Friday, 4 December 2009

சைக்கிள்


எந்த வயதில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால் கற்றுக்கொள்ள ஆரம்பித்த சமயத்தில், சொல்லிக்கொடுத்து கொண்டிருந்த என் சித்தி பின்னால் பிடித்து இருந்த பிடியை விட்டு விட, நானும் நேராக போய்க்கொண்டே இருந்ததும்,ஒரு இடத்தில் 'திருப்பு திருப்பு' என்று சித்தி கத்தியதை கேட்டு, 'ஹான்ட் பாரை திருப்பனுமா ??'என்று நான் திரும்பி பார்த்து கேட்டதில் balance தடுமாறி சைக்கிளோடு சேர்ந்து ரோட்டோரம் இருந்த சாக்கடையில் விழுந்ததும் மறக்கவே இல்லை.

நன்றாக ஓட்ட கற்றுக்கொண்டதும் எங்கள் ஊரில் வாடகைக்கு சைக்கிள் கிடைக்கும். மணிக்கு ஒரு ரூபாய். லேடீஸ் சைக்கிள் என்றால் இரண்டு ரூபாய். சனி ஞாயிறு மாலைகளில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து வீட்டு முன் உள்ள திட்டானியில் சுற்றி சுற்றி ஓட்டுவது வழக்கம் ஆனது.அதிலும் அப்படி சுற்றி ஓட்டும்போது திரும்ப வேண்டிய இடங்களில் லாவகமாக திரும்புவது ரொம்ப பெருமையா இருக்கும்,பக்கத்து வீட்டு வெங்கிடு அண்ணா, அவனோட தம்பி செந்தில், தங்கை செல்வி, என்னோட தம்பி எல்லாரும் தான் என்னோட சைக்கிள் சாகசத்துக்கு ஆடியன்ஸ். ஒரு கையை விட்டு விட்டு ஓட்டுவது, ரெண்டு கையையும் விட்டு ஓட்ட முயற்சிப்பது, வேகமா பெடல் பண்ணிட்டு அப்புறம், காலை பெடலில் இருந்து எடுத்து விடுவது, இப்படி ஒரு மணி நேரமும் ஒரே த்ரில்லிங்கா இருக்கும் ...

ஏழாவது படித்து கொண்டிருந்தேன். என் கசின் ஒருத்தி திடீர் என்று ஒரு நாள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஸ்கூல்க்கு வந்தாள்.அவளுடைய மாமா வாங்கி கொடுத்து இருந்தார். சிவப்பு கலர் கேப்டன் லேடீஸ் சைக்கிள். அன்றிலிருந்து எனக்கு சொந்தமாக சைக்கிள் வாங்கி அதில் பின்புறம் கேரியரில் புத்தகப்பையும், முன்னால் ஹேன்ட் பாரில் சாப்பாடு பையும் வாட்டர் பாட்டிலும் தொங்க விட்டுக்கொண்டு ஸ்கூல் போவதாக கனவு வர ஆரம்பித்தது. பாவம் எனக்கு மாமா வேற இல்ல. எங்க அம்மா கூட பொறந்ததெல்லாம் தங்கைகள். ஒரு வழியாக அரையாண்டு தேர்வு, இலக்கிய மன்ற போட்டி என்று நிறைய சாதனைகளுக்கு பிறகு, வீட்டில் எனக்கு சைக்கிள் sanction செய்யப்பட்டது.


