Friday, 23 April 2010

IPL - Unplugged

அப்போது இந்த கேபிள், செட்டாப் பாக்ஸ், டிஷ் டிவி, டைரக்ட் டு ஹோம் இது மாதிரி ஏதும் கிடையாது. ஆண்டெனாவை மட்டுமே நம்பி இருந்த சமயம்.வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் சரியா இரவு 7:50க்கு ஆரம்பிக்கும். நாங்கள் எல்லாம் சென்னை தொலைகாட்சி நிலையத்தில் இருந்து வெகு தூரத்தில் இருந்தவர்கள். அதிலும் எங்கள் வீட்டில் இருந்ததோ ஒரு ப்ளாக் அண்ட் ஒயிட் டிவி. "Orson " என்று ஒரு மாடல். இப்போ மாதிரி கரெக்ட் டயத்துக்கு எல்லாம் டிவியை டக்குன்னு ஆன் பண்ணோமா, நிகழ்ச்சிய பார்த்தோமான்னு எல்லாம் இருக்க முடியாது.

நிகழ்ச்சி நேரத்துக்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே டிவி போட்டு, அதுல இருக்கற டியூனரை கிட்ட தட்ட, ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கற ரீதியில் சுத்து சுத்துன்னு சுத்தி, (ஆண்டனாவை ஆட்டிய கதைகள் எல்லாம் இருக்கின்றன) அப்படி நம்ம டிவி பக்கத்துல இருந்து சுத்தறப்போ, நாம உக்கார்ந்து பார்க்க போகும் இடத்தில் ஒருத்தர் நின்று கொண்டு, 'இப்போ லேசா தெரியுது', 'ஐயோ இப்போ போய்டுச்சு', 'இப்போ பரவால்ல', 'லெப்ட்ல திருப்பு', 'ஐயோ ரொம்ப திருப்பிட்ட',  'மறுபடி மெதுவா ரைட்ல திருப்புன்னு' எல்லாம் instructions கொடுப்பார்.நாமளும் அதை எல்லாம் செஞ்சோம்னா ஒரு வழியா டிவியில் மங்கலாக உருவமும், லேசாக பேச்சு குரலும் உயிர் பெற ஆரம்பிக்கும்.இப்படி செட் பண்ணி 'வயலும் வாழ்வும்'ல இருந்தே பார்க்க ஆரம்பிச்சா தான், ஒளியும் ஒலியும் பார்க்க பிராப்தம். ஒரு வேளை நம்ம மறந்து போய் 7:45க்கு தான் டிவி போடறோம்ன்னு வெய்யுங்க. வெறும் புள்ளி புள்ளியா தான் தெரியும். டியூனரை சுத்தி முடிக்கறதுக்குள்ள முக்கியமான ஒன்றிரண்டு பாட்டுகள் போய் இருக்கும்.

சரி, அப்போதாவது Orson டிவி - ஆண்டனா காம்பினேஷன், ஒளியும் ஒளியும் வேண்டி ஒரு மணிநேரம் முன்னதாகவே டிவி பார்த்தோம் என்றால்,
இப்போது எங்கள் வீட்டில் Bravia - Big Tv காம்பினேஷனிலும் அதே கதை தான். எட்டு மணிக்கு வரப்போற மேட்ச்க்கு ஏழு மணியில் இருந்தே செட்மாக்ஸ் போடப்பட்டு, ரிமோட் ஒளித்து வைக்க பட்டு, எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் மட்டுமின்றி எக்ஸ்ட்ரா லார்ஜ் இன்னிங்க்ஸ், எக்செட்ரா இன்னிங்க்ஸ் என்று எல்லாத்தையும் பார்த்து வைக்கிறோம்.

அந்த வகையில் ஊரே சியர் லீடர்ஸ்,கத்ரீனா கயிப்,ரம்யா ஸ்பந்தனா,
சசி தரூர் / லலித் மோடி நடந்தது என்ன?
விஜய் மல்லையா மகன் /  தீபிகா படுகோனே நடப்பது என்ன? இப்படி கிரிக்கெட்டை தவிர மற்ற எல்லாவற்றையும் விவரித்து கொண்டு இருக்கும் இந்த சூடான வேளையில், நான் கவனித்த சில சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த பதிவு.

-
மும்பைக்கும் பெங்களூருவிற்கும் செமிபைனல்ஸ் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருக்கும் போது, சுனில் கவாஸ்கர் மைக்கை பிடித்து பேசிக்கொண்டு இருந்தார்."மும்பை அணியின் வீரர்கள் எல்லாம் செமத்தியா வெளையாட முடிவோட இருக்காங்க. உற்சாகமா இருக்காங்க. அவங்களுக்கு என்னன்னா, அவங்க பீல்டில் செய்யும் சாகசங்களுக்கு சுத்தி இருக்கற மக்கள் கூட்டம் கை தட்டுறத விட, மேட்ச் முடிஞ்சதும் டிரெஸ்சிங் ரூமில் அவங்களோட கேப்டன் சச்சின் "Well done boy" என்று தோள்ல தட்ட போற தட்டு தான் முக்கியம்..."

பின்ன சும்மாவா?

