Tuesday, 3 November 2009

ஜூலி போட்டது ரெண்டு குட்டி

முன்குறிப்பு: இது ஒரு சிறுகதை முயற்சி அல்ல. இலக்கியவாதிகள் அச்சம் தவிர்த்து தொடர்க.

கரண்ட் இல்லாத ஒரு மழை நேர மாலையில் தான் ஜூலி எங்கள் வீட்டுக்கு வந்தது. அப்போ அது நிறை மாத கர்ப்பிணி. வீட்டு சுவரோரம் மழைக்கு ஒதுங்கி குளிரில் நடுங்கி முனகி கொண்டு இருந்ததை பார்த்து அப்பா, அம்மா, நான், தம்பி என்று குடும்பமாக இரக்கபட்டோம். அடுத்த பத்து நிமிடத்தில் திண்ணையில் ஒரு சாக்கு படுக்கையும், ஒரு பழைய தட்டில் பால் சோறுமாக, ஜூலி எங்களோடு சேர்ந்து கொண்டது. அழுக்கான வெள்ளை நிறத்தில் இருந்த அதற்கு நானும் தம்பியும் சேர்ந்து ஜூலின்னு பெயர் வைத்தோம்.

ஜூலிக்கு எங்க எல்லாரையும் ரொம்ப பிடித்து விட்டது. நானும் தம்பியும் மாலை நேர நொறுக்கு தீனியை மூன்று பங்கு ஆக்க ஆரம்பித்தோம். "குட்டி போட போகுதுல்ல, பாவம் ரொம்ப பசிக்கும்" என்று அம்மா அடிக்கடி அதற்கு ஏதாவது கொடுத்து கொண்டே இருப்பாங்க. ஜூலி இது எல்லாத்தையும் விட எங்க அப்பாவோட TVS -50 சத்தத்துக்கு தான் அதிகமா வால் ஆட்டும்.

அப்பா பத்தாங்கிளாஸ் ஆங்கில டியூஷன் எடுப்பாங்க. அதுல 'ஹரன்'ன்னு ஒருத்தன் படிச்சான். இந்த கதைல இவன் எங்க வந்தான்? விஷயம் இருக்கு. கதைக்கு ஒரு திருப்பு முனை கொடுக்க போறதே இவன் தான். இவன் அப்டி என்ன பண்ணான்னு இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்லிடறேன்.

எங்க வீட்டுல அப்போ ஏதோ பூச்சு வேலை நடக்குதுன்னு நிறைய ஆத்து மணல் கொட்டி வெச்சுருந்தாங்க. அந்த மணல்ல தான் நானும் தம்பியும் அப்பாக்கு ரெண்டு பக்கமும் படுத்துக்கிட்டு நிலாவை பாத்துக்கிட்டே கதை கேப்போம். ஜூலியும் எங்க பக்கத்துல உக்காந்துக்கும்.

ஜூலி வந்து ஒரு நாலஞ்சு நாள் ஆயிருக்கும்.ஒரு நாள் நைட் ஜூலி லேசா முனகிட்டு இருந்துச்சு. அதோட சாக்கு படுக்கையில படுத்துக்காம எழுந்து போய்டுச்சு. "அம்மா எங்க போகுதுன்னு போய் பாப்போமா" ன்னு கேட்டதுக்கு, "அதெல்லாம் வேணாம், பேசாம படுங்க" ன்னு சொல்லிட்டாங்க. காலைல அம்மா சொன்னாங்க, "ஜூலி குட்டி போட்டுடுச்சு. ஆனா எங்க போட்டு வெச்சுருக்கு, எத்தனை குட்டி போட்டுருக்கு ஒன்னும் தெரியலை" ன்னு.

நானும் தம்பியும் துப்பு துலக்கி ஜூலி பின்னாடியே போனோம். அது அந்த ஆத்து மணல் குவியல்ல ஒரு பொந்து மாதிரி பண்ணி அதுக்குள்ள போய்டுச்சு.
"அம்மா! ஜூலி மண்ணை தோண்டி பொந்து மாதிரி செஞ்சு அதுக்குள்ள குட்டி போட்டு இருக்கும்மா, ஆனா எத்தனை குட்டி தெரியலை" .
"ரெண்டு மூணு நாள் கழிச்சு அதுவே வெளிய வரும். இப்போதைக்கு நீங்க பக்கத்துல போய் வெக்காதீங்க, கடிச்சுட போகுது" ன்னாங்க அம்மா.

நானும் தம்பியும் மணலை சுத்தி சுத்தி வந்து பொந்துக்குள் எட்டி பார்த்தா எதாவது தெரியுதான்னு முயற்சி பண்ணிட்டு இருந்தோம். "அதோட வயிறு இருந்த சைஸ்க்கு ஒரு அஞ்சு குட்டியாவது போட்டு இருக்கும். ஆண் குட்டின்னா யாராவது எடுத்துட்டு போய்டுவாங்க. பெண் குட்டிய எல்லாம் என்ன பண்றது தெரியலை" ன்னு அம்மா ஒரே பொலம்பல். அப்பா ஜூலிக்கு ஸ்பெஷல் கவனிப்பு பண்ணிட்டு இருந்தாங்க.நானும் தம்பியும் ஒரு தேடலுடனேயே இருந்தோம்.

ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஜூலி postpartum sickness எல்லாம் முடிஞ்சு சகஜமா வால் ஆட்ட ஆரம்பிச்சது. அன்னைக்கு சாயங்காலமே அதோட குட்டியை எங்க கண்ணுல காட்டிட்டுது. எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏன்னா ஒரே ஒரு குட்டி தான் இருக்கு ஜூலி கூட. கருப்பு கலர்(அதோட அப்பா மாதிரியா இருக்கணும்). பெண் பிள்ளை."நாய் பொதுவா ஒரே ஒரு குட்டி போடாது, ஒரு வேளை மணல் ஏதும் சரிஞ்சு மத்த குட்டில்லாம் செத்து போச்சான்னு" அம்மா கவலை பட, எனக்கும் தம்பிக்கும் தூக்கி வாரி போட்டது. மொத்த மணலையும் கவனமாக அகற்றி, துழாவி துருவி தேடினோம். ஒன்னும் அகப்படலை.

தனிக்காட்டு ராஜா(ஜி)வாக வளர்ந்தது ஜூலியோட குட்டி. போட்டிக்கு ஆள் இல்லாம வயிறு முட்ட பால் குடித்து, 'மொத்த அம்மாவும் எனக்கே எனக்கு' ன்னு பெருமையாக வளர்ந்ததில் மூன்றே வாரத்தில் ஒரு முயல் அளவுக்கு வளர்ந்து நின்றது. ஒரு நாள் அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் ஜூலிக்கும் குட்டிக்கும் பிஸ்கட் கொடுத்து கொண்டு நான் அம்மா, தம்பி timepass பண்ணி கொண்டு இருந்தோம்.

"டீச்சர்....டீச்சர்.... " என்று சன்னமாக அழைத்து கொண்டே தலையை குனிந்து கொண்டு ஹரன்.
"என்னப்பா"
கையில் இருந்த கூடைக்குள் இருந்து எதையோ வெளியில் எடுக்கிறான், அதும் கருப்பும் வெள்ளையும் கலந்த கலரில்...துளியூண்டாக ...எலி மாதிரி....
"என்னை மன்னிச்சுடுங்க டீச்சர். சார் கிட்ட எப்டியாவது நீங்க தான் சொல்லணும். ஜூலி ரெண்டு குட்டி போட்டு இருந்துச்சு, கேட்டா தருவீங்களோ என்னவோன்னு நான் தான் இத யாருக்கும் தெரியாம தூக்கிட்டு போயிட்டேன், ஆனா சரியா சாப்பிட மாட்டேங்குது, செத்துடும் போலிருக்கு, அதான் திரும்பி கொண்டு வந்துட்டேன்" என்கிறான். கிட்டத்தட்ட அழுதான்.


அது ஆண் பிள்ளை. பிள்ளை பூச்சி சைஸ்ல இருக்கு. பாவம் கண் கூட முழிக்காத குட்டிய திருடிட்டு போய் இருக்கான் கிராதகன்.
"சரிப்பா ஏதோ இந்த மட்டும் கொண்டு வந்தியே, அதோட அம்மா கிட்ட பால் குடிச்சுதுன்னா பொழச்சுடும், கொஞ்சம் தேறினதும் நீயே எடுத்து போய் வளரு" - அம்மா.

அப்றோம் ஜூலியும் அதோட ரெண்டு குட்டியுமா அமளி பட்டது வீடு. இரண்டு வாரங்களிலேயே அந்த சின்ன குட்டியும் தேறி விட, ஹரன் வந்து அப்பாவிடம் கேட்டு எடுத்துட்டு போனான்.

எங்க தெருப்பகுதியில் ஒருத்தர் அடிக்கடி வந்து குரங்கை வைத்து வித்தை காட்டுவார். "ஆஞ்சநேயர் தனியா இருக்கார்ம்மா, அவர் கூட வெளாட ஒரு வைரவர் கொடுங்கம்மா" என்று அந்த பெண்குட்டியை கேட்டு அடம் பண்ணார். "அடிக்காம பத்ரமா பாத்துக்கோங்க,அப்போப்போ கொண்டு வந்து கண்ணுல காட்டுங்க" என்று கண்ணீருடன் அடுத்த குட்டியையும் அவரிடம் கொடுத்தாகி விட்டது.

அப்பா போன பிறகு, அந்த வீட்டை விட்டு நாங்களும் போய் விட்டோம். ஜூலி எங்களுடன் வர வில்லை. சில மாதங்கள் கழித்து நானும் தம்பியும் வீடு காலி பண்ண அந்த வீட்டுக்கு போன போது மறுபடி ஜூலியை பாத்தோம். உண்டாகி இருந்தது.

