை, காதல், possessiveness என்று எல்லா உணர்வுகளையும் வெகு நேர்த்தியாக பிரதிபலிப்பார்.பளீர் கலர். Sleek. தமன்னாவை ரொம்ப பிடித்தது. பாய்ஸில் சித்தார்த் தான் ஹீரோன்னாலும், "பாபு கல்யாணம் அப்டிங்கற பேரை 'பாப் கேலி' ன்னு மாத்திக்கிட்டு அலப்பறை பண்றானே, என்னம்மா dance ஆடுறான்"னு யோசிக்க வெச்சார் பரத்.
'கண்டிப்பா பாரு உனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று நண்பர்கள் ஏகத்துக்கு build-up குடுத்த படம் Jab we met. இப்படி மூன்று விஷயங்கள் கலந்து கட்டி இருக்கிறதே என்று படு எதிர்பார்ப்புடன் 'கண்டேன் காதலை' பார்க்க போனோம். பொதுவாக எனக்கு ரீமேக் படங்கள் பார்க்குறப்போ ஒரிஜினல் தான் நல்லா இருந்த மாதிரி இருக்கும். இது வரை பார்த்த ரீமேக் படங்களில் "இது ஒரிஜினல் விட நல்லா இருக்கே" என்று 'அட' போட வைத்தது போக்கிரி மட்டும் தான். அதற்கும் முக்யமான காரணம் "பாடி ஸ்டூடா" track (எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்). ஆனானப்பட்ட அமீர்கான் நடித்தும் ஹிந்தி கஜினி பிடிக்கலை. To me,Sanjay Singhania was not even 10% of Sanjay Ramasamy. So, இந்த படம் பற்றி சொல்லவே வேண்டாம்.Not even 1% of the original.பேரரசு, திருமுருகன் ஹீரோக்களுக்கு பரத் நல்லா பொருந்துவார். But கோட்,சூட் போட்டு, டை கட்டி, CEO ஆக வரும் காட்சிகளில், பாவமாக இருக்கிறது. இடைவேளை வரைக்கும் தமன்னா (சின்மயி குரலில்) பேசிக்கிட்டே இருக்காங்க. அதுக்கு அப்றோம் பரத் பேசறார். Titanic படம் பாத்துட்டு தியேட்டர் விட்டு வெளில வரப்போ, கொஞ்ச நேரத்துக்கு மழைல நனைந்த மாறி ஒரு உணர்வு இருக்கும். இந்த படம் முடிச்சு வரப்போ, கொஞ்ச நேரத்துக்கு யாரும் பேசாம இருந்தா நல்லா இருக்குமேன்னு இருக்கு.

*****************
Dan Brown விழுந்து விழுந்து படிச்ச நாட்களில், உறவினர் ஒருவர், நீ "Paulo Coelho" படித்ததில்லை. அதை படித்தால் டேன் ப்ரோவ்னை தூக்கி போட்டுடுவ" என்று சொன்னதுடன் "The Devil and Ms Prym" புத்தகத்தை வாங்கியும் கொடுத்தார். தலைப்பை பார்த்ததும் ஏதோ பேய்க்கதை என்று நினைத்து படித்துவிட்டு இங்க சொல்லலாம் என்று தான் பேய்க்கதை சொல்கிறேன் என்று சொன்னேன். ஆனால் 'சரி இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை' என்று வேலைக்கு போகும் பெண்களை பற்றி எழுதி விட்டேன்:-)
Book பாதி படித்து இருக்கிறேன். "All human are eventually evil, its only a matter of when they get the chance" என்று சவால் விடும் ஒருவன், பல காலமாக monotonus வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு கிராம மக்கள், "அந்த கிராமத்தில் இருந்து எவனாவது தன்னை கல்யாணம் பண்ணி கூட்டி போய் விட மாட்டானா என்று" ஒரு life-upgrade எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒரு பெண் என்று அழகாக முடிச்சு விழுந்து இருக்கிறது. எப்டி அவிழ்கிறது என்று பார்ப்போம்.

