Thursday, 29 July 2010

தமிழாக்கம் தருக - போட்டி

எட்டாம் வகுப்பு பாடத்திட்டம் என்று நினைக்கிறேன்.

தமிழ் பாடத்தில் ஒரு பகுதி உண்டு. ஆங்கில பழமொழிகள் கொடுத்து அதற்கு இணையான தமிழ் பழமொழிகளை எழுத சொல்வார்கள்.

Empty vessel makes more noise என்றால் நாம் "குறைகுடம் கூத்தாடும்" என்று பதில் அளிக்க வேண்டும்.

As you sow so shall you reap - வினை விதைத்தவன் வினை அறுப்பான்; கத்தி எடுத்தவன் கத்தியால் மாள்வான்.

 இதில் என்ன பிரமாதம் என்று தோன்றலாம். பிரமாதம் என்பதற்கில்லை என்றாலும் இது சுவாரஸ்யமானது.

'Every dog has its day'
இதை தமிழ்ப்படுத்தினால், 'யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்' எனலாம்.

ஆங்கில பழமொழியில் இருப்பதோ நாய். தமிழில் யானையும், பூனையும்...

You are what you eat - சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
இதில் சுவரும் சித்திரமும் சாப்பிடுவதோடு பொருந்தி போகிறது பாருங்கள்.

முதலில் ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்த்து புரிந்து கொண்டு அதற்கு தமிழில் பொருத்தமாக என்ன சொல்லலாம் என்று யோசிக்க வேண்டும்.

சிறுவயதில் மிகவும் ஆர்வத்துடன் விளையாடிய விளையாட்டு.

பழமொழிகள் மட்டும் என்று இல்லை. Phrases என்று சொல்வார்களே...அதிலும் தமிழாக்கம் சுவையானது.உதாரணத்துக்கு
A slip between the cup and lip
என்றால், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது'

இப்போது போட்டிக்கு வருவோம்.

பொதுவாக நாம் அடிக்கடி கேட்கும், புழங்கும் சில phrase களை (முதலில் இந்த phrase க்கு சரியான தமிழ் வார்த்தை யாராவது சொல்லுங்கள்) இங்கு தருகிறேன். அதை தமிழாக்கம் பண்ணி பின்னூட்டுங்கள்.

சரியான தமிழாக்கம் தர வேண்டும் என்றாலும், உங்கள் மனதில் அந்த phrase / பழமொழியை படித்ததும் சட்டென்று என்ன தமிழாக்கம் தோன்றுகிறது என்பதை சொல்லுங்கள்.
Don't try to teach your Grandma to suck eggs;
இதற்கு இணையாக தமிழில் பழமொழி, சொலவடை இருக்கலாம்.
ஆனால், இதை படித்ததும் எனக்கு

'முருகனுக்கே வேலா? அண்ணாமலைக்கே பாலா? திருப்பதிக்கே லட்டா?'

இந்த மாதிரி தோன்றியது.

Ok, now start music;

1)Rose is a rose is a rose

2)Uneasy lies the head that wears a crown

3)The smallest worm will turn, being trodden on

4)Can a leopard change its spots?

5)A chain is only as strong as its weakest link

6)A fish rots from the head down

7)Don't cast your pearls before swine

8)Every cloud has a silver lining

9)It ain't over till the fat lady sings

10)A nod's as good as a wink to a blind horse

பின் குறிப்பு:சிலவற்றுக்கு ஆங்கில அர்த்தம் தேவைப்பட்டால்
கூகிளில் கிடைக்கும்.

முக்கிய பின் குறிப்பு:
ஏதாவது போட்டி வெக்கலாமே என்று உசுப்பேற்றிய சிலருக்காக இந்த
பதிவு.

"அடிச்ச கைப்புள்ளைக்கே...."மாதிரி ஆக்கி விடாதீர்கள் என்று
கேட்டுக்கொள்கிறேன்.

Tuesday, 27 July 2010

ஒரு ஊருல ஒரு குரங்கு....

சரியான விடையை தெரிவு செய்க.


இவர்களுள் யார் மிக சிறந்த கொடைவள்ளல்

1)முல்லைக்கு தேர் தந்த பாரி

2)மயிலுக்கு போர்வை தந்த பேகன்

3)குரங்குக்கு செருப்பு தந்த கிருத்திகா

4)கிருத்திகாவின் செருப்பை திருப்பி தந்த குரங்கு

மூன்றாவது விடையை டிக் செய்ய வேண்டுமானால் அதற்கு முன் நீங்கள்
கீழே உள்ள கதையை தெரிந்து கொண்டு விடுதல் இன்றியமையாததாகிறது.

கதையை ஆரம்பிக்கும் முன் கதையின் சப்போர்டிங் ஆக்ட்ரஸ் கிருத்திகா பற்றி சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.

சிறுவயதில் பூந்தளிர் என்ற புத்தகம் படித்து இருப்பீர்கள். ஆங்கிலத்தில் tinkle என்று கிடைக்கும்.அதில் கபீஷ் என்றொரு குரங்கு கதாபாத்திரம் வரும். அந்த குரங்கு ஹனுமானிடம் வேண்டி தன்னுடைய வாலை தேவையான அளவு நீட்டி மடக்கும் வரம் வாங்கிக்கொண்டு விடும்.

