Tuesday, 3 August 2010

Police Story

 'எங்க பரம்பரையிலேயே யாரும் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் தலை வைச்சு கூட படுத்தது இல்லை'
எங்கள் குடும்பத்தில் யாரும் இப்படி சொல்லிக்கொள்ள முடியாது. ஏன்னா, நான் நேற்று போலீஸ் ஸ்டேஷன் சென்றேன்.

ஒரு அட்ரஸ் வெரிபிகேசன் விஷயமாக நேற்று காலை சுமார் பதினொரு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினோம். நான், கணவர், குழந்தை.போலீஸ் ஸ்டேஷன் அட்ரஸ் "எல்லோ பேஜஸ்" மூலமாக அறிந்து கொண்டு, அந்த ஏரியாவில் சென்று ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் எப்படி போக வேண்டும் என்று விசாரித்தோம். "இப்படியே நேரா போங்க, இடது பக்கம் வரும்" என்றார்;அவரை பார்க்க போலீஸ் மாதிரியே இருந்தார். எனக்குள் ஏதோ ஒரு பயங்கர ஆர்வமும் டென்சனும் கலந்த ஒரு பீலிங் இருந்தது.

தமிழ் சினிமா பார்த்து பார்த்து போலீஸ் ஸ்டேஷன் என்றால் இப்படி இருக்கும் என்று என்னை அறியாமலேயே எனக்குள் ஒரு பிம்பம் இருந்து இருக்கும் போலும். பொன்னம்பலம் சாயலில் ஒரு இன்ஸ்பெக்டர் மேஜை மீது கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருப்பார்; ஜெயிலுக்குள் கம்பிக்கு பின்னிருந்து இரண்டு மூன்று தலை எட்டி பார்க்கும். நாம் 'அட்ரஸ் வெரிபிகேசன்க்காக வந்து இருக்கேன்' என்று சொன்னதும், "போ போ; அப்படி உக்காரு; கூப்பிடறோம்" என்று விரட்டி அடிப்பார்கள். இப்படி ஏதேதோ யோசித்து கொண்டு போன எனக்கு அந்த கட்டடத்தை, பெரிய கட்டடம் என்று சொல்வதற்கில்லை; ஒரு சிறிய வீடு சைசில் இருந்த ஸ்டேசனை பார்த்ததும் முதல் அதிர்ச்சி, சினிமாவில் வர்ற மாதிரி செவப்பு கலரில் இல்லை. மஞ்சள் கலர் பெயின்ட், அதுவும் பெயிண்ட் அடித்து பல வருடம் ஆகி இருக்கும் போலும்.

வாசலில் ஒரு பக்கம் சிலர் நின்று கொண்டு இருந்தார்கள். மற்றொரு பக்கம் கிட்டத்தட்ட இருபது டூ வீலர்கள் அழுக்கடைந்து போய் நின்று கொண்டு இருந்தன. திருட்டு கேசில் பிடிதததோ, நோ பார்கிங்கில் அள்ளியதோ தெரியலை. பாதி உடைந்த நிலையில் ஒரு சேர் அந்த டூ வீலர்களின் மீது கிடந்தது.

வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தோம்.கதவருகில் நின்று கொண்டு ஒரு போலீஸ்காரர் கையில் பலாப்பழத்தின் ஒரு பகுதியை வைத்து கொண்டு அதில் இருக்கும் சுளைகளை லாவகமாக பிய்த்து பிய்த்து தின்று கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் பீச்சில் பலூன் சுடுவோமே, அதே மாதிரி சைசில் ஒரு நீளமான துப்பாக்கி, சுவரில் சாய்த்து வைக்க பட்டு இருந்தது. அதன் குழல் பகுதியில் அவருடைய தொப்பியை மாட்டி இருந்தார்.

'ஹலோ சார்' என்றார் கதிர்.

'வாங்க வாங்க' திருமண வீட்டில் வரவேற்பதை போல வரவேற்றார் கன்னடத்தில்.

'பலாச்சுளை சாப்பிடுங்க' எனக்கு யாரோ முகத்தில் பலா சக்கை வைத்து அறைந்ததை போல் இருந்தது.

'பரவாகில்லா சார்; ஒரு அட்ரஸ் வெரிபிகேசன் செய்யணும்" கதிர் அவருக்கு தெரிந்த கன்னடத்தில்.

