சில புத்தகங்கள் பார் சாக்லேட் மாதிரி. ஒரு கடி கடித்த பிறகு கவர் போட்டு உள்ளே வைக்க முடியாது. ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடித்து விட்டு தான் மூட முடியும்.
கனவு நாயகன் அந்த ரகம் அல்ல. டின்னில் வருமே குலாப் ஜாமூன்,ரசகுல்லா எல்லாம். அந்த மாதிரி. ஒன்று எடுத்து சாப்பிட்டு விட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, சற்று கழித்து அடுத்தது. நிதானமாக படிக்க வேண்டிய வகை.இந்த புத்தகத்தை பற்றிய என்னுடைய பார்வையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதை புத்தக விமர்சனம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. விமர்சனம் செய்யும் அளவு எனக்கு வாசிப்பனுபவமோ,முதிர்ச்சியோ இல்லை.இவைகளை என்னுடைய சொந்த கருத்துகளாக மட்டும் கொள்க.
ஆரம்பமே அனல் பறக்கிறது. போக்ரான் பாலைவனத்தை பற்றிய வர்ணனையோடு ஆரம்பமாகும் முதல் அத்தியாயம் முழுதும் ஏதோ திரில்லர் படம் பார்ப்பதை போன்ற உணர்வு. "அணு ஆயுத சோதனை" ப்ரொஜெக்டில் என்னவாக இருந்தீர்கள் கண்ணன்? கூடவே இருந்து பார்த்த மாதிரியான ஒரு விவரிப்பு. Brilliant.
எந்த ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போதும் கண்டிப்பாக தேதி குறிப்பு,பெயர்குறிப்புகள், சூப்பர் சோனிக்,ஹோவர்க்ராப்ட்,ஸ்பிட்ஃபியர் என்று விமானங்களை குறித்த தகவல்கள் என்று 248 பக்கங்களும் data,data and data. கலாம் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல் தேவை ஏற்படின், கூகிள் பண்ணுவதற்கு முன்னால், 'இந்த ச.ந.கண்ணன் ஏதாவது சொல்லி இருக்கிறாரா பார்ப்போம்'என்று தேடலாம். தான் பகிர்ந்திருக்கும் தகவல்களுக்கு disclaimer ஆக ஏராளமான புத்தகங்கள்,பேட்டிகள்,சுட்டிகள் என்று கடைசியில் ஒரு பெரிய லிஸ்ட் தந்தும் இருக்கிறார்.கலாம் அவர்களுக்கு inspiration ஆக இருந்த புத்தகங்களில் இருந்தே ’இதுவும் கடந்து போகும்' மாதிரியான (நிகழ்வுக்கு பொருத்தமான) மேற்கோள்கள் காட்டி இருப்பது புத்திசாலித்தனம்.
ஹீரோ அப்துல் கலாம் தான் என்றாலும், ஆசிரியரின் horizon சற்று அகன்றதாகவே தான் இருக்கிறது. New Horizon?...:-). சிவானந்த சுவாமிகள், கணித மேதை ராமானுஜர் என்று ஆங்காங்கே நிறைய கதை சொல்கிறார். பறவை எப்படி பறக்கிறது, செயற்கைக்கோள் எப்படி வேலை செய்கிறது முதலான அறிவியல் விளக்கங்கள் கூடவே. இஸ்ரோ உருவான கதை, கதிரியக்கத்தினால் ஹிரோஷிமா நாகசாகியில் விளைந்தது என்ன? முதலான நிகழ்வுகளையும் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
புத்தகத்தின் அத்தியாயங்கள் பிரித்திருப்பது கவனமாக கையாள பட்டு இருக்கிறது. தலைவாழை விருந்து மாதிரி சாம்பார் முடித்து ரசம், பிறகு தான் மோர் என்று வரிசையாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தாலி மீல்ஸ் மாதிரி. பிடித்ததை முதலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நான் பொருளடக்கம் பார்த்ததும் முதலில், "சோனியா-கலாம் என்ன நடந்தது? " என்று 201 ம பக்கத்துக்கு தான் போனேன். ஒவ்வொரு அத்தியாயமும் தனி தனி கட்டுரைகளாவும் வாசிக்கும் அளவுக்கு தேர்ந்தவை.
