ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒன்றின் மீது ஒரு பயம், ஒரு வெறுப்பு, ஒரு ஒவ்வாமை இருக்கும். நடிகைகள் பேட்டிகளின் போதெல்லாம் சொல்வார்களே.... எனக்கு பல்லின்னா பயம். கரப்பான் பூச்சின்னா பயம்...
என்னுடைய தோழி ஒருத்தி. தந்தூரி சிக்கன் என்றால் சப்புக்கொட்டி சாப்பிடுவாள். ஆனால் அதே கோழி உயிரோடு இருக்கும் போது பார்த்தால், இவளை யாரோ தந்தூரி அடுப்புக்குள் தூக்கி போட்டு விட்டது போல அலறுவாள். அதுவும் கோழிகள் அதனுடைய இறக்கையை விரித்து படபடவென்று அடிக்குமே, அந்த போஸில் பார்த்தால் செத்து பிழைப்பாள். அவ்வளவு பயம். இன்னொருத்தி, அவளுக்கு புழு என்றால் பயம். பயம் என்பதை விட ஒரு விதமான அருவருப்பு. கம்பளி புழு டிஸ்கவரி சேனலில் காண்பித்தால் கூட உவ்வே என்பாள். அவள் சாப்பிடும் போது, ஒரு பேச்சுக்கு 'இன்றைக்கு வெண்டைக்காய் வெட்டும் போது புழு இருந்தது' என்று சொல்லி விட்டால், அன்று நமக்கு சாப்பாட்டில் மொத்த வெண்டைக்காய் வதக்கலும் வாய்க்கும். எனது சித்தி ஒருவர், தவளையை எங்கேயாவது பார்த்து விட்டால், அழுதே விடுவார்.
எனக்கு என்னவோ சின்ன வயசில இருந்தே வெட்டுக்கிளி என்றால் பயம். பயம் என்றால் சாதாரண பயம் இல்லை...எவ்வளவு பயம் என்று நீங்களே மேலே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வெட்டுக்கிளிகளில் இரண்டு ரகம் பார்த்து இருக்கிறேன். ஒன்று கிளிப்பச்சை கலரில் இருக்கும். இன்னொன்று மரக் கலர் என்று சொல்வாங்களே...அந்த மாதிரி பிரவுனும் சாம்பலும் கலந்த ஒரு வண்ணம். சிறுவயதில் நாங்கள் இருந்த வீட்டை சுற்றி நிறைய மரம் செடி இருந்ததனாலோ என்னவோ வெட்டுக்கிளிகள் நிறைய இருந்தன. அதுவும் சைஸ் வாரியாக..சிலது ஒரு சாண் நீளம் கூட இருக்கும். சமயத்தில் மாலை நேரங்களில் விளக்கு போட்டதும், அவைகளில் ஒன்று எங்கள் வீட்டுக்குள் வந்துவிடும் அபாயம் இருந்தது. வீட்டில் வேறு யாரும் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். எனக்கு மட்டும் அதை பார்த்தால் அப்படியே நடுங்கி விடும். அது ஒரு இடத்தில் சும்மா இருக்காது.அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும். ஒரு இடத்தில் உட்காரும். ஐந்து வினாடிகள் கூட அங்கே இருக்காது. மறுபடி பறக்கும். மறுபடி செட்டில் ஆகும். அப்படி உட்காரும் போது 'டப்' என்று ஒரு சத்தம் கேட்கும். இந்த வரியை எழுதும் போது கூட எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து கொள்கிறது பயத்தில். சில நேரம் அது நம் மீது கூட வந்து உட்காரும். என் தம்பி எல்லாம் அதை ஏதோ தூசு மாதிரி தட்டி விட்டு விட்டு வேலையை தொடருவான். நான் அது உள்ளே நுழைந்த அந்த நிமிடமே அடுத்த ரூமிற்குள் போய் கதவை சாத்தி கொண்டு விடுவேன். என் வீட்டினர் என் மீதும் வெட்டுக்கிளியின் மீதும் இரக்கப்பட்டு அதை பிடித்து வெளியே போட ஆரம்பித்தார்கள்.
