Thursday 16 October 2014

தமிழ் இனி மெல்ல??

என்னைப் பொறுத்த வரையில் இந்த நிகழ்வை மிகுந்த பதட்டத்துடனும், வேதனையுடனும் உணர்கிறேன்.
இன்று மகனுக்குப் பள்ளியில் ஒரு செயல்முறைக்காக சில பொருட்கள் எடுத்துச்செல்ல வேண்டி இருந்தது.
பள்ளிப்பையுடன் சேர்த்து இன்னொரு உபரிப்பை கொடுக்க வேண்டியதானது. வீட்டில் ஒரு பை நன்றாக ஜிப் போட்டு மூடுகிற வசதி உடையது. அதைக்கொடுத்தேன். என் பையன் அது வேண்டாம் என்று மறுத்து ஒரு பாடாவதி பிளாஸ்டிக் பையில் பொருட்களை அடைத்துக் கொண்டு இருந்தான். எனக்கு என்ன ஏதென்று புரியாமல் "ஏன் இந்தப் பைக்கு என்ன?" என்று கேட்டேன். அப்போது தான் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தப் பதிலைச் சொன்னான்.
"அந்தப்பையில் தமிழில் எழுதி இருக்கிறது; வகுப்பில் கிண்டல் செய்வார்கள்"
எனக்குச் சற்று நேரம் பேச்சே வரவில்லை. அப்போது தான் கவனித்தேன்; அந்தப்பையில் சரவணா ஸ்டோர்ஸ் என்று எழுதி இருந்தது. ஏதோ துணி வாங்கிய போது கிடைத்தது போலும்.
சற்று துருவி விசாரித்ததில், வகுப்பில் இருக்கும் சொற்ப தமிழ் மாணவர்களை சக மாணவர்கள் கிண்டல் செய்வதாகப் புரிந்தது.(உண்மை நிலைமை தெரியவில்லை; அவன் சொன்னதில் எனக்குப் புரிந்ததை அப்படியே எழுதி இருக்கிறேன்.) அதனால் தமிழில் எழுத்த்துகள் இருக்கும் ஒரு பையை கையில் எடுத்துப் போக வெட்கப்படுகிறான் பையன் (இந்த வரியை எழுதும் போது கை கூசிப்போகிறேன்)
நாங்கள் பிழைக்க வெளிமாநிலம் (அதுவும் கர்நாடகா :> ) வந்தவர்கள். அடுத்த சில வரிகளை எனது வாக்குமூலமாகப் படித்துகொள்ளுங்கள். 
எங்கள் வீட்டில் தமிழில் தான் பேசிக்கொள்கிறோம். தமிழ் நிகழ்ச்சிகள் தான் பார்க்கிறோம். தமிழ்ப் பத்திரிகைகள் வாங்கி வாசிக்கிறோம்.பிள்ளைகளுடன் தமிழில் தான் உரையாடுகிறோம். பிள்ளைகள் எங்களை அம்மா/அப்பா என்று தான் அழைக்கிறார்கள். மம்மி டாடி என்று எல்லாம் பழக்கவில்லை. அவர்களாகவே மம்மி டாடி என்று ஆரம்பித்தால் கூட அதை ஆதரிப்பதில்லை. என் இரண்டு வயது பெண் பேச ஆரம்பித்த நாளாக அவளுக்கு அம்மா இங்கே வா வா, நிலா நிலா ஓடி வா, அணிலே அணிலே, ஆனை ஆனை என்று தமிழ்ப்பாடல்கள் தான் கற்றுக்கொடுத்து வருகிறோம். பாப்பா பிறந்த பிரசவ விடுப்பில், எனக்கு ஒரு "ப்ராஜக்ட்" ஆகக் கருதி என் பையனுக்கு (அப்போது அவனுக்கு ஐந்தரை வயது), தமிழ் எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்து இருக்கிறேன். இப்போதும் ஏதாவது தமிழ் வார்த்தைகளைக் காட்டி வாசிக்க வைத்து, அவனுக்கு மறந்து விடாமல் இருக்க முயல்கிறேன்.என் மாமனார் மிகுந்த தமிழார்வம், தமிழ் நூல்கள் வாசிப்புப் பழக்கம்/ வாசிப்பு அனுபவம் உள்ளவர். மேடைப்பேச்சாளர்களுக்கு எழுதிக் கொடுக்கும் திறன் உள்ளவர். என் பையனின் விடுமுறையில் விளையாட்டாக அவனுக்கு திருக்குறள் மனனம் செய்ய பயிற்சி அளிப்பார்., அவனுக்கு முதல் நான்கு அதிகாரங்கள் மனப்பாடமாகச் சொல்ல முடியும். என் மகளே நான்கு குறட்கள் சொல்கிறாள்.
