Thursday 30 December 2010

ஒரு இடம், ஒரு படம், சில புத்தகங்கள்

சென்ற மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு எங்காவது போய் வரலாம், என்று பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் வேலூருக்கு சற்று முன் இருக்கும் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்திற்கு( வேலூர் பொற்கோவில்) சென்றோம்.அன்று இரவே வெகு உத்வேகத்துடன் ஒரு பதிவை ஆரம்பித்து சிறிது எழுதி, பிறகு இதை எழுத கூடாது, அதை எழுத கூடாது என்று அழித்து கடைசியாக ஒரு எம்ட்டி பைல் டெஸ்க்டாப்பில் ஒரு மாதமாக தூங்குகிறது. இப்போது எல்லாம் மறந்து நினைவில் இருப்பது இரண்டே விஷயங்கள். ஒன்று அவ்வளவு பெரிய இடத்தின் சுத்தமும், நேர்த்தியான பராமரிப்பும். இன்னொன்று கியூவில் போய் கொண்டு இருக்கும் போது முன்னால் இருந்த இரு பையன்கள். பெங்களூர் போலும். "இவ்வளவு பெரிய இடம் பெங்களூரில் கிடைத்து இருந்தால் டெக் பார்க் கட்டிருப்பாங்கடா, இங்கனால கோயில் கட்டிட்டாங்க' ன்னு பேசிக்கொண்டார்கள்.

---000---

மன்மதன் அம்பு.

பதிவில் இந்த இடம் வந்ததும் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாக pause. Sigh. Sniff.

தசாவதாரத்தில் ஒரு சீனில் பாட்டி பீரோக்குள் பூட்டி கொள்வார். வெளியில் இருந்து தட்டி அசின், "பாட்டி சித்த வெளிய வரேளா?" என்பார்.

பாட்டி: மாட்டேன், அந்த கட்டால போறவன் அங்கே தான் இருக்கானா?

அசின்: எந்த கட்டால போறவன்? இங்க நெறைய பேர் இருக்கா!

உன்னை போல் ஒருவன்
கமல்: எனக்கு இடது வலது பேதம் கிடையாது. ஆனா அது எழுதுறதுல மட்டும்.

இப்படி சொந்த கருத்துக்களை (அடுத்தவன் காசுல) வசனமா எழுதி பார்க்கும் கமல் இந்த படத்தில் சற்று அதிகமே கடுப்பேத்துகிறார்.

ஹம்மரில் வாதிட்டு கொண்டே செல்லும் த்ரிஷாவும் மாதவனும் பேசிக்கொள்ளும் அதிமேதாவித்தனமான வசனங்களை சொல்வதா, சொந்த குரலில் தமிழ் பேசி நடித்து விட்டதற்காகவே "தமிழ் கவிதையால் தான் நாக்கு வழிக்கிறேன்" என்று த்ரிஷா பேசும் அமெச்சூர் வசனத்தை சொல்வதா, Matrimony/Alimony என்று சங்கீதாவின் வசனத்தை சொல்வதா...மாதவன் ஒரு இடத்தில் 'kyonki mere paas maa hai"என்று ஹிந்தியில் வேறு பேசுகிறார். இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. எங்கென்று தான் நினைவு வரவில்லை.

சென்னையை தாண்டி செங்கல்பட்டு வந்துட்டாலே இந்த வசனங்களை புரிந்து கொள்வதெல்லாம் சிரமம். எங்க ஊருகாரங்களை எல்லாம் நினைத்து பாருங்கள். சென்னையில் இருந்து நானூறு கிலோமீட்டர். வெறுமே கப்பல் பார்க்க எல்லாரும் படத்துக்கு வருவார்கள் என்று நினைத்து விட்டார் போலும்.

பஞ்ச தந்திரத்தில் ஒரு சீனில் குடித்து விட்டு சிம்ரன் வீட்டின் சுவரேறி குதிப்பார். "யாராவது பாத்துட்டாங்கன்னா என் துப்பில மூஞ்சிடுவாங்க" ம்பார். அதுக்கு தியேட்டரில் எல்லாரும் சிரிச்சாங்கன்னு இந்த படத்துல மாதவனை படம் முழுக்க தண்ணி போட்டுட்டு அதே மாறி பேச வச்சுருக்கார். என்ன கொடுமை இது உ.நா?

ஒரு நடிகராக கமலஹாசனின் ரசிகை தான் நானும். ஆனால் இந்த படத்தில் அவர் பண்ற எல்லா வித்தைகளையும் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் த்ரிஷாவுடன் ரொமான்ஸ் ட்ராக்கில் அடக்கி வாசித்து இருப்பது பாராட்டுதலுக்குரியது.

தசாவாதரத்தில் கிருஷ்ணவேணி பாட்டியையும் ஆராவமுதனையும் லிங்க் பண்ணிய அதே திரைக்கதை ஆசிரியரா இந்த கிளைமாக்ஸ் பண்ணியது?
What happened to Kamal? Is he too tired just as he looks in the movie?

