Tuesday, 26 January 2010

ஆயிரத்தில் ஒருவன் - ஒரு கடிதம்

படத்தை பற்றிய எனது பார்வையை படித்து விட்டு Mr.Manny எழுதிய கடிதம்.

உங்களுடைய ”ஆயிரத்தில் ஒருவன்” விமர்சனம் படித்தேன். மிகவும் அழகான எழுத்து நடை...உங்களுக்கு வரும் பின்னூட்டம் பார்த்தே தெரிகிறது உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.


ஆனால், எனக்கு இந்த படம் பார்த்து கவலை தான் ஏற்பட்டது. இப்படியா சோழர் வம்சத்தையும், பாண்டிய வம்சத்தையும் கேவலப்படுத்துவது என்று.!!

இது போதாதென்று பல ஆங்கிலப்படங்களைக் கலந்து விட்டிருப்பது.

Indiana Jones, Apocolypto, Gladiator, 300, National Treasure, mummy(புதையல் தேடிச் செல்வது),Jurassic Park 3 எல்லாம் கலந்த கலவை தான் ”ஆயிரத்தில் ஒருவன்”.

பலக் காட்சிகள் திருடப்பட்டவை. முதல் சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் ஆதிவாசிகளின் அம்புகள் வந்து விழுவது 300 படத்திலிருந்து சுட்டது. அதே போல் கடைசி சண்டைக்காட்சிகளில் வீரர்கள் கேடயத்தை முன்னால் நிறுத்தி துப்பாக்கிக் குண்டுகளை தடுக்கும் concept 300 படத்திலிருந்து சுட்டது தான்.. ஒரு சின்ன வித்தியாசம் 300 படத்தில் அம்புகள் பாய்ந்து வரும், இதில் துப்பாக்கிக் குண்டுகள் Because this is happening in 2009. :)

அந்த மைதானத்தில் குண்டு அரக்கன் கல்லெறியும் காட்சி Gladiator படத்தில் நடக்கும் மைதான சண்டைக்காட்சி...இதிலும் ஒரு வித்தியாசம்..Gladiator-ல் மைதானத்தில் தள்ளப்பட்ட கைதிகள் அனைவரும் ராஜாவின் படையை எதிர்த்து சண்டை போடுவார்கள்.... இதில் பைத்தியம் மாதிரி நடித்து அல்லது நடிப்பதாய் நினைத்துக் கொண்டு அடி வாங்கி சாகிறார்கள்... ம்ம்ம் இந்த மாதிரி படத்தில் நடித்தால் கடைசியில் சாகத்தான் வேண்டும்.

பாவம் பிரதாப் போத்தன், இந்த படத்தை ஒப்புக் கொண்ட பாவத்திற்கு பைத்தியம் ஆகி கல்லால் முட்டியில் அடி வாங்கியது தான் மிச்சம்.

Jurassic Park-3-ல் காணாமல் போன பையனைத் தேடி அவனது பெற்றோர் ஒரு தீவுக்குப் போகும் போது அவனுடைய Handy Cam-ஐ ஒரு மரத்தில் இருந்து எடுப்பார்கள், அதே போல் இதில் ஆண்ட்ரியா, பிரதாப் போத்தனின் Handy Cam-ஐ எடுக்கிறார்.

இடையில், ரீமாசென்னின் private security கேட்டவுடனே Flight-ல weapons இறங்குது. அதுவும் எல்லாம் மினிஸ்டர் அனுப்பி வைக்கிற அரசு விமானங்களில்..!! அநியாயத்திற்கு லாஜிக் மீறல்கள்...

இடையில் ஒரு பாட்டு வேற...அப்புறம் குகைக்குள்ள ஆண்ட்ரியா, ரீமாசென் ஹீரோ கார்த்திக்கை கட்டிபுடிச்சுட்டு தூங்குற மசாலா தூவல். அங்கங்கே

ரிமாசென்னைக் கவர்ச்சி காட்டி படத்தை ஒட்டிருக்காங்க வேற...

இனி உச்சகட்டமாக சோழரையும், பாண்டியரையும் மானபங்கம் படுத்தியது. :-(
ரீமாசென்னுக்கு அவருடைய அம்மாவே உடம்பைப் பயன்படுத்தி எதிரியை மயக்க சொல்லித்தருவதாக சொல்வது. அதன்படி பாண்டிய வம்சத்துப் பெண்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது. உண்மையில் பாண்டிய மன்னர்கள் எதிரியை வீழ்த்த வீரத்தைத் தான் பயன்படுத்தி இருப்பார்கள் என்று எனது நம்பிக்கை. கடைசியில் ரீமாசென் அந்த குலதெய்வச் சிலையை எடுத்து வந்தாரா என்று கூட பார்க்கவில்லை.

அப்புறம் சோழர்கள்... எனக்குத் தெரிந்த மிகச்சிறிய வரலாற்று அறிவில் சோழர்கள் மிகவும் நாகரீகமானவர்கள், கலை அறிவு மிக்கவர்கள் (தஞ்சைப் பெரிய கோவிலே இதற்கு ஒரு சாட்சி) மற்றும் வீரமானவர்கள்,

 அவர்களை இப்படி காட்டுமிராண்டிகள் போல் கருப்பாய் காண்பிப்பது, ஒரு சோழர் பெண் அவளுடைய மார்பை பார்த்திபனிடம் அழுத்திக் காட்டி பார்த்திபனிடம் உணவு கேட்பது இதிலேயே செல்வராகவனின் கொடூரமான மனது புரிகிறது.

இதில் பார்த்திபனுடைய மனைவி மட்டும் சிவப்பாக இருக்கிறார்(அது சரி கடைசியில் கற்பழிப்புக் காட்சிக்கு உதவுமே), பார்த்திபன் மாநிறம், ஆனால் அவர்களது குழந்தை அட்டைக் கருப்பு, இது என்ன லாஜிக்கோ...

முதலில் மந்திர வேலைகள் காட்டும் பார்த்திபன் கடைசியில் ரீமாசென் ஏமாற்றியது தெரிந்த பிறகு போருக்கு முன்னரே கழுத்தை அறுத்துக் கொள்ள முயற்சிப்பது சோழன் ஒரு கோழை என்று காட்டுவது போல் இருந்தது. அவருக்கு ஒரு டான்ஸ் வேறு....(நம்ம பசங்கல்லாம் சூரியன் படத்துல கவுண்டமனி ஆடுன மாதிரி Start Music-னு சொன்னாங்க).