பின்குறிப்பு: நாய்க்கதை பிடித்து இருந்தால் சொல்லுங்கள். அடுத்து ஒரு பேய்க்கதை சொல்லுகிறேன்.

11 comments:

Rajalakshmi Pakkirisamy said...

hmmm

SanjaiGandhi™ said...

//பின்குறிப்பு: நாய்க்கதை பிடித்து இருந்தால் சொல்லுங்கள். அடுத்து ஒரு பேய்க்கதை சொல்லுகிறேன். //

உங்க சுயபுராணம் எங்களுக்கு எதுக்கு.? :))

Maddy said...

சஞ்சய் ஐ சொன்னதை வழிமொழியலாம்ன்னு நினச்சேன்....ஆனால் இன்னொரு நல்ல கதை கிடைக்காம போய்டகூடாது.

கதை-ல எனக்கு ரொம்ப பிடிச்ச வரி....அப்பாக்கு ரெண்டு பக்கம் மணல் மேட்டுல படுத்துட்டு நிலா பாத்து ரசித்தது

மணிகண்டன் said...

நாய்க்கதை பிடிச்சி இருந்ததுங்க.

Truth said...

//தனிக்காட்டு ராஜா(ஜி)வாக வளர்ந்தது ஜூலியோட குட்டி.

எனி உள்குத்து? சம்பந்தப்பட்டவங்க கேளுங்க ப்ளீஸ் :-)

நாய் கதை நல்லாருக்கு. பேய் கதைக்கு வெயிட்டிங். நீங்க எழுதினா, அதற்கு தொடர் பேய் கதை நான் எழுதறேன் :-)

கணேஷ் said...

ராஜா ஆண்பால், ராணி பெண்பால். இதில் ராஜி வந்ததது உள்குத்தெல்லாம் இல்ல. பொதுவான, வெளிப்படையான, வாகான, மூக்கு மேல் குத்து.

அதில் உண்மை இருப்பதால், நான் உங்கள் பதிவை அமைதியுடன் வழிமொழிகிறேன்; ரசிக்கிறேன்.

பேய்க்கதை: இதுக்கும் அவங்கள மனசுல வச்சி எழுதுனா, ரொம்ப நேச்சுரலா வரும், வரலாம். ப்ளீஸ் ட்ரை பண்ணுங்க‌

Rajalakshmi Pakkirisamy said...

//எனி உள்குத்து? சம்பந்தப்பட்டவங்க கேளுங்க ப்ளீஸ் :-) //

இப்பிடியெல்லாம் நம்ம பேரு Synapse ல வர கொடுத்து வைச்சிருக்கனும். அது புரியாம உள்குத்து வெளிக்குத்துன்னு.

பேய் கதைக்கு வேணும்னா உங்கள மனசுல வச்சு எழுத சொல்லலாம்

ப்ரியா said...

Sanjay,
நான் சொல்றேன்னு சொன்னது பேய்க்கதை. 'பேயின் கதை' அல்ல.

ManiKandan, Maddy, Truth,
நன்றி.

Ganesh,
//உள்குத்தெல்லாம் இல்ல. பொதுவான, வெளிப்படையான, வாகான, மூக்கு மேல் குத்து.
//
சிரிச்சுட்டேன் இத படிச்சு. நன்றி.

Truth,Raji,ganesh,
ஏதோ கைல வந்தத டைப் பண்ணேனே தவிர உள்குத்து ஏதும் இல்ல.(இந்த உள்குத்து ன்ற வார்த்தைய கண்டு பிடிச்சது யாரு?)

Raji,
உங்களை போய் அப்டி சொல்வேனா? நாய்குட்டி பாவம் இல்லையோ?

நாளைப்போவான் said...

ப்ரியா,

ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் நான் தான்.. (இத்தனை நாள் வெளியில இருந்து ஆதரவு கொடுத்துட்டு இருந்தேன்... :))

கதை ரொம்ப நல்லா இருந்தது. கடைசி வரி, கதையோட யதார்த்தத்தை காப்பாத்தி இருக்கு... மொத்தத்தில் சூப்பர்...

மணிவண்ணன்...

Rajalakshmi Pakkirisamy said...

//உங்களை போய் அப்டி சொல்வேனா? நாய்குட்டி பாவம் இல்லையோ?//

நான் தான் கிடைச்சனா... உள்குத்து, வாகான குத்து, மூக்கு மேல குத்துன்னு என்ன வச்சு கும்மி அடிக்கிறீங்க.

//நான் சொல்றேன்னு சொன்னது பேய்க்கதை. 'பேயின் கதை' அல்ல.//

ஹா ஹா ஹா... ரெண்டுக்கும் பெருசா வித்தியாசம் இல்ல.

Jeya said...

unga story sollunga, nanga pei kathaiya guess pannikurom.