Saturday, 8 August 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 5

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இப்போது மணமகன் மணமகளுக்கு மங்கள நாண் அணிவிப்பார்.

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று மணவிழா காணும் மணமக்களை...

இப்படியான ஒரு பகுத்தறிவு கல்யாணம் எனக்கும் கதிருக்கும்.

நோ ஹோமம், நோ மாங்கல்யம் தந்துனானே etc etc.

ஒரு விதத்தில் எனக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும் என் புகுந்த வீட்டு திருமண சடங்குகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல். சிலர் திருமண ஆல்பம்,DVD பார்த்ததில் ஓரளவுக்கு ஐடியா இருந்தாலும், நேரில் பார்க்க போவது இன்று தான் முதல் முறை. மூர்த்திக்கும் பூரணிக்கும் கல்யாணம். அம்மா அப்பா பார்த்து வைத்த மணமகள், மணமகன். சமத்து பிள்ளைகள்.

25-June-2009
அதிகாலையில் என் முதல் நாத்தனாரின் குடும்பம் வந்து சேர்ந்ததில் இருந்தே எல்லாருக்கும் கல்யாண பரபரப்பு தொற்றிக்கொண்டது.
'சீக்கிரம் குளிங்க எல்லாரும்'

'குழந்தைகளை குளிப்பாட்டி டிரஸ் பண்ணி அவங்கவங்க அப்பாவிடம் விட்டு விட்டு அப்றோம் நம்ம saree கட்டலாம்.'

'நம்ம கல்யாணத்தன்னைக்கு கட்டினது, அதுக்கு அப்றோம் இன்னைக்கு தான் இந்த பட்டு கட்டறேன்'
'iron பண்ண போன எடத்துல கூட "சார் saree ரொம்ப நல்லா இருக்கு, நீங்க எடுத்ததா சார்? உங்க wife குடுத்து வெச்சவங்க" ன்னு சொல்றான்.'
'அவனுக்கென்ன? அவன் சொல்வான். By the way, இந்த white and white வேஷ்டி சட்டைல அரசியல்வாதி மாறி இருக்கீங்க. துண்டு தான் மிஸ்ஸிங்.'

"கல்யாணத்துக்கு கல்யாணம் தான் தலையில் பூ வெக்குறது. அதை இன்னும் கொஞ்சம் தாராளமா வெச்சா என்ன?"

"இந்த necklace கொக்கி கொஞ்சம் மாட்டி விடேன்"

பெண்கள் எல்லாரும் புடவை கசங்காமல் மேக்கப் கலையாமல் மண்டபத்தில் கொண்டு விடப்பட்டோம். கதிருக்கும் அவருடைய காருக்கும் ஒரே பாராட்டுகள். Go Fida.

டிபன் முடிந்ததும் மாப்பிள்ளை அழைப்பு.

மாப்பிள்ளை வீட்டார் அதாவது நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி இருக்க, மணமகளின் தம்பி வந்து மாப்பிள்ளைக்கு மாலை போட்டு, பன்னீர் தெளித்து, கைகளில் சந்தனம் தடவி, (இதுவே வயதில் பெரியவர் ஆக இருந்தால் நெற்றியில் பொட்டு வைப்பார்களாம்) மேள தாளத்துடன் (உங்கள் யாருக்காவது ஒரு பலிகடா effect கிடைத்தால் நான் பொறுப்பில்லை.அங்கே நடந்ததை சொல்கிறேன்)எங்க எல்லாரையும் மண்டபத்துக்கு அழைத்து செல்கிறார்கள். மண்டபத்திற்குள் நுழையும் முன், மாப்பிள்ளைக்கு பாதம் கழுவுகிறான் மணமகளின் தம்பி. அதற்கு பரிசாக அவனுக்கு மாப்பிள்ளை ஒரு மோதிரம் போடுகிறார்.