-

இவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ரொம்ப அழகா இருக்கிறார் என்று எல்லாம் சொல்ல முடியாது. பையனாக போய் விட்டதால், கோட் சூட் தான் போட்டுக்க முடியும். மந்திரா பேடி மாதிரி முயற்சி ஏதும் பண்ண முடியாது. ஆனாலும் அவருக்கென்று ஒரு fan - base. அவர் பேசும் கிரிக்கெட் டெக்னிகல் விஷயங்கள் எனக்கு சம்பந்தம் இல்லை என்றாலும், அவருடைய ஆங்கில உச்சரிப்பு, லாவகமாக பேசுவது, டைமிங் ...என்று "யார்ரா இது?" என்று திரும்பி பார்க்க வைத்தவர். கௌரவ் கபூர். MI - RCB செமி பைனல்சின் போது, பீல்டில் இருந்து கொண்டு ஸ்டுடியோவில் இருந்த எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் டீமிடம் சொல்கிறார்.
"The crowd is roaring such that I could barely hear what I even think"

அட!

-

அடுத்ததாக the best thing that I like about IPL.

இவர்கள் டிவியில் வரும் போதே, அப்படியே பிடித்து வெளியில் இழுத்து "இந்தா என் கூட வெளையாடு..."என்று வீட்டில் வெச்சுக்கலாம்ன்னு இருக்கும்.!
இவர்கள் வரும் காட்சிகள் முடிந்து போனதும்,ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்த ஐஸ்க்ரீம் முடிந்து போய் விட்டதை போல் தோன்றும்.
Zoo-Zoo.
வோடபோன் செல்லங்கள்.
அதிலும் ஒரு zoo-zoo புலிக்கூண்டுக்குள் போய் விழுந்து விடும் பாருங்கள். அந்த மூட்டை கட்டின முகத்தில் என்ன உணர்வை காட்ட முடியும்? பாடி லாங்குவேஜிலேயே பயந்து காமிக்கும். அட்டகாசம்.

இவர்களை மொத்தமாக இங்கே கண்டு களியுங்கள்.

-
 எனக்கு பொதுவாக டிவியில் விளம்பரங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.

சமீபத்தில் ஒரு கேள்வி பதில் படித்தேன்.
அதில் இவ்வாறாக இருந்தது, "அரை நிமிடமே ஓடும் விளம்பரங்களில் கூட ஒரு குட்டி கதை இருக்கும் போது, இரண்டரை நிமிடங்கள் ஓடும் திரைப்படங்களில் கதையே இல்லாமல் போவது ஏன்?"

ஒரு முறை ராஜீவ் மேனன் சொல்லி இருந்தார் ஒரு பேட்டியில், "ஒரு விளம்பர படம் எடுக்கும் போது எது மிகவும் சவாலான விஷயம்?" என்ற கேள்விக்கு...

"ஒரு விளம்பர படம் ஆரம்பித்த சில நாட்களுக்கு அறுபது நொடிகள் ஓடுகிறது என்று வைத்துக்கொள்ளுவோம்;. அதற்குள் ஒரு கதை சொல்லி இருப்போம். சில நாட்களுக்கு பிறகு அதை ஆறு நொடிகள் மட்டும் ஓட கூடியதாக குறைத்து விடுவோம். சவால் என்னவென்றால், அந்த படம் ஆறு நொடிகளாக குறைந்த பிறகும் கூட, மொத்த கதையையும் அடக்கியதாக இருக்க வேண்டும்"  A subset as the set itself.

 நான் எந்த புது விளம்பரம் பார்க்கும் போது இது எனக்கு நினைவு வரும். "இதில் எந்த ஆறு வினாடிகள் அந்த subset க்கு பொருத்தமாக இருக்கும்?" என்று யோசித்துக்கொண்டே பார்ப்பேன்.

IPL பிரேக்குகளில் அக்ஷய்குமார் வரும் LG infinia LED டிவி விளம்பரம்.

அக்ஷய் வீட்டுக்கு ஒரு பெண்ணோடு வருவார்.

"Welcome to my home, you know I dont' get too many people to my home" என்று பீட்டர் விட்டபடி.

ஒரு பெரிய கண்ணாடி சுவருக்கு பின்னால், ஒரு formula one car, Race bike நிற்கும்.

அக்ஷய் சர்வ சாதாரணமாக சொல்வார், "my toys ...for when I get to tour"

இன்னொரு கண்ணாடி சுவருக்கு பின்னாடி பீச் இருக்கும்...

"My private beach" ன்னு அலட்சியமாக சொல்வார்.

பிகர் அப்படியே தொறந்த வாய் மூடாம எல்லாத்தையும் பார்த்துட்டு வெளில கெளம்பினதும், இவர் வந்து ரிமோட் பட்டன்களை அமுக்குவார்.

கண்ணாடி சுவர் மாதிரி இருந்ததெல்லாம் LED டிவிகள் .

'Clarity beyond clearity' என்ற காப்ஷனுடன் விளம்பரத்தின் அடுத்த ஸீன்.முதல் முறை பார்க்கும் போது, உண்மை தெரிந்த அந்த நொடி தான் நாம் விளம்பரத்தை உண்மையாக ரசிக்க ஆரம்பிப்போம்.
(அனேகமாக இது தான் அந்த ஆறு நொடிகளாக இருக்க கூடும்)
கண்ணாடி சுவருக்கு பின்னால் ஹெலிகாப்டர் நிக்கும்.
"I hate traffic jam "ன்னு சொல்லும் அக்ஷயின் குரலில் ஒரு நக்கல் தெறிக்கும்..(yeah its me!!!ன்னு 'தூள்'ல விவேக் சொல்வாரே ...நமக்கு அந்த மாதிரி ஒரு நச் இம்பாக்ட் கிடைக்கும்)

அடடா...என்னவொரு கற்பனை.