கடைசியில பார்த்திபனை ஒரு காமெடி பீஸ் ஆக்கியது தான் மிச்சம்.
அப்புறம் ஒரு மொக்கை போர்க் காட்சி... நிறைய இடங்களில் அங்கங்கே 300, troy, brave heart என்று சில சரித்திரப் படங்களில் உருவியிருக்கிறார்கள்....

கடைசியில் நீங்களே உங்க விமர்சனத்துல சொன்ன மாதிரி ஆண்ட்ரியாவை என்ன பண்றதுன்னு தெரியாம சும்மா உக்கார வச்சிருக்காங்க...

அப்புறம் ஒரு இனப்படுகொலை..கேட்டா இது ஈழப் பிரச்சனை இல்லை,சொந்தமா யோசிச்சு எடுத்தது-னு ஒரு பொய் வேற,

அதை விட கொடுமை...32 கோடியில ஹாலிவுட்-ல இதை எடுக்க முடியாதுன்னு ஒரு பேட்டி வேற... அவன் இதப் பார்த்தா காறித் துப்புவான்.

எம்.ஜி.ஆர் காலத்துல மக்கள் ஆங்கிலப் படம் பார்க்குறதே அபூர்வம், அதனால காப்பி அடிச்சாலோ கண்டுபுடிக்குறது அபூர்வம். மணிரத்னம் கூட நாயகன் படத்துல உப்பு மூடை கட்டி கடத்துறத Sergio Leone-யோட "Once upon a time in America" -னு ஒரு படத்துல இருந்து சுட்டிருப்பாரு...அந்த படத்தோட theme music கேளுங்க....http://www.youtube.com/watch?v=Jj5Xczethmw சூப்பரா இருக்கும்.

அதெல்லாம் யாரும் கண்டுபுடிக்க முடியாத காலம் ஏமாத்துனீங்க..சரி... இப்போதான் எல்லாம் உலகமயம் ஆயிடுச்சே... ஹாலிவுட்-ல படம் ரிலீஸ் ஆகுற அன்னைக்கே இங்கயும் ரிலீஸ் ஆகுதே(அதுவும் தமிழில்..)

அப்புறம் எதுக்கு அதையே காப்பி அடிச்சு தமிழ்-ல எடுத்து நமக்கு காட்டனும்...!!!!!!!!!!!!!!!!!!!!

இப்போ உலகப்படங்கள் எல்லாமே Torrents-ஆ கிடைக்குதே... இரவு தூங்கும் முன்னாடி Download Start பண்ணினா போதும் காலையில் படம் ரெடி..

Within Tamilnadu it is Selvaragavan's film, but if it goes global then it represents our whole India or our tamil community within other states in India. அப்புறம் அவங்க சொல்லுவாங்க ...இந்த தமிழ்க்காரனுங்களுக்கு வேற வேலை இல்ல.நாம எடுத்ததையே நமக்கு திருப்பி எடுத்துக் காமிப்பானுங்கன்னு.

ராதாமோகன் எடுக்குறாரே அது ஒரு புதிய முயற்சி (Till someone proves he also copied from somewhere, I pray God that should not happen), அமீர் பருத்திவீரன் எடுத்தாரே, சுப்ரமணியபுரம் சசிகுமார்(eventhough there's violence in the movie, it got many fans).etc..etc...

செல்வராகவன்கிட்டேயும் இதை எதிர்பார்க்கிறோம்... கவர்ச்சிக்கும், படுக்கையறைக் காட்சிகளுக்குமென்றே நிறைய ஆங்கிலப் படங்கள் இருக்கிறது செல்வா, நீங்க தயவு செஞ்சு ஒரு நல்ல தமிழ் படமா எடுங்க..ப்ளீஸ்..

ம்ம்ம் ஒரு வழியா படம் முடிஞ்சு வெளிய வந்தா...அடுத்த காட்சிக்காக வெளியே தமிழ் சினிமா ரசிகர்கள் கூட்டம் வேற...செந்தில் ஒரு படத்துல கவுண்டமனிகிட்ட சொல்லுவாரே “அண்ணே அண்ணேனு சொல்ல வருது, ஆனா அடி வாங்குனேன்னு சொல்ல வரல”-ன்னு அது மாதிரி தான் அவங்களப் பார்த்ததும் உள்ள போக வேண்டாம்னு சொல்லத் தோணிச்சு ஆனா பேசவே முடியல..பின்ன உள்ள இப்படி எங்கள பயமுறுத்தி அனுப்புனா..

ம்ம்ம் கடைசியில தான் தெரிஞ்சது “சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிறதுன்னு சொல்வாங்கல்ல அது இது தான்னு”,

Regards,
Manny.

மாற்றுக்கருத்தை பிரசுரிப்பது இணையத்தில் பேஷன் ஆக இருப்பதால்...நானும்.ஆனால் பிரசுரிப்பதோடு நிறுத்தி கொள்வேன். Manny அடுத்த பிறவியில் பெண்ணாய் பிறந்து இந்த படத்தை ரசிக்க வேண்டும் என்றெல்லாம் வாழ்த்துவதாக இல்லை..

Thursday, 21 January 2010

New house.

"synapse ஸா? அப்டின்னா?"

"ஏங்க? உங்களுக்கு வேற பேரே கெடைக்கலையா?"

"அக்கா, போன வாரம் சிஸ்டம் புட்டுகிச்சு, reinstall பண்ணா, favourites காலி. உங்க URL மறந்துட்டேன்"

"எழுதுறது தமிழ் பதிவு. பேரு மட்டும் எதுக்கு பீட்டர் தங்கச்சியாட்டம்?"

"பிரவுசிங் சென்டர் போனா, உங்க URL டைப் பண்ணுறதுக்குள்ள நாக்கு தள்ளி போய்டுது"

"உங்க பதிவு பேரை ஒருத்தன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணாம டைப் அடிச்சுட்டான்னா, நான் எழுதுறதையே விட்டுடறேன்"  - இதை சொன்னது, கலைஞர் டிவி, jayatv என்று பிசியாக பேட்டி கொடுத்து தள்ளும் ஒரு "பிரபல" எழுத்தாளர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.இப்டி வாஸ்து பாடா படுத்துறதுனால என் பதிவு பெயர் மாற்றம் செய்யலாம் ன்னு இருக்கேன்.இந்த synapse பேரை வைக்கறதுக்கு பாடா பட்டேன். இப்போ எந்த பிரச்சனையும் வேணாம்ன்னு என் பேரையே பதிவுக்கும் வைக்கலாம்ன்னு இருக்கேன்.

http://priyakathiravan.blogspot.com/

ஆனா இதுல ஒரு சின்ன சிக்கல்.
பிளாக்கர்ல ரெண்டு options இருக்கு.