BSA SLR . மெரூன் கலர். கேப்டன் சைக்கிள் சினேகா ரகம் என்றால் , BSA SLR ஐ கரீனா கபூர் ரகம் என்று சொல்லலாம். ஒரு டெம்ப்ளேட் சைக்கிளாக இல்லாமல் உயரமாக,ஸ்லீக்காக இருக்கும்.ப்ரேக் வயர் வெளியில் தெரிவதே ஒரு தனி ஸ்டைல். சைக்கிள் செயின்க்கு ஒரு பக்கம் மட்டும் தான் கவர் இருக்கும். செண்டர் ஸ்டாண்டு இருக்காது. சைடு ஸ்டாண்டு மட்டும் தான். நிறுத்தி வைத்து இருக்கும் போது ஒயிலாக சாய்ந்து நிற்கும்.இப்படி எல்லா விதத்திலும் (பின்?)நவீனத்துவம் வாய்ந்த மாடல். "பார்க்க அழகா தான் இருக்கு, ஆனா ஸ்ட்ராங்கா இருக்குமா(உன் வெயிட் தாங்குமா?)" என்ற கேள்விகளை எல்லாம் புறந்தள்ளி அது தான் வேண்டும் என்று அடம் பிடித்தேன்.

1991 பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வீட்டுக்கு சைக்கிள் வந்தது. நாலு நிமிடத்தில் குறுக்கு வழியில் போய் விட முடிந்த பள்ளிக்கு, சுற்றிக்கொண்டு சைக்கிளில் போக ஆரம்பித்தேன். நல்ல நிழலாக பார்த்து நிறுத்தி விடுவேன். இண்டர்வல்லில் வந்து சைக்கிள் மீது எதாவது காக்கா கக்கா போய் வெச்சு இருக்கா? பப்பி உச்சா போய் வெச்சுருக்கான்னு எல்லாம் பார்த்து பார்த்து கழுவி விட்டு போவேன்.சனிக்கிழமை தோறும் நான் தலைக்கு குளிக்கிறேனோ இல்லையோ சைக்கிள் கழுவுவது தவறாது. முதலில் ஒரு காய்ந்த துணி வைத்து தூசி எல்லாம் துடைத்து பிறகு ஒரு ஈர துணியில் துடைத்து, மறுபடி காய்ந்த துணி வைத்து துடைத்து,செயின்க்கு எண்ணெய் போட்டு,பளபளவென்று மணப்பெண் மாதிரி ஆக்கி விடுவேன்.

அந்த வருட சித்திரை திருவிழாவிற்கு எங்கள் ஊரில் சிறுமிகள் சைக்கிள் பந்தயத்தில்(கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓட்ட வேண்டும் ) எனக்கு இரண்டாம் பரிசு வாங்கி கொடுத்தது என் சைக்கிள். அப்போது கிராமங்களில் அறிவொளி இயக்கம் என்று ஒரு கல்வி விழிப்புணர்வு இயக்கம் இயங்கி வந்தது. அதில் "சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி" என்ற பாடலுடன் ஒரு கான்செப்ட் வரும். அதற்கு நானும் என் சைக்கிளும் தான் மாடல்(கள்).ஹிந்தி டியூஷன், பனிரெண்டாம் வகுப்பில் கணக்கு டியூஷன், கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வரும் போது நண்பர்கள் வீடுகள், இப்படி எங்கு செல்வதற்கும் எனக்கு ஒரு துணைக்கு ஆள் போல் ஆகி போனது என் சைக்கிள். ஆனால் ஒரே ஒரு சிரமம் தான்.சைக்கிள் வந்த பிறகு என் தம்பியையும் மிகவும் மதிக்க வேண்டியது கட்டாயமாகி போனது எனக்கு. அவனுக்கு என் மீது கோபம் வரும் போதெல்லாம், சைக்கிளில் ரெண்டு டயரும் காத்து இறங்கி போய் நிக்கும்.ஏதாவது ஒரு இடத்தில் பெயிண்ட் சுரண்ட பட்டு இருக்கும்.