அதை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அது பறந்து கொண்டே இருக்கும் போது ஒரு துணியை வீசி அதை பிடித்து வெளியில் எறிவார்கள். சில நேரம் அது தரையில் உட்கார்ந்தது என்றால் அதன் மீது ஒரு பாத்திரத்தை போட்டு மூடி அப்படியே நகர்த்தி கொண்டே போய் கதவுக்கு வெளியே பாத்திரத்தை திறந்து விட்டு அதே நேரத்தில் கதவையும் மூடுவார்கள். "போன முறை நான் பிடிச்சு போட்டேன் இல்ல, இன்னைக்கு நீ பண்ணு" என்பது போன்ற உரையாடல்கள் எங்கள் வீட்டில் சகஜமானது. எனது பாட்டிக்கு என் மீது மிக பிரியம். வீட்டிற்குள் அது வந்ததும் "அவ பாத்தா பயப்படுவா"ன்னு விளக்குமாறை எடுத்து கொண்டு கிளம்பிவிடும்.
யார் கையிலாவது அது மாட்டும் வரை படபடப்பாக அடுத்த ரூமுக்குள் இருப்பேன். சில நேரம் அம்மாவும் அப்பாவும் பிசியாக இருந்தால், என் தம்பியிடம் கெஞ்சுவேன். "டேய் ப்ளீஸ் டா, அதை பிடிச்சு போடுடா" என்று...அவன் அசால்ட்டாக, "நேத்து பெரிய கேக் பீஸ் நீ எடுத்துகிட்டு எனக்கு சின்னது தந்த இல்ல...போ போ பிடிச்சு போட முடியாது" ன்னு நேரங்காலம் தெரியாமல் வெறுப்பேற்றுவான்.
'பிடிச்சு போட்டாச்சு வா..' என்ற வார்த்தை கேட்டதும் இயல்பு நிலைக்கு திரும்புவேன். இருந்தாலும் நிஜமா நிஜமா...என்று நான்கு முறை கேட்டு, யாராவது ஒருவர் சத்தியம் செய்ததும் தான் வெளியில் வருவேன்.சில நேரங்களில் பக்கத்து வீட்டுக்கெல்லாம் கூட ஓடி இருக்கிறேன்.
டிசம்பர் பூ என்று ஒன்று இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் நிறைய பூக்கும். ரோஸ், ஊதா, வெள்ளை, ராமர் கலர் என்று ஒன்று, ஊதாவில் வெள்ளை கோடு போட்டு இருக்கும். இப்படி நிறைய கலர்களில். எங்கள் தோட்டத்தில் எல்லா கலரிலும் செடிகள் இருந்தது. உடைக்கு மேட்சாக அந்த கலர் பூவை நீளமாக தொடுத்து அம்மா வைத்து விடுவார்கள். பூ பூப்பதற்கு முன் வரும் மொட்டுக்கள் கிட்டத்தட்ட பச்சை வெ.கி மாதிரியே இருக்கும். ஒரு முறை பூ பறித்து கொண்டு இருந்தேன். அந்த செடியில் ஒன்று உட்கார்ந்து இருந்து இருக்கிறது. அது தெரியாமல் நான் பூ பறிக்க, தவறி போய் என் கை அதன் மீது பட்டு விட்டது. அது பறந்து என் மீது பாய, நான் அலறிய சத்தத்தில் வீட்டிற்குள் இருந்த அம்மா அப்பா எல்லாம் தோட்டத்தில் பாம்பு ஏதும் வந்து விட்டதோ என்ற ரீதியில் பயந்து போய் ஓடி வந்தார்கள்.