1)நம்ம பதிவு URLலை அப்டியே புது பேர்ல மாத்திடுது. மத்தபடி செட்டிங்க்ஸ், போஸ்ட, கமெண்ட்ஸ், followers ன்னு எல்லாம் safe .ஆனா, பழைய அட்ரஸ் போட்டு தேடறவங்களுக்கு "Blog not found" ன்னு பல்பு குடுக்குது. so நம்மள follow பண்ற நல்லவங்களை தவிர மத்தவங்க நம்மளை காணும்ன்னு முடிவு பண்ணிடுவாங்க.

2) நம்ம பழைய பதிவை எக்ஸ்போர்ட் பண்ணி, புது பதிவுல இம்போர்ட் பண்ணலாம். இதுல பல்பு நமக்கு. போஸ்ட் கமெண்ட்ஸ் எல்லாம் இம்போர்ட் ஆகுது. ஆனா followers இம்போர்ட் ஆக மாட்டேங்குது. என்ன கொடுமை இது?

அதுனால நான் option 1 தெரிவு பண்ணலாம்ன்னு இருக்கேன்.

பழசையும் திரும்ப register பண்ணி, "நான் புது வீட்டுக்கு போயிட்டேன்" அப்டின்னு ஒரு தகவல் மட்டும் கொடுக்கலாம் ன்னு நினைக்கிறேன். நம்மளை யாரும் தேட கூடாது பாருங்க.

இத விட வேற நல்ல ஐடியா இருந்தா சொல்லுங்க. ப்ளீஸ். உருப்படியா ஏதும் ஐடியா வரலன்னா, இந்த புது வீடு, வரும் குடியரசு தினவிழா அன்று கிரகப்பிரவேசம் செய்யப்படும்.

Sunday, 17 January 2010

ஆயிரத்தில் ஒருவன் - எனது பார்வையில்


படம் ஆரம்பிக்கும் முன்னே, ஒரு கார்டு போடுகிறார்கள். "படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே" என்று. ஆனால், படத்தின் பின்பாதி, சில நிகழ்வுகளை நினைவு படுத்துவதை மறுப்பதற்கில்லை.பின்பாதி கதையை சொல்லுவதற்கு,முன்பாதியில் ஒரு fiction பயணத்தை இணைத்து இருக்கிறார்கள். ரசிக்கும் வகையில், தமிழ் சினிமா ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் வகையில், 'தமிழிலாவது நல்ல சினிமா வர்றதாவது' என்று வெட்டிபேச்சு பேசறவங்க வாயடைக்கும் வகையில்.

ஆண்ட்ரியா,ரீமா,கார்த்தி and team ஒரு adventure searchஇல் ஈடுபடுகிறார்கள். ஆண்ட்ரியா காணாமல் போன அப்பாவை தேடி போறார். ரீமாவிற்கு ஒரு hidden mission . கார்த்தியின் பயணத்திலும் அவரையும் அறியாமல் ஒரு நோக்கம் இருக்கிறது. பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் தான் முற்பாதி. பிற்பாதியில் தலை முறை தலை முறையாக ஒரு தூதுவனை எதிர்நோக்கி, வறுமையில் வாடி,தாய்மண்ணை சேரும் ஏக்கத்துடன் ஒரு சமூகம், பார்த்திபன் தலைமையில். அவர்களின் ஏக்கம் நிறைவேறியதா?
ஆண்ட்ரியா,ரீமா,கார்த்தி மூவரின் தேடல் முழுமை அடைகிறதா? என்பது தான் கதை.

ரீமா: அவருடைய skin tone, sleekness,style என்று இந்த பாத்திரத்துக்கு வெகு பொருத்தம். 'நல்ல இயக்குனர் கையில் கிடைத்தால் எப்படி தூள் கெளப்பறேன் பாருங்க' என்று காட்டுகிறார். ஆனால் வாயசைப்பு சகிக்க வில்லை. அதிலும் "ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமாவது தெரியுமா?" என்று பார்த்திபனை கேட்கும் போது 'பாவமே' என்று இருக்கிறது. பின்னணி குரல் அருமையான பேஸ் வாய்ஸ். யாருடா இது என்று கடைசி வரை வெயிட் பண்ணி பார்த்தேன். ஐஸ்வர்யா தனுஷ்.அட!

ஆண்ட்ரியா: நிறைய கணவர்களுக்கு காய்ச்சலையும், மனைவிகளுக்கு கடுப்பையும் வரவழைப்பது இவரது சமீபத்திய சாதனை. நல்லா தான் இருக்கார். ஆனால் கடைசியில் இவரது பாத்திரத்தை என்ன பண்ணுவது என்று தெரியாமல் தேமே ன்னு முழிச்சுட்டு நிக்க வைத்து இருக்கிறார்கள்.

கார்த்தி: ஆர்யா மூணு வருஷம் 'நான் கடவுள்'க்கு காத்து இருந்ததில் தலைகீழாக அமர்ந்து யோகா பண்றதையாவது கத்துகிட்டார். ஆனால் நீங்க இந்த படத்துல பண்ற பொறுக்கிதனத்தை எல்லாம் தான் பருத்தி வீரன்லையே பண்ணிட்டீங்களே? Nothing new, for the 3 years wait.ஆனால் இவர் படத்துல வர்ற சீன்ல எல்லாமே தியேட்டர்ல எல்லாரும் சந்தோஷ படறாங்க. அமர்க்களம் பண்றார். அட்லீஸ்ட் அடுத்த படத்துலயாவது 'இந்த அரைக்கால் ட்ரவுசர் போட்டுட்டு, சென்சார்க்கு வேலை வைக்குற வசனம்லாம் பேச மாட்டேன்னு' ஸ்ட்ரிக்டா சொல்லிட்டு, உங்க அண்ணன் மாதிரி loverboy ஆகவும்.

பார்த்திபன்: எல்லா படத்துலயும் பேசிக்கிட்டே இருப்பார். இதுல பேச்சு ரொம்ப கம்மி. கண்கள் மட்டுமே செய்ய வேண்டிய எல்லாத்தையும் செய்து விடுகின்றன. Very adequate.

