மதுரை பதிவர்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள். பதிவு முடியும் முன் காரணத்தை சொல்லி விடுகிறேன்.
20-June-2009
காலையில் ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் எல்லாரும் இரவு தூங்க போனோம். ஆனால் கிளம்பும் போது மணி 6:23.
கதிரை நான் இதற்கு முன்னால், இவ்வளவு உற்சாகமாக பார்த்தது இல்லை. அர்ஜுன், அத்தை மாமா என்று நாங்கள் எல்லோருமே படு சந்தோஷமாக கிளம்பினாலும், எனக்கு 'முதல் முறை இவ்வளவு லாங் டிரைவ் போறோமே' என்று லேசான ஒரு பயம் இருந்ததை ஒத்துக்கணும். ஓசூர் தாண்டி, அடையார் ஆனந்த பவன் சேரும் போது 8 மணி. அப்போதே பயங்கர கூட்டம். NH இல் பயணிக்கும் எல்லாரும் பசிக்கலைன்னாலும் இங்க சாப்பிடுவார்கள் போலும். தமிழ் நாட்டு டிபன் என்றதும் ஒரே குஷி. இட்லி, பூரி, பொங்கல், வடை, தோசை, காபி என்று பிடி பிடித்து விட்டோம். அங்கே குழநதைகள் விளையாட சறுக்கு, ஊஞ்சல் எல்லாம் வைத்து ஒரு play area, washroom வசதி என்று நல்ல ambience இருக்கிறது. சற்று ரிலாக்ஸ் ஆனதற்கு பிறகு, அங்கிருந்து கிளம்பும் போது மணி ஒன்பது.
ஓசூர்-கிருஷ்ணகிரி வழியில் அரளிப்பூ, ஆவாரம்பூ என்று கலர் கலராக வளர்த்து வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு வெகு அழகாக இருந்தாலும், விஷச்செடியை இப்டி நடுரோட்டில் வைத்து இருக்கிறார்களே என்று நினைத்தேன், சமீபத்தில் ஒரு பத்திரிக்கையிலும் யாரோ இதே கவலையை வெளியிட்டு இருந்தார்கள். வழியில் சுங்கசாவடி என்று இரண்டு இடத்தில் வசூல். இன்னும் இரு இடங்களில் toll booth ரெடி ஆக வில்லை. construction நடந்து கொண்டு இருக்கிறது.
'ரோட்டுல போறதுக்கு கூடவா காசு குடுக்கணும்' என்று அங்கலாய்த்தார் என் மாமியார்.
இத்தனை booth லையும் குடுக்குற காசுக்கு ஒரு train ticket வாங்கிடலாம் போலும் - கணக்கு சொன்னார் மாமனார்.
'T R Baalu, செஞ்ச நல்ல காரியம் இந்த ரோடு தாம்பா, ஏதோ நம்ம ஸ்டேட் க்கு செஞ்சதை கொஞ்சம் வெளிலையும் செஞ்சிருந்தா நல்ல பேரு வாங்கிருக்கலாம்' - இது கதிர்.
லாரி மேல லாரி பாத்து இருக்கீங்களா? நான் பாத்தேன். ரெண்டு லாரி லோடு ஆடுகள். நெருக்கமா ஒண்ணு மேல ஒண்ணு இடிச்சுகிட்டு, நிக்குதுங்க.
'நீங்க மனுஷங்க போற ஜீப் படம் போட்டா, நான் ஆடு போற லாரி படம் போடுவேன்' ன்னு படம் காட்டுறதுக்காக ஒரு போட்டோ எடுத்தேன். படம் தெளிவா வரலை:-(
'இதை பாக்குறப்போ, சைவமா மாறிடணும் ன்னு தோணுது' ன்னு கதிர் சொல்றார்.
