Thursday, 28 February 2013

Shake 'em up with ScootyGiri



சென்ற திங்கள் கிழமை மாலை சுமார் ஐந்து மணியளவில் நான் ஒரு யமஹா பைக்கை உடைச்சுட்டேன்.

பஸ் முழுக்க இடம் இருந்தாலும் டீனேஜ் பொண்ணுங்களை இடிச்சுட்டு நிக்கற சில பெருசுஸ் மாதிரி ஆபீசின் அவ்ளோ பெரிய பார்க்கிங்கில் என் ஸ்கூட்டி பக்கத்துல ஒருத்தன் இல்ல ர் யமஹாவை நிறுத்தி இருந்தார்.

நான் சாயங்காலம் வீட்டுக்கு போற அவசரத்துல வண்டிய எடுக்க யமஹால இடிச்சு...நம்ப மாட்டீங்க... நிஜமாவே யமஹா கீழ விழுந்துச்சு.

அப்பன்னு அங்கே ஒரு வெட்டுக்கிளி, குருவி கூட இல்ல....(எத்தனை நாளைக்கு தான் ஈ காக்கான்னு...ஒரு சேஞ்சுக்கு...) உடனே நான் என் வண்டிய அப்டியே நிறுத்திட்டு செக்யூரிடிகிட்ட போனேன்.

இந்த மாதிரி "அங்க வண்டி விழுந்துச்சு...கொஞ்சம் என்கூட வாங்க..."ன்னு கூப்பிட்டு போய் வண்டிய தூக்கி வெச்சா ...

நீங்களே சொல்லுங்க... பொதுவா ஒரு பைக் இடது பக்கமா விழுந்தா என்னவெல்லாம் உடைய வாய்ப்பு இருக்கு?சைட்  வியூ மிரர், இல்ல ரொம்ப பலமா விழுந்தா லெப்ட் இன்டிகேடர், கிக் ஸ்டார்டர், லெக் சப்போர்ட் இதெல்லாம். ஆனா இந்த பைக்ல இதெல்லாம் பத்திரமா இருக்க, ஹெட்லைட் கண்ணாடி காலி.....சுக்கு ஆயிரமா... சில்லு சில்லா... இன்னும் இந்த உவமையில் என்னவெல்லாம் இருக்கோ..அத்தனையாவும் போச்சு ..

செக்யூரிடியிடம் என் நம்பர், இமெயில் முதலானவைகளை கொடுத்து பைக்காரர் வந்தால் என்னை தொடர்பு கொள்ள சொல்லிவிட்டு வீட்டுக்கு போய்ட்டேன்;

"போன முறை நம்ம பார்க்கிங்கில் நம்ம கார்ல எவனோ கோடு ...கோடு ன்னு கூட சொல்ல முடியாது..கிட்டதட்ட ரோடே போட்டுட்டு சொல்லாம கொள்ளாம ஓடிட்டான்.டூ வீலர்க்கே இவ்வளவு ஓவர் ரியாக்சன் பண்ண ஆள் நீயா தான் இருப்ப...நல்லா வருவ ...." ன்னு கதிர்.

"யமஹா வண்டி ஹெட்லைட் கண்ணாடி எவ்வளவு இருக்கும்"ன்னு ட்விட்டர் பேஸ்புக்ல எல்லாம் விசாரிச்சுட்டு மறுநாள் ஆபீஸ் வந்தேன்.

வந்து கொஞ்ச நேரத்துலயே  எதிர்பார்த்த மாதிரி ஆபீஸ் மெசஞ்சரில் "பைக் க்ரீவன்ஸ் பத்தி பேசணும். கால் மீ" என்றொரு மெஸேஜ். கால் பண்ணிட்டு, நேர்ல பேசறேன்னு சொல்லி ஏழாவது மாடிக்கு போனேன்.அவன நீங்க பாக்கணுமே...பைக்  ஓட்றவன் எல்லாரும் அஜீத் இல்ல....அவ்ளோ தான் சொல்ல முடியும்.