'மொதல்ல நீங்க பலாச்சுளை எடுத்துக்கோங்க, பையனுக்கும் கொடுங்க'

'இல்ல சார், அவனுக்கு சளி பிடித்து இருக்கிறது' கதிர் ஒரு சுளையை பிய்த்து எடுத்து கொண்டார்.

'மேடம் உங்களுக்கு...' என்னிடம் நீட்டினார்.

'இல்லை வேணாம் தேங்க்ஸ்'

'இப்படி உக்காருங்க; குமார் வருவார்; வந்ததும் பேசுங்க' என்று ஒரு பெஞ்சை காண்பித்து விட்டு சுளையில் பிசியானார்.

அந்த பெஞ்சில் ஏற்கனவே ஒரு இளைஞன் (ஆப்ரிக்கர் என்று நினைக்கிறேன்; பெங்களூரில் நிறைய ஆப்ரிக்கர்கள் தென்படுகிறார்கள்) உட்கார்ந்து இருந்தான். நாங்களும் உட்கார்ந்து கொண்டோம்.ஸ்டேசன் முழுக்க ஒரே பலாப்பழ வாசனை. உள்ளே இருந்த அத்தனை பெண்/ஆண் போலீஸ் கையிலும் பலாப்பழத்தின் ஒரு ஒரு பகுதி.லாவகமாக உரித்து உள்ளே தள்ளி கொண்டு இருந்தார்கள்.

நாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து சுற்றி முற்றி பார்த்தேன். கம்பிக்கதவு போட்ட அறை கண்ணில் படவே இல்லை. ஒரு மேஜை போட்டு அதில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். எங்களை அடுத்து ஒரு அறை. அறை முழுக்க ஒரே பைல்கள். பேப்பர்கள். அந்த பக்கம் இன்ஸ்பெக்டர் என்று போர்ட் போட்டு அரை(half) கதவு போடப் பட்டு இருந்தது. உள் அறையில் இருந்து வந்து ஒருவர் என்னிடம் 'பேர் என்ன?' என்று கேட்டு விட்டு 'சற்று பொறுங்கள்' என்று சொல்லி விட்டு போனார். அவர் யூனிபார்மில் இல்லை. மப்டி போலும்.


நாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்துக்கு பின்னால், ஒரு போர்டில், 'Civilians Rights' என்று FIR பற்றின ரூல்ஸ் எழுதி வைத்து இருந்தார்கள்.Non Fatal Accidents க்கு FIR காப்பி வேண்டும் என்றால் 50Rs கட்ட வேண்டுமாம்.Fatal என்றால் 81Rs.நாம் ஏதாவது கேஸ் கொடுத்தால், ஒவ்வொரு மாதமும் அதில் என்ன progress என்று status update கேட்கலாமாம்.

அப்போது இன்னொரு போலீஸ்காரர், மிகவும் வயதானவர், உள்ளே நுழையும் முன், ஸ்டேஷன் வாசலை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தார். எங்களை பார்த்து புன்னகைத்தார். பிறகு அங்கே இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டார். வாசலில் நின்று கொண்டிருந்த மூவரும், அவரிடம் வந்து அமர்ந்தனர். 'Anticipated bail' என்று ஏதோ பேசிக்கொண்டார்கள்.

திடீர் என்று வாசலில் நாங்கள் சந்தித்த பலாச்சுளை போலீஸ், பரபரப்பாக தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு, துப்பாக்கியை கையில் எடுத்து தோள் மீது சாய்த்துக்கொண்டு விறைப்பாக நின்றார். போலீஸ் ஸ்டேசன் ஒரே பரபரப்பாகி எல்லாரும் எழுந்து கொண்டார்கள். நாங்களும் என்ன செய்வதென்று தெரியாமல் எழுந்து கொண்டோம். ஆர்வமாகி வெளியே எட்டி பார்த்தேன். வந்தது பெரிய போலீஸ் போலும். பலாச்சுளை போலீஸ் சல்யுட் அடித்தார். பெரிய போலீஸ் நேராக உள்ளே வந்து எங்களுக்கு அடுத்து இருந்த அறையை கடந்து இன்ஸ்பெக்டர் என்று எழுதி இருந்த அறைக்குள் நுழைந்து விட்டார்.சற்று முன் வந்தமர்ந்த வயதான போலீஸ், எங்களை நோக்கி "உக்காருங்க" என்பதாக சைகை செய்தார்.