2001 ஜூலை மாதத்தின் ஏதோ ஒரு நாள்.
அப்போது வரைக்கும் சைக்கிள் என்று நினைத்தாலே இதமாக மட்டுமே உணர்ந்து கொண்டு இருந்த என்னை, கலவரமாக்கும் அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது அன்று.டைடல் பார்க்கில் ஆபீஸ். வேளச்சேரியில் தங்கி இருந்தேன். ஒரு VIP வீட்டில் இருந்து மூன்றாம் வீடு எங்கள் ஹாஸ்டல்.அதனால் எப்போதும் வெளிச்சமாக செக்யூரிட்டியோடு இருக்கும் தெரு. பொதுவாக நான் நிமிர்ந்து நேராக பார்த்து கொண்டு தான் நடப்பேன். பாரதியார் சொன்னதற்காக இல்லை. ரீட்டா ராணி சிஸ்டரை பார்த்து கற்றுக்கொண்டது. ஒன்பதாம் வகுப்பு படித்த போது எங்கள் பள்ளியில் ஆங்கிலம் கற்றுத்தந்த ஒரு கன்னியாஸ்திரீ. இவர்கள் நடக்கும் போது நேர்கொண்ட பார்வையுடன், கால் மட்டும் தான் நகரும். மற்றபடி ஒரு விறைப்போடு ஏதோ சிலை ஒன்று நடந்து போவதை போல் இருக்கும். நடையில் ஒரு தன்னம்பிக்கையை பார்த்தது இவர்களிடம் தான். நீங்கள் ரீட்டா ராணி சிஸ்டரை பார்த்ததில்லை என்பதால், இன்னொரு உதாரணம் சொல்கிறேன். "வீர் ஜாரா" படத்தில் பாகிஸ்தானி வக்கீலாக வரும் ராணி முகர்ஜி நடப்பதை போல். சிஸ்டரை போல நடக்க வேண்டும் என்று முயற்சி செய்து வரவழைத்துக்கொண்டேன். நேரான பார்வையுடன் நிமிர்ந்த நடையை. ஆனால் அன்றைக்கு ஏதோ ஆபீசில் மூட் அவுட். ஏதோ யோசனையில் குனிந்து கொண்டே நடந்து போய் கொண்டு இருந்தேன். எதிரில் வந்த சைக்கிளை உணர்வதற்குள், சைக்கிளில் இருந்த ஆசாமி என் கழுத்தில் இருந்த சங்கிலியை இழுத்து விட்டான். அதிர்ச்சியில் கத்த கூட தோன்ற வில்லை எனக்கு. சரி அவன் என்ன ஆனான், செயின் என்ன ஆனது,இல்ல,என் கழுத்து தான் என்ன ஆனது என்பதெல்லாம் இப்போ தேவை இல்லாத விஷயம். ஆனால் அன்றிலிருந்து குழந்தைகள் ஓட்டும் மூன்று சக்கர சைக்கிளை பார்த்து கூட பயப்பட ஆரம்பித்தேன். ஒரு போபியா.அதிலும் ரோட்டில் நடந்து போகும் போது, பகலில் கூட எதிரில் யாராவது சைக்கிளில் வந்தால், Freeze -release விளையாடும் போது யாரோ என்னை freeze சொல்லிவிட்டதை போல், ஆடாமல் அசையாமல் நின்று விடுவேன். அந்த சைக்கிள் கடந்து போன பிறகு தான் எனக்கு உணர்வு திரும்பும்.

இது இப்படி இருக்க, போன வாரத்தின் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த போது, எதிரில் ஒரு சைக்கிள். அந்த சைக்கிள் என் பக்கத்தில் வந்த அந்த நொடியில், எனக்கு தூக்கி வாரிப்போட, "ஆஆஆ" என்று போட்டேனே ஒரு சத்தம். சைக்கிளில் வந்தவர் பெரியவர், பாவம், நிறுத்தி இறங்கிவிட்டார்.

"ஏனு ஆகித்தம்மா?" என்னை விட அதிக பதற்றம், அவருடைய முகத்தில்.
மண்டையில் அடி பட்டு பழச மறந்தவங்களுக்கு மறுபடி அடி பட்டால், தெளிஞ்சுடுமே, அதே மாதிரி அந்த "ஏனு ஆகித்தம்மா"வில் தெளிந்தது எனது போபியா.
"ஒன்றுமில்லை, சாரி". சங்கடமாக நகர்ந்து விட்டேன்.