நேராக மாப்பிள்ளையை மணமேடையில் கொண்டு போய் அமர வைத்து திருமண பொழுதில் அணிய வேண்டிய உடையை மணமகளின் தாய்மாமா தருகிறார்.
மாப்பிள்ளை உடை அணிய சென்று விட, மணமகளை மேடைக்கு அழைத்து அவளுக்கு முகூர்த்த புடவையை மணமகனின் அக்கா தருகிறாள்.அந்த பெண்ணும் உடை மாற்ற சென்று விடுகிறது. இதற்குள் மாப்பிள்ளை உடை மாற்றி (ஒரு வேஷ்டி சட்டை மாற்ற எவ்வளவு நேரம் ஆகி விட போகிறது, எங்களை மாதிரியா?)
வந்துவிட, மேடையில் அமர வைத்து 'உரிமா கட்டுதல்' என்று ஒரு சடங்கு நடக்கிறது.
அதாவது மாப்பிள்ளைக்கு உரிமை உள்ள ஆண்கள் அனைவரும், சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சான், அண்ணன், அத்தான், என்று ஏகப்பட்ட பேர் வரிசையில் வந்து மணமகன் தலையில் தலைப்பாகை கட்டுகிறார்கள். வயதான சிலர் பயபக்தியோடு சின்சியராக கட்ட, பலர் கேலியும் கிண்டலுமாக கலாய்த்தபடி.
கலர் கலராக blouse துணியில். மாப்பிள்ளை வீட்டு பெண்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு எந்த புடவைக்கும் matching blouse தேடி அலைய வேண்டியதில்லை. அவ்வளவு துணிகள் வந்து குவிகிறது.
"உங்க கல்யாணத்தில் கதிரை நல்லா ஓட்டனும் என்று இருந்தோம். வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது." என் நாத்தனார் கணவர் உரிமா கட்டும் வரிசையில் இருந்து விலகி வந்து என்னிடம் கிசுகிசுத்து விட்டு போனார்.

"இந்த சடங்கிலும் ஒரு நன்மை இருக்கு பாத்தியா?பொண்ணுக்கு புடவை மாற்ற நல்ல டைம் கிடைக்கும் இல்ல?"
"உங்கள் பகுத்தறிவு பார்வைக்கு திரிஷ்டி சுத்தி போடணும்ங்க."
"நக்கல் ஜாஸ்தி உனக்கு. பகுத்தறிவுக்கே திருஷ்டியா?இரு இதையெல்லாம் ஒரு நாள் எங்கப்பா கிட்ட போட்டு குடுக்குறேன்."
":-)"

ஒரு வழியாக பெண் உடை மாற்றி வந்து விடுகிறது. வழக்கமான விமர்சனங்கள். புடவை பற்றி, நகைகள் பற்றி, மேக்கப் பற்றி. இதெல்லாம் ஊருக்கு ஊரு மாறாது போல்.
என் அம்மா வீட்டு சைடு, தாய் மாமா, மாமிக்கு தான் சகல மரியாதை கிடைக்கும். மூணாவது முடிச்சுக்கு மட்டும் தான் அக்காவை அழைப்பார்கள்.
ஆனால் இங்கோ மாப்பிள்ளையின் அக்காவுக்கு அதி முக்கித்துவம் கொடுக்கிறார்கள். மேடையில், புரோகிதர், மணமக்களுடன், அந்த அக்காவுக்கு மட்டும் தான் இடம் கொடுக்கிறார்கள். எல்லா சடங்கையும் அவளை விட்டு தான் செய்ய சொல்கிறார்கள். ஆனால் இந்த கல்யாணத்தின் அக்கா ஒரு சாப்ட்வேர் அக்கா. புரோகிதரின் கட்டளைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல், புடவையை இழுத்து பிடித்துக்கொண்டு தடுமாறியது.
டும் டும் டும். தாலி கட்டியாகி விட்டது. அடுத்து திருநீறு பூசும் படலம். அதற்கும் ஒரு பெரிய வரிசை. ஆனால் இதில் பெண்களும் உண்டு. கதிர் தான் மணமகனுக்கு ஒரே அண்ணன், அதனால் மைனி (அண்ணி) திருநீறுக்கு, என்னை தான் அழைத்தார்கள். ரொம்ப பெருமை எனக்கு.

மதிய உணவில் பருப்பு சாதத்தில் அப்பளம் உடைத்து போட்டு சாப்பிடுகிறார்கள். கலர்கலராக மூன்று பாயசம் வைக்கிறார்கள்.
அன்றைக்கு மாலை reception. அதாவது முகூர்த்த நாள் அன்று நிறைய திருமணங்கள் நடைபெறும் என்பதால், காலையில் வர இயலாதவர்கள், வாழ்த்த வருவதற்காக ஏற்படுத்தப் பட்டது தான் இந்த reception பழக்கமாம். இப்போது அது ஒரு போட்டோ session என்ற அளவில் மாறி விட்டு இருக்கிறது. Orchestra வைப்பதும் சமீபத்திய முன்னேற்றம். reception முடிந்து வைக்கும் சடங்குக்கு பேர் 'நாலாம் நீர்'. இதென்ன நாலாம் நீர் என்றால், அந்த காலத்தில் திருமணத்தின் ஒவ்வொரு சடங்குக்கு முன்னதாகவும் மாப்பிள்ளையும் பெண்ணும் நீராட்ட படுவார்களாம். இது நாலாவது நீராட்டு என்பதால் அந்த பெயர். இப்போது வெறும் பெயர் மாத்திரம்.பெண் தலையில் மாப்பிள்ளையும், மாப்பிள்ளை தலையில் பெண்ணும் அப்பளம் உடைக்கிறார்கள். பின்னாளில் ஒருவர் மண்டையை ஒருவர் உடைப்பதற்கு ஒரு நல்ல ஒத்திகை.பிறகு பித்தளை தேங்காய் உருட்டுகிறார்கள்.இதை பார்த்துக்கொண்டே இருந்த அர்ஜுன் விடு விடுவென்று மேடைக்கு போய் ஒரு அப்பளத்தை எடுத்து தன் தலையில் தானே உடைத்து கொண்டான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க, "உன் புள்ளைக்கு பொண்ணு பாருடீ, கல்யாண ஆசை வந்து விட்டது" என்று என்னையும் சேர்த்து வாரினார்கள்.

