Wednesday 17 February 2010

ரோஸ்மில்க் ஐஸ்க்ரீம்

"நிழல் விழாத கோபுரம், வளரும் நந்தி, பிரம்மாண்டமான கோவிலுக்கு அஸ்திவாரம் வெறும் ஐந்தே அடிகள் தான், காண தவறாதீர்கள் இன்று
இரவு பத்து முப்பது மணிக்கு உங்கள் சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் தஞ்சை பெரிய கோவில் அதிசயங்கள்"

நேற்று மாலை காதில் விழுந்த வரிகளில் என்னுள் விஸ்வரூபம் எடுத்த என் தஞ்சாவூர் நினைவுகள்...


"Change never Changes"என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு விவரம் தெரிந்து கல்லூரி இறுதியாண்டு வரை கிட்ட தட்ட பதினெட்டு வருடங்கள், மாறவே மாறாத ஒரு விஷயம் லீவுக்கு அம்மாச்சி தாத்தா வீட்டுக்கு தஞ்சாவூர் போவது.ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாம். என் தாத்தாவிற்கு என் அம்மாவோடு சேர்த்து ஏழு பெண்கள். Bank of Thanjavur இல் General manager ஆக இருந்தார்.மிகுந்த கடவுள் பக்தி உடையவர். திருநீறு பட்டை இல்லாமல் என் தாத்தாவின் முகம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. சாமியறைக்குள் நுழைந்து விட்டால் கம்பீரமான குரலில் பாடுவார். வெளியில் வரும் போது கண்கள் கலங்கி இருக்கும். காலையில் முழு மீல்சும், இரவு டிபனுமாக இரண்டு வேளை தான் சாப்பிடுவார்.

அப்போது ஏழு கசின்கள் இருந்தோம். நான் தான் முதல். (இப்போ பன்னிரண்டு).காலாண்டு/அரையாண்டு/முழு ஆண்டு விடுமுறை என்று வருடத்திற்கு மூன்று முறை அனைவருமே அம்மாச்சி வீட்டில் கூடி விடுவோம். அத்தனை பேரும் சேர்ந்து இருக்கும் வீடு ஏதோ திருவிழா மாதிரி இருக்கும்.தாத்தா ரொம்ப கண்டிப்பானவர். காலை நாலரை மணிக்கு எழுந்து மங்கள இசை, கந்த சஷ்டி கவசம்,சுப்ரபாதம் என்று வரிசையாக போட்டு விடுவார். அதும் fullசவுண்டில். ஆறு மணிக்கு மேல தூங்க கூடாது. பெண்கள் தலை விரித்து போட கூடாது.பொட்டு வைக்காம, வளையல் போடாம இருக்க கூடாது, ஐயோ ன்னு சொல்ல கூடாது, நைட் முழிச்சு டிவி பாக்க கூடாது, ஒன்பது மணிக்கு படுத்துடனும்.இப்படி நெறைய கண்டிசன் எங்களுக்கு.

தாத்தா என்றாலே எங்கள் அனைவருக்கும் ஒரு மரியாதை கலந்த பயம் தான். அவர் அலுவலகம் கிளம்பும் வரை அமைதியாக கழியும் எங்கள் காலை.அவருடைய கார் சவுண்டு அடங்கியதும் ஆரம்பிக்கும் ரகளையை திரும்ப சாயங்காலம் கார் சவுண்டு கேட்கும் போது தான் நிறுத்துவோம்.

இப்போதெல்லாம் எனக்கு வீட்டில் நான்கு விருந்தாளிகள் வந்துவிட்டாலே சமையல் வேலையை நினைத்து மலைப்பாக இருக்கும். ஆனால் நாங்கள்
அத்தனை பேரும் கூடி இருக்கும் நாட்களில் என் அம்மாச்சி எப்போவும் சமைத்து கொண்டே தான் இருப்பார். வீட்டில் குக்கர் விசில் சத்தம் எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும். ஒரு பெரிய பாயிலரில் வெந்நீர் கொதித்துக்கொண்டே இருக்கும்.காலையில் எட்டரை மணிக்கெல்லாம் முழு சாப்பாடும் தயார் ஆகிவிடும். தாத்தா சாப்பிடும் போதே எங்களையும் கூட அமர்ந்து சாப்பிட சொல்வார்.அப்போ மீல்ஸ் கட்டு கட்ட ஆரம்பித்த பழக்கம் தான் இப்போ நான் ஆந்திரா மீல்ஸ் சாப்பிடுவதை பார்த்து என் கணவர் பயப்படும் நிலைமையில் கொண்டு விட்டு இருக்கிறது.