'உணவுப்பழக்கம் வேற உணர்வு வேற' என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தாலும், அதை justify பண்ண தோன்றவில்லை. இதே மாதிரி, மாடு போற லாரி, எருமை மாடு (இதையும் சாப்பிடுவாங்களா?) போற லாரி என்று எல்லாம் பாத்தாச்சு அன்னைக்கு.
வெய்யில் ஏற ஏற முன் சீட்டில் இருந்த எனக்கு காட்சி பிழை. கானல் நீர் தெரிகிறது. சட்டென்று கானல் நீருக்கு ஆங்கில வார்த்தை மறந்து போச்சு. வழக்கமாக ஆங்கில சந்தேகங்கள் கேட்கும் இரண்டு,மூன்று நண்பர்களுக்கு sms அனுப்பினேன். சட்டென்று பதில் வந்தது. 'இது கூட தெரியாதா' என்று நினைக்கும் ஆங்கில புலவர்களும், ''அது என்ன வார்த்தை' என்று கூகிள் பண்ணுபவர்களும், பின்னூட்டத்தில் answer சொல்லுங்க.
சேலம், கரூர் வழியா திண்டுக்கல் சேரும் போது மதிய உணவுக்கான நேரம். Bypass ஹோட்டல்களில் சாப்பிட விருப்பமில்லை. அதனால் ஊருக்குள் போனோம். கொஞ்சம் நெருக்கடியான ஊர் தான். இது வரை நல்லா இருந்த ரோடு, திண்டுக்கல் - மதுரை வழியில் மட்டும் மோசம். ஒரு வழியாக மதுரையை சேர்ந்த போது 4:30.
அன்று மதுரையில் தங்கி செல்வதாக இருந்ததால் ஒரு lodge எடுத்து, குளித்து கிளம்பி மீனாக்ஷி அம்மனை பார்க்க போனோம். அன்று பிரதோஷமாக இருக்கவே, செம கூட்டம். வெளியில் பார்வதி யானை, படு அலங்காரமாய் போஸ் குடுக்கிறது. சின்மயி பதிவில் பார்வதியைப் பற்றி ஒரு முறை படித்து இருக்கிறேன். Affordable ஆக இருந்து இருந்தால் கண்டிப்பாக ஒரு யானை வளர்த்து இருக்கலாம். அவ்ளோ பிடிக்கும்.
சுந்தரேசர் சன்னதியில், நிற்க இடமில்லை. 'என்னதான் மதுரை என்றாலும் சுந்தரேசர் சன்னதியில் ஒரு fan கூடவா வைக்க கூடாது? எல்லா fan ஐயும் மீனாக்ஷி கிட்டயே போட்டிருக்கிறார்கள்' வேர்த்து கொட்டியபடி புலம்பியவர் உள்ளூராக தான் இருக்கவேண்டும். பெங்களூர் Bannerghatta ரோட்டில், ஒரு miniature மீனாக்ஷி அம்மன் கோவில் போய் இருக்கிறேன், ஆனால் மதுரை மீனாக்ஷியை பார்ப்பது முதல் முறை. பல நாள் ஆசை நிறைவேறியது. பொற்றாமரை குளத்தில், தாமரை மட்டும் தனியே நிற்கிறது. தண்ணீர் இல்லை.கேள்விப்பட்ட மாதிரியே நிறைய பேரு 'வடக்கு வாசல் எப்டி போகணும்?' 'தெற்கு வாசல் இதுவா?' என்று கேட்டபடி சுற்றி சுற்றி அலைந்து கொண்டு இருந்தார்கள். ஆயிரம் கால் மண்டபத்தில் கோவிலின் மாதிரி ஒன்று இருக்கிறது. நிறைய கால்(தூண்)களில் இருந்து சிலைகள் பெயர்ந்து, கீழே படுத்து இருக்கின்றன. அங்கு இருக்கும் நந்தியின் காதில், மக்கள் வரிசையில் நின்று வேண்டியதை சொல்கிறார்கள். ஒரு பெண்மணி ஒரு கையால் நந்தியின் ஒரு காதை மூடிக்கொண்டு, இன்னொரு காதில் ஏதோ சொன்னார். நந்தியும் வாய் மூடி எல்லாத்தையும் கேட்டு கொள்கிறது. மண்டபத்தை சுற்றி நிறைய கடைகள்.