ஒரு வேளை அந்த பெரியவரும் நேற்று பொட்டி முன்னால் உட்கார்ந்து "யாவ வயசல்லி சைக்கில் ஒடுஸ்தே அந்த கொத்தில்லா." என்ற கட்டுரை ஆரம்பித்து,"இப்போதெல்லாம் சைக்கிளில் போகும்போது எதிரில் யாராவது நடந்து வந்தாலே, freeze ஆகி விடுகிறேன்" என்று கன்னடத்தில் தட்டி இருப்பாராய் இருக்கும்.

16 comments:

blogpaandi said...

நல்ல பதிவு. இதை படிக்கும் அனைவருக்கும் அவர்களின் சிறு வயது சைக்கிள் சாகச ஞாபகங்கள் வந்து போகும்.
எனக்கு எங்கள் வீட்டில் சிவப்பு நிற ஹீரோ சைக்கிள் வாங்கி தந்தார்கள்.

Maddy said...

போருக்கு போய் ராஜராஜன் கூட இப்படி ஒரு வரலாறு படைக்கலை!! கினி கீனின்னு சைக்கிள் பெல் அடிச்சித்து பிரியா போனதை கற்பனை பண்ணி பார்க்ககரேன்!! வீர விளையாட்ல விழுப்புண் அடையாளம் இப்பொவும் இருக்கா?

1991 பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வீட்டுக்கு சைக்கிள் வந்தது. ..........ஓட்டு வயசயிடிச்சே!!!!!

சரி சரி அட்ரர்ஸ்க்கு ஒரு சைக்கிள் வாங்கி அனுப்பாரேன், ஒழுங்கா ஓட்டிடு "Green Revolution and me" கொஞ்ச நாள் கழிச்சு பதிவு போடுங்க!!

க‌ரிச‌ல்கார‌ன் said...

//1991 பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வீட்டுக்கு சைக்கிள் வந்தது//

தேதி எல்லாம் ஞாப‌க‌மிருக்கா?? காத்திருந்து கிடைத்த‌தால் இருக்க‌லாம்

//ஒரு வேளை அந்த பெரியவரும் நேற்று பொட்டி முன்னால் உட்கார்ந்து "யாவ வயசல்லி சைக்கில் ஒடுஸ்தே அந்த கொத்தில்லா." என்ற கட்டுரை ஆரம்பித்து,"இப்போதெல்லாம் சைக்கிளில் போகும்போது எதிரில் யாராவது நடந்து வந்தாலே, freeze ஆகி விடுகிறேன்" என்று கன்னடத்தில் தட்டி இருப்பாராய் இருக்கும்//

அவ‌ருக்கும் யார‌வது க‌ன்ன‌ட‌த்தில் பின்னூட்ட‌ம் இட்டிருக்கலாம்

swizram said...

//நல்ல நிழலாக பார்த்து நிறுத்தி விடுவேன். இண்டர்வல்லில் வந்து சைக்கிள் மீது எதாவது காக்கா கக்கா போய் வெச்சு இருக்கா? பப்பி உச்சா போய் வெச்சுருக்கான்னு எல்லாம் பார்த்து பார்த்து கழுவி விட்டு போவேன்//

எனக்கும் என்னோட சைக்கிள் நினைப்புக்கு வந்துருச்சு :)

Mugilan said...

"அந்த வருட சித்திரை திருவிழாவிற்கு எங்கள் ஊரில் சிறுமிகள் சைக்கிள் பந்தயத்தில்(கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓட்ட வேண்டும் ) எனக்கு இரண்டாம் பரிசு வாங்கி கொடுத்தது என் சைக்கிள்"

'நான் இரண்டாவது பரிசு வாங்கினேன்' என்றில்லாமல்
'எனக்கு என் சைக்கிள் பரிசு வாங்கி கொடுத்தது'
என்று சொன்னதில் உங்கள் சைக்கிளை ஒரு சக்சஸ்ஃபுல் கேரக்டர் ஆக்கிடீங்க!