*****************************
பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகளை காதுகளால் மட்டுமே பார்க்கிறேன். 'Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர்-2' அவ்வளவாக follow பண்ண முடிவதில்லை. அவ்வப்போது பார்க்க நேர்ந்த போதும், "இதென்ன பாட்டு போட்டியா? இல்லை நடன நிகழ்ச்சியா" என்று தோன்றியது. குழந்தைகளுக்கு ஏகத்துக்கு மேக்கப், Chocolate மழையாக கொட்டுறது, குடும்பத்தையே மேடைக்கு அழைக்குறதுன்னு நிறைய stunts.Super Singer is too spoilt. வீட்டில் எல்லாரும் அல்கா என்று பெண் வெளுத்து கட்டுவதாக சொல்கிறார்கள். ஒரு பெண்பிள்ளை டைட்டில் ஜெயித்தால் சந்தோஷம் தான்.
கோலங்கள் சீரியலில் "நான் ஞாபகங்களை தொலைத்து விட்டு நிற்கிறேன்" என்று திருசெல்வன் சொல்லுவது காற்று வாக்கில் கேட்டது. என்ன கொடுமை இது தொல்காப்பியன்? உங்களுக்கு எப்போ ஞாபகம் வந்து, நீங்க எப்போ சீரியல் முடிக்கிறது? மு..டி..ய...ல.

*******************************

With that, wishing each of you to have happy and happening pass time.

Tuesday, 3 November 2009

ஜூலி போட்டது ரெண்டு குட்டி

முன்குறிப்பு: இது ஒரு சிறுகதை முயற்சி அல்ல. இலக்கியவாதிகள் அச்சம் தவிர்த்து தொடர்க.

கரண்ட் இல்லாத ஒரு மழை நேர மாலையில் தான் ஜூலி எங்கள் வீட்டுக்கு வந்தது. அப்போ அது நிறை மாத கர்ப்பிணி. வீட்டு சுவரோரம் மழைக்கு ஒதுங்கி குளிரில் நடுங்கி முனகி கொண்டு இருந்ததை பார்த்து அப்பா, அம்மா, நான், தம்பி என்று குடும்பமாக இரக்கபட்டோம். அடுத்த பத்து நிமிடத்தில் திண்ணையில் ஒரு சாக்கு படுக்கையும், ஒரு பழைய தட்டில் பால் சோறுமாக, ஜூலி எங்களோடு சேர்ந்து கொண்டது. அழுக்கான வெள்ளை நிறத்தில் இருந்த அதற்கு நானும் தம்பியும் சேர்ந்து ஜூலின்னு பெயர் வைத்தோம்.

ஜூலிக்கு எங்க எல்லாரையும் ரொம்ப பிடித்து விட்டது. நானும் தம்பியும் மாலை நேர நொறுக்கு தீனியை மூன்று பங்கு ஆக்க ஆரம்பித்தோம். "குட்டி போட போகுதுல்ல, பாவம் ரொம்ப பசிக்கும்" என்று அம்மா அடிக்கடி அதற்கு ஏதாவது கொடுத்து கொண்டே இருப்பாங்க. ஜூலி இது எல்லாத்தையும் விட எங்க அப்பாவோட TVS -50 சத்தத்துக்கு தான் அதிகமா வால் ஆட்டும்.

அப்பா பத்தாங்கிளாஸ் ஆங்கில டியூஷன் எடுப்பாங்க. அதுல 'ஹரன்'ன்னு ஒருத்தன் படிச்சான். இந்த கதைல இவன் எங்க வந்தான்? விஷயம் இருக்கு. கதைக்கு ஒரு திருப்பு முனை கொடுக்க போறதே இவன் தான். இவன் அப்டி என்ன பண்ணான்னு இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்லிடறேன்.