படத்தின் கடைசி இருபது நிமிடம் யாருமே பேசுவதில்லை. GV பிரகாஷ் தவிர. கம்பன் வீட்டு கட்டுதறியே கவி பாடும். அப்டி இருக்கப்போ, இவர் இசைப்புயல் வீட்டு பிள்ளை. Lived upto his genes.பின்னணி இசைக்கே மொத்த மார்க் கொடுக்கலாம். பாட்டுக்கு எக்ஸ்ட்ரா மார்க். "அதோ அந்த பறவை போல" ரீமிக்ஸ் பண்ணாமல் இருப்பது சமர்த்து. ஒன் மேல ஆசை தான்...துள்ளல். "தாய் தின்ற மண்" பாடல் வரிகளை கேட்டால் கனம்.

காமிராவிற்கு வேலை அதிகம். ரம்மியமாக இருக்கிறது.இந்த படத்தை விசிடியில் பார்ப்பவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

படத்தில் வன்முறை நிறைய. இந்நேரத்திற்கு வலைப்பதிவு ஆண்கள் "இந்த படத்தை பெண்கள் பார்க்காதீர்கள்" என்று அறிவுரை எழுதி இருப்பார்கள். பெண்கள் என்று இல்லை, யாருக்குமே சற்று அளவு மீறிய வன்முறை தான். கொத்து கொத்தாக பிணங்கள் சாய்வது, கார்த்தியின் நண்பர் கழுத்துறுபடுவது, பெண்களை கொடுமைபடுத்துவது,பார்த்திபன் சமூகத்தின் வறுமை என்று நிறைய சீன்கள். ஆனால், எதிலும் ஒரு exaggeration இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ரீமாசென் எதற்கு இவ்வளவு முட்டி மோதி இந்த தேடலை மேற்கொள்கிறார் என்பதற்கான விடை ஒரு நல்ல ட்விஸ்ட். ஆனால் அதை சொன்ன விதத்தில் அழுத்தம் இல்லை. மேலும் பார்த்திபனுக்கு உண்மை தெரியும் போது தான், பார்வையாளர்களுக்கும் தெரியற மாதிரி சஸ்பென்சை சற்று தாமதப்படுத்தி இருக்கவேண்டும் என்று தோன்றியது.

அவதார் அள்ளி அள்ளி கல்லா கட்டுவதை பார்த்து எனக்கு ஒரு ஆசை. இந்த படத்தில் கூட, ஆயிரக்கணக்கில் அம்புகள் வந்து விழுவது, பாம்புகள், புதை மணல் காட்சி, குண்டு அரக்கன் பெரிய கல்லை சுழற்றி தாக்குவது, போர்க்காட்சிகள் என்று 3D க்கு scope இருக்கிறது. 3D யில் எடுத்து இருக்கலாம்.அதிகப்படி ஆசையோ?

அதிலும் க்ளைமாக்சுக்கு முன் வரும் போர்க்காட்சிகள் அபாரம்,
வீரர்கள் அனைவரும் ராஜாவிற்கு சுற்றி அரணாக நின்று கொண்டு சிரித்து கொண்டே மடிவதும்,மண்ணுக்குள் மறைந்து வந்து தாக்குவதும் மெய்சிலிர்க்க வைக்கும்.ஆண்ட்ரியா ஓலைச்சுவடியை வைத்து trap களை விடுவிப்பதும்(அதிலும் அந்த நடராஜர் நிழல்!!!), சோழர்கள் ஓவியங்களை வைத்து நடப்பதை கணிப்பதும் very sweet.

ஒரு depressed ஹீரோ, அவனுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் ஹீரோயின், சில வியாபார நோக்க காட்சிகள்,மெலோ டிராமா, ஆண்டி-கிளைமாக்ஸ், என்று காதல் கொண்டேன், 7G இரண்டிலும் கிடைத்த "செல்வராகவன்தனம்" முத்திரையை அழகாக உடைத்தது "ஆடவாரி மாட்டலுக்கு(நம்ம யாரடி நீ மோகினி)" a complete family entertainer. ஆயிரத்தில் ஒருவனில் "மொத்த தமிழ் சினிமா தனத்தையே" தகர்த்து விட்ட இவரது முயற்சிக்கும், இவருடைய டீமின் உழைப்பிற்கும் ஆக வேண்டியாவது, இந்த படம் ஓட வேண்டும். இல்லன்னா, இந்த மாதிரி முயற்சிகளுக்கு பைனான்ஸ் பண்ண யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் நஷ்டம் நமக்கு தான்.

தமிழ் சினிமா சரி தவறுகளில் இருந்து விடுவித்துக்கொண்டு ஒரு சரியான கண்ணோட்டத்தில் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

My verdict: A WoW movie.

Saturday, 9 January 2010

3 IDIOTS (அட இது அது இல்ல, நிஜமா படம் பார்த்துட்டேன்)


மூன்று பேர் கல்லூரியில் சந்திக்கிறார்கள். அதில் ஒருத்தனுக்கு மாத்திரம் செம attitude . அவன் மத்த ரெண்டு பேருக்கும் attitude சொல்லி தரது மட்டுமில்லாமல், professor , அவரோட பொண்ணுன்னு எல்லாருக்கும் சொல்லி தரான். Graduationக்கு அப்பறம் காணாம போயிடறான். மத்த ரெண்டு பேரும் அவன தேடறாங்க, ஏன் காணாம போனான்? கடைசில கிடைச்சானா? ஹீரோவும் ஹீரோயினும் கிஸ் பண்ணிக்கறப்போ, மூக்கு நடுல தொந்தரவா இருக்குமா? இதெல்லாம் தான் கதை.

அமீர்கான்: "Amirkhan,KamalHasan, Mohanlal - these three rule the Indian Cinema" - கதிரோட நண்பர் ஒருத்தர் அடிக்கடி இத சொல்வார். 44 வயசாகுது. காலேஜ் first இயர் பையனா அறிமுகம் ஆகறார்.கொஞ்சமும் சந்தேகம் வரல.
"Salt water is the best conductor of electricity"ன்னு கத்து தரார். அப்பறம் என்னென்னமோ பண்றார். கொஞ்ச நாள் முன்னாடி இதே காரணத்துக்காக தான் ஜெயம் ரவிய திட்டினோம். இங்க Amir இன்ஜினியரிங் மாணவர்.அதுனால கொஞ்சம் மன்னிக்கலாம். ஆனாலும் பிரசவத்துக்கு வேண்டிய வாக்குவம் பண்றதும், ஒரு படி மேல போயி பிரசவமே பார்க்குறதும்(நல்ல வேளை
C-section பண்ண வைக்கலை)...too much drama.கடந்த பன்னிரண்டு வருடங்களாக தான் ஹிந்தி படம் பார்க்குறேன். "தில் சாஹ்த்தா ஹை" மாதிரி இன்னொரு படம் பார்க்கலை நான் இன்னும். ஆகாஷ் மல்ஹோத்ராவாக வருவார் அமீர். அந்த படத்துக்கு பிறகு அமீர்கான் என்பதற்கான அளவுகோல் ரொம்ப உயர்ந்து விட்டது எனக்கு. Sorry Rancho, you were noway close to Aakash Malhotra.


