ட்ரெயின் கிளம்பி ஒரு வாரம் கழித்து நானும் வந்து வரிசையில் நிற்கிறேன்.தமிழ் பதிவுலகமே அலசி பிழிந்து காய போட்டு விட்டு, அடுத்தடுத்து வேலையை பார்த்து கொண்டு இருக்கிறது. நான் புதிதாக ஒன்றும் சொல்லி விட போவதில்லை என்றாலும், என்னுடைய டைரிக்கு ஒரு குறிப்பு வேண்டும் ....நாளைக்கு அர்ஜுன் வளர்ந்து 'ஏம்மா, நீ எந்திரன் பார்த்தியா இல்லையா' ன்னு கேட்டுட கூடாது பாருங்க. வரலாறுக்கு சாட்சி முக்கியம் இல்லையா? அதற்காக சில குறிப்புகள்.
- வசீகரன் என்ன தான் ரோபோவை கண்டு பிடித்து, அதற்கு உணர்வூட்டி, பிறகு அதை உடைத்து போட்டு, கடைசியில் ஏதேதோ deworming, demagnetising என்று வித்தை காண்பித்தாலும், எனக்கென்னவோ சிட்டி தான் ரஜினி மாதிரி தோன்றியது.அதிலும் சிட்டி சனாவிடம் "ரோபோசெபியன்ஸ்" பற்றி பேசும் போது ரஜினி அடுத்து ஒரு படத்தில் முழுக்க வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எந்த ஒரு எல்லா ரஜினி ரசிக, ரசிகையர்க்கும் வந்திருக்கும். எனக்கு வந்தது.
- சன் டிவி ப்ரோமொக்களின் போது காதல் அணுக்கள் பாடல் பற்றி ஷங்கர் சொல்வார். "அது ஒரு டெசர்ட்.. ரொம்ப சிரமப்பட்டு தான்
அந்த இடத்துக்கு போனோம். உலகத்திலேயே இப்படி இடம் இது ஒன்று தான்....." அப்படின்னு.
ப்ரோமோவில் காண்பிக்கும் முதல் வரியை மட்டும் பார்த்து விட்டு "ஒரு ரூமுக்குள்ள கொஞ்சம் மண்ணை கொட்டி, கொஞ்சம் தண்ணியை விட்டு ஒரு குடையை நட்டு வெச்சு இருந்தா இத மாதிரி செட் வந்துருக்க போகுது...இதுக்கு எதுக்கு இவ்ளோ கஷ்டப்படனும்...தன் காசுன்னா, மதுரை ஜிகிர்தண்டா கடை, மொட்டை வெய்யில், தியேட்டர் ஆபரேட்டர் ரூம் இதிலேயே மேட்டரை முடித்து விட வேண்டியது. இதே அடுத்தவன் காசுன்னா, டெசர்ட் என்ன டெசர்ட்....அடுத்த படத்துக்கு ஏதாவது பிளானெட்க்கு கூட போவாங்க..."என்று ஏதோ அறிவு ஜீவி மாதிரி கமென்ட் அடித்து கொண்டு இருந்தேன். பாடல் படத்தில் பார்த்த போது தான் புரிந்தது. கண்ணை சிமிட்டும் நேரம் கூட மிஸ் ஆகி விடக்கூடாது என்று சிமிட்டாமலேயே முழு பாடலையும் பார்த்தேன். It was an experience.
- அரிமா அரிமா பாடல் படத்தில் வரும் போது, அட இப்போ எதுக்கு
பாட்டு? என்று தோன்றியது. அதுவும் அந்த பாடலின் படமாக்கம்,
இரும்பிலே ஒரு இருதயம் மாதிரியே அமைந்து விட்டது. பேசாமல் மணிரத்னம் படம் மாதிரி பின்னணியில் அரிமா அரிமா ஒலிக்க, சிட்டி தன்னுடைய ரோபோ சாம்ராஜ்யத்தை உருவாக்குவதை போல காட்சிகள் அமைந்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும்.
- என்னதான் ஐஸ்வர்யா உலக அழகியாகவேயும், சிட்டி ரஜினி பொம்மையாகவும் இருந்து விட்டு போகட்டும்...அதற்காக அவங்க வீட்டு வேலை எல்லாம் செய்ய வைப்பதெல்லாம்...என்ன தலைவா இது? எப்படி இருந்த நீங்க :-(
பச்சை மிளகாய் சாப்பிடுவதும், பரிட்சைக்கு பிட்டு கொடுப்பதும்...ஷங்கர் உங்களை ரொம்பவே கெடுத்து வெச்சுருக்கார்.அதிலும் கொசு பிடிக்க போவது...'பழக'றத விட கடுப்படித்தது.