எங்க வீட்டுல அப்போ ஏதோ பூச்சு வேலை நடக்குதுன்னு நிறைய ஆத்து மணல் கொட்டி வெச்சுருந்தாங்க. அந்த மணல்ல தான் நானும் தம்பியும் அப்பாக்கு ரெண்டு பக்கமும் படுத்துக்கிட்டு நிலாவை பாத்துக்கிட்டே கதை கேப்போம். ஜூலியும் எங்க பக்கத்துல உக்காந்துக்கும்.

ஜூலி வந்து ஒரு நாலஞ்சு நாள் ஆயிருக்கும்.ஒரு நாள் நைட் ஜூலி லேசா முனகிட்டு இருந்துச்சு. அதோட சாக்கு படுக்கையில படுத்துக்காம எழுந்து போய்டுச்சு. "அம்மா எங்க போகுதுன்னு போய் பாப்போமா" ன்னு கேட்டதுக்கு, "அதெல்லாம் வேணாம், பேசாம படுங்க" ன்னு சொல்லிட்டாங்க. காலைல அம்மா சொன்னாங்க, "ஜூலி குட்டி போட்டுடுச்சு. ஆனா எங்க போட்டு வெச்சுருக்கு, எத்தனை குட்டி போட்டுருக்கு ஒன்னும் தெரியலை" ன்னு.

நானும் தம்பியும் துப்பு துலக்கி ஜூலி பின்னாடியே போனோம். அது அந்த ஆத்து மணல் குவியல்ல ஒரு பொந்து மாதிரி பண்ணி அதுக்குள்ள போய்டுச்சு.
"அம்மா! ஜூலி மண்ணை தோண்டி பொந்து மாதிரி செஞ்சு அதுக்குள்ள குட்டி போட்டு இருக்கும்மா, ஆனா எத்தனை குட்டி தெரியலை" .
"ரெண்டு மூணு நாள் கழிச்சு அதுவே வெளிய வரும். இப்போதைக்கு நீங்க பக்கத்துல போய் வெக்காதீங்க, கடிச்சுட போகுது" ன்னாங்க அம்மா.

நானும் தம்பியும் மணலை சுத்தி சுத்தி வந்து பொந்துக்குள் எட்டி பார்த்தா எதாவது தெரியுதான்னு முயற்சி பண்ணிட்டு இருந்தோம். "அதோட வயிறு இருந்த சைஸ்க்கு ஒரு அஞ்சு குட்டியாவது போட்டு இருக்கும். ஆண் குட்டின்னா யாராவது எடுத்துட்டு போய்டுவாங்க. பெண் குட்டிய எல்லாம் என்ன பண்றது தெரியலை" ன்னு அம்மா ஒரே பொலம்பல். அப்பா ஜூலிக்கு ஸ்பெஷல் கவனிப்பு பண்ணிட்டு இருந்தாங்க.நானும் தம்பியும் ஒரு தேடலுடனேயே இருந்தோம்.

ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஜூலி postpartum sickness எல்லாம் முடிஞ்சு சகஜமா வால் ஆட்ட ஆரம்பிச்சது. அன்னைக்கு சாயங்காலமே அதோட குட்டியை எங்க கண்ணுல காட்டிட்டுது. எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏன்னா ஒரே ஒரு குட்டி தான் இருக்கு ஜூலி கூட. கருப்பு கலர்(அதோட அப்பா மாதிரியா இருக்கணும்). பெண் பிள்ளை.



"நாய் பொதுவா ஒரே ஒரு குட்டி போடாது, ஒரு வேளை மணல் ஏதும் சரிஞ்சு மத்த குட்டில்லாம் செத்து போச்சான்னு" அம்மா கவலை பட, எனக்கும் தம்பிக்கும் தூக்கி வாரி போட்டது. மொத்த மணலையும் கவனமாக அகற்றி, துழாவி துருவி தேடினோம். ஒன்னும் அகப்படலை.