'தாழம்பூ குங்குமம் கிடைக்கும்' என்று கடைக்கு கடை கூவுகிறார்கள். அப்டின்னா என்னன்னு
தெரியலை. நின்னு கேக்க நேரம் இல்லாம வந்துட்டேன். தெரிஞ்ச யாராவது சொல்லுங்க.
பிறகு முருகன் இட்லி சாப்பிட்டு , ஜிகிர்தண்டா குடிப்பதாக போட்டிருந்த திட்டம், அர்ஜுனுக்கு உடம்பு சரி இல்லாமல் போகவே, கைவிடப்பட்டு, கோவில் பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரூம்க்கு திரும்பிவிட்டோம்.
மறுநாள் காலை திருமலை நாயக்கர் மஹால். பாம்பே, குரு பாடல்களுக்கு பிறகு, கட்டாயம் இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. 'அர்ஜுனை அலைக்கழிக்க வேண்டாம், நாகர்கோவிலுக்கே போய் விடலாம்', என்று
சொன்ன கதிரிடம், 'மஹால் மட்டும் போய்விட்டு ஊருக்கு போகலாம்' என்று கெஞ்சி, சாதித்தேன். சும்மாவா மணிரத்னம் location செலக்ட் பண்ணுவார்? இந்த மஹால் அவ்வளவு அழகு. ஆனால் இப்போது புதுப்பிக்கும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. 'எங்க government இருக்கும் வரை சுற்றுலாத்துறைக்கு நல்லது' என்று மாமனார் சொல்லிக்கொண்டார். 'இன்னும் ஆறு மாசம் கழிச்சு வாங்க சார், அதுக்குள்ள ஒலி ஒளி காட்சி எல்லாம் மறுபடி ரெடி ஆயிடும்' என்று ஒருவர் சொன்னார். வெளியில் வந்தால் ஒரு கடையில் ஜிகிர்தண்டா கிடைக்கும் என்று போர்டு போட்டு இருந்தது. வாங்கி குடித்தோம். மதுரை மக்களே, இதற்கா இவ்வளவு பில்டப்? குளிர்ந்த பாலில், ஷர்பத், பாதாம் பிசின் என்று ஒன்று (பாதாம் மரத்தில் இருந்து எடுப்பதாம், transparent ஆக கொழ கொழன்னு இருக்கு)கலந்து, ஏகத்துக்கு சக்கரை,ice போட்டு தருகிறார்கள். என்னால் குடிக்க முடியலை. மஹால் வாசலில் ஒரு பாட்டி, பாசி, ஊசி, மணி, மாலை எல்லாம் வைத்துக்கொண்டு கதிர் கிட்ட, 'நீ என் பேரன் மாதிரி, ஏதாவது போனி பண்ணிட்டு போ' என்று விடாபிடியாக படுத்த, கதிர் ரெண்டு மோதிரம் வாங்கி எனக்கு ஒண்ணு, மாமியார்க்கு ஒண்ணும் குடுத்தார். பின்னாளில், ஊரில் எல்லாரிடமும், அது எங்கள் குடும்ப மோதிரம் என்று பீற்றிக்கொண்டோம். இப்படியாக மதுரையை விட்டு கிளம்பியாச்சு.
ஆங், மறக்கலை, மதுரையில் பெண்கள் வெகு அழகு. நெற்றியில் அடர்ந்த நிறத்தில் குங்குமம், தலை நிறைய மல்லிப்பூ வைத்து, எந்த நேரமும் பளிச் என்று இருக்கிறார்கள்.
-தொடரும்.