கரீனா: இவர் இண்டஸ்ட்ரியில் அறிமுகம் ஆன சமயத்தில் "எனக்கு கரீனாவை பிடிக்கும்" என்று சொன்னால் , நண்பர்கள் சற்று ஏளனமாக பார்ப்பார்கள்.அம்மணி பாருங்க, ஜீரோ சைஸ், சோனி வாயோ என்று கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய பாத்திரத்தை நன்றாகவே செய்து இருக்கிறார்.

ஐயோ மாதவா? அலைபாயுதே படத்துல அவ்ளோ அழகா இருந்தீங்களே....கல்லூரி பையனாக வரப்போ கொஞ்சம் வயசான ஆள் மாதிரி தெரியறார்.படம் முழுக்க அமீர்கான் செய்யும் ஒவ்வொன்றையும் ரசிப்பது தான் படத்தில் இவரது முக்கியமான வேலை... மாதவன் எப்படிப்பட்ட நடிகர்ன்னு நமக்கு நல்லாவே தெரியும். மறந்தவங்க நளதமயந்தி, அன்பேசிவம் ரெண்டையும் ஒரு தடவ பாருங்க. இதிலும் தன வேலைய குறை இல்லாம செய்யறார்.

ஷர்மான் ஜோஷி: முதல் சீன்ல "ராஞ்சோ எங்க இருக்கான்னு எனக்கு தெரியும்" அப்டின்னு சதுர் சொல்றப்போ இவரோட முகத்துல ஒரு
expression வரும் பாருங்க, ஒரு பானை சோற்றுக்கு...இந்த ஒன்னே பதம்.

போமன் இராணி: முன்னாபாயில் இவர் தான் மெடிக்கல் காலேஜ் டீன். தமிழில் பிரகாஜ் ராஜ் செய்த ரோல். இதில் ஸ்ட்ரிக்ட் புரபசர் ரோல். ஹேர் ஸ்டைலும், பாஷையும் சற்று மாற்றி முன்னாபாய் மாதிரி இல்லாமல் இருக்க முயற்சி பண்ணிருக்காங்க. ஆனாலும் நமக்கு அது ஞாபகம் வந்து தொலைக்கிறது. அப்பறம் ஒன்னு கவனிச்சேன்.படத்துல இவரு ambidextrous.

சதுர் ராமலிங்கம்: இது ஒரு மனப்பாட கேஸ். அமீர்கான் கேரக்டரின் அருமை பெருமைய ஆடியன்சுக்கு புரிய வைக்குறதுக்குன்னே வரார். கடைசி வரை இவர் இவராகவே தான் இருப்பார் படத்தில்.அதாவது கடைசி சீன ல "துசி கிரேட் ஹோ" ன்னு ஒத்துக்கற வரைக்கும் கூட இவரோட கேரக்டர் originality மாறாம இருக்கும்.
Note: இவர் தமிழன்னு வெளிப்படையா எங்கயும் சொல்லலைன்னாலும், பேரை பார்த்தாலே தெரியலையா? தமிழ் ரீமேக் ரைட்ஸ் வாங்கறவங்க, மறக்காம இந்த கேரக்டரில் ஒரு ஹிந்திக்காரனை போடுங்கப்பா. மனசு ஆறும்.

இடைவேளை வரை அமீர்கானை ஹீரோவாக காட்டற முயற்சிகளில் ஓகேவாக போகிற படத்தில் இண்டர்மிசன் கார்டுக்கு முன்னால் வரும்
சஸ்பென்ஸ் தூள். அது தான் நம்மை நிமிர்ந்து உக்கார வைக்கிறது. அதே மாதிரி கடைசில வர்ற Wangda ட்விஸ்டும் எனக்கு எதிர்பாராதது தான். விசில் அடிக்க வைத்த ட்விஸ்ட்.

மில்லிமீட்டர் பையன் சென்டிமீட்டர் ஆறது, all is well க்கு கொழந்தை அழுவுறது, மாதவன் அப்பா அம்மாவை convince பண்றது, நண்பர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் தோள் கொடுக்கறதுன்னு இளகின மனசுக்காரங்களின் கர்சீபுக்கு வேலை அதிகம்.

"சமத்கார்" "பலாத்கார்" ஆக மாறி ஆசிரியர் தின பேச்சு சதுருக்கு சொதப்புவதும், கரீனாவோட prize tag wouldbeயை, டெமோ
பண்ணுவது என்று நிறைய காட்சிகள் நல்ல நகைச்சுவை.
படத்துல பாட்டு வந்தப்போ பார்க்க கேட்க நல்லாவே இருந்தது.. ஆனா எந்த ட்யூனும் இப்போ ஞாபகம் இல்லை. லடாக், சிம்லா drive way காமிக்கறப்போ குளிர்ச்சியா இருக்கு.

இப்போ எல்லாரும் பரபரப்பா பேசிட்டு இருக்குற ஒரு விஷயம்: இது தமிழ்ல ரீமேக் ஆகுமான்னு தான்.கஜினி ஹிந்திக்கு போலாம். சஞ்சய் ராமசாமி, சஞ்சய் சிங்கானியா ஆகலாம். அசினையும் அங்க அள்ளிட்டு போய்டலாம். 3 idiots தமிழ்ல வரக்கூடாதா?

My verdict: A twisty,thorough entertainer.

Thursday, 7 January 2010

2 States வாசிப்பு அனுபவம்
'மாப்பிள்ளை திமிர்' என்று ஒரு வார்த்தை இருக்கிறது. திருமணமான பெண்களுக்கு மட்டும் புரிந்த வார்த்தை.