அப்போதைக்கு மூன்று சித்திகள் கல்யாணம் ஆகாமல் இருந்தார்கள். அவர்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ள நாள் முழுக்க விளையாடிக்கொண்டே இருப்போம். காரம் போர்டு, பரமபதம், தாயம், சீட்டுக்கட்டு என்று களைகட்டும். அதிலும் சீட்டு கட்டில் நாங்கள் விளையாடாத விளையாட்டே இல்லை. இப்போதும் கூட ஆஸ், bluff இதில் இருக்கும் அத்தனை மொள்ளமாரிதனங்களும் அத்துப்படியா இருக்க காரணம் எனக்கு மே மாத பயிற்சிகள் தான்.லதா சித்தி நன்றாக பாடுவார்கள். பாட்டு கிளாஸ் எல்லாம் போவாங்க. சினிமா பாட்டு பாட சொல்லி தருவாங்க எங்க எல்லாருக்கும். நேற்று இல்லாத மாற்றம், கண்ணுக்கு மை அழகு பாட்டெல்லாம் அவங்க கிட்ட தான் கத்துகிட்டேன். சாந்தி சித்தி தான் பாலச்சந்தர் படங்கள் மீது பைத்தியம் ஆக்கினார்கள்.வேணி சித்தி பரத நாட்டியம் கத்துகிட்டாங்க. அவங்க அப்போப்போ எங்க எல்லாரையும் வரிசையில் நிற்க வைத்து தா தை ன்னு ஸ்டெப்ஸ் சொல்லி தருவாங்க.மொட்டை மாடியில் கிராக் விழ ஆரம்பித்ததால், எங்கள் நடன பயிற்சி நிறுத்த பட்டது.

செல்லம் சித்தியை பாப்பா என்று தான் அழைப்பார்கள். அதனால நாங்க எல்லாம் அவங்களை பாப்பா சித்தி ஆக்கிட்டோம். அவங்க வீட்டுக்கு பையன் மாதிரி.கார்லாம் ஓட்டுவாங்க.நாங்கள் ஊரில் இருந்து வந்து ராணி பாரடைஸ் ஸ்டாப்பிங்கில் இறங்கும் போது கார் கொண்டு வந்து பிக்கப் பண்ண ரெடி ஆக நிற்பார்கள். பின்னாளில் ஒரு friend சொன்னா, "அட எங்க வீட்டுலயும் ஒரு பாப்பா சித்தி இருக்காங்க"ன்னு. ராஜி என்ற நாய்குட்டி
இருந்தது எங்கள் வீட்டில். பாப்பா சித்தி "ஒன், டூ, த்ரீ" சொன்னால் எங்கிருந்தாலும் ஓடி வந்து மடியில் ஏறிக்கொள்ளுமாறு அதை பழக்கி
இருந்தார்கள்.அதை பார்த்து வியந்து போய் நாங்கள் அனைவரும் ஆளாளுக்கு "ஒன், டூ, த்ரீ" சொல்லவும் அது பயந்து போய் பாத்ரூமில் ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.

அம்மாச்சி வீட்டில் VCR இருந்தது. அதில் படம் போட்டு பார்ப்பது எங்களுக்கு மிகவும் பிடித்தது. வீட்டுக்கு பக்கத்திலேயே mohan videos
என்று ஒரு கடை இருந்தது. அவர்கள் வீட்டுக்கே வந்து கேசட் தருவார்கள். நாள் வாடகை பத்து ரூபாய். இது இல்லாமல் வீட்டில் சொந்தமாக சில
கேசட்கள் இருந்தது. சிம்லா ஸ்பெஷல், சகாதேவன் மகாதேவன் போன்ற படங்களை நாங்கள் எல்லாம் நூறு முறை பார்த்து இருப்போம். போர்
அடிக்கும் போதெல்லாம் , 'போடு சிம்லா ஸ்பெஷல்' என்று இந்த படங்களின் டயலாக்குகள் அவ்வளவும் மனப்பாடம். வாடகை கேசட் வாங்கும் போது சில நேரங்களில் ரஜினி படமா, கமல் படமா என்று போட்டி வந்து விடும். மொத்த குடும்பமும் உலக நாயகன் (அப்போ காதல்
மன்னன்)பக்கம்.என்னையும் சித்தி பெண் சூர்யாவையும் தவிர. நாங்கள் மெஜாரிட்டிக்காக, பக்கத்து வீட்டு பாலாஜி(இரண்டு வயசு அவனுக்கு),
எங்கள் வீட்டு ஜூலி,ஜானி எல்லாத்தையும் votingல சேர்த்து, இரண்டு கமல் படத்திற்கு ஒரு ரஜினி படம் என்ற அளவில் தேத்தி விடுவோம்.
இப்போ சூர்யா ஒரு மருத்துவ கல்லூரியில் இருந்து, "Akka, how about Endhiran on release day" என்று sms பண்ணுகிறாள்.

அம்மாச்சி வீட்டில் மரசம்பங்கி, நந்தியா வட்டை மரங்கள் இருக்கும்.செவ்வாய் வெள்ளி கிழமைகளில் காலை காபி முடித்து எல்லாரும் சேர்ந்து அதில் பூ பறிப்போம். சங்கு பூவும், செம்பருத்தியும் கூட இருக்கும். பிறகு அவற்றை எல்லாம் மாலையாக கட்டி வைப்போம். சாயங்காலம் தாத்தா வந்து குளித்து ஈர உடையுடன் வீட்டில் பூஜை செய்வார். பிறகு நாங்கள் அந்த மாலைகளை எல்லாம் எடுத்து கொண்டு பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு செல்வோம். செவ்வாய்கிழமைகளில் பிரச்சனை இல்லை. வெள்ளிக்கிழமைகளில் ஒளியும் ஒலியும் ஆரம்பித்து விடுமே என்று ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு திரும்புவோம். இவளா என் மனைவி, சக்தி-90 , ரயில் சிநேகம், குறிஞ்சி மலர் என்று அப்போதைய
சீரியல்களை பயங்கரமாக விவாதிப்போம்.

எங்கள் ரகளையை அடக்க ஒரே வழி. எங்க எல்லாருக்கும் பகல் நேரத்தில் மருதாணி இட்டு விடுவார்கள். கை கால் என்று முழுக்க மருதாணி
போட்டு, மூன்று மணி நேரம் அமைதியா ஒரே இடத்தில் இருப்போம். ராஜிக்கும் நெற்றியில் மருதாணியில் பொட்டு. அது வெள்ளை கலர் நாய்.
ஆனால் blacky க்கு மருதாணி வைக்க முடியாததால நக பாலிஷ். மருதாணி போட்ட மதியங்களில் யாராவது ஒரு சித்தி தட்டில் சாதம் போட்டு
பிசைந்து எல்லாருக்கும் ஆ கொடுப்பார்கள்.அப்போது அன்றைக்கு இரவு Doordarshan செய்திகள் வாசிக்க போவது ஆணா பெண்ணா என்று போட்டி
வைத்து கொள்வோம். இரவு நேரங்களில் சில சமயம் திருட்டு தனமாக மெல்லிய சத்தத்தில் TV பார்த்து கொண்டு இருப்போம். டிவி ஹாலில் தான்
பாய் விரித்து படுத்துக்கொண்டே பார்ப்போம். பாத்ரூம் போவதற்கு தாத்தா அவருடைய ரூமில் இருந்து எழுந்து ஹாலை தாண்டி தான் போக
வேண்டும். திடீர் என்று வந்து விடுவார். உடனே அத்தனை பேரும்(என் சித்திகளும் இதில் அடக்கம்) போர்வையை தலை வரை இழுத்து கொண்டு
உள்ளே திரு திருன்னு கிடப்போம். அவர் "டிவியை ஆப் பண்ண மறந்துட்டு தூங்குதுங்க" என்று கடிந்து கொண்டே டிவியை நிறுத்தி விட்டு போவார்.
நாங்கள் அத்தனை பேரும் சிரிப்பை அடக்க படாத பாடு படுவோம்.