அது கூட பரவாயில்லை. எட்டாவது படித்து கொண்டு இருந்த போது, எனக்கும், ஒன்பதாவது வகுப்பில் இருந்த பார்கவிக்கும் சுத்தமாக ஆகாது. எப்போதும் முறைத்து கொள்வோம். பார்கவிக்கு எனது இந்த பயம் எப்படியோ தெரிந்து போனது. ஒரு நாள் பள்ளி இடைவேளையின் போது மைதானத்தில் என் முன்னால் வந்து நின்றது பார்கவி. 'என்னையா பகைச்சுக்கற?' என்ற ரீதியில் ஒரு பார்வை. முதலில் அசராத நான், அப்பறம் தான் கவனித்தேன். அதன் கையில் ஒரு பச்சை கலர் வெ.கி."போடாதே ப்ளீஸ் ப்ளீஸ்" என்று நான் கெஞ்சி கொண்டு இருக்கும் போதே என் மீது போட்டு விட்டது. நான் அப்படியே மூர்ச்சை ஆகிவிட்டேன். முழித்து பார்த்த போது, சில பெண்கள் தண்ணீர் பாட்டிலோடு என்னை சுற்றி நிற்க, பார்கவி "ப்ளீஸ் ப்ளீஸ் டீச்சர் கிட்ட சொல்லிடாதே" என்று என்னை கெஞ்சி கொண்டு இருந்தது..
-----௦-------***--------------
திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் கூட இந்த பயம் மட்டும் அப்படியே இருக்கிறது. 'டேய் டேய் தம்பி அத பிடிச்சு போடுடா' மட்டும் 'ஏங்க ப்ளீஸ்ங்க.. அத பிடிச்சு போட்டுடுங்க' என்பதாக மாறி இருக்கிறது.
இப்போது நாங்கள் இருக்கும் வீடு மூன்றாவது மாடி. அபார்ட்மெண்டில் நிறைய செடிகள் இருக்கின்றன. அதை பார்த்ததுமே ஓரளவுக்கு உஷாராகி கிரவுண்ட் ப்ளோரில் வீடு வேண்டாம் என்று ஓனரிடம் சொல்லி, கடைசி மாடியில் செட்டில் ஆனோம். ஆனாலும் சில சமயம் மாடி வரைக்கும் பறந்து வந்து விடுகின்றன. நானும் கெஞ்சி கொண்டே இருக்கிறேன்.
------****---------------
நேற்று ஒரு மீட்டிங் முடிந்து வீடு திரும்ப நேரம் ஆகி விட்டது. அண்டர்கிரவுண்டில் வண்டியை பார்க்கிங் பண்ணி விட்டு லிப்டுக்குள் நுழைந்து 3 என்ற எண்ணை அமுக்கினேன்.
டப்.
லிப்ட் கதவு மூடும் அந்த வினாடியில் பச்சையாக பெரிய சைசில் ஒன்று உள்ளே பறந்து வந்து லிப்டில் இருக்கும் லைட்டின் மீது உட்கார்ந்தது. விதிர்த்து போய் "ஓபன்" பட்டனை அமுக்க என் கை அனிச்சையாக நீண்டது.
சட்
.
.
.
பவர்கட்.
-----------*****------------
Questions and Observations on Sabarimala
6 years ago
7 comments:
me the first.
ஏதோ தப்பி தவறி இலக்கிய பத்தி வாசிக்கற மாதிரியே ஒரு ஃபீலிங் :)-
நானெல்லாம் அதை பிடிக்க என்ன பாடு பட்டிருக்கேன் . பின்னாலேயே ஓடுவேன். உங்களுக்கு பயமா ..!! ஆச்சிரியமாதான் இருக்கு..
then what happend after that?...
indha vishayma enakku munnadiye theriyama poche!!
sari climax enna...adhai sollu...
அர்ஜுன் கிட்ட சொல்ல ஒரு பாய்ண்ட் கிடைச்சாச்சு :-))))
-அரசு
excellent..... :)
Post a Comment