"Afterall, your family is like mine you see" என்ற ஒரு சுகர் கோட்டிங்கோடு, கணவர்கள் நம்ம குடும்பத்தை நக்கல் பண்ணி தள்ளுவது. "உங்க குடும்பத்துல யாரும் பேசாம டிவி பாக்க மாட்டாங்களா?", "உங்க அம்மா நல்லா சமைப்பாங்கன்னு சொன்னியே, ஒரு வேளை இன்னைக்கு உடம்பு கிடம்பு சுகமில்லையா? ", "உன் தம்பிக்கு முன்னாடி இதே மாதிரி சட்டைய கரகாட்டக்காரன் படத்துல பாத்தேன்" போன்ற இத்தியாதிகள்.35 வயதாகும் சேதன் பகத்துக்கு உடம்பு முழுக்க மாப்பிள்ளை திமிர்.தமிழ் நாட்டுல பெண் எடுத்துட்ட கவச குண்டலம். "You only make fun of people you care for, otherwise I dont have anything against you, dear south indians" ன்னு ஒரு டிஸ்க்ளைமர்.நம்மவர்களை போட்டு சாத்து சாத்துன்னு சாத்திருக்கார். புத்தகம் முழுக்க.

சாம்பாரில் இருந்து ஆரம்பித்து, நம்ம நிறம், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பது, பட்டுப்புடவை, நகைகள் என்று ஒன்றை விட வில்லை. பஞ்சாபிக்காரர்களையும் ஒரு கை பார்க்கிறார். இருந்தாலும் நம்ம வீட்டுக்காரரை நம்ம சாத்துறதுக்கும், பக்கத்து வீட்டுக்காரம்மா அதையே செய்றதுக்கும் தான் எத்தனை வித்தியாசம்? அதனால புத்தகம் படிக்கும் போது நமக்கு பொங்குகிறது. ஒரு வேளை சேதன் காதலித்த பெண் தெலுங்கு பெண்ணாய் இருந்து, அவர் கோங்குரா சட்னியை நக்க'லு' பண்ணி இருந்தார்ன்னா, நமக்கு ரசித்து இருக்குமோ என்னவோ?

"This book is dedicated, (for the first time in the history of books), To my inlaws.That does not mean I am henpecked or not man enough"
இப்படி வரலாற்று சிறப்புடன் ஆரம்பிக்கும் புத்தகத்தின் கதை இது தான்:
பஞ்சாபி பையனுக்கும், தமிழ் பொண்ணுக்கும் காதல். பெற்றோர் எதிர்க்கிறார்கள். DDLJ ஷாருக், பூவெல்லாம் கேட்டுப்பார் சூர்யா, ஜோடி பிரசாந்த் வரிசையில், 2 ஸ்டேட்ஸ் க்ரிஷ் மல்ஹோத்ரா. ஒரே ஒரு வித்தியாசம். இந்த படங்களில் எல்லாம்,"நம்ம பெண்ணை ஆட்டைய போட தான் வந்துருக்கான்" என்ற உண்மை பெண் குடும்பத்தாருக்கு கிளைமாக்சில் தான் தெரிய வரும்.சென்னைக்கு வரும் க்ரிஷ், பெண் வீட்டாரை வழிக்கு கொண்டு வருகிறார். நாயகி டெல்லிக்கு சென்று க்ரிஷ்ஷின் குடும்பத்தை இம்ப்ரெஸ் செய்து விடுகிறார். ஆனாலும், ரெண்டு குடும்பமும் ஒன்றை ஒன்று முறைத்து கொள்ள, காதலர்கள் பிரிகிற நிலைமை. 'Something Something' happens and முடிவு சுபம்.

இந்த டப்பா கதையில் அப்படி என்னதான் இருக்கிறது? என்றால், உண்மையில் ஒன்றும் இல்லை. பின்ன புத்தகம் சக்கை போடு போடுகிறது."Chetan Bhagat has made India read like never before" என்று கொண்டாடுகிறார்கள்.

காரணம்: எளிமை. இலக்கியப்பதிவுகளை விட, உப்புமா பதிவுகளுக்கு எக்கச்சக்க ஹிட்ஸ் கிடைக்கிற அதே strategy.Dan Brown, Paulo Coelho க்களை நாட்கணக்கில், வாரக்கணக்கில் வைத்து கொண்டு திண்டாடுபவர்களுக்கு கூட வெறும் இரண்டு மணி நேரம் போதும். முழு புத்தகத்தையும் படித்து முடிக்க. அதுவும் ஒரு கையால் சப்பாத்தி சுட்டுக்கொண்டு, அது வேகும் நேரத்தில், அதே கையால் சப்ஜியை கிளறிக்கொண்டே இன்னொரு கையால் 2 ஸ்டேட்சை பிடித்துக்கொண்டு கூட படிக்கலாம். ஒரு வார்த்தைக்கு கூட அகராதி வேண்டாம். ஆனால் ஒரு ஆங்கிலப்புத்தகம் வாசிக்கும் உணர்வை தராதது குறையா நிறையா என்பது வாசிப்பவரை பொருத்தது. ஒரு ஜனரஞ்சகமான தமிழ் நாவல் வாசிக்கும் அனுபவம் தான் எனக்கு இருந்தது.

Heroine அனன்யா. ஆச்சாரமான தமிழ் குடும்பம். ரொம்ப தைர்யமான, அறிவான, வெகு அழகான பெண்ணாக காட்ட படுகிறார். ஆனால் செய்வதெல்லாம் செம அராத்து வேலைகள். தந்தூரி சிக்கனை வெளுத்து கட்டுகிறது. தன் பாய் ப்ரெண்டு ரூமில் அதும் IIMA கேம்பசுக்குள் ரெண்டு வருடம் சேர்ந்து தங்குகிறது(பல் விளக்கி, குளிக்க தன் ரூமுக்கு போய்டும்). ரத்னா ஸ்டோர்சில் வைத்து தன் காதலனுக்கு கிஸ் கொடுக்கிறது. அதும் அடுத்தவர் பார்க்கிற மாதிரியா குடுப்பாங்க அசடு?பீர்,வோட்கா என்று அடித்து ஆடுகிறது. படிக்கறப்போ நமக்கு கேராக இருக்கிறது. அதும் இதெல்லாம் நடப்பது பத்து வருஷத்துக்கு முந்தியாம். ஆரம்பித்தில் சொல்கிறார் சேதன். "இது என் சொந்தக்கதை. ஆனாலும் நிறைய fiction இருக்கிறது"
கடவுளே, இதெல்லாம் fiction ஆகவே இருக்கட்டும்.

