உன்னை போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம் வரும். ஒரிஜினலில் இல்லாதது. கமல் காமன்மேனாக நடித்ததால் விளைந்தது.
மோஹன்லால் கமலிடம் சொல்வார்."நீ சொல்லலன்னா கூட உன்னை பற்றி நிறைய விஷயங்கள் எனக்கு தெரியும், .....உன் இடது கை பழக்கம் வரைக்கும்"
"oh எல்லாம் தெரியுமோ? உங்களுக்கு மகாத்மா காந்தி தெரியுமா?"
"அவர் பேரை சொல்ல கூட உனக்கு அருகதை இல்ல"
"ஏன் உங்களுக்கு இருக்கா? இல்ல எவனுக்கு இருக்கு? he was ambidextrous . unfortunately i am in that strand too.எனக்கு இடது வலது பேதம் கிடையாது. ஆனால் அது எழுதறப்போ மட்டும்”.
என்னவோ எனக்கு அந்த மொத்த வசனமும் மிகவும் பிடித்து போனது.
ambidextrous ன்னா என்ன? காந்தியையும் கமலையும் தவிர வேற யாரெல்லாம் ambidextrous?
ஏன் இடது? ஏன் வலது ? இப்படி எனக்குள் சில கேள்விகளை விதைத்த வசனம்.
ambidextrous என்பதற்கு "தன்னுடைய இரு கைகளையும் திறன்பட சம அளவில் உபயோகிக்கும்" என்று பொருள்.சமஸ்கிருதத்தில் 'சவ்யசச்சி' என்று சொல்லுகிறார்கள்.
புராண,இதிகாச காலங்களிலேயே இந்த ambidexterity புழக்கத்தில் இருந்து இருக்கிறது.
மன்மதன் ambidextrous தானாம். சிம்புவை சொல்லலை. என்ன தான் அவர் ரெண்டு கை விரல்களையும் சுற்றி சுற்றி பஞ்ச் டயலாக் பேசினாலும்....நான் சொல்வது காதல் கடவுள் மன்மதன். ரதியுடைய husband.
வால்மீகி ராமாயணத்தில் பாலகாண்டத்தில் விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மனர்களுக்கு குமாரசம்பவம் சொல்லுவதாக இருக்கிறது.
தேவர்கள் தங்களுக்கு 'சூரனின் அட்டகாசத்தை ஒடுக்க தேவசேனாதிபதி வேண்டும்' என்று சிவனை வேண்டியதாகவும், அதன் பொருட்டு முருகன் அவதரித்ததாகவும் புராணம் கற்பிக்கும் போது முருகன் ambidextrous என்று சொல்கிறார். அழகில் மாரனையே(மன்மதன் தான் மாரன், 'நின்னையே ரதி என்று...' பாடலில் கூட, பாரதி சொல்வாரே, 'மாரன் அம்புகள் என்மீது மாறி மாறி....') மிஞ்சியதால் முருகனுக்கு 'கு'மாரன் என்ற பெயராம்.பின்னாளில் காளிதாசர் குமாரசம்பவம் எழுதிய போது, தலைப்பை ராமாயணத்தில் இருந்தே தேர்ந்து எடுத்ததாகவும் சொல்கிறார்கள்.
"ska.nda iti abruvan devaaH skannam garbha parisravaat |
kaartikeyam mahaabaahum kaakutstha jvalana upamam ||"
- சர்கம்-37,பாலகாண்டம்.வால்மீகி ராமாயணம்
"And gods called that boy, oh, Rama of Kakutstha, whose glow is like that of flaring fire and who is ambidextrous as 'Skanda' for he slid down from the secretions of a womb.
கம்ப ராமாயணத்தின் பால காண்டத்தில் குமாரசம்பவம் பற்றி இருக்கிறதா என்று தெரிய வில்லை. எனக்கு தெரிந்த வரையில் இல்லை. கேட்டால் சிலர் கம்பர் செய்தது ரீமேக்.மொழி பெயர்ப்பு அல்ல என்று சப்பை கட்டுகிறார்கள்.
Ambidexterity ஆரண்யகாண்டத்தையும் விடவில்லை. ஆரண்ய காண்டத்தில் அகஸ்திய முனிவரை சந்திக்கும் ராமனுக்கு, அகஸ்தியர் எடுக்க எடுக்க குறையாத இரு அம்புக்கூடைகளையும்(Quiver), ஒரு வில்லையும், ஒரு வாளையும் தருகிறார். "அந்த வில் விஸ்வகர்மாவால் டிசைன் செய்யப்பட்டது. 'Quivers full of arrows' பிரம்மனால மகாவிஷ்ணுவுக்கு பரிசாக அளிக்கப்பட்டவை. அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் நடந்த கடுமையானபோரில், இந்த அம்பின் மூலமே மகாவிஷ்ணு அசுரர்களை அழித்து தேவர்களை காத்தார். 'அந்த வாள் இந்திரன் மூலம் என்னிடம் சேர்க்க பட்டது,இவற்றை எல்லாம் ராமனிடம் சேர்க்கவே காத்திருப்பதாக" சொல்கிறார் அகத்தியர். இந்த தெய்வாம்சம் பொருந்திய ஆயுதங்களை உபயோக்கிப்பவன், சவ்யசச்சியாக இருக்க வேண்டுமாம்.கிரேதா யுகத்தில் ராமன் சவ்யசச்சியாக இருந்து இருக்கிறான்.