சமுதாயத்தின் பெரும்பான்மையினரால், வெற்றியாளராக மட்டுமே அறியப்பட்ட ஒருவரின் தோல்விகளையும், துவள வைத்த சம்பவங்களையும் சாமர்த்தியமாக சொல்லி இருப்பதற்கு சபாஷ்.முதல் எஸ்.எல்.வி கடலில் விழுந்ததும், நந்தி ஹோவர் முடங்கியதும் படிப்பவர்களை ’அச்சச்சோ’ சொல்ல வைக்கும். அக்னியின் முதல் இரண்டு முயற்சிகளும் தோற்றதை பற்றிய கேலி கார்டூன்களை பற்றிய குறிப்புகள், அந்த கார்டூன்களுக்காக கூகிள் பண்ண வைக்கும்.
"'கலாமு'க்கு ராமேஸ்வரத்தில் ஒரு 'சிவசுப்ரமணிய ஐயர்' கிடைத்தது போல, ராமநாத புரத்தில் ஒரு 'அய்யாதுரை சாலமன்' கிடைத்தார்" என்று சந்தர்ப்பவசமாக நடந்த சம்பவங்களை கூட, சுவாரஸ்யமான வரிகளாக மாற்றியிருப்பது அழகு.
"பொற்கொல்லர் தன் சொந்த மகளுக்கு நகை செய்யும் போது கூட, அதில் சற்று ஆட்டையை போடுவார். அது அவருடைய தொழில் தர்மம்" என்று சொல்வார்கள். அது மாதிரி தன்னுடைய புத்தகத்தில் கூட ஆங்காங்கே தன் சொந்த அரசியல் கருத்துகளை 'subtle ' ஆக தூவி இருக்கிறார். "ராமர் கட்டிய பாலம் இனி இங்கு தேவை இல்லை" யாம். ஒரு ரூபாய் அரசியல்வாதிகளையும் லேசாக உரசி இருக்கிறார்.
ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசு தலைவர், இந்நாள் ஆசிரியர், இவரை பற்றிய புத்தகம். முழுக்க முழுக்க சீரியஸாக தான் இருக்கும்,முகத்தை உம் என்று வைத்து கொண்டு தான் படிக்க வேண்டியதாக இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை. வெடிச்சிரிப்பு வரா விட்டாலும் 'கோத்தாரியும் நேருவும் அறிவியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்தது முதலான' புன்னகைக்கு மினிமம் கேரண்டி தரும் இடங்கள் பல.
தகவல்களும் புன்னகையும் தானா? செண்டிமெண்ட்? இருக்கிறது. போலியோவால் பாதிக்க பட்டவர்களுக்கு கலாம் செய்த காலிப்பர், முக்கியமான தருணங்களில் அவருடைய குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம் என்று நெகிழ வைக்கும் விஷயங்கள், ஆனால் உறுத்தாத அளவில்.
கடவுளை நம்புகிறீர்களா? என்பதற்கான கலாமின் பதிலும், முஷாரப் கலாம் சந்திப்பின் முடிவில், முஷாரப் கலாமிடம் சொல்லும் வரிகளும் 'நச்'கள்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலாம் சொல்லும் பத்து பத்து உறுதி மொழிகளும், இரண்டு "Ten commandments" களுக்கு சமானம்.
எஸ்.எல்.வி-3 ஏவுகணை, ரோகினி 1B launching காட்சிகள் விவரிப்பின் முடிவில், கலாமை தோளில் தூக்கி வைத்து கொள்ளும் shaar ஊழியர்களுள் ஒருவராக நாமும் மாறி போகிறோம்.