"சுருள்". மாப்பிளைக்கு உறவுக்காரர்கள் எல்லாரும் மொய்ப்பணம் வைக்க வேண்டும்.
"நீ மைனி சுருள் வை" என்று எனக்கு பணம் கொடுத்தார் கதிர். இந்த பணம் எல்லாம் மாப்பிளையின் அக்காவுக்காம். கொள்ளை வசூல்.இது முடிந்து எல்லாருக்கும் முறுக்கு தருகிறார்கள். பெண் வீட்டில் செய்தது. "முறுக்கு நல்லா இருக்கு" என்று பெண் வீட்டாரும் "இன்னும் கொஞ்சம் உப்பு போட்ருக்கணும்" என்று மாப்பிள்ளை வீட்டாரும் சொல்லி கொண்டே நொறுக்குகிறார்கள்.
பிறகு இரவு உணவு. தீயலும் சோறும். தீயல் என்பது தேங்காய், மிளகாய், மல்லி எல்லாம் வறுத்து செய்யும் ஒரு குழம்பு. வத்தகுழம்பின் ஒரு வடிவம். என் மாமியார் சமைப்பதில் எனக்கு ரொம்ப பிடித்தது இது தான்.

உணவிற்கு பிறகு மாப்பிள்ளையை பெண் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.எங்கள் ஊரில் சாந்தி கல்யாணம் மாப்பிள்ளை வீட்டில் நடக்கும். "பெண் என்பவள் வளைந்து கொடுக்க தெரிந்தவள்.எங்கும் சமாளித்து விடுவாள். ஆண்களுக்கு தான் புது இடம் பழக நேரம் ஆகும்" என்று காரணம் சொல்வார்கள். இவங்க அப்டியே மாத்தி சொல்றாங்க. Good actually.

மறுநாள் காலை, நாங்கள் சிலர் மாத்திரம் கிளம்பி பெண் வீட்டுக்கு சென்றோம். அடுத்த சடங்குக்கு பெயர் "ஏழாம் நீர்" . "ஐந்தாம் ஆறாம் நீர்லாம் எங்க?" என்று கேக்க வில்லை நான். ஏற்கனவே ஏகப்பட்ட கேள்வி கேட்டு நச்சரித்ததால் என் பக்கத்தில் வருவதற்கே என் புகுந்த வீட்டினர் சற்று பயந்த மாதிரி தோணுச்சு.அங்கே பொங்கல் வைத்து, படைத்து, பெண்ணையும் மாப்பிள்ளையையும் அமர வைத்து ஒரு பொம்மையை தட்டில் வைத்து அவர்கள் கையில் குடுத்து, "சரி புள்ளைக்கு எல்லாரும் பணம் போடுங்கள்" என்கிறார்கள்.என்னது ஒரே இரவில் புள்ளையா? பகுத்தறிவுவாதிகளை ஒரேடியாக குறையும் சொல்லி விட முடியாது...:-)
அட மறுபடியும் வசூல். அந்த பணமும் பையனின் அக்காவுக்கு தானாம்.என் தம்பி கல்யாணத்தை நாகர்கோவிலில் வைக்க சொல்ல வேண்டும்.

மூர்த்தி கல்யாணம் இனிதே நிறைந்தது. இல்லை இல்லை இனிமே தான ஆரம்பம்...:-)

- இன்னும் பயணம்(கன்னியாகுமரி)

13 comments:

Rajalakshmi Pakkirisamy said...

//என்னது ஒரே இரவில் புள்ளையா? அட மறுபடியும் வசூல். அந்த பணமும் பையனின் அக்காவுக்கு தானாம்.என் தம்பி கல்யாணத்தை நாகர்கோவிலில் வைக்க சொல்ல வேண்டும்.

மூர்த்தி கல்யாணம் இனிதே நிறைந்தது. இல்லை இல்லை இனிமே தான ஆரம்பம்//

:) :) :)

*Kathir* said...

