Monday, 7 June 2010

Well Done Abba - விமர்சனம்

வடிவேலு ஒரு படத்தில் “என் கிணற்றை காணோம்” என்று போலீஸை டென்ஷன் செய்து காமெடி பண்ணுவார். இந்த படத்திலும் கிணறு காணாமல் போகிறது. காமெடிக்காக அல்ல...சீரியஸாகவே காணாமல் போகிறது.


படத்தின் கதை:

ஆந்திராவின் சிக்கட்பள்ளி கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்று டிரைவர் வேலை பார்க்கும் ஒரு எழுத்தறிவு கூட இல்லாத அர்மான் அலி.த்ரீ-இடியட்ஸில் வாத்தியாராக வருவாரே அவரே தான்.கிராமத்தில் அவருடைய மகள் சித்தப்பா சித்தியுடன் வசிக்கிறாள்.

அவளை பார்க்க சொந்த ஊருக்கு வரும் போது, சொந்த ஊரில் தண்ணீர் கஷ்டம். மகளுக்கு திருமணம் வேறு முடிக்க வேண்டும். இவர் "கிணறை வெட்டி பார்; கல்யாணம் பண்ணி பார்' என்று இறங்குகிறார். அரசாங்கம், வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு கிணறு வெட்ட வழங்கும் உதவித்தொகையை பெற முயற்சி செய்கிறார்.

கிராம அதிகாரி, தாசில்தார், MPDO, சர்வே பண்ண வேண்டிய எஞ்சினியர், ரிஜிஸ்தார், காண்ட்ராக்டர் என்று ஆளாளுக்கு கமிஷன் தர வேண்டியாதாகிறது. முதல் இன்ஸ்டால்மண்டில் வந்த தொகை இதற்கே சரியாகிறது. இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வர வேண்டுமானால், கிணறு வெட்ட ஆரம்பித்து விட்டதாக சான்று காட்ட வேண்டும். அத்தனை அதிகாரிகளும் சேர்ந்து பொய் போட்டோ, பொய் ரசீது என்று தயார் செய்து இரண்டாவது இன்ஸ்டால்மென்ட் வரவழைக்கிறார்கள். அதும் கமிஷனில் காலி.

கட்டவே ஆரம்பிக்க படாத கிணற்றுக்கு "இந்த கிணற்றில் தண்ணீர் மிகவும் இனிப்பாக இருக்கிறது" என்று கூட சர்டிபிகேட் தருகிறார் கிராம அதிகாரி.

இப்படியே ஒவ்வொரு இன்ஸ்டால்மென்ட் பணமும் அதிகாரிகளின் கமிஷனில் கரைந்து விட, தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்து கலங்கி போகிறார் அலி. அப்போது அவருடைய மகள் லஞ்ச திருட்டில் தொலைந்து போன தனது தந்தையின் கிணற்றை மீட்க முடிவு செய்கிறாள்.

அவர்கள் இருவருக்கும் காமிராவின் முன் தலைமுடியை விரித்து போட்டு கொண்டு அடிக்குரலில் பேச வராது; வர்மக்கலை மர்மக்கலை ஏதும் தெரியாது; ஸ்டுடண்ட்ஸ் வைத்து நெட்வர்க் உருவாக்க தெரியாது, அட்லீஸ்ட் டவாலி வேலை பார்த்தாலும் பரவாயில்லை அதுவும் இல்லை, குறைந்த பட்சம் சேவல் வேஷம் கூட போட தெரியாது என்றால் என்ன பண்ணுவார் பாவம் அதனால்...

அதனால் பொறுமையாக போலீஸ் ஸ்டேஷன் சென்று 'எங்கள் கிணறை காணோம்' என்று புகார் கொடுக்கிறார்கள். அவர் வடிவேல் படத்துல வர்ற மாதிரி சிரிப்பு போலீஸ் அல்ல. உண்மையில் டென்ஷன் ஆகி விடுகிறார். அவரிடம் அதிகாரிகள் தயார் செய்து கொடுத்த அத்தனை ஆதாரங்களையும் காட்டுகிறார்கள். அதோடு அந்த கிராமத்தில் இது மாதிரி இன்னும் எழுபத்து ஐந்து கிணறுகள் "காணாமல் போய்" இருப்பதையும் கண்டு பிடிக்கிறார்கள். பிரச்சனை மந்திரி வரை போகிறது. எப்படி சால்வ் ஆகிறது என்பதையும் நானே சொல்லி விட்டால் நீங்கள் படம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விடும் என்பதால் அதை மட்டும் சொல்லாமல் விடுகிறேன்.

