Tuesday, 13 October 2026

பொட்டுப்பாட்டியின் வீடு

என் (அப்பாவழி)தாத்தாவிற்கு ஒரு தங்கை இருந்தார். பெயர் பொட்டு. எங்களுக்கு பொட்டுப்பாட்டி. அவர் திருமண பந்தத்தில் இருந்து ஆரம்பத்திலேயே விலகி (குழந்தையின்மையால் இருக்கலாம்) பிறந்த வீட்டிற்கே வந்துவிட்டார். அவருடைய கணவர் மறுமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொண்டார்.
பொட்டுப்பாட்டிக்கு ஜீவனாம்சமாக அவருடைய கடை ஒன்றில் வாடகை வசூலித்துக் கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் போல. எங்கள் கொள்ளுத்தாத்தா/பாட்டி போன பின்,  பொட்டுப்பாட்டிக்கு பெற்றோர் வீடு இல்லை.என் தாத்தா தான் மூத்த அண்ணன். தாத்தா வீட்டில் இருந்து கூப்பிடும் அருகாமையில், தாத்தா குடும்ப இடத்திலேயே,  சிறிய கூரை வீடொன்று  போட்டுக் கொண்டு பொட்டுப்பாட்டி தனியாளாகக் குடியிருந்தார். 

தனிச்சமையல் ஆனாலும் இரவில் அவ்வீட்டில் தனியாக உறங்க மாட்டார். இரவு உணவை நேரத்தில் முடித்துவிட்டு பாய்/தலையணையோடு தாத்தா வீட்டிற்கு வந்துவிடுவார்.  அங்கே வீட்டிற்குள் இருந்து மொட்டைமாடி போகும் வழியில் மாடிப்படி மாதுவாக படுத்துக்கொள்வார்.

அவர் வீட்டுக்குள்(நாலு சுவர் எழுப்பி, தென்னங்கூரை வேய்ந்தது; எங்கள் தாத்தா வீட்டில் இருந்து பார்த்தால் அவர் வீடும்/வாழ்க்கையும் அப்படியே தெரியும்) ஒரு பக்கம் இரட்டை விறகடுப்பு. அம்மிக்கல்; இன்னொரு பக்கம் தடுத்து சாமி ஷெல்ப். எதிரில் துணிகள்,கொடிக்கயிறு. கதவுக்கு வெளியில், வீட்டின் முன்புறம்  உட்கார, கொள்ள ஒரு திண்ணை மாதிரி; அங்க ஒரு நாற்காலி போட்டிருக்கும். அந்த நாற்காலி தான் அவரது ஒரே பர்னிச்சர். அங்கேயே ஒரு ஆடுகல்.  கீழே அமர்ந்து மாவாட்டும் வகையில். வீட்டுக்குள்ளும், திண்ணையிலும் மின்விளக்கு உண்டு.  Fan  கிடையாது. வெயில் நேரத்தில் பாட்டி ஒரு பனையோலை விசிறி வைத்து விசிறிக் கொள்வார்.

அவருடைய தினப்படி செயல்பாடுகள் ஒரு நேர்க்கோடு போலிருக்கும். காலையில் வெகு விரைவில் விழித்து பாயைச் சுருட்டிக்கொண்டு தன் வீட்டுக்குப் போவார். சூரியனைப் பார்த்து ஒரு கும்பிடு போடுவார். பின் பல் துலக்கி, காபி போட்டு ஆற அமர அமர்ந்து குடிப்பார். பின் அங்கிருக்கும் தோட்ட பைப்/தொட்டியில் துணி துவைத்து குளித்து உலர்த்தி தனக்கே தனக்கென்று சுருக்க/அழகான காலை டிபன் செய்து சாப்பிடுவார். சிலநாட்களில் இடியாப்பம்/ தேங்காய்ப்பால் செய்தேன் அண்ணனுக்குப் பிடிக்கும் என்று சிறுவாளிகள் இரண்டில் கொண்டு வந்து தருவார். தாத்தா காலை சீக்கிரம் சாப்பிடுவார் என சிரத்தையுடன் சீக்கிரமாக வந்திருக்கிறார் என அவர் சொல்லாமலேயே புரியும். 