இந்த தொடரில..இந்த பகுதிதான் மிக அருமை... எப்பவுமே உங்க narration தான் சிறப்பு.

பிரியா அக்க சச்சின் மாதிரி.. எத்தன blogs படிச்சாலும்.. உங்க blog படிக்கும்போது கெடைக்கிற experience தனிதான்

இந்த பகுதில உங்ககிட்ட கொஞ்சம் பாக்யராஜ் touch தெரியுது...அவ்ளோ interesting :)))

Maddy said...

"உங்கள் பகுத்தறிவு பார்வைக்கு திரிஷ்டி சுத்தி போடணும்ங்க."

என் தம்பி கல்யாணத்தை நாகர்கோவிலில் வைக்க சொல்ல வேண்டும்.

பிரியா டச்சுன்னா இது தான். சரி எங்களையும் கூப்பிடுங்கோ, கூப்பிடலனும் பரவல்ல, எங்கேன்னு மட்டும்சொல்லிடுங்கோ.நாங்க வந்தறோம்!!

ரொம்ப ஏக்க படர மாதிரி இருக்கே, காத்திருக்கும் உங்களுக்கும் இன்னொரு தடவை கல்யாணம் பண்ணிடோவோமா?

*Kathir* said...

//காத்திருக்கும் உங்களுக்கும் இன்னொரு தடவை கல்யாணம் பண்ணிடோவோமா?//

I think this is "கதிருக்கும் உங்களுக்கும்" ;)

அபி அப்பா said...

அக்காவுக்கு பணம் கிடைக்க்க தம்பி கல்யாணத்தை திருச்சில இருந்து நாகர்கோவில் வரை போகனுமா , எங்க ஊர்ல வச்சா (எங்க வீட்டூல வச்சா போதும்)

என் கல்யாணத்துல அந்த பணம் பெரிய அக்காவுக்கா சின்ன அக்காவுக்கான்னு பிரச்சனை வந்து என் புது மனைவி "இதுக்காக சண்டை வேண்டாம் என் கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்ல அப்படியே ஷாக்க்க்க்க்க்க்க்க்க் ஆகிட்டாங்க. பின்ன 2 பேரும் சமாத்ஹானமாகி பெரிய தம்பி (நான்) கல்யாணத்துக்கு பெரிய அக்கா, சின்னவன்கல்யானத்துக்கு சின்ன அக்கான்னு ஒரு நாட்டாமை தீர்ப்பு சொல்லுச்சு. அதன் படிதான் நடந்தது. நாட்டாமைக்கு வயசு 5 (என் அக்கா பையன்)

செம கலாட்டாவா எழுதி இருக்கீங்க!

ரிதன்யா said...

// (உங்கள் யாருக்காவது ஒரு பலிகடா effect கிடைத்தால் நான் பொறுப்பில்லை.அங்கே நடந்ததை சொல்கிறேன்)//

குசும்பு....

ரிதன்யா said...

//"பெண் என்பவள் வளைந்து கொடுக்க தெரிந்தவள்.எங்கும் சமாளித்து விடுவாள். ஆண்களுக்கு தான் புது இடம் பழக நேரம் ஆகும்" என்று காரணம் சொல்வார்கள். இவங்க அப்டியே மாத்தி சொல்றாங்க. Good actually.//

ம் இது ப்ரியா..

butterfly Surya said...

மிகவும் ரசித்து சிரித்து படித்தேன். வாழ்த்துகள்.

அடுத்த பதிவு எப்போ..??

இரவுப்பறவை said...

விட்ட பார்ம்-அ புடிச்சிட்டீங்க போல.. கலக்குங்க..

Anonymous said...

nallarukku akka.

Mugilan said...

முதல் முறையாக ஒரு லைவ் கமெண்ட்!

அப்படியே ஏதோ ஒரு திருமணம் சென்று வந்த மாதிரி இருந்தது. ரொம்பவே நல்லா எழுதி இருந்தீங்க.

பலரும் இதை சொல்லி இருப்பாங்க‌. நல்ல சென்ஸ் ஆஃப் கியூமர் :)

அருமையான பதிவு !

Several tips said...

சூப்பர் பதிவு

Sara Suresh said...

//உணவிற்கு பிறகு மாப்பிள்ளையை பெண் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.எங்கள் ஊரில் சாந்தி கல்யாணம் மாப்பிள்ளை வீட்டில் நடக்கும்.//

நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஒரு சாரார் வழக்கம். மற்றபடி குமரி மாவட்டத்தில் எங்கள் வீடுகளில் மாப்பிள்ளை வீட்டில் தான் நடத்துவோம்.