இத்தனை பேருக்கும் நொறுக்கு தீனி தருவது என்பது எங்க அம்மாச்சிக்கு ஒரு நிஜ சவால்.கிழங்கு, சோளம் என்று அவித்து தருவார்கள்.பஜ்ஜி, போண்டாவில் வித்தியாசமாக பசலிக்கீரை பஜ்ஜி, முருங்கைக்காய் போண்டா என்று சத்தானதாக்குவார்கள். செய்ததையே செய்து போர் அடிக்காமல் புதிது புதிதாக கண்டு பிடிப்பார்கள். கடலை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கி போட்டு நீர்க்க கரைத்து தோசைக்கல்லில் ஊற்றி எடுத்தால் ஆம்லேட் மாதிரி இருக்கும். இது மாதிரி எங்க அம்மாச்சி கண்டு பிடித்த ஒரு விஷயம் தான் ரோஸ்மில்க் ஐஸ்க்ரீம். இதன் செய்முறை:
ரோஸ்மில்க் எசன்சை பாலில் கலந்து கொள்ளவும்.
நிறைய சக்கரை சேர்த்து கொள்ளவும்.
இந்த ரோஸ் பாலை, பிரிட்ஜில் ஐஸ் கட்டி செய்யும் அச்சுகளில் ஊற்றி, பிரீசரில் வைத்து விடுவார்கள்.
காலையில் வைத்தார்கள் என்றால், குழந்தைகள் அனைவரும் பிரிட்ஜையே பார்த்து கொண்டு இருப்போம். மதியம் மூன்று மணி அளவில் ஆளுக்கு
மூணு நாலு ரோஸ்மில்க் ஐஸ் கட்டிகளை ஒரு கிண்ணத்தில் போட்டு தந்து விடுவார்கள். எங்களுக்கு எல்லாம் ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.
விடுமுறைக்கு வந்து இருக்கும் எங்களை எல்லாம் சந்தோஷமாக வைத்து கொள்ளுவது மட்டும் தான் அவர்களுடைய ஒரே நோக்கமாக இருக்கும்.

ஒவ்வொரு விடுமுறையிலும் எங்களுக்கு மூன்று outing உண்டு. காலையில் சாப்பிட்டு விட்டு கையில் எதாவது பார்சல் எடுத்து கொண்டு தஞ்சை பெரிய(பிரகதீஸ்வரர்) கோயிலுக்கு கிளம்புவோம். கோயிலின் ஒவ்வொரு கல்லும் எங்கள் குடும்ப குழந்தைகள் அத்தனை பேருக்கும் அத்துப்படி. வராகி அம்மன் சன்னதியில் எங்கள் சித்திகள் 108 சுற்றும் போது நாங்களும் கூட ஆரம்பிப்போம். சுற்றி முடியும்போது எங்கள் எல்லாருக்கும் தலை சுற்றி இருக்கும். கருவூரார் சந்நிதிக்கு பின்னாடி இருக்கும் மரத்தில் மரப்பல்லி பார்த்தால் விசேஷம் என்று சொல்வார்கள். பல்லியை யார் முதலில் கண்டு பிடிப்பது என்று ஒவ்வொரு முறையும் போட்டி தான்.ஒவ்வொரு முறை போகும் போதும், எவ்வளோ பெரிய கோபுரம் என்று நான் வாய் பிளப்பதும், "கோபுரத்தை பார்த்து கும்பிடு, கோடி புண்ணியம்" என்று லதா சித்தி சொல்வதும் தவறாமல் நடக்கும். "ஆமா போன முறை பார்த்ததுக்கு நந்தி வளர்ந்துடுச்சு" என்று பேசிக்கொள்ளுவோம். யானைக்கு பழம் குடுத்துட்டு அப்படியே சுற்றிக்கொண்டு நடந்து சிவகங்கை பூங்காவுக்குள் நுழைவோம். பூங்கா என்றதும் ஏதோ மரமும், சறுக்கு விளையாட்டும் மட்டும் என்று நினைச்சுடாதீங்க. அது ஒரு விலங்கியல் பூங்காவும் கூட. படகு சவாரி எல்லாம் உண்டு. கையில் இருக்கும் பார்சலை பிரித்து சாப்பிட்டு விட்டு ஆரம்பிப்போம். பூங்கா முழுக்க ஒளிந்து பிடித்து, ஓடி பிடித்து என்று விளையாடி முடித்து களைத்து உட்காரும் நேரத்தில் வேர்கடலை. வாங்கி சாப்பிட்டு விட்டு மறுபடி கோவிலை ஒரு விசிட் அடித்து விட்டு வீட்டுக்கு வருவோம். ஒவ்வொரு முறையும் என் தாத்தா கேட்பார். "காலைல போன புள்ளைங்க, இப்போ தான் வரீங்களா?".இதே மாதிரி சாப்பாடு பார்சல் கட்டி கொண்டு தஞ்சாவூர் அரண்மனை ஒரு நாள். பிறகொரு நாள் காலங்கார்த்தால குளித்து முடித்து நடந்தே தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில். ஆரம்பத்தில் சில வருடங்கள் அருளானந்த நகரில் இருந்த அம்மாச்சி வீடு, அப்புறம் மெடிக்கல் காலேஜ் அருகில் மாறிய பிறகும் கூட நடந்தே போய் விட்டு நடந்தே வருவோம்.