இனி போமன் இராணி பற்றி. இந்த படத்தில் அண்ணன் தம்பி என்று இரட்டை வேடம். தம்பியாக வருபவர் சில காமெடி முயற்சிகளுக்கு மட்டும். அண்ணன் தான் ஹீரோ. எழுத்தறிவில்லாத innocent டிரைவர் / அப்பா. நன்றாக நடித்தார் என்று சொல்வதற்கில்லை. அந்த கதாபத்திரத்தில் வெகு இயல்பாக பொருந்தி போகிறார். படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் இவர் இருக்கிறார். இவருக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.

அடுத்து அவருடைய மகளாக வரும் முஸ்கான் அலி. துருதுரு என்று இருக்கிறது. விளையாட்டுத்தனமான பெண். ஆனால், நாய்க்குட்டியை காணவில்லை என்றதும் மேக்கப் போட்டு கொண்டு கடலில் குதிக்கும் அளவுக்கு லூசு இல்லை. விவரமான பெண். அப்பாவுடன் சேர்ந்து கிணற்றை தேடி போராடுவது ரசிக்கிறது.

இது ஒரு காமெடி படம் அல்ல...படத்தில் காமெடி முயற்சிகளும் கம்மி தான். சட்டசபையில் இந்த கிணறு பிரச்சனையை விவாதிக்க படும் போது, ஆளுங்கட்சி அமைச்சர் சொல்கிறார், "எதிர்கட்சிக்காரர்கள் தான் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து கொண்டு ஏதோ சதி பண்ணி கிணறுகளை திருடி விட்டதாக" சொல்கிறார்.

முஸ்கானுக்கும் ஆரிப் அலிக்கும் ஒரு சின்ன ரொமான்ஸ் டிராக், கிராம அதிகாரியான மனைவியை உப்புக்கு சப்பாணி ஆக்கிவிட்டு முன்னிற்கும் கணவர், புது கல்யாண தம்பதி சர்வே எஞ்சினியரும் அவருடைய மனைவியும், "எங்கப்பா மூணு லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த(?) இன்ஸ்பெக்டர் போஸ்ட்; இன்ஸ்பெக்டர் ஆகியும் இன்னும் நீங்கள் அதை திரும்ப சம்பாதித்து எங்கப்பாவிற்கு திருப்பி கொடுக்க வில்லை" என்று மனைவியிடம் சதா வசை வாங்கும் இன்ஸ்பெக்டர் கணவன் என்று படத்துக்குள் நிறைய குட்டி குட்டி கதைகள். சிலது படத்தோடு ஒட்டியும் சிலது ஒட்டாமலும்.

அதிலும் இந்த கிராம அதிகாரியின் கணவராக வருபவர் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறார்.இன்ஸ்பெக்டரின் மனைவியாக வருபவர் சோனாலி குல்கர்னி. மே மாதம் படத்தில் ஹீரோயின்; இந்த படத்தில் ஊறுகாய் ரோலில் வருகிறார்.

பாடல்கள் படத்தோடு பார்க்க போர் அடிக்க வில்லை.

ஒரு வசனம்: ஆரிப் அலியின் தந்தை சொல்வார். ஒரு போராட்ட ஊர்வலத்தின் போது ஒரு சின்ன பையன் ரோட்டில் அழுது கொண்டு இருந்தான். நான் அழைத்து வந்து வளர்த்தேன். அவனுடைய பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவன்....அதாவது என் மகன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பதே எங்களுக்கு தெரியாது"; பிடித்தது.

ஆந்திரா கிராமத்து ஹிந்தி என்பதால் கைக்கூ, நக்கோ, மியா என்றெல்லாம் வட்டார வழக்கில் பேசுகிறார்கள்.வட்டார மொழியின் தமிழ் பேசும் படங்கள் பார்க்கும் போது ஏற்படும் ஒரு ரசனை உணர்வு இதிலும்.

அரசாங்கம் மக்களுக்கு உதவி செய்வதாக கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் அத்தனை அதிகாரிகள் லெவலையும் தாண்டி கடைசியில் மக்களுக்கு எந்த லட்சணத்தில் போய் சேருகிறது என்ற மெசேஜை சொல்லும் படம்;

My Verdict: "Very well done" என்று சொல்ல ஆசை; ஆனால் படம் சற்று வேகம் கம்மி என்பதால் "Watchable once என்று சொல்ல வைக்கிறது.

இட்லிவடையில் வெளியானது.