ஒரு பெண்மணி, சற்று கலவரமான முகத்துடன், கையில் ஒரு சிறுவனை பிடித்தபடி வந்தார். அவனுக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம். அவரும் அந்த பலாச்சுளை போலீசிடம் போய் ஏதோ விசாரிக்க, அவர் நாங்கள் அமர்ந்து இருந்த பெஞ்சை காட்டி, 'அங்கே போய் உட்காருங்க, என்றார். உடனே இந்த ஆப்ரிக்க இளைஞன் எழுந்து கொண்டு அந்த பெண்ணை அமர சொன்னான். அவரும் வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடந்தது. அர்ஜுன் பொறுமை இழந்து, "அம்மா வீட்டுக்கு கிளம்பலாம்மா" என்று சொல்ல ஆரம்பித்து இருந்தான். நானும் வேடிக்கை பார்ப்பதும் வாட்ச் பார்ப்பதுமாக சற்று சலித்து இருந்தேன்.

'நீங்க உள்ளே வாங்க' எங்களை காத்திருக்க சொன்ன மப்டி போலீஸ்  வெளிப்பட்டு எங்களை அழைத்து கொண்டு போனார். ஒரு சிறிய மேசை, நாற்காலி. பிரிண்டர்.'எங்கள் ஸ்டேசன் ரொம்ப சிறியது; ஆனால் வேலை அதிகம்.அதனால் தான் உங்களை இவ்வளவு நேரம் காக்க வைக்க வேண்டியதாகி விட்டது; உட்காருங்கள்' என்றார்.

ஒருவர் தான் உட்கார முடியும்; நான் உட்கார்ந்து கொண்டேன்.

உடனே அவர் அங்க இருந்த ஒரு பெரிய மர பெட்டி மீது இருந்த பைல்களை எல்லாம் நகர்த்தி வைத்து கதிரையும் அர்ஜூனையும் உட்கார்ந்து கொள்ள சொன்னார். அவருக்கு அருகில் இருந்த இன்னொரு பெட்டியை திறந்து ஏதோ தீவிரமாக தேட ஆரம்பித்தார்.

அவர் குனிந்து கொண்டு தேட ஆரம்பித்தும், நான் இன்ஸ்பெக்டர் அறைப்பக்கம் நைசாக எட்டி பார்த்தேன். அங்கு ஹோட்டல் ரெசப்ஷனில் எல்லாம் போட்டு இருப்பார்களே, உயரமான வட்ட வடிவ மேசை; அந்த மாதிரி ஒரு மேசை, அதில் ஒரு கம்ப்யுட்டர்; இன்ஸ்பெக்டர்; எதிர்த்தாப்பல அந்த anticipated bail பற்றி பேசியவர்கள். அவர்களிடம் கேப்டன் விஜயகாந்த் மாதிரி ஏதோ புள்ளிவிவரம் எல்லாம், கைகளை ஆட்டி ஆட்டி சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த அளவுக்கு கன்னடம் தெரியாததால் என்ன பேசினார் என்று தெரிய வில்லை.

இதற்குள் இங்கு நம்மிடம் பேசிக்கொண்டு இருந்தவர், அவர் தேடி கொண்டு இருந்த பைல் காணவில்லை என்பதை கண்டு பிடித்து, யாரிடமோ போனில் பேசி விட்டு "குமார் பைல் எடுத்து கொண்டு வெளியில் சென்று விட்டாராம்; அதனால் இப்போது உங்கள் வேலை முடியாது" என்ற மிக பெரிய உண்மையை எடுத்து உரைத்தார்.

'சரிங்க ரொம்ப நன்றி' என்று சொல்லிவிட்டு நாங்களும் நாங்கள் கிளம்பி விட்டோம்...

பெஞ்சில் என்னோடு உட்கார்ந்து இருந்த பெண்ணும் அவருடைய பையனும், அந்த ஆப்ரிக்க இளைஞனும் தங்களில் யாரை அடுத்து கூப்பிடுவார்கள் என்று பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா விவரிச்சிருக்கீங்க பிரியா..
அதும் ஆரம்பம் சூப்பர்

ஜெய்லானி said...

ஒரு திரை கதை படித்த மாதிரி இருக்கு..!!

Suresh said...

you are good writer...it was interesting to read...lot of anticipations for us...good..thanks for the good stuff...

அன்புடன் பிரசன்னா said...

உங்கள் அனுபவம் நல்லாவே இருக்கு, திரைப்படங்களில் அளவுக்கதிகமாகவே கற்பனையை கலக்கிறார்கள். உங்கள் எழுத்து வடிவம் படிப்தற்கு சுவாரசியமா இருக்கு....