நீள முடி (பையன் தான்), ப்லாரசன்ட் கலர் சட்டை, முக்கா பேண்ட், கவ் பாய் ஷூ.... (அடிச்சிட போறான்...ன்னு கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டே சொன்னேன்)

"இந்த மாதிரி ஒடஞ்சுட்டு...காசு குடுத்துடறேன்"

"அது சாதாரணமா கடைல வாங்கின பைக் இல்ல...ஒரு ஒரு பார்ட்டும் பாத்து பாத்து வாங்கி அசெம்பில் பண்ணது (நீயே அசெம்பில் பண்ண மாதிரி தான் இருக்க....இப்ப புரியுது....மத்ததெல்லாம் ஒடையாம ஹெட்லைட் கண்ணாடி ஒடஞ்ச மர்மம்) அந்த கண்ணாடி மட்டும் தனியா கெடைக்காது. முழு லைட்டையும் மாத்தணும். அப்றோம் ஃ ப்யூயல் டாங்க்கு நெளிஞ்சுருக்கு.
இண்டிகேட்டர் கூட வேலை செய்யலை...இப்புடி எப்டி நடந்துச்சு....எனக்கு ஆச்சர்யமா இருக்கு..." - அவன் சொல்லிட்டே போக என்கிட்டே ரீஇம்பர்ஸ் பண்ணி ஒரு புது பைக்கே வாங்க திட்டம் தீட்டற மாதிரி இருந்துச்சு எனக்கு....

"சரி மன்னிச்சுடு.ரொம்ப பக்கத்துல பார்க் பண்ணதால இடிச்சுடுச்சு...நீ உன் பைக்க காமி..நான் எதுக்கெல்லாம் காசு குடுக்கணும்ன்னு பேசி தீத்துக்குவோம்"
(ஆங்கில உரையாடல் என்பதால் ஒருமையில் மொழிபெயர்த்துட்டேன்)

"எனக்கு கூட இப்படி நடக்கலாம் ...எதுக்கு மன்னிப்பெல்லாம்...(ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) இன்பாக்ட் உடைஞ்சதையே நான் கவனிக்கலை...செக்யூரிட்டி வந்து மேடம் போன் பண்ண சொன்னாங்கன்னு சொல்ற வரைக்கும்...ஹெட்லைட்ட மட்டும் மாத்தி குடு " (அவன் கூட போன் பண்ண சொல்றவங்கல்லாம் கௌசல்யா இல்லன்னு நெனச்சுருப்பான்)

"இல்ல நீயே மாத்திடு...நான் காசு தந்துடறேன்"

சொல்லிட்டு வந்துட்டேன்.

நேத்து இன்னொரு மெயில்.
"லக்கிலி அந்த கண்ணாடி கிடைச்சுடுச்சு.மாத்திட்டேன் கண்ணாடி 166/- மெக்கானிக் சார்ஜ் 66/-...நீ 200/- குடுத்தா போதும்"  (வான்டடா வந்து ஆஜர் ஆனதால எனக்கு பத்து பெர்சண்ட் தள்ளுபடி)

இன்னைக்கு பணம் குடுத்துட்டு வந்ததும் பின்னாடியே இன்னொரு மெசேஜ்.

"Appreciated…legitimate ppl are hardly ever found in this globe…thnks" (என் கால் நகம் பேர்ந்துடாம, பல்லு ஒடையாம, இருநூறு ரூபாய்க்கு போஸ்ட்க்கு மேட்டர் தேத்தி குடுத்ததுக்கு நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..)

இன்னைக்கு ஒரு ராயல் என்பீல்ட் பக்கத்துல வண்டி நிறுத்தி இருக்கேன். ஆமா ராயல் என்பீல்ட் ஹெட்லைட் கண்ணாடி என்ன விலை?

Wednesday, 20 February 2013

Simply, some fb updates

Just wanted to log some of my recent fb updates:

------------------
I think the biggest challenge for women in family is that, many a times to keep up the family spirit, they get to accept things with which they are in no agreement and even more challenging is that "ACCEPT WITH A SMILE" - as if it's the best thing that is happening to them :):)
*********
#myArjun updates:

Me: Arjun, given a chance, what is that one thing you want to change in Amma?

Arjun: You tell first ma, what will you change in me?

Me: I will change you such that you will love milk and start drinking 4 glasses of milk a day without a fuss. Now you tell me.

Arjun: I will change you such that you will not want me to drink milk everyday.

Me: ?!@#@$!!!!!!!!
 