தனிக்காட்டு ராஜா(ஜி)வாக வளர்ந்தது ஜூலியோட குட்டி. போட்டிக்கு ஆள் இல்லாம வயிறு முட்ட பால் குடித்து, 'மொத்த அம்மாவும் எனக்கே எனக்கு' ன்னு பெருமையாக வளர்ந்ததில் மூன்றே வாரத்தில் ஒரு முயல் அளவுக்கு வளர்ந்து நின்றது. ஒரு நாள் அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் ஜூலிக்கும் குட்டிக்கும் பிஸ்கட் கொடுத்து கொண்டு நான் அம்மா, தம்பி timepass பண்ணி கொண்டு இருந்தோம்.

"டீச்சர்....டீச்சர்.... " என்று சன்னமாக அழைத்து கொண்டே தலையை குனிந்து கொண்டு ஹரன்.
"என்னப்பா"
கையில் இருந்த கூடைக்குள் இருந்து எதையோ வெளியில் எடுக்கிறான், அதும் கருப்பும் வெள்ளையும் கலந்த கலரில்...துளியூண்டாக ...எலி மாதிரி....
"என்னை மன்னிச்சுடுங்க டீச்சர். சார் கிட்ட எப்டியாவது நீங்க தான் சொல்லணும். ஜூலி ரெண்டு குட்டி போட்டு இருந்துச்சு, கேட்டா தருவீங்களோ என்னவோன்னு நான் தான் இத யாருக்கும் தெரியாம தூக்கிட்டு போயிட்டேன், ஆனா சரியா சாப்பிட மாட்டேங்குது, செத்துடும் போலிருக்கு, அதான் திரும்பி கொண்டு வந்துட்டேன்" என்கிறான். கிட்டத்தட்ட அழுதான்.


அது ஆண் பிள்ளை. பிள்ளை பூச்சி சைஸ்ல இருக்கு. பாவம் கண் கூட முழிக்காத குட்டிய திருடிட்டு போய் இருக்கான் கிராதகன்.
"சரிப்பா ஏதோ இந்த மட்டும் கொண்டு வந்தியே, அதோட அம்மா கிட்ட பால் குடிச்சுதுன்னா பொழச்சுடும், கொஞ்சம் தேறினதும் நீயே எடுத்து போய் வளரு" - அம்மா.

அப்றோம் ஜூலியும் அதோட ரெண்டு குட்டியுமா அமளி பட்டது வீடு. இரண்டு வாரங்களிலேயே அந்த சின்ன குட்டியும் தேறி விட, ஹரன் வந்து அப்பாவிடம் கேட்டு எடுத்துட்டு போனான்.

எங்க தெருப்பகுதியில் ஒருத்தர் அடிக்கடி வந்து குரங்கை வைத்து வித்தை காட்டுவார். "ஆஞ்சநேயர் தனியா இருக்கார்ம்மா, அவர் கூட வெளாட ஒரு வைரவர் கொடுங்கம்மா" என்று அந்த பெண்குட்டியை கேட்டு அடம் பண்ணார். "அடிக்காம பத்ரமா பாத்துக்கோங்க,அப்போப்போ கொண்டு வந்து கண்ணுல காட்டுங்க" என்று கண்ணீருடன் அடுத்த குட்டியையும் அவரிடம் கொடுத்தாகி விட்டது.

அப்பா போன பிறகு, அந்த வீட்டை விட்டு நாங்களும் போய் விட்டோம். ஜூலி எங்களுடன் வர வில்லை. சில மாதங்கள் கழித்து நானும் தம்பியும் வீடு காலி பண்ண அந்த வீட்டுக்கு போன போது மறுபடி ஜூலியை பாத்தோம். உண்டாகி இருந்தது.

பின்குறிப்பு: நாய்க்கதை பிடித்து இருந்தால் சொல்லுங்கள். அடுத்து ஒரு பேய்க்கதை சொல்லுகிறேன்.