நாங்கள் வளர வளர எங்கள் ரசனைகளும் மாறிக்கொண்டே வந்தது. பெண் பிள்ளைகள் சீட்டுக்கட்டு போய், dumbcharades,anthakshari ஆட ஆரம்பித்தோம்.தம்பிகள் கிரிக்கெட் ஆட வெளியே செல்ல ஆரம்பித்து விட்டார்கள். கல்லணை, பிச்சாவரம், பூம்புகார் என்று outing upgrade ஆனது. ஒவ்வொரு விடுமுறையிலும் ஒரு சினிமா கட்டாயம் ஆனது. அதிலும் வாலி ரிலீஸ் அன்றைக்கு போனோம்.அப்போ ரிலீஸ் அன்று படம் பார்ப்பது என்பது எங்களை பொறுத்த வரை நடக்கவே முடியாத ஒரு விஷயம், "இன்னும் போஸ்டரை கூட ஆடு திங்கலை, அதுக்குள்ள நம்ம படம் பார்க்க போறோமா?" சூர்யா குஷியில் சொன்னது.

அரசன் ஆண்டியாகி விடாமல் தன பெண்களுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்ததும் தஞ்சையில் தான். அரசன் பெற்ற ஏழு பெண்கள் ஆறாக குறைந்ததும் அதே தஞ்சையில் தான். இப்படி ரசனைகளை மட்டும் இல்லாமல், வேறு சிலவற்றையும் சேர்த்து தான் நினைவுறுத்துகிறது தஞ்சாவூர்.
ஏழெட்டு வருடங்களுக்கு  முன் தாத்தா அம்மாச்சி தஞ்சையை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பியதும், அற்று போன தஞ்சைக்கும் எங்களுக்கும் இருந்த பந்தம், அடிக்கடி நினைவுகளிலும் கனவுகளிலும் தலை காட்டும். நேற்றைய டிவி விளம்பரம் கிளறிய ஞாபகங்களில் ஆழ்ந்து இருந்த போது கலைத்தது என் கணவரின் குரல்.

"கேட்டுக்கிட்டே இருக்கேன், பதில் சொல்லாம என்ன யோசிச்சுட்ருக்க?"

"ம்,என்ன? என்ன கேட்டிங்க?"

"கடைக்கு போறேன். அர்ஜுன் ஐஸ்க்ரீம் கேக்கறான். அம்மாக்கு வனிலா, எனக்கு லிச்சி, அர்ஜுன்க்கு strawberry . உனக்கு என்ன வேணும்?"


.
.
.


"ரோஸ்மில்க் ஐஸ்க்ரீம்"

10 comments:

*இயற்கை ராஜி* said...

nalla irukku ninaivukal

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

:)

ஜெய்லானி said...

அழகா எழுதி இருக்கீங்க.சூப்பர்

Anonymous said...

I can never forget my trip to Priya's house in Tanjavur with 4 more friends. Her mom, grand parents and relatives all welcomed us and made us feel at home. We all stiched the same type of salwar and made trip to the Tanjavur koil. We had so much fun and had great food at her house. It is one of my most precious moments.

Kavitha

Jeeva Subramaniam said...

Superb ka...
//அன்றைக்கு இரவு Doordarshan செய்திகள் வாசிக்க போவது ஆணா பெண்ணா என்று போட்டி
வைத்து கொள்வோம். //

Neengaluma...?

Mercy said...

Pri,

You have written it very well. Though I have heard all those things from u, its been great reading in ur style! :)

Sanjai Gandhi said...

another good one

துரியோதனன் said...

:)

ரிதன்யா said...

”மொட்டை மாடியில் கிராக் விழுததனால்”
அப்பவேவாஆஆஆஆஆஆஆ......

வசீகரா said...

wow...really enjoyable days there in tanjore... may be you did not detail about kamakshmi amman temple, venkatesa perumal temples, ramar temple near mariamman temple..all are nice palces..