*********
#myArjun updates:

For some reasons, we could not invite the family in the opposite flat for Arjun's birthday event. While we were serving snacks to the guests, the family returned from outside, sensed the happenings through our open door and it was an embarrassing time for all of us/them as well. Arjun without any further thinking, took the chocolate box (gifted by my colleagues, ran to them, offered them the chocolates and told "today is my birthday; please take". Such a relief for all of us. God Bless you my boy, for this flawless heart you have.
*************


 
 

Friday, 25 January 2013

வருண் நித்யா காதல் சில தருணங்கள் - ஒரு டக் பதிவு

முழுநீள காதல் கதை என்பது தமிழ் படங்களில் அரிதாகி விட்டது (இரு இரு...இதே மாதிரி தான விண்ணை தாண்டி வருவாயா பட  விமர்சனத்துக்கும் எழுத ஆரம்பிச்ச?
அட படமே அதே மாதிரி இருக்கப்போ பதிவு இருக்க கூடாதா?)

முழுநீள காதல் கதை என்பது தமிழ் படங்களில் அரிதாகி விட்டது.
இப்ப வர்ற தமிழ் படங்களில் காதல் இருக்கும் ஆனால் அது கூட சேர்ந்து நண்பர்கள், அண்ணன், தம்பி, தீவிரவாதி அல்லது குறைந்த பட்சம் ஒரு பேயோ,யானையோவாவது இருக்கும். இத மாதிரி எதுவுமே இல்லாம மைதிலி என்னை காதலி படத்தில் கதை, திரைக்கதை வசனம் டைரக்சன் இசை....etc என்று எல்லாமுமாக டி ஆரே இருப்பது போல இந்த படம் முழுக்க முழுக்க காதலும் காதல் சார்ந்த திணையும் தான்.

வி. தா. வ, நீ.தா.என்.பொ. வ இந்த படமெல்லாம் பிடிக்க வேண்டுமானால்

1)நீங்கள் யூத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் காதலித்து இருக்க வேண்டும். காதல் என்றால் கல்யாணத்துக்கு அப்றோம் வரும் சுவலட்சுமி காதலோ அல்லது படிப்பெல்லாம் முடிச்சு தெளிவாகி வரும் அறிவு முதிர்ச்சி காதலோ அல்ல... பதின்ம வயதிலோ, இருபதின் ஆரம்பத்திலோ ஆன்ட்ரொஜண்/ ஈஸ்ட்ரோஜண் புரட்டி புரட்டி அடிக்கும் போது வரும் மடத்தனமான காதல். Mad love.

2)சந்தானம் சொல்ற மாத்தி தூக்கு போடறதுக்கு முன்னாடி மூஞ்சில கருப்பு துணி போட்டு மூடின மாதிரியான உணர்வை அனுபவிச்சு இருக்கணும்.

3)நித்யா மாதிரி "படிப்பு/ நண்பர்கள்/ எக்ஸ்ட்ரா கரிகுலர் என்ற எல்லா நிலைகளின் போதும் அவன் மட்டும் போதும்" என்பதே உங்களுக்கான தேர்வாக இருந்து இருக்க வேண்டும். (இதையும் தாண்டி நீங்கள் படிச்சு இன்னைக்கு வாழ்க்கைல தேறி இருந்தீங்கன்னா அது உங்க அதிர்ஷ்டம்/சாமர்த்தியம் )

4)வருண் மாதிரி ஒரு டெம்ப்ளேட் மிடில் கிளாஸ் குடும்பத்தின் "அத்தனைக்கும் ஆசைப்படு" க்கும், நித்யாவின் "நீ மட்டும் தான்
எனக்கு வேணும்" க்கும் நடுவிலான அவஸ்தையை பட்டு இருக்கணும்.

5)அழுகையின் ஊடே "என்னை சாவடிக்கற; you don't deserve my love' என்று ஒரு முறையேனும் நீங்க சொல்லி இருக்கணும்.

இதெல்லாம் பண்ணி இருந்தீங்கன்னா இந்த மடத்தனம்,அதிலும் இந்த மடத்தனத்த ஜீவா, த்ரிஷா, சமந்தா, சிம்பு (sans விரல் வித்த/பஞ்ச டயலாக்) செய்யறப்போ உண்மையிலேயே அது ரொம்ப அழகா தெரியும்...

-"மேல்போர்ன்ல எனக்கு ஒரு ப்ரெண்ட் இருக்கா.அவட்ட சீக்கிரமா திரும்ப வர சொல்றியா" என்று வருண் சொல்றப்போ அவனுக்கு தெரிந்தும் தெரியாமலும் ஒரு சிரிப்பு சிரித்து, "சரி சொல்றேன்"னு நித்யா சொல்லும் அழகியல் புரியும்.