இதை எல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டைத் தாண்டித் தமிழில்லா சூழலில் வாழ நேரும் போது குழந்தைகளுக்கு ஓரளவுக்குத் தமிழறிமுகம் செய்ய முயலும் எங்களுக்கு மேலே சொன்ன அனுபவம் நிகழும் போது மற்றவர்களின் நிலையை நினைக்கவே முடியலை. சகமாணவர்களின் கிண்டல் என்பதே முதல் அதிர்ச்சி. அந்தக் கிண்டலைச் சமாளிக்கவோ, அலட்சியம் செய்யவோ, பதிலடி கொடுக்கவோ தேவையான "என் மொழி சிறந்தது" என்ற அந்த நம்பிக்கை என் பையனுக்கு ஏன் இல்லை? அதை விடுத்து தமிழ் எழுத்துப் பையை மறைக்க முயல்கிறானே! என்பதே என் பதட்டத்துக்குக் காரணம். இந்த விஷயத்தில் நான் எதைச் சரியாகச் செய்யாமல் விட்டேன்? என்று குழம்பி இருக்கிறேன்.
பதட்டத்தில் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் "ஒரு வேளை உங்கம்மாவை(அதாவது என்னை) யாரேனும் அசிங்கமாக இருக்கிறார்கள்" என்று கிண்டல் செய்தால் என்னை மறைக்கவா செய்வாய்? எங்கம்மா தான் எனக்கு அழகு என்று சொல்ல மாட்டியா? அதே மாதிரி தான் தாய்மொழியும்" என்று அவனைக் கத்தி விட்டேன். நான் சொன்னது என் பையனுக்குப் புரிந்து இருக்ககூட வாய்ப்பில்லை. அம்மா ஏதோ திட்டுகிறார்கள் என்று தான் நினைத்திருப்பான்.
இந்தப் பிரச்சனைக்காக மூட்டையைக் கட்டிக் கொண்டு தமிழ்நாட்டுக்குத் திரும்புவதென்பது நடைமுறையில் சாத்தியமில்லை. 
ஏற்கனவே "டீனேஜ்" வயது வரம்பின் ஆரம்ப வயதை ஏழு ஆக்கி விட்டார்களோ என்று நான் ஐயப்படும் அளவிற்கு பெரும்பாலான விஷயங்களில் நானும் என் பையனும் ஏற்கனவே கருத்து வேறுபடுகிறோம். சண்டை போடுகிறோம். 
இதில் நான் "தமிழ் சிறந்த மொழி", "முன் தோன்றிய மூத்த குடி" "சுந்தரத்தமிழ்" "அணுவைத் துளைத்து...." என்றெல்லாம் விளக்கினால் அவன் நம்பக்கூட மாட்டான். பள்ளிக் கல்வியின் அழுத்தம், தேர்வு நெருக்கடிகளிக்கிடையில் "அவனாகவே தமிழ்ச் சுவை அறிந்து கொள்ளும் அவகாசம்" அவனுக்குக் கிடைக்கப் போவதுமில்லை.
இதன் விளைவு எனக்கு பூதாகரமாகத் தோன்றுகிறது. நமக்குப் பிறகு நமது சந்த்ததியில் தமிழ் இருக்காதோ என்று யோசிக்கக் கூட முடிய வில்லை. இதே போன்ற சவால்களை சமாளித்த/சமாளிக்கும் சக பெற்றோர் அறிவுரை இருந்தால் கூறுங்கள். இல்லையேல் ஆறுதலாவது சொல்லுங்கள்.