அந்த எலாஸ்டிக் வாலை வைத்துக்கொண்டு சேட்டைகள் பண்ணிக்கொண்டு இருந்த அது, ஒரு நாள் ஹனுமானிடம் போய், 'எனக்கு குரங்கா இருந்து இருந்து போர் அடிக்குது, என்னை மனுஷனா பொறக்க வெய்யுங்க'ன்னு கேட்டுச்சாம். உடனே ஹனுமான் "சரி நீ பூமில போய் கிருத்திகாவா பொறந்துக்கோ" ன்னு சொல்லிட்டாராம்.

இந்த கிருத்திகா காலேஜில் என்னுடைய கிளாஸ்மேட்.மனித பிறவி
எடுத்துட்டாளே தவிர அவளுக்கு பூர்வ ஜென்ம நினைவு இருந்தது.கிளாசில்
கடைசி பெஞ்சுக்கு முன் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அவள்
செய்யாத சேட்டை இல்லை. பெரும்பாலும் அவள் மாட்டிக்க மாட்டாள்.
நாங்க யாராவது தான் சிரித்து வைத்து மாட்டுவோம்.

எங்கள் வகுப்பில் எல்லாரும் சேர்ந்து செஞ்சிக்கோட்டை(அமர்க்களம்
படத்துல அது வேண்டும், இது வேண்டும் என்று அஜீத் ஆக்ரோஷமா பாடி
ஆடுவாரே அந்த இடம்) ஒரு நாள் சுற்றுலா சென்றோம்.
கீழே பஸ்ஸை நிறுத்தி விட்டு மலை உச்சிக்கு ஏறிக்கொண்டு இருந்தோம்.

கிருத்திகா கையில் பிரித்த குட் டே பிஸ்கட் பாக்கெட். காலில் புத்தம்
புது செருப்பு. கதைகளில் எல்லாம் எழுதுவார்களே...புது மெருகு
குலையாத என்று...அந்த மாதிரி விலை கூட அழியாது இருந்தது.

இங்க தான் கதையின் முக்கிய கதாபாத்திரம் உள்ளே நுழைகிறது.
இல்லை தாவுகிறது... கிருத்திகாவின் கையில் இருந்த பிஸ்கட்டை
பார்த்து ஆவலானது போலும்...அவளோ குரங்கை பார்த்த அதிர்ச்சியில்
உறைந்து போனவள், பிஸ்கெட்டை தூக்கி போட்டு விட தோன்றாமல்,
ஓட ஆரம்பிக்க...புத்தம் புது செருப்பு ஒன்று கழண்டு விழுந்து விட,
குரங்கு 'கிடைத்த வரைக்கும் சரி' என்று ஒரு செருப்பை வாரிக்கொண்டு
ஓடியே விட்டது.

இருங்கள். உடனே அவசரப்பட்டு மூன்றாவது விடையை தெரிவு செய்து
விடாதீர்கள்.

எங்கே விட்டேன்? ஆம், குரங்கு ஒரு செருப்பை தூக்கி கொண்டு ஓடி
விட்டதோ...நம்ம கிருத்திகா ஒற்றை கால் செருப்புடன், ஆனால்
பிஸ்கட் பாக்கெட்டை மறந்தும் கூட விட்டு விடாமல் நிற்கிறாள்.
செருப்பு போன சோகம் அவளுக்கு, பிஸ்கட் பிழைத்த சந்தோஷம்
எங்களுக்கு. இப்படி ஒரு உணர்ச்சி கலவையுடன் மலை ஏறும்
பயணத்தை தொடர்ந்தோம்.
 
பொறுங்கள். மலையில் இருந்து இறங்கும் போது தான்  கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.

'ஒரு செருப்பை வைத்து என்ன செய்ய போற டீ...அதையும் தூக்கி
போடு...' என்று நாங்கள் எல்லாரும் எவ்வளவோ சொல்லியும் அவள்
கேட்காமல் ஒரு செருப்பை கையில் தூக்கி கொண்டே வந்து கொண்டு
இருந்தாள். இறங்கி வரும் போது பார்த்தால், எந்த இடத்தில் அபேஸ்
பண்ணிக்கொண்டு போனதோ, அதே இடத்தில், அவளுடைய செருப்பு.
"இந்தா வெச்சுக்கோ" என்று விட்டு விட்டு போய் இருந்தது குரங்கு.

இப்போது மேலே உள்ள மூன்றாவது விடைக்கு கீழே ஹைலைட் பண்ணி
பாருங்கள்.

கிருத்திகாவிற்கு குரங்குக்கு செருப்பு கொடுத்த அனுபவம் தான் இருக்கிறது. எனக்கோ, குரங்கோடு ஒன்றாக உட்கார்ந்து ஒரே தட்டில்
சாப்பிட்ட அனுபவமே இருக்கிறது. அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.