ஒரு குடியரசுத்தலைவராக கலாம் சந்தித்த தர்மசங்கடமான சிக்கல்கள் பற்றி சொல்லி இருக்கிறார். தேர்தல் சீர்திருத்த தீர்ப்பு, பீகார் சட்டமன்ற கலைப்பு, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பதவி வகிப்பது குறித்த சட்டம், அப்சல் கருணை மனு முதலான விஷயங்களில், ’அந்த நிலைமையில் கலாம் வேறு எதும் செய்திருக்க இயலாது’ என்பதை போன்ற விளக்கங்கள்.
திருஷ்டி பொட்டுகள் சில கண்ணில் பட்டன. ஒரு பொட்டை பற்றி மட்டும் சொல்கிறேன். ஜமீலாவின் முகூர்த்தத்துக்கு இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கின்றன. கலாம் டி ஆர் டி ஓ வில் இருக்கிறார். ஏவுகணையில் சென்றால் தான் அவ்வளவு விரைவாக ராமேஸ்வரம் போய் சேர முடியும் என்கிறீர்கள். ஆனால் கலாம், மாலை வரை ஒரு திட்ட அறிக்கை வேலை செய்து முடித்து, சமர்ப்பித்து,அதற்கு பிறகு ஒரு ஹெலிகாப்டர் பிடித்து சென்னை வந்து, அங்கிருந்து விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து ரயில் பிடித்து ராமேஸ்வரம் போனதெல்லாம் சரி. ஆனால் சரியான நேரத்தில் திருமணத்தில் கலந்து கொண்டார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். குழப்புகிறீர்களே கண்ணன்? உண்மையை சொல்லுங்கள். கலாம் ஜமீலாவின் திருமணத்திற்கு சரியான நேரத்தில் போனாரா இல்லையா?
கலாம் பற்றிய புத்தகம் என்பதால் அவர் சிரித்துக்கொண்டோ, யோசித்துக்கொண்டோ இருக்கும் close-up shot தான் அட்டை படத்தில் போடுவதற்கு பொருத்தம் என்றாலும், அக்னிசிறகுகள் அட்டையை யோசித்து இங்கு சற்று வித்தியாசப்படுத்தி இருக்கலாமோ? புத்தக கண்காட்சியில் மேலோட்டமாக பார்ப்பவர்கள், "ஏற்கனவே வாங்கியாச்சு" என்று நினைத்து விடும் ரிஸ்க் இருக்கிறது.
"அக்னிசிறகுகளில் இருந்து உங்கள் புத்தகம் எந்த விதத்தில் வேறுபடுகிறது?" என்று
நூலாசிரியரிடம் கேட்டதற்கு
"தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்தில் கூட கலாம் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு கிடையாது. அந்தக் குறையை இந்தப் புத்தகம் போக்கியிருக்கிறது" என்கிறார்.
பா.ராகவன் அவர்களின் twitter கமென்ட்
:"ச.ந. கண்ணனின் அப்துல் கலாம் பற்றிய புத்தகம் துதி மாலைகளை விலக்கி அவரைச் சற்றுத் தள்ளி நிறுத்தி அழகாக எடை போடுகிறது"My verdict: An educating book. புத்தகததை பற்றிய எனது கருத்துகள்
இட்லிவடையில் வெளிவந்துள்ளது.வேண்டுகோளை ஏற்று பிரசுரித்த இட்லிவடைக்கு நன்றி. நன்றி.நன்றி.
2 comments:
Congrats Kannan!!!
அட்டகாசம். இன்னும் கண்ணில் படவில்லை இப்புத்தகம். கட்டாயம் வாசிக்கத்தான் வேணும்போல!
தலைவாழை இலைக்கும் , 'தாலி ' மீல்ஸ்க்கும் மூணு முடிச்சுப் போட்டுட்டீங்களே:-)))))))))))
இனிய பாராட்டுகள் பிரியா.
உங்களைக் கட்டாயம் நினைவில் வச்சுக்கப்போறோம். பதிவர்கள் புத்தகங்களுக்கு நீங்கதான் விமரிசனத்தை விமரிசையா எழுதித் தரப்போறீங்க...ஆமாம்!
Post a Comment