விளம்பரத்தை இங்கே பாருங்கள்.

-

When I was in...

எங்கள் அலுவலகத்தின் இணைய இதழ், "potpourri " யின் ஏப்ரல் மாத இதழில் வெளி வந்த எனது கட்டுரை.

என்ன எழுதுவது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்து விட்டு, "படைப்புகள்(?) வந்து சேர வேண்டிய கடைசி நாள்" அன்று நொட்டு நொட்டு என்று எதையோ தட்டி,தேற்றி அனுப்பியது. மற்ற படைப்புகள் அவல் உப்புமா ரகத்தில் இருந்து விட்டதாலோ என்னவோ, இந்த முறையும் 'ஷார்ட்லிஸ்ட்' ஆகி விட்டது!

Denmark - A Happy Country
------------------------------

Whoever stayed abroad for a while would have this “When I was in …” weakness and mine is “When I was in Denmark”…

When I first pronounced the Danish word ‘Islandsgade’ as Ilandsgade, I was looked at like an illiterate. It had to be eeSlandsgeyl which meant Eslands Street. We have to say I like EE, J like Y; Y like U and Danish alphabets doesn’t have W, so we say WLAN like V V LAN.
Work life in Denmark was ‘COOL’ - we called it a day at 4:00PM; I would leave my clients in Bangalore still working at 7:30PM IST during day light saving ;-). The taxation is unimaginable at 45% for a moderate salary but that's how we enjoyed world class public transport and medical facilities.

Danish parties are quite WET and boring for some one who is a tea totaller. Imagine you just sipping a glass of coke for the whole meal and the one next you is drinking more than he is eating.White wine to start with, Red wine with the main course and then Vodka and Bailey’s for the dessert. Just like we buy rice or wheat, the Danes buy cases of beer on Fridays.

Standing on top of the lighthouse at ‘Skagen’ - the northern tip of Denmark, where the Baltic Sea and North Sea rendezvous, would be an out of the world experience.

No wonder Denmark is rated the happiest country to live in, with its population being just five million and its people being so honest/humble/helping.

A carpenter visited us during our stay over there, who said, “As per our economy ratings I am below poverty line; but I go from my own house to a pub every Friday driving in my own car”.

Wednesday, 21 April 2010

ஒரு குறும்பு,ஒரு பொழுதுபோக்கு,ஒரு வாசிப்பு, ஒரு எதிர்பார்ப்பு

நேற்று காலையில் அர்ஜுன் காலையில் எழுந்ததும் குடிக்க தண்ணீர்
வேண்டும் என்றான்.பல்விளக்கி விட்டு குடி என்றால், மாட்டேன்
என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தான்.
நான் சொன்னேன், "ராத்திரி தூங்கும்போது வாயில நிறைய கிருமி வளரும்.பல் விளக்காம ஏதாவது சாப்பிட்டா, குடிச்சா அதெல்லாம் வயித்துக்குள்ள போய் கடிக்கும்"
கோல்கேட் விளம்பரத்துல வர்ற டாக்டர் மாதிரி கிருமி கதை
சொல்லி அவனை பாத்ரூம்க்கு அழைத்து போனேன். பல் துலக்கி துப்பி
விட்டு, அர்ஜுன் சொன்னான்..."அம்மா அங்கே பாருங்க,கிருமில்லாம் ஓடுது"

___/\___

மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் என்று ஒரு படம் வந்தது. மதத்தின்
பெயரால் வரும் கலவரங்கள், அப்பாவி மக்களை எப்படி பாதிக்கிறது
என்ற கருவை சற்று காமெடியும், controversial romance சும் கலந்து சொல்லி இருப்பார்கள். பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்த்து விடுங்கள். நான் இப்போது சொல்ல போவது அந்த படத்தை பற்றி அல்ல. அந்த படம் பார்த்த பிறகு அந்த படத்தில் நடித்த ராகுல் போஸ்,கொன்கனா சென் இவர்களின் புகைப்படம் எதிலாவது வந்தால் கூட உற்று பார்க்க ஆரம்பித்து விட்டேன். அதிலும் கொன்கனா ஒரு பெங்காலி பெண், ஆனால் மிசஸ் ஐயராக, தமிழ் வாயசைப்பு, முகபாவம் என்று எல்லாவற்றிலும் பெர்பெக்ட்டாக பொருந்தி நடித்து இருந்தார்...
கொன்கனாவும் அஜய் தேவ்கனும் நடித்து சமீபத்தில் வெளியான படம்
"அத்தித்தி தும் கம் ஜாவோகே?". போன வார இறுதியில் பார்த்தேன்.

"மாதா பிதா குரு தெய்வம்" என்று தமிழில் சொல்வோம்.

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, அத்தித்தி தேவோ பவ,
ஆச்சார்ய தேவோ பவ என்பதில் நாலாவதாக(மூன்றாவதாக??) இன்னொருத்தரையும் தெய்வமாக மதிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர் தான் அத்தித்தி - விருந்தாளி...

இது தான் கதையின் oneliner. படம் 'சுமாருக்கு சற்று கீழே'.


சும்மா ஒரு பொழுதுபோக்குக்கு பார்க்கலாம்.