3 comments:

Sankar said...

"பெங்களூரில் இருக்கலாமா, இல்லை சென்னைக்குப் போகலாமா" என்று குழம்பியபோது, நான் யோசித்த அதே சேதிதான்.

முதலில் கவலைக்குரியதாகத் தோன்றினாலும், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தபோது தமிழ் வாழும் என்றே தோன்றியது.

தமிழுக்கென்று தனி நாடோ, மாநிலமோ இருந்து அதில் தமிழ் புழக்கத்தில் இருக்கும் வரையில் அதன் அழிவு பற்றி பெரிய அளவில் கவலை கொள்ள வேண்டாம். நம்மைப் போல ஒரு சிலர் நீங்கிப் போவதால் மொழி மொத்தமாக அழிந்து போய் விடாது.

நாம் கவலைப்பட வேண்டியது, தமிழ்நாட்டிலேயே யாரும் தமிழ் படிப்பதில்லையே என்பதுதான். ஈழத்தையும் உருவாக விடாமல் செய்து விட்டோம். இல்லையென்றால் ஏதோ அவர்களாவது காப்பற்றி இருப்பார்கள் என்று நம்பிக் கொள்ளலாம்.

என்னதான் திராவிட அரசியல்வாதிகள் பார்ப்பான் என்று திட்டினாலும், இன்றளவும் அச்சமூகத்தினர் என்ன செய்கின்றார்களோ அதைத்தான் குருட்டுத்தனமாக எல்லாத் தமிழரும் சாதி வேறுபாடின்றி பின்பற்றி வந்திருக்கின்றனர். குழந்தைகளுக்கு வடமொழியில் பெயர் வைப்பது (உங்கள் கிராமத்தில் யாருக்கோ ரித்திக் என்று பெயர் என்று நீங்கள் கூட ஒரு முறை டுவிட்டரில் சொன்னீர்களே (எவ்ளோ நினைவுத்திறன் எனக்கு !? பலே :) )), தாலி கட்டி திருமணம் செய்வது, கணபதி ஓமம், சத்தியனாராயணர் பூசை, அறுபதாம் கல்யாணம், இப்படிப் பலப்பலவற்றுள், இரண்டாம் மொழியாக இந்தி படித்து (தமிழை விடுப்பதும்) ஆகி விட்டது. இதனை சரி செய்து, தமிழைப் பள்ளியில் நிலை நாட்டி விட்டாலே போதும், தமிழ் பிழைத்துக் கொள்ளும். வேறு ஏதும் செய்ய வேண்டாம். தமிழ் இரண்டாம் மொழியாக எடுத்தவர்களுக்கு, இலவசமாக இரண்டு மதிப்பெண் அதிகமாக பொறியியல் தேர்வு மதிப்பீட்டில் (Engineering councelling) வழங்கினாலே போதும். எல்லாரும் விழுந்தடித்துக் கொண்டு தமிழ் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். "கலை உரிமை", அது இது என்று கொடிபிடித்த கோடம்பாக்கம், "தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு" என்று அறிவித்தவுடன் விழுந்தடித்துக் கொண்டு பெயர்களை மாற்றினார்களே, அதே போல எல்லாரும் ஒழுங்காக தமிழ் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். பிராமணர்களை தமிழ் படிக்க வைத்தால் போதும், எல்லா சாதிக்காரனும், தன்னையும் உயர் சாதிக்காரனாகக் காட்டிக் கொள்ள தமிழ் படிக்க வைத்து விடுவான். நம்பிக்கை இல்லை என்றால், இப்போது எத்துணை பேர் தங்கள் பிள்ளைகளை பரதநாட்டியம், கருநாடக சங்கீதம் பயிலச் செய்கிறார்கள் என்று பாருங்கள். சில நூற்றாண்டு வரையிலும் அவை தேவரடியார் மட்டுமே செய்வதாகத்தானே இருந்தது.

Sankar said...