பம்மல் கே சம்பந்தம் படத்தை பல தடவை பார்த்தாலும் பார்க்கிறப்போ எல்லாம் சிரிக்கலாம். ஆனால் காதலா காதலா படத்தை முதல் தடவை பார்க்கிறப்போ மட்டும் தான் சிரிப்பு வரும். இந்த புத்தகத்தில் இருக்கும் நகைச்சுவை இரண்டாம் வகையை சேர்ந்தது.
Yet, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் சில இடங்களில்.
அனன்யா தன்னை பெண்பார்க்க வந்தவன் "எனனை virgin னா" ன்னு கேட்டான் என்று க்ரிஷ்ஷிடம் சொல்கிறாள்.
"he asked if I am pure?"
அதற்கு க்ரிஷ்,"Does he want Ghee or what?".

"தென்னிந்திய பெண்கள், அதும் தமிழ் பெண்கள், வடக்கத்தி ஆண்களை விரும்புவார்கள். அவர்களை கவிழ்த்து விட என்ன வேணும்னாலும் செய்வாங்க" க்ரிஷ்ஷின் அம்மா சொல்கிறார். அதற்கு காரணம் அங்க ஆண்கள் ரொம்ப செவப்பாம்.உதாரணத்துக்கு ஹேமமாலினி, ஸ்ரீதேவி. அட பாவிகளா? எங்க ஊருலேர்ந்து "stunning beauties" ரெண்டு பேரை தட்டிட்டு போனதோட, இப்டி வேற எண்ணம் இருக்கா உங்களுக்கு? Superiority complex at its maximum.

கல்லூரி மாணவர்களிடம் சகஜமாக புரளும் அனைத்து unparliamentary வார்த்தைகளையும் அள்ளி தெளித்து இருக்கிறார்.ஆங்கிலத்தில் மட்டுமில்லை. அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழிலும். தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணி, எது தெரிஞ்சிகிட்டாரோ இல்லையோ, இதெல்லாம் ரொம்ப நல்லா கத்துட்டு இருக்கார்.

தமிழர்களின் சங்கீத ஆர்வம், கல்வி மீது உள்ள மோகம் என்று சில விஷயங்கள் நல்லதாகவும் சொல்கிறார். உற்று கவனித்தால் அதிலும் நக்கல் ஸ்மைலிகள் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. "when it comes to music,Tamilians could kill", "They just have good brains".

"உங்க அம்மா சமையல் generally ரொம்ப சுமார் தான்னாலும், உருளை கிழங்கு பொரியல் அவங்கள மாதிரி பண்ண எங்கம்மாவால கூட முடியாது" ரக, diluted மாப்பிள்ளை திமிர்.

பஞ்சாபி மக்களின் வரதட்சணை சிஸ்டம், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கல்யாண வீட்டில் செய்யும் அலப்பரைகள், "உணவே பிரதானம்" என்ற அவர்களுடைய கொள்கை, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தர் மீது ஒருத்தர் வைக்கும் அன்பு என்று நமக்கு பஞ்சாபிக்களை பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது இந்த புத்தகத்தில்.பஞ்சாபி பையன்களை ரூட் விட்டுக்கொண்டு இருக்கும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் :-) படித்த பிறகு 'இந்த பையன் அவசியம் தானா' என்று தோன்றி விடும் ரிஸ்க் இருக்கிறது.

IIM, IIT, Citibank, HLL, இந்த நிறுவனங்களை பற்றிய நையாண்டிகள் நிறைய. ஆனால், "பச்ச், இதையெல்லாம் எங்க தமிழ் பதிவர்களை எழுத சொல்லி பாருங்கள், பிரிச்சு மேஞ்சுருப்பாங்க" என்று சொல்லவைக்கும் அளவு தான்.Sarcasm not at its best.

"ரெண்டு மாநிலங்களுக்கிடையே இருக்கும் பிராந்திய பேதங்கள், தண்ணீர் பிரச்சனை, கரண்ட் பிரச்சினை, எல்லை பிரச்சினை போன்றவைகளோடு நிற்பதில்லை.சிலருக்கு வாழ்க்கையையே புரட்டி போடுகிறது, அதனால எல்லாரும் "நான் இந்தியன்" என்று நினையுங்கள்" என்று சொல்ல முயன்று இருக்கிறார். அட போங்க சேதன், நாங்க இருக்கிற மாநிலங்களையே இன்னும் எத்தனையா பிரிக்கலாம்ன்னு பார்த்துட்டு இருக்கோம்! எங்க கிட்ட போய்?

My verdict: Expectations partially met.

இட்லிவடையில் வெளியானது.
 இட்லிவடைக்கு நன்றி.

Friday, 1 January 2010

என் செல்ல செல்வங்கள் - ஒரு முன்னோட்டம்.தமிழ் இணையம் அப்போது தான் எனக்கு அறிமுகம். இரண்டரை வருடங்கள் இருக்கும்.ஒரு மதிய நேர 'மரத்தடி' வாசிப்பின் போது கண்ணில் பட்டது தான் 'என் செல்ல செல்வங்கள்' தொடர்.

அண்ணனும் தங்கையுமாக சேர்ந்து ரெண்டு வாத்து குஞ்சுகளை அண்டா தண்ணில நீச்சல் அடிக்க விட்டுட்டு அடுத்த வீட்டுக்கு போய்டுவாங்க. திரும்பி வந்து பார்க்கறப்போ, நீந்தி நீந்தி களைப்பான வாத்துகள், தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டு இருக்கும். இதான் முதல் அத்தியாயம். "சோகத்தை கூட சுவையாக சொல்ல முடிந்து இருக்கிறதே" இந்த எண்ணத்துடன் தொடர்ந்தேன். பத்தொன்பது அத்தியாயங்கள். வளர்ப்பு பிராணிகள் பற்றிய நெகிழ வைக்கும் தொடர்.நடுவில் தண்ணீர் குடிக்க கூட எழுந்திரிக்க வில்லை. "கப்புவின் கடைசி நாட்கள்" படித்து முடித்து நிமிர்ந்த போது வெளியில் இருட்டு, உள்ளே கனம். சாப்பிட தோன்ற வில்லை. அப்படியே படுக்கையில் விழுந்தவள் தான். கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தாலும் கூட, ஏதோ ஒரு நிறைவான உணர்வு. எங்கள் வீட்டில் எங்களுடன் வளர்ந்த ஜூலி, ஜானி, பப்பி , ப்ளாக்கி எல்லாரும் கனவில் வந்து போனார்கள்.