___/\___

அடுத்ததாக எனது சமீப வாசிப்பு...சுஜாதாவின் கொலையுதிர் காலம்.
கல்லூரி நாட்களுக்கு பிறகு ஒரே மூச்சில் படித்த புத்தகம்.
சனிக்கிழமை இரவு சுமார் பத்தரை மணிக்கு ஆரம்பித்து அடுத்த
இரண்டரை மணிநேரங்கள் எங்கள் வீட்டு பால்கனியில் ஆஷ் வல்கனோ
வந்து இருந்தால் கூட எனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
அப்படி மூழ்கி போய் இருந்தேன்.

கதையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் விஞ்ஞானமா? பைசாசமா?
என்று சீன் பை சீன் சஸ்பென்ஸ் வைத்து கடைசியில் அதை நமது
முடிவுக்கே விட்டு இருக்கிறார்கள். ஒரு பத்து பதினைந்து வருடத்திற்கு முந்தைய சில சஸ்பென்ஸ்/திகில் படங்களை, இப்போது இந்த கிராபிக்ஸ் நாட்களில் பார்த்தோமேயானால், பயமோ ஆச்சர்யமோ வராது,சிரிப்பு தான் வரும். 'நெஞ்சம் மறப்பதில்லை' மாதிரி வெகு சில படங்களை தான் "எனிடைம்" படங்களாக கொள்ள முடியும்.

இந்த புத்தகத்தையும் ஒரு எனிடைம் புத்தகமாக சொல்லலாம்.பல வருடங்களுக்கு முன் தொடராக வெளிவந்த கதையாம் இது. ஒவ்வொரு அத்தியாயமும், "அவன் அந்த பக்கம் பார்த்து 'ஆ' என்று அலறினான்" ரீதியில் தான் முடிகிறது.

'இந்த இடத்தில் தொடரும் போட்டு ஒரு வாரம் வெயிட் பண்ணு' என்று சொன்னால் எப்படி இருந்து இருக்கும் என்று நினைத்துக்கொண்டே தான் அடுத்த அத்தியாயத்திற்கு நகர்வேன்... "This suspense is terrible. I hope it will last." என்று ஒரு வரி கேள்வி பட்டு இருக்கிறேன். எனக்கும் அப்படி தான் இருந்தது. And it lasted till the end!
ஆனால் ஒன்று, "ஒரு பெண் இப்படி இருக்கிறாள்" என்று விவரிக்கும் முறை புத்தகத்திற்கு புத்தகம் வார்த்தைகள் கூட மாறுவதே இல்லை...ப்ச்.

___/\___

அடுத்தது எனது மிகப்பெரிய எதிர்பார்ப்பு.

இன்னைக்கு மேட்ச் என்ன ஆகும்?

நான் பெரிய கிரிக்கெட் ரசிகை  கிடையாது. ஆனால் இருமல்,
தும்மல், சளி, பன்றிகாய்ச்சல் மாதிரி இந்த கிரிக்கெட் காய்ச்சலும்.
வீட்டில் ஒருவருக்கு இருந்தால், நமக்கும் லேசாக ஒட்டிக்கொள்ளும்.

CSK பைனல்ஸ் போகபோகிறார்களா இல்லையா?

எனக்கு ஜோசியமும் தெரியாது, கிரிக்கெட்டும் தெரியாது.

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.


___/\___

Saturday, 17 April 2010

ஒரு தலைப்பில்லாத பதிவு

சரியான விடையை தேர்வு செய்க,

ஒரு பெண் ட்ராஃபிக் நிறைந்த ரோட்டில் ஸ்கூட்டியோடு கீழே விழும் அந்த எதிர்பாராத தருணத்தில் அவளுக்கு முதலில் யார் நினைவு வரும்?

1.அம்மா

2.கணவன்

3.குழந்தை

விழுந்தது யார்?
நானே தான்.

எங்கே?
ஆபீசில் இருந்து வீட்டுக்கு வரும் போது.

எப்போ?
நேற்று மாலை.

எப்படி?
அது ஒரு சர்வீஸ் ரோடு. வெள்ளிக்கிழமை மாலை என்பதால் எல்லாருக்குமே வீட்டுக்கு போக வேண்டிய அவசரம்.நானும் எனது ஸ்கூட்டியில் போய்க் கொண்டு இருந்தேன். இடது ஓரத்தில் தான். அப்போது என்னை வலது புறமாக ஒரு வண்டி ஒவர்டேக் செய்யவும், நான் சற்று இடது புறமாக ஒதுங்க, என் வண்டி வழுக்கியது போல இருந்தது; பேலன்ஸ் பண்ண முயன்ற அதே சமயத்தில், இடது பக்கம் நடந்து போய்க்கொண்டு இருந்த ஒருவர்,அவருடைய வலது புறமாக ஒதுங்க,என் வண்டியின் ப்ரேக்கில் அவருடைய கை இடித்தது. குழப்புகிறதா? எனக்கும் தான். எது எப்படியோ, நான் எனது வலது பக்கமாக கீழே விழுந்து விட்டேன், வண்டியோடு...