-ஸ்கூல் சண்டை அப்போ திரும்பி போகும் நித்யா "வேற ஏதும் சொல்லாத வருண், போகாதே ன்னு மட்டும் சொல்லு" ன்னு மனசுக்குள்ள சொல்லிக்கும் போது இது ஏற்கனவே ரேவதி பேசின டயலாக் தான்னா கூட உங்களுக்கு பிடிக்கணும்... பிடிக்கும்.

-"அவனா நானா" "i don't want this sh*t anymore" என்று பொங்கும் வருணின் கோவம் புரியும்

-"சாய்ந்து சாய்ந்து" ன்னு ஆரம்பிக்கும் போதே..உங்களுக்குள்ள அடடா ன்னு இருக்கும்.

-"நீ தான விட்டுட்டு போன" ன்னு வருண் சொல்றப்போ "ஆமா" ன்னும் "நீ என்னை போக விட்டுருக்க கூடாது" ன்னு நித்யா சொல்றப்போ "ஆமா கரெக்டு" ன்னும் உங்க மனசு மாத்தி மாத்தி defense/prosecution ரெண்டுமே பண்ணும்.

-மொட்டை மாடில வெச்சு நித்யா "கடைசியா ஒன்னு பண்ணிடு வருண், என்னை விட்டுடு... ஏன்னா என்னால அது முடியாது" ன்னு சொல்றப்போ, எப்படி இருக்கும்ன்னு எழுத தெரியலை

-"நீ ஏன் கோச்சிங் சேரனும் உனக்கும் MBA படிக்க ஆசை இருக்கா? என்று கேட்கும் வருணிடம் "அங்கே நீ இருப்பேல்ல" என்று சொல்லும் நித்யா உங்களுக்கு பைத்தியம் மாதிரி தெரிய மாட்டாள்.

-படம் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு. க்ளைமாக்ஸ் மின்னலே வா, (தமிழ்) வி.தா.வ யான்னு உங்களுக்கு அப்படியே பக்கு பக்குன்னு அடிச்சுக்கும்.

இப்படி தாறுமாறாக மடத்தனம் செய்து, இன்று வேலை, குழந்தைகள், ட்ராபிக் ஜாம் முதலான இத்தியாதிகளில் உங்கள் காதலிக்கும் நேரங்கள் தொலைந்திருப்பின் இந்த படத்தை பாருங்கள்...
இரண்டரை மணி நேர எக்ஸ்டஸி கேரண்டி.

Wednesday, 25 April 2012

ஆழத்தில் மயக்கம் என்ன

நியூ ஹொரைசான் மீடியாவின் "ஆழம்"  மாதாந்திரி இதழின் பிப்ரவரி மாத மாதிரி இதழில் 'மயக்கம் என்ன' சினிமா  விமர்சனம் எழுதும் வாய்ப்பு கிடைத்து எழுதி இருந்தேன். பதிவில் பகிர்ந்து கொள்ள நினைத்து மறந்தே போய்விட்டது. திரு.பத்ரி சேஷாத்ரி  இந்த இதழ் குறித்து அறிவித்து இருக்கும் பதிவில் இருந்து பிப்ரவரி 2012 இதழை நேரம் கிடைக்கும் போது டவுன்லோடு செய்து 82ஆம் பக்கத்தை பார்க்கவும் :)

Sunday, 25 December 2011

ராஜபாட்டை விமர்சனம்.

நண்பன் ட்ரைலர் சூப்பர். இலியானா அழகோ அழகு. மூக்கு இடிக்கிற சீன் உட்பட ஒன்றையும் மாற்றவில்லை போல. சத்யன் கேரக்டர் பேரு ஸ்ரீவத்சன். அக்கா ரோலில் அனுயா. சஹானா சாரல் மாதிரியே செட் போட்டு ஒரு பாடல்.
 
வேட்டை ட்ரைலர் நச். அண்ணன் கோழை போலீஸ் மாதவனுக்காக தம்பி தைர்யசாலி ஆர்யா திரைமறைவில் போலீஸ் வேலை செய்வார் என்பதாக கதையை ஊகிக்க முடிந்தது. அமலா பால் செமையாக இருக்கார். சமீரா கூட ஓகே.
 
ஓ பை த வே,  ராஜபாட்டை ச்ச்சே!