ஒரு நாய் பூனை கதைக்கு இவ்ளோ பெரிய பில்டப்பா? என்று கேட்பவர்களுக்கு என் பதில் இது தான்.
-முதலாவதாக செல்ல பிராணிகள் நமது குழந்தைகள் போல தான். அன்பு செலுத்துவதற்கு, அதற்கும் மேலாக அன்பை பெறுவதற்கு, இதை விட ஒரு எளிய வழி இருக்க முடியாது.
-அதை விட முக்கியம். தனிமையில் வாடும் எத்தனையோ பேருக்கு, வளர்ப்பு பிராணிகள் தான் ஆறுதலாக இருக்கிறார்கள்.

அடுத்ததாக, 'என் செல்ல செல்வங்கள்' வளர்ப்பு பிராணிகள் பற்றிய ஒரு தொடர் மட்டும் அல்ல."பிராணி விரும்பிகளுக்கும்,வெட்னரி டாக்டர்களுக்குமானது,not my kind" என்று நினைத்து விட வேண்டாம்.

தொடரை ஊன்றி படித்தவர்கள் இதை கட்டாயம் ஒத்துக்கொள்வார்கள். வாழ்க்கையின் மிக சாதாரணமான நிலையில் இருந்த ஒரு குடும்பம், படிப்படியாக எப்படி ஒரு சமூக அந்தஸ்த்தை அடைகிறது என்று, டைரக்டர் விக்ரமன் ஒரே பாட்டுக்குள் அடைத்து விடும் விஷயம், இந்த செல்லங்கள் தொடரில், subtle ஆக சொல்ல பட்டு இருக்கும். ஆரம்பத்தில் ஒரு வாடகை வீடு மாற்றுவதையே ஏதோ அடுத்த ஊருக்கு ஒரு நாள் பயணம் செல்வது போல, சாவகாசமாக செய்ய முடிந்த அளவில் மட்டுமே பொருட்கள் வைத்து இருக்கும் ஒரு எளிய குடும்பம், தொடரின் முடிவில் நியூசிலாந்தில் சொந்த வீட்டில் இருந்து அடுத்த தெருவில் இருக்கும் கால்நடை மருத்துவரிடம், காரில் செல்லும் அளவுக்கு உயர்ந்து இருப்பார்கள்.

துளசி கோபால்.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...ன்னு ஒரு பாட்டு இருக்கு.அது மாதிரி வலையுலகத்தில் டீச்சர் யாருன்னு கேட்டு பாருங்க. இவங்க தான். இவர்களுடைய பயணக் கட்டுரைகளும், புராணக்கதைகளை எளிமையாக சொல்லும் விதமும் மிகவும் பிரபலம்.1000 பதிவுகளை அனாயாசமாக தொட போகிறவர்."தேவதை" இதழில், "பெரிய மனசு, பெரிய மனுஷர்" என்ற தலைப்பில் இவர்களைப் பற்றிய கட்டுரை சமீபத்தில் வெளியாகியது.இவர்களுடைய பதிவுகளில் எளிமை இருக்கும். "Woman next door" இமேஜ் இருக்கும். அழகான புகைப்படங்கள் இருக்கும். நல்ல நகைச்சுவை இருக்கும். செல்ல செல்வங்கள் தொடரிலும் இவை அனைத்தும் உண்டு.

ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இவங்களுக்கு வண்ணத்து பூச்சி விருது கொடுத்தப்போ, இவங்களை பத்தி எழுதின நாலு வரிகள்:
"சூரியனுக்கு டார்ச் அடிக்காம நேரா விஷயத்துக்கு வரேன். இவங்க எழுதாத விஷயமே கிடையாதுங்கற அளவுக்கு வெரைட்டி. இவங்க அன்றாடம் வாழறதை எல்லாம் பதியறாங்களா அல்லது பதியறதுக்காக வாழறாங்களான்னு இனம்பிரிக்க முடியாத அளவுக்கு அவங்க வீட்டு பெர்சனல் விஷயங்கள்லேருந்து, நியூசிலாந்து விசேஷங்கள் வரைக்கும் எதையும் மிஸ்பண்ண முடியாது. எனக்குத் தெரிஞ்சு பேச்சுத் தமிழ்லயே சக்கைபோடு போடமுடியும்னு முதன்முதலா இணையத்துல நிரூபிச்சவங்க. எல்லாருக்கும் நல்லவங்கன்னு பாராட்டா பலரும் மாற்றா சிலரும் சொன்னாலும், அது எவ்வளவு சிரமம்னு அனுபவிச்சா தெரியும்."

விஷயத்துக்கு வரேன். துளசி கோபால் எழுதிய 'என் செல்ல செல்வங்கள்' தொடர் புத்தகமாக வெளிவருகிறது. இன்று முதல் புத்தக கண்காட்சியில் கிடைக்கும். சந்தியா பதிப்பகம்.

தொடரை படித்து இரு வருடங்களுக்கு பிறகு, எதேச்சையாக இவர்களுடைய அறிமுகம் கிடைக்க போக, இவர்களுக்கு ஒரு மெயில் தட்டினேன். "உங்கள் செல்லங்கள் பத்தொன்பதையும் ஒரே நாளில் படித்து, மூன்று நாட்கள் கப்புவை நினைத்து அழுதவள் நான். இப்போதும் அந்த கடைசி எபிசோடை நினைத்தாலே மனசு கனத்து போய் விடும் எனக்கு. செல்லங்களை நான் உங்கள் செல்ல குழந்தைகள் பற்றிய தொடராக மட்டும் பார்க்க வில்லை. வாழ்க்கையின் மிக சாதாரண நிலையில் இருந்து, படிப்படியாக நீங்க உயர்ந்துள்ள நிலையை நீங்கள் எவ்ளோ எளிமையாக, எங்களுக்கு உணர்த்தி இருந்தீர்கள்"என்று நான் அனுப்பி இருந்த மடலை புத்தகத்தின் முன்னுரையில் சுட்டி இருப்பதில் மகிழ்ச்சி. "புதிய பார்வை" இதழில், புத்தகத்தின் சில சுவாரஸ்யமான பக்கங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். தன்னுடைய வலைப்பதிவில் ஸ்கேன் பண்ணி போட்டு இருக்கிறார்.பாருங்கள்.

My verdict: Pets and BEYOND.