அட, எதுவும் பெரிதாக ஆக வில்லை. இப்படி பதிவு தட்டிக்கொண்டு இருக்கிறேன் என்றால்,உருப்படியாக இருக்கிறேன் என்று தானே அர்த்தம்.
கொஞ்சம் அதிர்ச்சி, அதை விட சற்று கொஞ்சமாக, உடல் வலி.முழுதாக எழுந்து விட்டேன்.வலது பக்கம் சில கீறல்கள்.எனக்கும், என்னை விட
அதிகமாக வண்டிக்கும்... வண்டியின் வலது பக்க ப்ரேக் லிவர் உடைந்து விழுந்து விட்டது.


நான் வண்டியுடன் விழுந்து கிடந்தது, பாவம் பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிகளுக்கு தான் இடைஞ்சல் ஆகிவிட்டது. டூ வீலர்கள் அப்படியே என்னை சுற்றிகொண்டு சென்று விட்டன. நான்கு சக்கர வண்டிகளுக்கு தான் வழி ப்ளாக் ஆகி போனது. ஹாரன் அடித்து த்ள்ளி விட்டார்கள். ஹாரன்கள் சத்தம், “சரி விழுந்தாச்சு, சட்டு புட்டு ன்னு எந்திரி...'என்பதாக ஒலித்தது.

அவர்களை குறை கூறவில்லை.அவர்களிடத்தில் நான் இருந்தாலும் அதையே தான் செய்து இருப்பேனாக இருக்கும். பெங்களூரில், ரோட்டில் யாராவது விழுந்து கிடப்பதென்பது, ட்ராஃபிக் ஜாமை போல், ஒரு சகஜமான விஷயம் ஆகிவிட்டது. என் வண்டி இடித்த அந்த மனிதர் தான், அவருடைய கையை தடவிக்கொண்டே என் வண்டியை தூக்கி தந்தார்.நான் எழும் போது, உடைந்து கிடந்த ப்ரேக் லீவரை எடுத்து கொண்டேன்.வரலாற்றுக்கு நியாபக சின்னங்கள் முக்கியம் இல்லையா?

இப்படி விழுந்து எழுவதில் நமக்கும் நிறைய லாபம் இருக்கிறது தெரியுமோ? - எனக்கு நேற்று தான் தெரிய வந்தது.

- ’பரவாயில்லையே, இப்படி விழுந்து எழுந்தும் கூட, பதட்டப்படாமல், வீடு வரைக்கும் வண்டி ஓட்டிட்டு வந்த்துட்டியே’ என்று கணவரை ஆச்சர்யப்படுத்தலாம்.

- ’நான் அன்றைக்கு ஒரு நாள் நண்பர்களுடன், ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன்.ரொம்ப நல்லா இருந்தது.அங்கே போய் சாப்பிடலாம் வா” கீழே விழுந்ததில் சற்று, மன வருத்தமாய் இருக்கும் நமது “ஃபீல் குட்” நிமித்தம், மாரத்தஹள்ளியின் ஏதோ ஒரு சந்தில் இருக்கும் ஹோட்டலுக்கு
போய் சூப்பர் சாப்பாடு சாப்பிட நேரலாம்.

-சாப்பிடும் போது வழக்கம் போல், “அம்மா சுச்சு..."என்று குழந்தை அழைக்க, “நீ உக்காரு, நான் அழைத்து போறேன்” என்று வழக்கத்தை மீறி நடக்கும் விஷயங்கள் நம்மை, “ஃபீல் பெட்டர்” ஆக்கலாம்.

-இனி அடுத்த நான்கு நாட்களுக்கு, போறவங்க, வர்றவங்க, ஃபோன் பண்றவங்க கிட்டயும்,ஆபிசில் காபி குடிக்கும் போதும், லன்ச் சாப்பிடும் போதும்,
“ஆக்டுவல்லி நான் அன்னைக்கு தான் மொத தடவையா வண்டிலேர்ந்து கீழ விழுந்தேன்...”
என்று கஜினி கல்பனா மாதிரி கதை சொல்லலாம்.

- ”நான் கூட இப்படித்தான் வண்டி வாங்கின புதிதில், மணல் சறுக்கி...” 
 முதல் காதல், முதல் முத்தம் ரேஞ்சில் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும்
”முதலில் விழுந்த” அனுபவத்தை கேட்கலாம்.

-இதோ இப்படி பதிவை எழுதி, பதிவைப் படிக்கும் நண்பர்களின்/உறவினர்களின், ’ஹைய்யா!’ ’ஐய்யோ!’ ’அப்படியா?’ ’என்னாச்சு?’ ’இப்போ எப்டி இருக்க?’ ’பாத்து போகக்கூடாதா?’ க்களுக்கு பதில் அளிக்கலாம்.

இப்படி எத்தனையோ லா(ப)ம்.

என்றைக்கும் இல்லாமல், நேற்று ஆபீசில் இருந்து கிளம்பும் போதே இரு நண்பர்கள், “பார்த்து போ, பத்திரம்” என்றார்கள். அவர்களுக்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும்.

சரி,பதிவின் ஆரம்பித்தில் கேட்ட கேள்விக்கு விடை, குழந்தை.

Wednesday, 14 April 2010

Karbon Kamaal Six!!!

அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு மற்றும் விஷு தின நல்வாழ்த்துக்கள்.
திருவள்ளுவர் ஆண்டு துவக்கமான தை முதல் தினம் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பு வந்ததில் இருந்து ஒரே குழப்பம்.இன்று யாருக்காவது புத்தாண்டு வாழ்த்து சொல்லி பாருங்கள். அவருடைய கொள்கைகளை பொறுத்து பதில் கிடைக்கும்.
எங்கள் வீட்டில் புத்தாண்டு அன்று 'கனி பார்த்தல்' என்று ஒரு பழக்கம் உண்டு. முதல் நாள் இரவே பழங்கள், காய்கறிகள், பூ  வாங்கி ஒரு
இடத்தில் சுத்தமாக அழகாக அடுக்கி வைப்போம். புத்தாண்டு அன்று காலையில் அந்த இடத்தில் ஊதுபத்தி, விளக்கெல்லாம் ஏற்றி வைத்து ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைப்போம்.எல்லாரும் எழுந்ததும் முதலில் இந்த செட்டப்பை  தான் பார்க்க வேண்டும். அதாவது மங்களகரமான விஷயங்களில் கண்விழித்து, பிறகு தன் முகம் பார்த்து....
என் மாமியாரின் அம்மா இதை பின்பற்றுவார்களாம். இப்போது நாங்களும். புத்தாண்டுக்கென்று ஒரு மெனு இருக்கிறது.காலையில் அவல். இனிப்பு கலந்தும், காரமாகவும் இரு வகைகள்.மதியத்திற்கு பருப்பு, சாம்பார், காய்கறி அவியல், உருளை கிழங்கு பொரியல், வெண்டைக்காய் கிச்சடி,
வெங்காய பச்சடி, நெல்லிக்காய் ஊறுகாய், அப்பளம், பாயசம், வடை. அறிவிப்பிற்கு பிறகு இந்த கனி பார்த்தலையும், கட்டு கட்டுதலையும்
திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் அன்றும் செய்கிறோம், சித்திரை முதல் நாளும் செய்கிறோம்.
கொள்கைக்கு கொள்கை; கொண்டாட்டத்திற்கு கொண்டாட்டம்;
என்னை கேட்டால் இப்படி சொல்வேன். "இப்போது என்ன? திருவள்ளுவர் ஆண்டின் துவக்கம் எந்த மதத்தையும் சார்ந்த எல்லா தமிழர்களுக்கும் புத்தாண்டு, சித்திரை துவக்கம் ஹிந்து தமிழர்களுக்கு மட்டும் புத்தாண்டு, அவ்வளவு தானே? சரி நாம் இரண்டையும் கொண்டாடி விடுவோம்...நமக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவும், சமைக்கவும், சாப்பிடவும்,
விடுமுறைக்கும், டிவி பார்க்கவும் இன்னொரு நாள் கூடியதென்று கொள்வோம்".
ஜோ சொல்ற மாதிரி, 'நல்லாருப்போம், நல்லாருப்போம், எல்லாரும் நல்லாருப்போம்' ;

___/\___


அர்ஜுனுக்கு 'ஜனகன மன அதி' என்று நமது தேசிய கீதம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தேன். நான் பாட பாட கூடவே பாடிக்கொண்டே
வந்தான்.
'விந்திய ஹிமாச்சல யமுனா கங்கா' என்றேன்.
ஒரு வினாடி pause போட்டவன் அதே டியூனில் பாடினான்... "விந்திய ஹிமாச்சல யமுனா கிரிஜா ஆண்ட்டி"
கிரிஜா இப்போது எனக்கு வீட்டு வேலைகளில் உதவுபவரின் பெயர்.
கிரிஜா வருவதற்கு முன்னால் உதவிக்கொண்டிருந்தவரின் பெயர்... கங்கா!

___/\___

"நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு தோனியை பிடிக்காது. அதனால் CSK தோற்க வேண்டும்."
"சச்சின் நல்லா வெளாடனும்; ஆனா MI ஜெயிக்க கூடாது"
"கில்க்ரிஸ்ட் ன்னா எனக்கு உயிர், அதனால DC தான் கப் வாங்கணும்"
"கங்குலியை விட டோனி பெட்டெர்... அதுனால CSK Vs KKR மேட்ச்ல CSK ஜெயிச்சது பத்தி சந்தோஷம் தான்"
"DDD கட்டாயம் செமிபைனல்ஸ் வரணும்"

மேலே சொன்னதெல்லாம் தனி தனி ஆளுங்க சொன்னதுன்னு நெனச்சா அங்க தான் நீங்க தப்பு பண்றீங்க. அவ்வளவு ஆசையும் ஒரே ஆளுக்கு தான்.

பாருங்க IPL நம்ம மக்களை எப்டி சுத்தல்ல விடுதுன்னு...இந்த சுத்தல் சுந்தரம்(ரி) யாருன்னு நான் சொல்ல மாட்டேன். அவங்களா முன்வந்து
பின்னூட்டத்தில் ஒத்துக்கிட்டா பொது மன்னிப்பு கொடுத்துடுவோம்.