Wednesday, 7 September 2011

தேங்க்ஸ்மா


பாண்டிச்சேரி ராஜா தியேட்டர்.
நாள்: ஆகஸ்ட் முப்பத்தொன்னு.
நேரம்: காலை ஆறேகால் மணி.

நாங்க அந்த வழியா ஒரு கல்யாணத்துக்கு போய்க்கிட்டுருந்தோம்.
"மலையோடு மோது தலையோட மோதாத...இப்படிக்கு தல In தம்பிகள்" ன்னு போஸ்டர். ஏகப்பட்ட பேர் டிக்கட் வாங்க க்யூவில் நிக்கறாங்க.

"கல்யாணத்தை கட் பண்ணிட்டு நாமளும் போய் க்யூவில் நின்னுருவோமா?"

"அட்லீஸ்ட் இந்த கூட்டத்தை படமெடுத்து ட்விட்டர்ல போடணும்."



மாயாஜால். சென்னை.

"கெடைக்காது. ரெண்டு நாள் தான் ஆகுது படம் வந்து. வெள்ளிக்கிழமை சாயங்காலம் வேற. இதெல்லாம் ஓவர் கான்பிடன்ஸ். பேசாம நேரா வீட்டுக்கே போலாம். நேரத்துக்கு வந்தோம்ன்னாவது இருக்கும்."

" ட்ரை பண்லாம் வா."

கவுண்டர்ல போய் "மங்காத்தா மூணு டிக்கட் வேணும்; இருக்கா?"

"வாங்க வாங்க, எந்த ஷோ வேணும்? 5:30, 6:15?? Which row you want sir?"

உடனே என் தம்பிக்கு போன் போட்டேன். "டேய் டிக்கட்லாம் கிட்ட தட்ட சும்மா தராய்ங்க"

"ஏண்டீ இன்னுமா நீ அஜீத் படமெல்லாம் பாக்கற?"

"என்ன தான் அஜித்தை வெறுத்துட்டாலும் அவர் படம் ரிலீஸ் ஆகறப்போ இந்த படமாச்சும் ஓடனும்ன்னு மனசுல ஒரு ஆசை வருதுடா"

"சரி பாத்துட்டு போன் பண்ணு"

Ok,  relax இதுக்கு மேல சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல், நாப்பது வயசுன்னு எல்லாம் தல இமேஜ் பாக்காதது, படத்துல கடைசில திருடனை போலீஸ் ஆக்காம போலீசை திருடனாக்குனது, வெளையாடு மங்காத்தான்னு நடன முயற்சி,நானும் மாஸ் ஹீரோன்னு foul language பேசினது, 'ஆறு மாசத்துக்கு பிறகு'ன்னு போட்டு ஹீரோயினோட பாட்டு பாடற மாதிரி டெம்ப்ளேட் இல்லாம த்ரிஷாவ அப்டியே அழுகாச்சியா கழட்டி விட்டது etc etc, இதை எல்லாம் நான் திரும்ப அரைக்க போறதில்லை.

படம் முடிஞ்சு என் தம்பிக்கு ஒரு போன் போட்டேன்.

"செம படம் டா"

-----------------

மங்காத்தா பற்றிய ட்வீட்களில் எனது பேவரைட்.

ராகவன்,அன்புச்செல்வன்,துரைசிங்கம் இவங்க எல்லாம் ட்யூட்டில இருந்தாத்தான் படம் ஓடும் விநாயக் சஸ்பென்ஷன்ல இருந்தாலே படம்ஓடும்

via @SAIALAGAPPAN.

----------------

இது ஏகப்பட்ட(எத்தின்னு எல்லாம் கேக்கப்படாது) லைக்குகள் வாங்கிய என் பேஸ்புக் ஸ்டேடஸ்.

Vinayak Mahadevan was a good one from Ajit.
---------------

சமீபத்தில் வாசித்தது 'ஒரே ஒரு துரோகம்'. வாசிக்க காத்திருப்பது 'Revolution 2020' மற்றும் 'மூன்றாம் உலக போர்' புத்தகமாக எப்போது வருமென்று.

---------------

அதே சூப்பர் சிங்கரை தான் விடாமல் பார்த்துட்டுருக்கேன். கிருஷ்ணமூர்த்தியை ரவியும், ரவியை அல்காவும் மறக்கடித்தது போல் இந்த சீசனில் அல்காவை யாரும் மறக்கடிக்க வில்லை எனக்கு. அதனால் பேவரைட் என்று யாருமில்லை.