ஆனால் தமிழருக்கென்று ஒரு நாடோ, மாநிலமோ, இடமோ இல்லை என்றால், மெல்லச் சாகத்தான் செய்யும். அதனால் மெத்தப் படித்தவர்கள் ஊரை விட்டு ஓடும்படி இல்லாமல், தமிழ்நாட்டைப் பார்த்துக் கொள்வதும் அவசியம். ஆனால் இப்போதைய அரசியல்வாதிகளுக்கோ, அரசு ஊழியர்களுக்கோ அவ்வளவு பொது நலம் இல்லை. மக்களை அதிகம் குடிக்க வைத்து, அதன் மூலம் பொருள் ஈட்டி, இலவசப் பொருட்களை வழங்கத்தான் நம் அரசும் விரும்புகிறது. கல்லூரியில் எங்கள் வகுப்பில் கிட்டத்தட்ட 10 சதவீத ஆண்கள் குடிக்காமல், புகைக்காமல் இருந்தோம். இன்று பள்ளிகளில் கூட அத்தனை சதம் இருக்குமா என்று சந்தேகம்தான்.

நிறைய எழுதி விட்டேன். இன்னும் கொஞ்சமும் எழுதி விடுகிறேன்.

உங்கள் மகனுக்கோ மகளுக்கோ வலிந்து தமிழைத் திணிக்காதீர்கள். வலிந்து செய்யும் எதுவும் துவர்க்கவே செய்யும். அவர்கள், அவர்கள் ஊரோடு ஒத்து வாழட்டும். "தமிழ் இழிவு" அல்லது "இந்தி/சமசுகிருதம் உசத்தி" என்று மடத்தனமாக எவனாவது பேசினால், அவனிடம் சண்டை போடவில்லை என்றாலும், அதனை நம்பி கூனிக் குறுகாமல் இருக்கும்படி வளர்த்தால் போதும். தமிழைக் காக்க வேண்டிய பொறுப்பு நம்மை விட தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கே அதிகம். நாம் அந்த உரிமையை, என்று நாட்டை விட்டு வந்தோமோ அன்றே (கொஞ்சம்) இழந்து விட்டோம். எனக்குத் தெரிந்த சில இந்திய பெற்றோர் இந்துவாக தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் வளர்க்க ஆசைப்பட்டு (No dating, no-alcohol etc.) அவர்களை இரண்டுங்கெட்டான்களாக ஆக்குவதையும் கேள்வியுற்றிருக்கிறேன். அந்த நிலை உங்கள் குழந்தைகளுக்கும், பெங்களூரிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் நம் குழந்தைகளுக்கும் வேண்டாம் :)

தொடர்பான காணொளி: https://www.youtube.com/watch?v=GiyJ9-Tvi5c

என்னதான் இருளாக எதிர்காலம் தோற்ற மயக்கம் கொடுத்தாலும், சில நம்பிக்கை விண்மீன்கள் ஒளி விடுகின்றன. காண்க: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:L.Shriheeran

அப்படி என்றால் நாடு / மாநிலம் விட்டு வந்த நாம் என்னதான் செய்ய முடியும்.
1) தமிழ் நூல்களைக் காசு கொடுத்து வாங்கலாம். நிறைய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்.
2) தமிழில் பெயர் சூட்டலாம். என் மகளுக்கு இதற்காகவே "வானதி" என்று பெயரிட்டேன்.
3) தமிழில் நிறைய எழுதலாம் (உங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ முடிந்ததைச் செய்யலாம்)
4) தமிழ் விக்கிபீடியாவுக்கு கட்டுரைகள் கொடுத்து உதவலாம்
5) உங்கள் தொழில் தொடர்பான கட்டுரைகளைத் தமிழில் எழுதலாம். என் முயற்சி: https://github.com/psankar/ithavi

நிறைய எழுதி விட்டேன். இப்போதைக்கு இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். பின்னூட்டத்தில் ஏதாவது வரிகள், இடைஞ்சலாக இருக்கும் என்று தோன்றினால், தாராளமாக நீக்கிக் கொள்ளவும்; கோபித்துக் கொள்ள மாட்டேன் ;)

Sankar said...

http://www.newrepublic.com/article/117469/why-i-stopped-speaking-my-daughter-hebrew

படித்துப் பாருங்கள் :(