இந்த ஆயுதங்கள் பற்றிய குறிப்பு கம்பராமாயணத்தில் இருந்து.
இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்,
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா.
- அகத்திய படலம், ஆரண்ய காண்டம், கம்ப ராமாயணம்.
இந்த சவ்யசச்சி அந்தஸ்து பின் துவாரபா யுகத்தில் அர்ஜுனனுக்கு கிடைத்து இருக்கிறது. தன்னுடைய இரு கைகளாலுமே அம்பெய்துவதில் தேர்ந்தவனாக இருந்து இருக்கிறான் அர்ஜுனன்.
புராணத்தில் வில்வித்தை காட்டின அர்ஜுனன் மாத்திரம் ambidextrous இல்லை. கிரிக்கெட் பேட்டை வைத்து வித்தை காட்டுகிறாரே சச்சின்,அவரும் ambidextrous தான். கிரிக்கெட் பேட்டை வலது கையால் பிடித்து விளாசும் இவர், ஆட்டோகிராப் போடுவது இடக்கையாலாம்.'கலியுக அர்ஜுனன்' ?
ambidextrous பற்றி சற்று தெளிந்தது, அதென்ன இடது வலது?
இடது வலது என்ற வார்த்தைகளை நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி உபயோக்கிறோம்.
Football முதலான விளையாட்டுகளில் left wing என்று இருக்கிறது. ஆரம்ப காலத்தில், வலது காலால் பந்தை விளையாடுபவர்கள் வலது விங்கிலும், இடது காலால் பந்தை உதைப்பவர்கள் இடது விங்கிலுமாக position செய்ய படுவார்களாம்.
அட மனிதர்களை விடுவோம், மரத்திலும் கூட இடது சார்ந்த மரங்கள் இருக்கிறது தெரியுமா? binary மரத்தில்.
Leftist tree என்கிறார்கள். பைனரி ட்ரீயில் s - வேல்யு என்று ஒரு விஷயம் உண்டு. எந்த ஒரு node க்கும் s - வேல்யு உண்டு. அந்த node இலிருந்து, leaf வரைக்குமான தூரம்.அதில் ஒரு கண்டிஷன் கூட உண்டு. வலது node களின், S வேல்யு இடதை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த tree, leftist tree என்று சொல்ல படுகிறது. குழப்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-)
ஈசியா புரியணும்னா இப்படி அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம், binary tree யின், வலது subtree, இடத்தை விட குள்ளமாக இருப்பின், அது leftist tree .As simple as that .
அரசியலில் இடது சார்ந்த கட்சிகள் யார் (எல்லாம்), என்று நமக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு ஏன் இடது என்று பெயர் வந்தது என்று தெரியுமா? பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு, பாராளுமன்றத்தில், "எல்லாருக்கும் எல்லாமும்" என்ற 'equal rights'
கொள்கை உடையவர்கள் பாராளுமன்றத்தின் இடது புறமாக அமர்ந்ததில் இந்த பெயர் ஏற்பட்டது என்று வரலாறு இருந்தாலும் ஒரு வேடிக்கை கதை கூட சொல்கிறார்கள்.
இங்கிலாந்து நாட்டில் ஒரு ராஜா ஆட்சி செய்து வந்தாராம் அரசருக்கு இரண்டு கைப்பக்கமும் சேனாதிபதி, மந்திரிகள், பிரபுக்கள், ரிஷிகள் முதலாளிமார்கள் எல்லாம் உட்கார்ந்திருப்பார்கள். இந்த சபையில் உழைப்பாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு இடமில்லை. இந்த நிலையில் அரசியல் உரிமை, நல்ல வாழ்வு வேண்டுமென பெரிய கலகம் வெடித்து ராஜா அரண்மனையை விட்டு வெளியே வரவே வழியில்லை. சரி தொழிலாளிகளும் அரசவையில் பங்கேற்கலாம் என்று உத்தரவிட்டார். உடனே பிரபுக்கள் "ராஜா ராஜா ஒரு சின்ன விண்ணப்பம் நாங்களெல்லாம் சேற்றிலே உழன்று வீச்சமெடுத்த பஞ்ச பராரிகளுடன் எப்படி உட்காரமுடியும்? என்றார்கள் உடனே ராஜா நீங்களெல்லாம் எனக்கு வலதுகைப்பக்கம் அமருங்கள், தொழிலாளிகள் அப்படியே எனது பீச்சாங்கை பக்கமாக இருந்துவிட்டுப்போகட்டும் என்று உத்தரவிட்டாராம்.
இந்த கதை உண்மையிலேயே நடந்ததா என்று தெரியவில்லை.
அது கிடக்கட்டும். பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நீங்கள் இடதா? வலதா?
அட, நான் கூட காமன் (வு)மென் தான். எழுதுறத பத்தி மட்டும் தான் கேட்கிறேன்.