சொல்ல மறந்துட்டேனே... பாண்டிச்சேரி கடலூர் சாலையில் டிரைவ்
பண்ணிக்கொண்டிருக்கும் போது Kathir சடன் ப்ரேக் அடித்து சொன்னார்.

"ஹே இங்க பாரு அல்கா வீடு."

Anugraha Satellite Township :)

--------------


எங்கள் கல்லூரி ஹாஸ்டல் மற்றும் என் கசின்கள் நிறைய பேர் எழுத்தாளர் ரமணி சந்திரன் அவர்களின் தீவிர ரசிகைகள். நானும் ஆரம்பத்தில் சில நாவல்கள் படித்து இருக்கிறேன். அவர் ஒரே கதையை பேரையும் ஊரையும் மாத்தி போட்டு நடு நடுவே மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு சுத்தி சுத்தி அடிக்கறாரோ என்று எனக்கு ஒரு புரிதல் இருந்தது.சில வாரங்களுக்கு முன் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக வந்து சில அத்தியாவசியமான கருத்துக்களை அனாயாசமாக சொன்னார். பெண் சுதந்திரம் என்பதில் இருக்கும் தவறான புரிதலை தாம்பத்தியத்துக்குள் நுழைக்க முயன்ற கருத்துக்களுக்கு அற்புதமாக பதிலடி கொடுத்தார். ஒரு பெண் "என் கணவர் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்ததும் அவருடைய ஷூவை கழற்றி விடுவது எனக்கு மிகவும் பிடித்த வேலை" என்று சொல்லி எதிரணியினரின் கேலிக்கு ஆளானார். "அவரும் இத மாதிரி உங்க ஷூவை கழற்றி விடுவாரா? " என்பது எதிரணியின் கேலி கேள்வி. நம்ம எழுத்தாளர் அழகாக சொன்னார், "அந்த கணவர் தன மனைவியிடம் ஷூவை கழற்றி விட உத்தரவிட்டு அதை அந்த பெண் கடமைக்காக செய்தால் மட்டுமே இது பெண்சுதந்திர பிரச்சனை. அந்த பெண் தானே விரும்பி செய்யும் வகையில் இதை சுதந்திரத்தோடு சம்பந்தபடுத்தி விவாதிக்க வேண்டியதில்லை.அதே போல அந்த கணவர் திரும்ப அந்த பெண்ணுக்கு ஷூவை கழற்றி விட்டு தான் தன் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை, தலையை தடவி கொடுத்தலில் கூட தன் நன்றியை வெளிப்படுத்தலாம். நீ செஞ்சா நான் செய்வேன் என்பது தவறான புரிதல்"

முழு நிகழ்ச்சியும் பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக்.

link via @sathishvasan
--------------


இடம் பாண்டிச்சேரி பீச்

ஒரு புதிதாக திருமணமான ஜோடி (ன்னு நெனைக்கிறேன்)

கணவர் வளைத்து வளைத்து மனைவியை போட்டோ எடுத்து கொண்டு இருந்தார். நான்: பாருங்க, மனைவியை ரசிச்சு ரசிச்சு போட்டோ எடுக்கறார். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். ஹம்ம்.

கதிர்: உக்கும். டிஜிடல் காமெரா இருக்கதால எடுக்கறாய்ங்க. இதே அந்த பழைய ரோல் காமெரா வாங்கி கொடு. ஒவ்வொரு பிலிமும் காசு.ஒரு பய போட்டோ எடுக்க மாட்டான்.

---------------

எனக்கு காலை ஆறரையில் இருந்து ஏழரை ஒரு மூன்று மணிநேரமாக இருந்தால் நலம். அர்ஜூனை எழுப்புவது முதல் பள்ளிக்கு அனுப்பும் நேரம். இன்றைக்கு காலை சற்று பரபரப்பு அதிகமாகி விட்டது. நான் எழுந்திருக்க தாமதம். கீரை நேற்றே நறுக்கி வைக்காததால் தாமதம். இதனால் அவனை எழுப்புவது தள்ளி போய் கிளப்புவதில் ஒரே அவசரம். எப்படியோ வாயில் சாப்பாடை திணித்து, ஸ்நாக்ஸ் பாக்ஸ் பேக்கிங் எல்லாம் முடித்து கரெக்டாக கிளப்பி விட்டேன். கதவு வரைக்கும் போனவன் என்ன நினைத்தானோ திரும்பி பார்த்து சொன்னான். "தேங்க்ஸ்மா"
--------------

