பெங்களூரில் இருந்து போகும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்க நினைப்பதை விட, அந்த ரயில் போகும் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக்கொள்வதே மேல்.மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெர்த் சைசில் முக்கால் வாசி தான் இருக்கிறது இந்த ரயிலின் பெர்த்கள். உங்கள் பெட்டியில் முறுக்கு, பிஸ்கட் இத்யாதிகள் வைத்து இருந்தீர்களே ஆனால்,செலவை பார்க்காமல் ஒரு பூனைக்கும் டிக்கெட் போட்டு கையோடு கூட்டி போய்விடுதல் நலம். 'விதௌட்'டில் சுதந்திரமாக ஓடி கொண்டு இருக்கின்றன எலிகள். அவை தின்றது போக மீதி தான் உங்களுக்கு மிஞ்சும்.பையை தலைக்கு வைக்காமல் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு தூங்கி விடுவதில் ஒரு சௌகர்யம் இருக்கிறது.மறு நாளில் இருந்து பையை திறக்க ஜிப்பை எல்லாம் இழுத்து சிரமப்படவே வேண்டாம். ஒரு கையை நுழைத்து உள்ளே உள்ள பொருட்களை எடுக்கும் அளவுக்கு ஓட்டை போட்டு தரும் நல்ல மனசுக்கார எலிகள்.
உங்களுக்கு "multiple personality disorder " இருக்கிறதா என்று கண்டு பிடிக்க வேண்டுமா? டாக்டர் checkupக்கு எல்லாம் செலவு செய்ய வேண்டாம். இந்த ட்ரெயினில் இருக்கும் டாய்லெட்டுக்குள் ஒரு முறை நுழையவும்.ஒரு வேளை நீங்கள்
"T T RRRRRRRRRRRRRRRRRRRR" என்று கத்தினால் உங்களுக்கு MPD confirmed.
காலை ஏழு மணிக்கு மதுரை போக வேண்டிய ரயில் சற்று தாமதமாகி ஒரு எட்டு எட்டரைக்கு போய் சேரும். அதற்குள் அவசரப்பட்டு எலி மிச்சம் வைத்த பிரட் ஏதும் சாப்பிட்டு விடாதீர்கள். மதுரை சந்திப்பில், "மீனாக்ஷி பவன்" என்று எழுதிய பச்சை கலர் அட்டை பொட்டியில், சுட சுட பொங்கல், பூரி, இட்லி எல்லாம் கிடைக்கிறது.20Rs/பொட்டி.பசியா ருசியா என்று தெரிய வில்லை. நல்லாவே இருந்தது.
வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் வருகைக்காக திருநெல்வேலி வரை செல்லும் 'லிங்க் ட்ரெயின்' காத்து கொண்டு இருக்கிறது. போன ஜென்மத்தில் உங்களுக்கு "வருண" தோஷம் ஏதும் இருந்தால், மழை கூட 'நீங்கள் மணியாச்சியில் வந்து இறங்கியதும் பெய்யலாம்' என்று காத்து கொண்டு இருக்கும். 'ஆஷ் துரையை', வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற வீர வரலாற்றுக்கு இன்றும் மௌன சாட்சியாய் இந்த ஸ்டேஷன்.
திருநெல்வேலி சந்திப்பில் இறங்கி வெளியே வந்ததும் ஷேர் ஆட்டோகாரர்கள் நம்மை மொய்க்கிறார்கள். 'புது busstand போக வேண்டும்' என்று சொன்னதும் 'நூறு ரூபாய்' என்று ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அறுபது ரூபாய்க்கு ஓகே சொல்கிறார்கள். "அல்வா வாங்கணுமா சார்?" என்று கேட்டு அவர்களே ஸ்வீட் கடை முனனால் நிறுத்துகிறார்கள். luggage அதிகம் இல்லையென்றால் ரயில் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை நடந்து சென்று (அதிக தூரமில்லை, ஐந்து நிமிட நடை தான்), அங்கிருந்து பஸ்ஸில் செல்லலாம். கிட்ட தட்ட ஆறு கிலோமீட்டர் ஆட்டோவில் போனால், புது busstand , நாகர்கோவிலுக்கு நிறைய பேருந்துகள் நிற்கின்றன. End To End bus என்றால், நெல்லையில் புறப்பட்டு நாகர்கோவிலில் தான் நிற்குமாம். ஆனால் அந்த பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் தான் இருக்கின்றன. மற்ற பேருந்துகள் எல்லாம் 'பாயிண்ட் டு பாயிண்ட்' என்ற போர்டுடன் எல்லா பாயிண்டிலும் நின்று நின்று போகின்றன.