___/\___

சமீபத்தில் படித்த புத்தகம் கிரேசி மோகனின் "அமெரிக்காவில் கிச்சா". மொத்த புத்தகத்திலும் வார்த்தை விளையாடி இருக்கிறார். ஆரம்பத்தில்
வார்த்தைக்கு வார்த்தை சிரித்து விட்டு, பிறகு வரிக்கு வரியாகி, முடிக்கிற சமயத்தில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது இந்த கிரேசி காமெடி. இப்போது
நினைத்து பார்த்தால் எனக்கு மனதில் பதிந்த வரி ஒன்று தான் நினைவிற்கு வருகிறது. "ஒருவன் காலையில் எழுத்தாளனாக எழுந்திருக்க
வேண்டுமேயானால், இரவில் படிப்பாளனாக தூங்க வேண்டும்"

இன்னொரு புத்தகம் "One night @ The call center". "ஐயா சேதன் பகத்! அவனவன் காதில் பூ வைப்பான், பூக்கூடை கூட வைப்பான், நீங்களானால் பூக்கடையே வைக்கிறீர்கள்.ஆள விடுங்க, இனி உங்க புத்தகம் எதுவும் படிப்பதாக இல்லை"

___/\___

ஞாயிறன்று மதியம் வீட்டில் படு வெட்டியாக இருந்ததால், கே டிவி யின் மாட்னி ஷோவில் உட்கார்ந்தேன். "இருவர் மட்டும்" என்று ஒரு படம்.

ஒரு காட்டில் ஒரு ஆள், டார்ஜான் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி இருக்கிறார்கள். வழி தப்பி வரும் ஹீரோயின். படம் முழுக்க இவங்க ரெண்டு பேர் தான். பாதி படம் 'நடந்து'(கவனிக்கவும், 'ஓடி' அல்ல) கொண்டு இருக்கும் போது வந்த என் தம்பி அரண்டே போய்விட்டான். "ஏண்டீ
விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் இவங்களை எல்லாம் தள்ளி வெச்சுட்டேன் அப்டின்னு ஒரு நாள் அறிவிச்சியே, நீயா இந்த மொக்கையை பார்க்கறே?" ன்னான். அடுத்து தலைவரும் வீடு திரும்பி செட் மாக்சுக்கு டிவி மாறியதில் படத்தின் முடிவை பார்க்க முடியாமல் போனது. என்னை மாதிரியே யாராவது ரஸ்க் சாப்பிட்டு இந்த படத்தை பார்த்து இருந்தால் தயவு செய்து முடிவை சொல்லவும்.

___/\___

சைடு பாரில் கேட்கப்பட்ட கேள்வி.
"காக்டெயிலுக்கு ஏன் காக்டெயில் என்ற பெயர் வந்தது?"
barrel களின் outlet பைப்(pipe)பிற்கு cock என்றும், எந்த ஒரு ஆல்கஹால் பாட்டிலின் கடைசி மிச்சம் மீதியை tail என்றும் சொல்வார்களாம். இப்படி மிச்சம் மீதியை எல்லாம் பேரலில் ஒன்றாக ஊற்றி பைப் வழியாக பிடித்து குடித்ததனால் அதை "cocktail" என்று சொல்லி இருக்கிறார்கள். பின்னாளில் இதுவே ஒரு பார்முலா ஆகி, cocktail என்பதே மெனுவில் ஒரு முதல் பக்க ஐட்டம் ஆகி போனது.

அந்த கேள்வியை பார்த்து எனது நண்பர் ஒருவர் அடித்த கமென்ட்:

"சைடு "பார்" என்பதால் காக்டெயிலா?"

___/\___

Sunday, 11 April 2010

பாரதி கண்ட பாப்பாக்கள்

"You were wrong"
"He was better than you"

நம்மில் எத்தனை பேருக்கு நம்மீது வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்களை ஏற்றுகொள்ளும் பக்குவம் இருக்கிறது?

"You are no more eligible to continue the game"
நம்மில் எத்தனை பேர் தோல்வியை புன்னகையோடு ஏற்றுகொள்ளும் தைரியத்தை கொண்டிருக்கிறோம்? ஒரு தோல்வியில் இருந்து விடுபட்டு அடுத்த சவாலை எதிர்கொள்ள நமக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?

"You were rocking"
இந்த பாராட்டை தலைக்கேற்றாத பணிவு எத்தனை பேருக்கு இருக்க கூடும்?

"You are in danger zone"
இந்த அழுத்தத்தை சமாளித்து உயிர்த்தெழும் போர்த்திறமை பற்றி தெரியுமா நமக்கெல்லாம்?

ஒரு சிறுவன், கிட்டத்தட்ட குழந்தை என்று கூட சொல்லலாம்...ஒரு சுற்றில் அவனுடைய சங்கீதத்தில் லயித்த நடுவர்கள் அவனை மடியில் தூக்கி வைத்து கொள்கிறார்கள். இன்னொரு சுற்றில் போட்டியை விட்டு வெளியேற்ற படுகிறான். இந்த இரு நிகழ்வுகளிலும் அவனுடைய முகபாவமும் உடல் மொழியும் ஒரே மாதிரியாக தான் இருக்கின்றன. மடியில் தூக்கி வைத்து கொண்ட நாளில் அவன் பெருமையில் குதிக்கவும் இல்லை. "போயிட்டு வா" ன்னு சொன்ன அன்று உடைந்தும் போய் விட வில்லை. "composed" என்று சொல்வார்களே...அந்த வார்த்தைக்கு அர்த்தத்தை நான் அன்று பார்த்தேன்.
"எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே, நீ நதி போல ஓடிக்கொண்டு இரு"...
அந்த சூழ்நிலைக்கு அந்த பாடல் பொருத்தமானது என்பதை உணர்ந்து பாடும் அளவுக்கு எல்லாம் அந்த குழந்தைக்கு வயசில்லை.ஆனாலும் பாடியது. போட்டியின் போது பாடிய அதே உத்வேகம்.தான் வெளியேற்றப்பட்டு விட்டது அவனுடைய பாடலை துளியும் பாதிக்கவில்லை.