Wednesday, 9 March 2011

ஒரு மூக்கு கதை

மூக்கில் என்னவெல்லாம் போடலாம்?பெண்கள் மூக்குத்தி போடலாம். கணவனுக்கு பிடித்தால். மூக்கே குத்தாமல் நயன்தாரா மாதிரி வளையம் போட்டுக்கலாம். சளி பிடித்தால் விக்ஸ் போடலாம். கொஞ்சம் அதிரடியான ஆளாக இருந்தால் டைகர் பாம் ஜண்டு பாம் கூட போடலாம்.மூக்குப்பொடி போடலாம்.மூக்கின் மேல் கண்ணாடி போடலாம். அடுத்தவர் விஷயத்தில் நாம மூக்கையே கூட போடலாம். ஆனால் மூக்குக்குள் ஆரஞ்சு பழ கொட்டையை போடலாமோ? எங்க அர்ஜுன் போட்டுக்கிட்டான்.



முந்தா நாள் இரவு, குடும்பமாக ஹாலில் உட்கார்ந்து இருந்தோம்.டிவியில் அயர்லாந்துடன் இந்தியா மேட்ச்.'யூசுப் பத்தனை அனுப்பாமல் டோனி ஏன் பேட்டிங் பண்ண வந்தான்?' என்று ட்வீட்டிக்கொண்டு சைடில் ஆபீஸ் வேலை. சோபாவில் உட்கார்ந்து இருந்த அர்ஜூன் திடீர்ன்னு "அம்மா மூக்கு..."ன்னான்.

வயிற்றில் அர்ஜுன் இருந்த பத்து மாதமும் கடவுளுக்கு வித விதமான கோரிக்கை வைப்பேன். அதில் ஒன்று என் குழந்தைக்கு எனக்கு மாதிரி சப்பை மூக்கு இருக்க கூடாதென்பது. ஆனால் கேட்டதற்கு மாறாக அதே மாதிரி மூக்கு. நூலை போல் சேலை.

"அம்மா நீ எனக்கு சின்ன வயசில் மூக்கை நல்லா நீவி விட்டு இருந்தா இப்போ இப்டி சப்பையா இருந்து இருக்காதில்ல?" அடிக்கடி எங்கம்மாவிடம் இதை கேட்பேன்.

"ஏதோ நீவி விட்டதால தான் இந்த அளவாவது இருக்கு.பொறந்தப்போ மூக்கு இருக்க வேண்டிய எடத்துல ரெண்டே ரெண்டு ஓட்டை மட்டும் தான் இருந்துச்சு தெரிஞ்சுக்கோ" தவறாமல் இப்படி பதில் சொல்வாங்க எங்கம்மா.

எனக்கு சுபா என்றொரு தோழி இருந்தாள். எனக்கு நேர்மாறாக அவளுக்கு ரொம்ப பெரிய மூக்கு. நாங்கள் இருவரும் அடிக்கடி சொல்லிக்கொள்வோம். "கடவுள் நம்ம ரெண்டு பேர் மூக்குலயும் ஒரு ஒரு இன்ச்ல வெளாடிட்டார்"ன்னு...பிரேமலதான்னு ஒரு ஸ்கூல் மேட். அவளுக்கு திடீர்ன்னு விபரீத கற்பனைகள் வரும். திடீர்ன்னு ஒரு நாள் "மனுஷனுக்கு மூக்கே இல்லன்னா முகத்துக்கு சோப்பு, பவுடர்லாம் போடும் போது நடுவுல இடிக்காது" ன்னா. "த்ரீ இடியட்ஸ்" படத்துல அமீர்கானுக்கு கடைசி சீன் வரை கிஸ் பண்றப்போ மூக்கு இடிக்குமான்னு உலக மகா சந்தேகம் இருக்கும்.

சரி கதைக்கு வருவோம்.

"அம்மா மூக்கு..."

"மூக்குக்கு என்னடா?"

"கண்ணாடி எடுத்துட்டு வாங்க, பாக்கணும்"

"ஆமா இப்போ எதுக்கு கண்ணாடி?"

"ஆரஞ்சு விதையை மூக்குள்ள போட்டுக்கிட்டேன்"

"என்னது?"

.

.

.