Questions and Observations on Sabarimala
6 years ago
21 comments:
கானல் நீர் - mirage
நீங்க எனக்கு SMS அனுப்பி இருக்கலாம் :-)
நானும் இப்போ தான் என்னோட ஒவ்வொரு பயணத்தைப் பத்தி எழுதணும்னு நினைச்சிகிட்டு இருந்தேன். நீங்களே போட்டுடீங்க. btw, அந்த போட்டோ எங்க, ஆடுகளை எடுத்துக் கிட்டுப் போன போட்டோ.
// ஓசூர் தாண்டி, அடையார் ஆனந்த பவன் //
Exact location? How far from Hosur City? There is a plain Ananda Bhavan just near Hosur flyover! It's a Mirage for me! ( I have seen a real one, in Dubai! )
How was the route upto Salem, after Krishnagiri ghat section? Planning for a trip to Thiruvannamalai soon.
--
Regards
Vijayashankar
http://www.vijayashankar.in
:) vanthuttom
ஒரு சின்ன திருத்தம்,'மதுரையில் பெண்கள் வெகு அழகு' - அதை விட 'மதுரை பெண்கள் வெகு அழகு' சொன்ன நல்ல இருக்குமே. ....hehehe...:) ....நாங்க எல்லாம் வெளி ஊர்லே இருக்கோம்லே...
Hi,
{
அன்று மதுரையில் தங்கி செல்வதாக இருந்ததால் ஒரு lodge எடுத்து, குளித்து கிளம்பி மீனாக்ஷி அம்மனை பார்க்க போனோம்.
}
இந்த வாரம் மதுரையிலயா இருந்தீங்க? நானும் அங்க தான் இருந்தேன்.
{
என்னால் குடிக்க முடியலை
}
ஜிகர்தண்டா உங்களுக்கு ஏன் பிடிக்கலைனு தெரியல.. ஆனால் மதுரையோட அடையாளங்கள்ள அதுவும் ஒன்னு. நல்ல கடையா பார்த்து குடிச்சிருந்தீங்கனா நிச்சயம் நல்லா இருந்து இருக்கும்.. அடுத்த தடவை போகும் போது பிரேமா விலாஸ் அல்வாவையும் try பண்ணி பாருங்க.. I really bet you would like to have once more.
{
மதுரையில் பெண்கள் வெகு அழகு. நெற்றியில் அடர்ந்த நிறத்தில் குங்குமம், தலை நிறைய மல்லிப்பூ வைத்து, எந்த நேரமும் பளிச் என்று இருக்கிறார்கள்.
}
But what I feel is Madurai girls are losing their traditional beauty nowadays. இதை தப்புன்னு சொல்ல வரலை. But I can sense that something is missing nowadays.
தொடரட்டும்...
en oor penkal padriya comment kku nandri :-)
கண்ட கடைகளில் ஜிகர்தண்டா குடிக்கக்கூடாது. அது வயிற்றுக் கோளாறை ஏற்படுத்தி விடும்.
Excellent... Eagerly waiting for the next part..
--Soundar
ப்ரியதர்ஷினி ஒன்னு விட்டுட்டீங்களே!
நீங்க Djவாத்தானே போனீங்க? சிச்சுவேசன் சாங் போடல நீங்க.
தொடரும்ல வரனும்
இது ஆர்டர்!
கானல் நீர் - Mirage...
//மதுரையில் பெண்கள் வெகு அழகு.//
கொடுத்து வைத்தவங்க அவங்க எல்லாம், சும்மாவா, மணக்கும் மல்லிகைக்குப் புகழ் பெற்ற ஊர்ல இருக்கறவங்க இல்ல, அத சொல்றேன்.
ஒசூர் டூ கிருஷ்ணகிரி சாலையில் பயணிபப்து ரொம்ப அழகான அனுபவம். 2 ஆண்டுகளுக்கு முன் சுமார் 2 ஆண்டுகள் வாரம் ஒரு நாள் அந்த வழியில் பயணிப்பேன். மலைகளுக்கு நடுவே சாலைகளில் இருபுறமும் பச்சை பசேல் என செடி கொடிகள். அழகான அனுபவம் அது.