ஒரு பத்து வயசு சிறுமி. உற்சாகத்தின் மொத்த உருவம் அவள்.இன்னொரு பத்து வயது சிறுவன். ஏற்கனவே ஒரு முறை இறுதி கட்ட போட்டி
வரை வந்து வெற்றி வாய்ப்பை தவற விட்டவன். இருவரும் அபாய கட்டத்தில் இருக்கிறார்கள். ஒருவர் வெளியேற்ற படப்போவது உறுதி. இந்த
 நிலையில் நடுவர் ஒரு பாடலை சொல்லி கொடுக்க அவர்கள் திரும்பி பாட வேண்டும். யார் வெகு விரைவில் நுணுக்கங்களை கிரகித்து கொள்கிறார்களோ அவர் போட்டியில் நீடிக்க போகிறார். அந்த சிறுமிக்கு காற்றில் எந்தன் கீதம் சொல்லி தருகிறார்கள்.
அலை போலே நினைவாலே ஆறு முறை சரியாக வர வில்லை.
'லோ நோட்ஸ் போகாதே', 'இப்டி ட்ரை பண்ணு','இந்த இடம் இன்னும் கொஞ்சம் சரியா பாடு' என்று நடுவர், சிறப்பு விருந்தினர் என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி அந்த சிறுமியை *பாடாய் படுத்துகிறார்கள்*.
இத்தனை அழுத்திலும் அந்த பெண்ணின் முகம் "டென்சனா? அப்டின்னா என்ன?" என்று கேட்கிறது.
அந்த பையனுக்கு நின்னுக்கோரீ வரணும்.
ஒரு கிளி தனித்திருக்க...அழகிய ரகுவரனே என்றெல்லாம் பாட லிரிக்ஸ் தடுமாற்றம், பாவம் தமிழை தாய்மொழியாக கொண்டவனில்லை...ஆனால் இந்த பலவீனம் அவனை பாதித்து விடவில்லை. லா ல லா போட்டு ஆனால் பாடலை ஐந்தே நிமிடத்தில் பிடித்து கொள்கிறான்.இந்த மாதிரியான சூழ்நிலைகளை சமாளிக்க கார்பரேட்களில் காசை கொட்டி "ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்" பாடங்களை சொல்லி தருவார்கள்.இந்த இரு சிறுவர்களும் இந்த ஸ்ட்ரெஸ் ஃபேக்டரை காலால் உதைத்து தள்ளி விடுகிறார்கள்.

இன்னும் ஒரு 13 வயது பெண். எல்லாராலும் prodigy என்று கொண்டாடப்படுபவள். ஸ்டான்டிங் ஓவேஷன், ஸ்பாட் செலக்‌ஷன்,அவார்ட்ஸ் என்று வெற்றிகளை மட்டுமே ருசித்தவள்.அபாய கட்டம் என்பதை அறியவே அறியாதவள். முதல் முறை "நீங்கள் டேஞ்சர் சோனில் இருக்கிறீர்கள்" என்று கேட்டதும் அதிர்ச்சியில் அழுதே விட்டாள். யானைக்கே அடி சறுக்கி விட்டால் எழும்ப சற்று தாமதம் ஆகும்.அடுத்த சுற்றில் ”நான் எழுந்து விட்டேன் பாருங்கள்” என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.பிரஷர். இந்த பிரஷர் அவளுடைய பர்பார்மன்சிடம் தோற்று போய் விடுகிறது.கண்ணீரோடு சேர்த்து ப்ரஷரையும் துடைத்து விட்டு பாடுகிறாள்.
"நாதம் என் ஜீவனே...."
“என்னை விட நல்லா பாடிட்டேம்மா” சொன்னது, அந்த பாடலை திரையில் பாடிய ஜானகி அவர்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியரின் ஸ்ரீகாந்த், ரோஷன், நித்யஸ்ரீ, அல்கா பற்றி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்பது புரிந்திருக்கும்.

இந்த குழந்தைகளுக்கு இந்த மேன்மக்கள் பண்புகளை எல்லாம் சொல்லி தந்தது யார்?இவர்களுடைய பெற்றோர்களா?
சங்கீதம் சொல்லி தரும் ஆசிரியர்களா?
இந்த மாதிரி மேடையில் ஏறியதும் இவர்களுக்கு இதெல்லாம் தன்னாலேயே வந்து விடுகிறதா?
அல்லது இந்த கால குழந்த்தைகள் எல்லாருக்குமே இந்த முதிர்ச்சி இருக்கிறதா? யோசிக்க வேண்டிய கேள்விகள்.

இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தோன்றும் சராசரி ஆசை, என் குழந்தையும் சங்கீதம் கற்றுக்கொண்டு இப்படி எல்லாம் பாட வேண்டும்...
நமது குழந்தைகள் competitve ஆக, சாதனையாளர்களாக வளர வேண்டும் என்றெல்லாம் ஆசை படுவதில் தவறேதும் இல்லை.
ஆனால் அதை விட முக்கியமாக அவர்கள் நல்ல attitude உடன் வளர வேண்டும்.ஸ்வரங்களோடு சேர்த்து வாழ்க்கையின் சூத்திரங்களையும்
சூட்சமங்களையும் கற்று கொள்ள வேண்டும்.

It's not what happens to you that determines how far you will go in life ;it is how you handle what happens to you.