- ஐஸ்வர்யா ஒரு அம்பத்து மூணு அம்பத்து நாலு கிலோ தாஜ்மகலாக ஆகி இருப்பதை போல் தெரிகிறது. நடனம் அம்சம்.'இந்த ரோலில் சதாவை கூட போட்டு இருக்கலாம்..எதற்கு ஐஸ்வர்யா...' என்று ஏதோ ஒரு பதிவில் படித்தேன். பின்ன ஹிந்தியில் வெளியிட ச(சா)தாவையா போட முடியும்?
- மிலிட்டரி டெஸ்டில் சிட்டி சொதப்பியதும் வசீக்கு கோபம் வருவது
சரி...சிட்டியின் ஹார்ட் டிஸ்கையும், பேட்டரியையும் நட்டு போல்டு இத்யாதிகளை பிடுங்கி போடாமல், ஏதோ பொன்னம்பல ரகுவரன் வகையறாக்களை மாதிரி அதை (அவனை? அவரை?) அடித்து நொறுக்கி குப்பையில் கொட்டி தலைவரே காமெடி பண்ணும் போது, சந்தானம் கருணாஸ் எல்லாம் வேறு எதற்கு படத்தில்? நல்ல வேளையாக, போரா குப்பை மேட்டில் வந்து "சிட்டீ..... சிட்டீ..." என்று கத்தி கூப்பிட்டு தேடுவதாகவெல்லாம் கொடுமை பண்ணிவிட வில்லை.
- சிட்டியை அடிச்சு உடைச்சுட்டு வசீ அப்செட். சனாவும் அவரும் நேராக மச்சு பிச்சு போய் கிளிமாஞ்சரோ பாட வேண்டியது தானே? நடுவுல எதற்கு கலாபவன் மணி வருகிறார்?
For good, 'பன்னியும் சிங்கிள், சிங்கமும் சிங்கிள்,'பெண் சிங்கமும்' சிங்கிள்.' என்றெல்லாம் அபத்தம் பண்ணாமல்...ஓடி விடுகிறார்கள் வசீயும் சனாவும். நன்றி ஷங்கர்.
-அஞ்சானா அஞ்சாணி என்று ஒரு படம், ரன்பீர் கபூர்,பிரியங்கா சோப்ரா நடித்து, எந்திரன் வெளியான அதே நேரத்தில் வெளியானது. "எந்திரன் படத்துக்கு டிக்கட் கிடைக்க வில்லை என்றால் எனது படத்தை பாருங்கள்" என்று ரன்பீர் கெஞ்சி கொண்டிருப்பதாக கேள்வி...
- 'சன் டிவி ஷேர் வாங்கி வையுங்கள். எந்திரன் ரிலீசுக்கு பிறகு 15 % appreciate ஆகும்' என்றெல்லாம் மக்கள் டிவிட்டரில் தட்டி விட்டு கொண்டிருந்தார்கள். அப்படி ஏதும் நடந்த மாதிரி தெரிய வில்லை.
- படம் முடிந்து வெளில வரும் போது என் கணவர் சொன்னார்.
"தோனியும், ஷங்கரும் ஒன்று. சொந்த சரக்கு இருக்கா இல்லையான்னு நம்மளை குழப்பினாலும், சிறந்த கேப்டன்கள்.ஒரு நல்ல டீம், அதிர்ஷ்டம் இரண்டையும் வைத்து கொண்டு ஜெயித்து விடுகிறார்கள்"
- உனக்கு மிக மிக பிடித்த ஒரு ரஜினி படம் சொல்லு.
"பாட்ஷா"
சங்கருடைய பெஸ்ட் படம் என்று எதை சொல்வாய்?
"அந்நியன்"
சிவாஜி வந்த போது இந்த பதில்கள் மாறும் என்று பெரிய எதிர்பார்ப்புடம் படம் பார்த்தேன்.
எந்திரனுக்கு பிறகும் கூட என்னுடைய பதில்கள் அப்படியே தான் இருக்கின்றன.