 சரி அக்கட பூமியில் எப்படி ஓடுகிறது என்ற அக்கறையில் எங்க டீமில் இருக்கும் ஒரு அண்ணையாவிடம் "மன்மத பானம் எலா ச்சேஸ்துந்தி மீ வூருலோ?  என்றால் அவர், "மன்மத பானம்னி ஒத்துலேயி, மொன்ன மருத நாயகமணி வொக்க பிலிம் பூஜ ச்சேஸாரே மீ   கமலஹாசனு...அதி ஏமாயிந்தி? ன்னார். History is always remembered.


---000---

கடந்த இரண்டு மாதங்களில் அசோகமித்ரனின் மானசரோவர், சுஜாதாவின் நைலான் கயிறு,சிவந்த கைகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, 
மற்றும் சில சிறுகதைகள் படித்தேன்.

நைலான் கயிறு தான் சுஜாதாவின் முதல் நாவலாமே? என் இனிய இயந்திரா, எந்திரனாகி இருக்கிறது.அதிலும் மீண்டும் ஜீனோ கடைசி காட்சியில் பார்ட் பார்ட்டாக கழண்டு போன ஜீனோவை மியூசியத்தில் போய் காட்சி பொருளாக வரிசையில் நின்று பார்ப்பார்கள்..:-) Same blood.

கல்லூரி ஹாஸ்டலில் நிறைய பெண்கள் மில்ஸ் அண்ட் பூன் என்று பேசிக் கொள்வார்கள். நானும் அது ஒரு எழுத்தாளர் பெயர் என்றே வெகு நாட்கள் நினைத்து இருந்தேன்.பிறகு தான் தெரிந்தது.அது ஒரு பதிப்பகம். நானும் வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு மில்ஸ் அண்ட் பூன் படித்தேன். பிறகு இன்னும் சிலவற்றை கதை சுருக்கம் மட்டும் வாசித்தேன். எல்லாம் ஒரே டெம்ப்ளேட். ஒரு பணக்கார ஆண், அவனுடன் கமிட் ஆன ஆனால் காதல் இல்லாத ஒரு திமிர் பிடித்த பெண், இன்னொரு அழகான பெண் ஆனால் வாழ்க்கையில் ரொம்ப நொந்து போன, கைவிடப்பட்ட நிலையில் இருப்பவள். நடுவில் இருக்கும் பெண்ணை கழற்றி விட்டு இவர்கள் இருவரும் சேர்வார்கள். எங்கேயோ படித்த மாதிரி இருக்குமே? ஆமாம், அதே ரமணிச்சந்திரன் டெம்ப்ளேட் தான். தமிழில் இவர் என்றால் ஆங்கிலத்தில் 'மி அ பூ' போலும். ஆளை விடுங்கப்பா என்று மூடி வைத்து விட்டேன்.

---000---

டிவிட்டர் நிறைய பேருக்கு செல்ல பிள்ளையான பிறகு ப்ளாக்ஸ்பாட் எடுப்பார் கைபிள்ளை ஆகி போனது தெரிந்த விஷயம்.நானும் இருக்கிறேன் டிவிட்டரில்(@priyakathiravan).

( ஆ. ராசா ஹாஸ்பிடலில் சேர்ந்தது மாதிரியான) செய்திகளை சுட சுட தருவதோடு, சுவாரஸ்யமான லிங்குகள், படங்கள், பொன்மொழிகள், பிரபல பதிவர்களின் பொது அரட்டை என்று டிவிட்டர் ஒரு நல்ல பொழுது போக்கு களம்.  'வெறும் நூத்தி நாப்பது தான். அதுக்குள்ள சொல்ல வந்ததை நச்ச்சுன்னு சொல்லு' என்று டிவிட்டர் வைக்கும் சேலஞ்சை நீந்தி கடப்பவர்கள் சாமர்த்திய சாலிகள்.இங்கே மட்டைக்கெல்லாம் மதிப்பில்லை 20-20 மாதிரி அதிரடியாக ஆட வேண்டும்.'மழைக்கும் பனிக்கும் இடையேயான ஏதோ ஒன்றில் நனைந்து கொண்டே ஆபீஸ் வந்தேன்' என்று சொன்னால் ஒருத்தர் சீண்ட மாட்டார்கள். அதே "பெங்களூர் கிளைமேட் செம மப்பில் இருக்கிறது" என்று சொல்லுங்கள். எல்லாருக்கும் பிடிக்கும். Learning yet.

 சமீபத்தில் எனது பேவரிட்டில் இடம் பிடித்த ட்வீட்.


என் ஹெட்போனில் விருதகிரி பாடல்கள்தான் காலையில் இருந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. நான் அதைக் காதில் மாட்டவில்லை.(@writemugil)

யாரையாவது பாலோ பண்ணினால் சிரத்தையாக "So and so is following you in twitter" என்று மெயில் அனுப்பும் ட்விட்டர், unfollow பண்ணால் சமர்த்தாக அதை அவர்களுக்கு சொல்லாதாம்.  Suweet.
---000---


அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Wishing each of you a healthy, happy and peaceful 2010.

---/\---