எருமை மாடுகளை கேரளாவிற்கு கொண்டு செல்வார்கள். அங்கு அவைகள் உணவிற்கு பயன்படுத்தப் படுகிறது.
கானல்நீருக்கு ஆங்கிலத்தில் என்னவென்று ட்ருத் சொல்லிவிட்டார். அதை சார்ந்த ஒரு ட்ருத்தை நான் சொல்லிவிடுகிறேன். :)
மிரேஜ் (அ) மிராஜ் வகை போர் விமானங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதற்கு அந்தப் பெயர் வைக்கக் காரணம் இந்த கானல் நீர் தான். கானல் நீரைப் போலவே அவைகளும் ”இருக்கு.. ஆனா இல்லை” வகையறாக்கள் தான்.
எஸ் ஜே சூர்யா சொன்ன இருக்கு.. ஆனா இல்லை இல்ல.. :)
கதிரோட சவால்ல ஜெயிச்சிடுவிக்க போல.. நல்ல ட்ரிப் பதிவா தான் இருக்கு. அதனால கும்மிக்கு விலக்கு அளிக்கிறேன். சீக்கிறம் தொடருங்கள். அர்ஜுன் இப்போ நலம் தானே?
எப்போ நாகர்கோவில் போவீங்க அக்கா...
//ஒரு சின்ன திருத்தம்,'மதுரையில் பெண்கள் வெகு அழகு' - அதை விட 'மதுரை பெண்கள் வெகு அழகு' சொன்ன நல்ல இருக்குமே. ....hehehe...:) ....நாங்க எல்லாம் வெளி ஊர்லே இருக்கோம்லே...//
super :)
ஹ்ம்ம்..சுவாரசியம்! மதுரை மல்லிப்பூ கட்டும் விதம் தனியென்று சொல்வார்கள்!
ராஜி சுட்டி கொடுத்துட்டு படிச்சீங்களா படிச்சீங்களான்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க..அவங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லிடுங்களேன்! :-)
உண்மை.. அதுவும் ரெட்டை ஜடை போட்டுக்கிட்டு பொண்ணுங்க போற அழகை தெற்குமாசி வீதி தெருக்களில் இருந்து நாள் முழுவதும் ரசிக்கலாம்...
ஆனால் பேசப் போனால் மட்டும் "என்னங்கண்ணே?" என்று தான் ஆரம்பிக்கிறார்கள். ம்ம்ம்ம்..
// ஓசூர் தாண்டி, அடையார் ஆனந்த பவன் //
Exact location? How far from Hosur City? There is a plain Ananda Bhavan just near Hosur flyover!//
Vijay,
About 25Kms from hosur. The place is called Chinnamanur. And its close to a petrol bunk.On the left side as you drive towards Krishnagiri.
thanks.
Pri,
I missed u! When u will again come to Madurai????????????
what i feel is ka... உங்க பதிவெல்லாம் படிக்கிறப்போ ஒரு pleasant mood வரும். உங்க அந்த template அந்த mood a அப்டியே maintain பண்ணும். ஆனா இது ஏதோ terror effect குடுக்குது. நீங்க அதே white template தான் வைக்கணும்னு இல்ல..அதே mood குடுக்குற மாதிரி milda, refreshinga, கண்ணுக்கு strain kudukkaama... இந்த LIRIL/FRESHKA soap விளம்பரமெல்லாம் பாத்தா ஒரு freshness வருமே..அந்த மாதிரி இருந்தா ரொம்ப நல்ல இருக்கும். இது அடியேனின் தாழ்ந்த கருத்து :) அனால் என் கருத்து மட்டும் முக்கியம் இல்ல...உங்களுக்குன்னு இன்னும் நிறைய பேர் இருக்காங்க. எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு பாத்துகிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.... ம்... இப்போதைக்கு அவ்ளோதான்ka.
Post a Comment