பதறி போய் மூக்குக்குள் டார்ச் அடித்து பார்த்தால் ஒரு ஆரஞ்சு விதை இருப்பது தெரிந்தது. எனக்கு மூச்சடைத்தது. ஞாயிற்றுக்கிழமை அதுவும் அந்த நேரத்தில் எங்கள் ஏரியாவில் டாக்டர் கிடைப்பதென்பது அயர்லாந்துடன் டாஸ் ஜெயித்தும் பவுலிங் என்றாரே டோனி அது மாதிரி ஒரு முரண். 24*7ஆஸ்பத்திரி உதவியை தான் நாட வேண்டும். அவர் வேறு ஊரில் இல்லை. நானே ஏதாவது முயற்சி செய்து ஆரஞ்சு விதையை எடுக்க பார்க்கலாமா என்று யோசித்தேன். ஒரு துணியை சுருட்டி மூக்கின் இன்னொரு துளையில் விட்டால் தும்மல் போட்டு அந்த விதை வெளியில் வந்து விடலாம் என்ற நப்பாசையில் முயற்சித்து கொண்டிருந்தேன்.பதட்டத்தில் கை நடுக்கம். இப்படி பண்ணிவிட்டானே என்று கோவம்.

கீழ்வீட்டில் ஒரு பெண். அனஸ்தீசியா நிபுணர்.சமயோசிதமாக அவரிடம் ஓடி இருக்கிறார் என் மாமியார். 'இந்த மாதிரி நிலைமை என்ன செய்யலாம்' என்று கேட்டதும் அவர் இவனை அவர் வீட்டுக்கு கொண்டு வர சொன்னாராம். அங்கே எடுத்து கொண்டு போனதும் இவன் பயந்து அழ ஆரம்பித்து விட்டான். அவர்கள் வீட்டில் forceps வைத்து இருந்தார்கள். ஒரு பவர்புல் டார்ச்சை வைத்து இவன் மூக்கிற்குள் லைட் அடித்து பார்த்து, 'அப்படியே உள்ளே தள்ளிவிட்டால் தொண்டைக்குள் போய் விடும், துப்பி விடலாம் அல்லது முழுங்கி விடலாம்' என்றார். எனக்கு என்னவோ அவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு விடுமோ என்று பயமாக இருந்தது. 'முடிந்தால் வெளியில் எடுத்து விடுங்களேன்' என்றேன்.

அவர் போர்செப்சை இவன் மூக்கிற்கும் கொண்டு போனதும் இவன் பயந்து அழ ஆரம்பித்து விட்டான். ஒரு வழியாக இவன் கண்களை மூடிக்கொண்டு போர்செப்சை மூக்கிற்குள் கொண்டு போயும், இவன் திமிறிய திமிறில் மூக்கிற்குள் பட்டு ரத்தம் கொட்டிவிட்டது. அடுத்தவர் வீட்டில் வைத்து பொங்கிக்கொண்டு வரும் அழுகையை அடக்குவது மிக சிரமம்.எப்படியோ சமாளித்தேன்.

ஆரஞ்சு கொட்டையை எடுத்து விட்டு, இவன் மூக்கை துடைத்து ஆன்டிசெப்டிக் ஜெல் எல்லாம் போட்டு விட்டார்கள். இவனும் சற்று அமைதி ஆனான். அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது கவனித்தேன். ஒரு போர்டு வைத்து தினம் ஒரு குறள் என்று எழுதி வைத்து இருந்தார்கள்.

அன்றைய குறள்
காலத்தினார் செய்த நன்றி...


மறுநாள் ஆபிசில் ஒரு பெண்ணிடம் 'அர்ஜுன் இப்டி பண்ணிட்டான்' என்று
புலம்பிக்கொண்டு இருந்தேன்.

"All kids do this yaa. I also put a greenpea in my nose when I was small. You ask you mom; you would have done something similar" என்றாள். உடனே எங்கம்மாவிற்கு போன் செய்தேன்.

'அம்மா நேத்து ராத்திரி அர்ஜூன்....'

'...அச்சச்சோ அப்றோம்?'

..
..
..
"பாரும்மா...அவங்கப்பா வேற ஊர்ல இல்லாத நேரத்துல என்னை எப்டி படுத்தி வெக்கறான்னு"

"ச்ச குழந்தையை திட்டாதே. நான் கூட சின்ன புள்ளையா இருந்தப்போ இப்படித்தான் மருதாணி விதையை மூக்குல போட்டுக்கிட்டேனாம்; உங்க அம்மாச்சி சொல்வாங்க"

*******