இந்த முறை கல்யாண வீட்டை தவிர சென்ற ஒரே இடம் "நாகராஜா கோவில்". நாகர்கோவில் என்ற ஊரின் பெயர்க்காரணமே இந்த கோவில் தானாம். கருங்கல்லால் கட்டி இருக்கும் கோவிலில் முடிந்த வரை எந்த நவ நாகரிகமும் புகுந்து பழைமை மா(ற்)றிவிடாமல் காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள். மூலவர் நாகராஜர், சிவன், அனந்த கிருஷ்ணன் இருவருக்கும் சன்னதிகள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான இடம். ஆண்கள் சட்டை அணிந்து வர அனுமதி இல்லை.
முடிந்தால் ஒரு கார்த்திகை மாத காலை நேரத்தில் கோட்டார், சுசீந்திரம், நல்லூர், மருங்கூர், இரவிப்புதூர் என்று நாகர்கோவிலில் சுற்றுப்புறங்களை பைக்கில் ஒரு ரவுண்டு சுற்றுங்கள். ஆறு,குளம் என தாமரை மலர்ந்து, நிரம்பி வழியும் நீர்நிலைகள், பைக்கை நிறுத்தி நிறுத்தி உங்களை அங்கங்கே இறங்க வைக்கும்.அப்போது தான் பிரித்து நட்டு வைத்திருக்கும் நெல் நாற்றுகள் தலையை ஆட்டி ஆட்டி வணக்கம் வைக்கும். கொக்கு போல இருக்கும்,ஆனால், அலகு சிறியதான வெண்ணிற பறவைகள் கூட்டம் வயல் முழுக்க மேய்ந்து கொண்டு இருக்கும்.தென்னந்தோப்புகள் காய்த்து குலுங்கிக்கொண்டு இருக்கும்.எதற்கும் கிளம்பும் போதே வீட்டில் 'நேரமாகும்' என்று ஒரு வார்த்தை போட்டு வைத்து விடுங்கள். இதையெல்லாம் ரசித்து முடிந்து வீடு போய் சேர்வதற்குள், மொத்த குடும்பமும், 'என்ன இவ்வளவு நேரம்' என்று மொத்துவதை தவிர்க்கலாம். யாராவது செவ்வாழைபழம் சாப்பிட கொடுத்தால், "ரொம்ப பெரிசா இருக்கு, பாதி போதும்" என்று சொல்லிவிடும் தப்பை மட்டும் செய்யவே செய்து விடாதீர்கள். பழத்தில் ஒரு துண்டு விண்டு வாயில் போட்ட பின் தான் செய்த தப்பு புரியும். 'ஒன்றுக்கு இரண்டு பழம் எடுத்து கொண்டு இருக்கலாமோ' என்று தோன்றும். அப்போதும் ஒன்றும் கெட்டு விட வில்லை. வெட்கப்படாமல் 'பழம் நல்லா இருக்கே' என்று லேசா பிட்டு போடுங்கள். 'அப்போ இன்னொன்னு சாப்பிடு' என்று அவர்களே கொடுத்து விடுவார்கள்.
"என் கணவருக்கு இன்னும் நெறைய நெறைய cousins இருந்து இருக்கலாம். அப்போ தான் அடிக்கடி கல்யாணம் வரும், ஊருக்கு அடிக்கடி போய் இருக்க முடியும்"...யோசனையோடு,லேசான சாரல் முகத்தில் வருட,மணியாச்சி செல்லும் லிங்க் ட்ரெயினின் ஜன்னல் கம்பியில் முகம் பதித்து,கடந்து போன மயில்களை பார்த்த படி,Bangalore திரும்பிக்கொண்டிருந்தேன்.ஏதோ தோன்றிட விழியுயர்த்தவே, காண கிடைத்தது 'நாஞ்சில் நாட்டு வானவில்'.
Questions and Observations on Sabarimala
6 years ago