நல்ல பதிவு!

Jeeva said...

Hi Sister,

Ungaloda intha pathivai vasikkum pothu, veru oruvari manaivi aakivida yennoda kadhalium avangalin RED cycle kilum, Avangala follow panna ooril ulla yella muttu santhukalilum cycle ootiyathu yennoda ninaivukku varalainnu sonna athu poi sollathennu computer monitor yennai sirikkuthu.Miga arumai.

butterfly Surya said...

ப்ரியா, வேலை பளுவால் இபோதெல்லாம் முன்பு போல ரெகுலராக படிக்க முடியவில்லை.

அருமை. கடந்து போன சிறு வயது வாழ்க்கையும் அதன் நினைவுகளும் என்றுமே அலாதிதான்.

என் சிகப்பு நிற ஹீரோ சைக்கிளும் நினைவுக்கு வந்து விட்டது.

கடைசி பன்ச் அசத்தல்.

மிகவும் ரசித்தேன்.

வாழ்த்துகள்.

இரவுப்பறவை said...

நல்லா இருக்குங்க...
நீங்க சைக்கிள் ஒட்டினது ..

Anonymous said...

வழக்கமா ஃப்ளாஷ்பேக்குக்கு கொசுவத்திச் சுருளைச் சுத்துவாங்க, நீங்க சைக்கிள் சக்கரத்தைச் சுத்திவிட்டிருக்கீங்க, சுவாரஸ்யமா இருந்தது - நன்றி :)

- என். சொக்கன்,
பெங்களூரு.

ப்ரியா கதிரவன் said...

Rajalakshmi Pakkirisamy,
எல்லா பதிவுக்கும் ஒரு :-)போடுகிறீர்கள். இது நக்கல் சிரிப்பா நல்ல சிரிப்பா ஏதும் புரியலை.

blogpaandi,
ரசிக்கும் சீமாட்டி,
Mugilan,க‌ரிச‌ல்கார‌ன்,இரவுப்பறவை,
நன்றி.

Maddy,
சைக்கிள் இன்னும் வந்து சேரலையே...

Jeeva,
விடுங்க விடுங்க.
'தாவணி போனா, சல்வார் உள்ளதடா' ன்னு கமலஹாசனே சொல்லிருக்கார்.

butterfly Surya,
நீங்க சேரன் கூட "சைக்கிள் நினைவுகள்(ஞாபகம் வருதே)" பேசுவதில் பிசி. அதனால பரவால்ல... முடிஞ்சப்போ வாங்க.

nchokkan,
நான் தான் நன்றி சொல்லணும்.நீங்க கமெண்ட் பண்ணாலும் பண்ணீங்க.
"பெரிய ஆளுங்க எல்லாம் உன் பதிவை படிக்குறாங்க" என்று சிலர் என்னை கும்முறாங்க.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

:)

Ungalranga said...

எனக்கு சைக்கிள் பற்றிய பழைய நினைவுகள் எல்லாம் இல்லை..

கொசுவத்தி சுத்தவே சுத்தாது..காரணம்..

தினமும் காலை மார்கெட்டுக்கு இன்னும் அந்த இனிய சைக்கிளில் தான் போய் வருகிறேன்..

நான்காம் ஆண்டை நோக்கி நடையோடுகிறது?!...

Jeeva Subramaniam said...

எங்கேயோ படிச்ச புலம்பல்:

மெதுவாக ஓட்டு சைக்கிளை
பின்னால் அமர்ந்திருக்கிறது
என் மனம்....!

நன்றிங்க...
நம்மளும் கமலஹாசன் விசிறி தாங்க...

Truth said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ரசிச்சு படிச்சேங்க.

Mercy said...

Pri,

Chennai la irukkum pothu ippadi oru incident nadanthatha? Sollave la! But I enjoyed reading this and remembered my childhood dee!

சிங்கை நாதன்/SingaiNathan said...

Nice

Anputan
Singai Nathan