மதியம் அதேபோல் சுருங்கச் சமையல். சாப்பாடு(விரத நாளென்றால்  விளக்கேற்றி, காகாகா என்று  கத்திக்  கூப்பிட்டு காக்காய்க்கு சாப்பாடு வைத்து விட்டு சாப்பிடுவார்), ஒரு தூக்கம். மாலை காபி. பின்பு சாமிக்கு விளக்கேற்றுவார். வெளி நாற்காலியில் சற்று உட்காருவார்.   பின்ன இரவுச் சாப்பாடு. தாத்தா வீட்டிற்கு வருகை. மாடிப்படி மாது படுக்கை. தாத்தா வீட்டில் டிவி வந்த பிறகு, டிவி ஓடிக்கொண்டு இருந்தால்  மாடிப்படி ஏறும் இடத்தில் உட்கார்ந்து  சற்று டிவி பார்ப்பார்; சில சமயம் தாத்தா வீட்டு வெளித்திண்ணையிலேயே  உட்கார்ந்து கொள்வார். டிவி நிறுத்தப்பட்டதுமோ,  இல்லையென்றால்  "நீங்க உள்ளே வந்து படுங்க"ன்னு  யாராவது சொன்னதுமோ வந்து படுத்துக்கொள்வார்.

சிறுவயதில் ஒரு முறை எங்கூர் பக்கத்தில், சிறிய மலை மீது இருக்கும் "நகரம்" முருகன் கோயிலில் கூட்டத்தில் நான் ஓரிரு நொடி எங்கம்மா கைப்பிடி விட்டு கூட்டத்துக்குள் திணறி விட்டேன். அப்போது பதறி நிமிர்ந்து பார்த்த போது பொட்டுப்பாட்டி சாமி பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு இருந்தார். எனக்கு கடவுளையே பார்த்த மாதிரி இருந்தது, பாட்டி பின்னாடியே போனால் தொலையாமல் வீடு போய் விடலாம் என்று...

அவருக்கு அரிசி குடும்ப வயல் விளைச்சலில் இருந்து கொடுத்து விடுவார் தாத்தா. மளிகை/காய் என்ன வேண்டுமென்று கேட்டு தாத்தா தங்கைக்கு சமயங்களில் வாங்கித் தருவார்.  பொட்டுப்பாட்டியின் அண்ணன்/தம்பி/அக்கா/தங்கைகள்(தாத்தாவுடன் பிறந்தோர் எழுவர்) அவர் பிள்ளைகள் என்று யார் பார்க்க வந்தாலும் தின்பண்டங்கள் வாங்கி வந்து தருவார்கள். சிலநாட்கள் தானே நடந்து கடைத்தெரு போய் காய்/மளிகை/தின்பண்டம் என வாங்கி வருவார். தன் வீட்டு நாற்காலியில்/அல்லது தாத்தா வீட்டுத் திண்ணையிலோ அமர்ந்துகொண்டு அவற்றை ரசித்து சப்புக்கொட்டி சாப்பிடுவார். பெரும்பாலும் பேரீச்சைம்பழம், மில்க் பிக்கிஸ் ரொட்டி,கமலா ஆரஞ்சு இவை தான் அவருடைய தின்பண்டங்கள். 

நான் ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்குப் போகும்போது பொட்டுப்பாட்டியையும் ஒரு எட்டு பார்த்து விசாரித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது.  திருமணம்  முடித்து நான் கணவரோடு அவரைப் போய் பார்த்த போது 50₹வைத்துக் கொடுத்தார். 

ஒருமுறை பொட்டுப்பாட்டியின் (முன்னாள்) கணவர் போய்விட்டார் என்று கேள்விப்பட்டேன். பாட்டி போய் பார்த்தாரா என்று நினைவில்லை.  இப்படியாக நடமாடிக் கொண்டிருந்தவர் முதுமையில் தள்ளாது படுத்துவிட்டார். என் பாட்டியும் அம்மாவும் தான் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் ரொம்ப தள்ளாத நிலைமையில் குடும்பத்தினர் கலந்து பேசி, அவருடைய (சக்களத்தி)மகன் வந்து தன்னுடன் அழைத்துப் போய்விட்டார். 

2011 டிசம்பர் விடுமுறையில் நான் அம்மா வீட்டில் இருந்த போது, நியூ இயர் அன்று காலங்கார்த்தால பொட்டுப்பாட்டி போய்விட்டார் என்று தகவல் வந்தது. அம்மாவும் பாட்டியும் போய்விட்டு வந்தார்கள். கடைசி சிலநாட்கள் நினைவு தப்பிப் போனதாகவும், ஆனாலும் என் அம்மா பெயரைச் சொல்லி, "கீரைக்குழம்பு கொண்டு வந்துச்சு"ன்னு சொன்னதாவும் அங்கே சொல்லி அழுதார்கள்ன்னு கேள்விப்பட்டோம். 

பின்ன பொட்டுப் பாட்டி இருந்த  வீட்டை, தட்டி விட்டாச்சு. 

----

நேற்று அந்த வீடு கனவில் வந்தது.

No comments: