Sunday 28 February 2010

விண்ணைத் தாண்டி வருவாயா

முக்கிய குறிப்பு:
"காதல், கவிதை போன்ற வாத்தைகளை கேட்ட மாத்திரத்தில் "...ஐயோ சாமி ஆள விடுங்க" என்று ஓடுபவர்கள், இந்த படத்தை வெறுக்க கூடும்.
அதையும் விட, வயசானவர்களுக்கும் இந்த படம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

கதை: 'விண்ணை தாண்டி வருவாயா' என்ற தலைப்பையும், "ஒரு நாள் சிரித்தேன், மறு நாள் வெறுத்தேன், மன்னிப்பாயா?" என்ற பாடல் வரிகளையும் கோர்த்து, நீங்கள் ஒரு கதையை ஊகம் பண்ணி வைத்து இருந்தீர்கள் என்றால்,your guess is intact.

தமிழில் எல்லாரும் "வித்தியாசமாக படம் எடுக்கிறோம்" என்று கிளம்பி விட்டதில், 'முழு நீள காதல் கதை' என்பது ஒரு மறக்கப்பட்ட விஷயம் ஆகிவிட்ட, இன்றைய தமிழ் பட டிரெண்டில் படம் முழுக்க, லவ், ரொமான்ஸ், இளமை என்று கலர்புல்லாக பொங்கி வழிவதால் இது ஒரு வித்தியாசமான படம் என்று சொல்லலாம்.
பொதுவாக கவுதம் மேனனின் கதாநாயகர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பெண்ணை பார்த்ததும் "what a woman ?" என்று காதலில் விழுந்து துள்ளி குதிப்பார்கள். பக்கத்தில் இருக்கும் சுவர், கதவு எதிலாவது சாய்ந்து கொள்வார்கள். நெஞ்சில் குத்தி கொள்வார்கள். கவிதையாய் காதலை சொல்வார்கள். 'காதலிக்காக சாகலாம்' என்பார்கள். காதலி நினைவில் கண்ணீர் விட்டு கரைவார்கள். Foul language பேசுவார்கள்.

கதாநாயகி, தன்னிம்பிக்கையும் தெளிவுமாய் இருப்பாள். தனக்கு என்ன வேண்டும், எது பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பாள். இதிலும் அச்சு அசலாக தன்னுடைய hero/heroin பார்முலாவை மாற்ற வில்லை அவர். சொந்த கதை, சொந்த கதை என்று ஒரே மாதிரி பீலிங் விடுவதை கொஞ்சம் குறைங்க கவுதம்!

மின்னலே படத்தில், ரீமா சென் மாதவனை பார்த்து, "நீ அமெரிக்காவில் இருந்து அடுத்த வாரம் தானே வருவதாக சொன்னாய்? இப்போ எப்டி வந்த?" என்பார். அதற்கு மாதவன், "flight காலியா இருந்துச்சு, அதன் ஏறி வந்துட்டேன்" என்று சொல்வார். இந்த படத்திலும் இந்த மாதிரி மெல்லிய நகைச்சுவை வசனங்கள் உண்டு.

அதிலும் தன்னை தானே கலாசிக்கொள்ளுவது தான் எவ்வளவு சுகமான விஷயம்? -"நான் கவுதம்மேனன் கிட்ட தான் அசிஸ்டன்ட் ஆக சேர வேண்டும்" என்று சிம்பு சொல்லவும், "என்ன, தமிழ்ல இங்கிலீஷ் பேசி படம் எடுக்க போறியா?" என்று ஒருத்தர் கேட்கிறார்.

-"அவனவன் காதலுக்காக America போறான்...நான் ஆலப்புழா போக
மாட்டேனா??" என்று சிம்பு சொல்றார்.

-"நம்ம friends ஆக இருக்கலாம்" என்று த்ரிஷா சொன்னதும், பின்னணியில்
ரஹ்மான் 'முஸ்தபா முஸ்தபா' ட்யூன் போடறார்.

சீராக போகும் கதை,வழக்கமான பாதையில் தான் பயணிக்கிறது என்றாலும் படத்தின் முடிவு சற்று அதிர்வை ஏற்படுத்தும் twisty யான முடிவு தான். சில இடங்களில் காட்சியமைப்புகள் விறுவிறுப்பாக இல்லாததால் நமக்கு சற்று தளர்வாக இருக்கிறது.

சிம்பு: இப்போது இருக்கிற வளரும் தலைமுறை ஹீரோக்களில், பாட்டு, நடனம் என்ற நிறைய திறமைகள் இருக்கிற ஒரு promising ஹீரோ ஆனாலும் விரல் வித்தை, நயன்தாரா என்று தடுமாறிக்கொண்டு இருந்த career இல் ஒரு நல்ல பிரேக் கிடைத்து இருக்கிறது இவருக்கு. நீங்களா இது? இவ்வளோ நல்லா நடிக்க வருமா உங்களுக்கு?

நான் ரவுடி, நான் மாஸ் ஹீரோ, நான் Don, நான் வித்தியாசமான படங்கள் பண்ண போறேன் என்று தமிழ் ஹீரோக்கள் ஆளாளுக்கு ஒரு ரூட்டை எடுத்ததில், மவுன ராகம் கார்த்திக், அலைபாயுதே மாதவன் இந்த மாதிரி இடங்கள் காலியாக இருக்கின்றன.சிம்புவுக்கு நன்றாகவே பொருந்துகிறது இந்த ரோல்.இதை maintain பண்ணவும்.

த்ரிஷ்: என்ன கலர்? என்ன ஒசரம்? என்ன ஸ்லிம்? இவங்க தலைமுடிய
இறுக்கமா பின்னல் போட்டு, தாவணி பாவாடை கட்டி விட்டு, குத்து பாட்டுக்கு ஆட விட்டுடுவாங்க நம்ம ஊருல. இவங்க composition க்கு தகுந்த மாதிரி இவங்களுக்கு அமைந்த ஒரே ரோல் இது வரைக்கும் ஆயுத எழுத்து மீரா. அடுத்து இப்போ Jessie...Perming / கலரிங் பண்ண தலைமுடி, ஸ்டைலான
காஸ்ட்யூம்கள் என்று கலக்கலாக இருக்கிறார். தன்னுடைய வேலையை ரொம்ப நல்லா பண்றார்.ஆனால், close -up ஷாட்களில் சற்று வயதான மாதிரி
இருக்கிறது...அல்லது வயது தெரிகிறது என்று சொல்ல வேண்டுமா?

ரஹ்மான்: ரஹ்மான் இசையை பற்றி சொல்லுவது 'இட்லி வடைக்கே சட்னி சாம்பார் அனுப்பற' மாதிரி. அதோடு இந்த படத்தின் பாடல்களை பற்றி இணையத்தில் ஏற்கனவே எல்லாரும் எழுதி தள்ளி விட்டார்கள். அதனால் 'படத்துக்கு ஏற்ற வருடும் பின்னணி இசை'என்ற ஒரு வரியோடு முடித்து கொள்கிறேன்.

பாடல்கள் படம் ஆக்கப்பட்ட விதம் ரம்மியமான "feel good ", என்றாலும் எல்லா பாடல்களிலும் த்ரிஷாவும் சிம்புவும் அழகான காஸ்ட்யூம்களில் ஒரே மாதிரி ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். Hosannaa பாடல் கேட்க கேட்க திகட்டாத மாதிரி பார்க்க பார்க்க அலுக்காது.

காமிரா: படத்தின் நிறைய காட்சிகள் கோவாவிலும் கேரளாவிலும் எடுக்க பட்டு இருப்பதால், குளிர்ச்சியாக இருக்கிறது.

சின்மயியின் குரல் Jessie ரோலுக்கு நன்றாக பொருந்துகிறது.

காக்க காக்க ஜோ, வாரணம் ஆயிரம் சமீரா,வேட்டையாடு ஜோ(?) என்று
தன்னுடைய ஹீரோயின்களை பெரும்பாலும் போட்டு தள்ளி விடுவார் கவுதம். ஒரு காட்சியில், "Why does this hug feel so special" என்று சிம்பு கேட்கவும், "ஒரு வேளை இது தான் கடைசியாக இருக்கலாம்" என்று த்ரிஷா சொல்ல, நான் "சரி இவங்களும் காலி" என்று யூகித்தேன். அது சரியா தவறா என்று
நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

My Verdict: Visual/Musical treat, served with lots of love.

இட்லிவடையில் வெளியானது.

Wednesday 24 February 2010

Rocket Singh


ஒருவர் தன்னுடைய சர்தார்ஜி நண்பருடன் ஒரு ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது திடீர் என்று மின்சாரம் போய்விட்டதாம். சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் வந்த போது, சர்தார்ஜியை பார்த்த நண்பர் திடுக்கிட்டு போனார். சர்தாரின் முகம் முழுக்க சாப்பாடு அப்பி இருந்தது. நண்பர் கேட்டார், "என்ன சர்தார்?ஏன் இப்படி ஆக்கி வைத்து இருக்கிறீர்கள்?" அதற்கு சர்தார் சொன்ன பதில், "இருட்டில் எனக்கு என் வாய் எங்க இருக்குன்னு தெரியலை"



நம்ம எல்லாம் இப்படி வெட்டியா சர்தார் ஜோக் சொல்லிக்கொண்டு இருப்போம். உண்மையில் சர்தார்ஜிகள் புத்திசாலிகள். பலசாலிகள். டிவியில் ராணுவ பரேட் காண்பிக்கும் போது கவனித்து பாருங்கள். நிறைய டர்பன் தலைகள் தெரியும். நாட்டுப்பற்று மிக்கவர்கள்.அவர்களுக்கு என்று நிறைய ஒழுங்குகள் இருக்கின்றன.பொய் சொல்ல மாட்டார்கள். திருட மாட்டார்கள். யாரிடமும் கையேந்த மாட்டார்கள். இறைநம்பிக்கை(அவர்களுடைய குரு மீது) இல்லாத ஒரு சர்தாரை கூட பார்ப்பது கடினம். இப்படிப்பட்ட "values " நிறைய உடைய ஒரு சர்தார் சேல்ஸ்மானின் கதை தான் Rocket Singh.

"இந்த படத்தில் கதை தான் ஹீரோ. அப்போ ஹீரோயின்? அது திரைக்கதை. தமிழில் ஏன் இப்படி படங்கள் வருவதில்லை? opening song , குத்துப்பாட்டு, மாஸ் ஹீரோ என்று சாவடிக்கிறார்கள்.Rocket Singh மிஸ் பண்ண கூடாத படம். கண்டிப்பா அதும் தியேட்டரில் போய் பாருங்க. " என்று தமிழ் திரைப்பட ஆர்வலர்களை எல்லாம் புலம்ப வைக்கும் படம் அல்ல இது. மற்றபடி குடும்பத்தினர் அனைவரும் அவரவர் வேலையில் பிசியா இருக்க, குழந்தையும் தூங்கி விட, உலக தொலைக்காட்சிகள் எதிலும் ஏதும் உருப்படியா தேறாத நிலையில், நீங்கள் என்ன செய்வது என்று திரு திருன்னு முழித்து கொண்டு இருக்கும் ஒரு ஞாயிறு மதியத்தை கண்டிப்பாக சுவாரஸ்யம் ஆக்கும் அளவுக்கு இந்த படத்தில் விஷயம் இருக்கிறது.

ஹர்ப்ரீத் சிங் பேடி. 38 % மார்க் வாங்கி Bcom பாஸ் செய்து விட்டு "AYS " என்ற கம்ப்யூட்டர் விற்கும் கம்பெனியில் சேல்ஸ்மானாக சேர்கிறார். பொதுவாக சேல்ஸ்மென்களுக்கு இருக்க வேண்டியதாக நம்பப்படும் எந்த நாசுக்குகளும் தெரியாததால், கம்பெனியில் ஜோக்கராக ஆக்க படுகிறார். நொந்து போன நிலையில் இருப்பவருக்கு சில உதவிகளோடு, சில புள்ளிவிவரங்களும் கிடைக்கவே சுதாரித்துக்கொள்கிறார். AYS உள்ளேயே இருந்து கொண்டு, "Rocket Sales corporation" என்ற பெயரில் யாருக்கும் தெரியாமல் தொடங்குகிறது இவரது computer sales தனி(உள்)குடித்தனம்.அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. Rocket sales க்கு சில ஆர்டர்கள் கிடைக்கின்றன. இவருக்கு உதவி தேவைப்படுகிறது.  AYS இல் பணி புரிபவர்களில் நால்வரை அவர்களின் நிறை, குறை, தேவைகளை புரிந்து கொண்டு, அவர்களை அணுகி தன் Rocket குடித்தனத்தில் சேர்த்து கொள்கிறார்.சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண/சர்வீஸ் பண்ண - சர்வீஸ் மேனேஜர் கிரி, கம்ப்யூட்டர் assemble பண்ண - பியூன் மிஸ்ரா, customer calls answer/transfer பண்ண - டெலிபோன் ஆப்பரேட்டர் Koyna, மார்க்கெட்டிங் பண்ண - சேல்ஸ் மேனேஜர் நிதின்.

Strategic ஆக சில வேலைகளை செய்து ராப்பகலாக உழைத்து காசு பார்க்கிறார்கள்.சேல்சோடு சேல்சாக ஹர்ப்ரீத்துக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் கிடைக்கிறாள். ஒரு நாள் AYS இன் MD "Mr .Puri"யிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பதை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.

ஹர்ப்ரீத்தாக ரன்பீர் கபூர். "Ranbir Kapoor dating Katrina Kaif", "Deepika Padukone and Ranbir Kapoor - Chal Kya raha hai?" என்று ஸ்கூப்கள் படித்து இருக்கிறேனே தவிர இவருடைய படம் நான் பார்ப்பது இதான் முதல் முறை. சர்தார் வேடம் நன்றாக பொருந்துகிறது. சில முக பாவனைகள் பரவாயில்லை. இவரை தவிர படத்தில் நடித்த யாருடைய பெயரும் எனக்கு தெரியாது. ஆனால் எல்லாருமே அவரவர் பாத்திரத்தை தெளிவாக செய்கிறார்கள்.

நம்ம ஊரு படங்கள் மாதிரி குப்பத்து ஹீரோ, குப்பை தொட்டியில் போடப்பட்ட ஹீரோ, ரவுடி ஹீரோ என்று இல்லாமல் பெரும்பாலான ஹிந்தி படங்களில் ஹீரோ ரொம்ப attitude, positive thinking என்று சற்று extreme ஆக இருப்பார். இங்கயும் அப்படியே. AYS கம்பெனி பிரிண்டர், கரன்ட், டெலிபோன் எல்லாவற்றையும் உபயோக்கித்து கொள்வதற்கு, கணக்கு வைத்துக்கொள்கிறான் ஹர்ப்ரீத். என்றாவது ஒரு நாள் AYS க்கு அதை எல்லாம் செட்டில் பண்ணி விட வேண்டும் என்று சொல்கிறான். "Noone is an employee, all are partners" என்று சொல்லி ஐவருக்கும் லாபத்தை பகிர்ந்து தருகிறான். எல்லாரையும் பேசி பேசியே கரெக்ட் பண்றான்.Optimism overdosed.

தனி காமெடி ட்ராக் எல்லாம் கிடையாது. வசனங்களை பேஸ் பண்ணி அங்கங்கே மெல்லிய புன்னகைய வரவழைக்கும் அளவான காமெடி தான். சில வசனங்களும் நன்றாக இருந்தன. உதாரணத்துக்கு ஹர்ப்ரீத்தின் தாத்தா, "உன்னை நான் எந்த திருட்டு தனமும் சொல்லி கொடுத்து வளர்க்கலையே? ஆனா நீ இப்படி திருடனா வந்து நிக்கறியே?" என்று சொல்லவும், அதற்கு ஹர்ப்ரீத் "அன்றைக்கே திருட்டுத்தனம் எல்லாம் சொல்லி கொடுத்து வளர்த்து இருந்தால் நான் இப்படி திருடனாகும் நிலைமை வந்துருக்காது" என்பதும்.

பாடல்கள், ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எபக்ட்ஸ், கிராபிக்ஸ் என்றெல்லாம் எழுத படத்தில் இவை எதுவும் கிடையாது. அதனால் படம் பார்க்கும் போது ஒரு நாவல் படிப்பதை போன்ற உணர்வு தான் எழும். ஆனால் ஓரளவுக்கு விறுவிறுப்பான நாவல். அதிலும் இந்த ஐவரும் என்றோ ஒரு நாள் எப்படியோ மாட்டிக்கொள்ள போகிறார்கள் என்று படம் பார்ப்பவர்கள் யூகித்து விடுவார்கள். அது எப்போ, எப்படி என்று நம்மை சற்று பதற்ற படுத்தும் வகையில் காட்சி அமைத்து இருப்பது நன்றாக இருக்கிறது.


இப்படிப்பட்ட படங்கள் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விடுதல் நலம். ஆனால் இந்த படம் இரண்டரை மணி நேரம் ஓடுவதால், பாதி படம் பார்த்து கொண்டிருக்கும் போது "அம்மா" என்று முழித்து அழும் குழந்தையின் சத்தம், "அடடா, முக்கியமா சீன் பிரேக் ஆகுதே" என்ற உணர்வுக்கு பதிலாக, "Ok,let me have a break and come back" என்று தோன்ற வைக்கிறது.

நான்கு பேர் சேர்ந்து உருவாக்கிய ஒரு சின்ன சாப்ட்வேர் கம்பெனி தான் infosys என்ற விஸ்வரூபம் எடுத்தது என்பதை நினைக்கையில், இட்லிவடை பார்க்க சொல்லி ரெகமன்ட் செய்த இந்த படத்தில், நடக்க முடியாத எதையும் சொல்லி விடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


My verdict: Watchable, Once.

இட்லிவடையில் வெளியானது. 

Wednesday 17 February 2010

ரோஸ்மில்க் ஐஸ்க்ரீம்

"நிழல் விழாத கோபுரம், வளரும் நந்தி, பிரம்மாண்டமான கோவிலுக்கு அஸ்திவாரம் வெறும் ஐந்தே அடிகள் தான், காண தவறாதீர்கள் இன்று
இரவு பத்து முப்பது மணிக்கு உங்கள் சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் தஞ்சை பெரிய கோவில் அதிசயங்கள்"

நேற்று மாலை காதில் விழுந்த வரிகளில் என்னுள் விஸ்வரூபம் எடுத்த என் தஞ்சாவூர் நினைவுகள்...


"Change never Changes"என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு விவரம் தெரிந்து கல்லூரி இறுதியாண்டு வரை கிட்ட தட்ட பதினெட்டு வருடங்கள், மாறவே மாறாத ஒரு விஷயம் லீவுக்கு அம்மாச்சி தாத்தா வீட்டுக்கு தஞ்சாவூர் போவது.ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாம். என் தாத்தாவிற்கு என் அம்மாவோடு சேர்த்து ஏழு பெண்கள். Bank of Thanjavur இல் General manager ஆக இருந்தார்.மிகுந்த கடவுள் பக்தி உடையவர். திருநீறு பட்டை இல்லாமல் என் தாத்தாவின் முகம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. சாமியறைக்குள் நுழைந்து விட்டால் கம்பீரமான குரலில் பாடுவார். வெளியில் வரும் போது கண்கள் கலங்கி இருக்கும். காலையில் முழு மீல்சும், இரவு டிபனுமாக இரண்டு வேளை தான் சாப்பிடுவார்.

அப்போது ஏழு கசின்கள் இருந்தோம். நான் தான் முதல். (இப்போ பன்னிரண்டு).காலாண்டு/அரையாண்டு/முழு ஆண்டு விடுமுறை என்று வருடத்திற்கு மூன்று முறை அனைவருமே அம்மாச்சி வீட்டில் கூடி விடுவோம். அத்தனை பேரும் சேர்ந்து இருக்கும் வீடு ஏதோ திருவிழா மாதிரி இருக்கும்.தாத்தா ரொம்ப கண்டிப்பானவர். காலை நாலரை மணிக்கு எழுந்து மங்கள இசை, கந்த சஷ்டி கவசம்,சுப்ரபாதம் என்று வரிசையாக போட்டு விடுவார். அதும் fullசவுண்டில். ஆறு மணிக்கு மேல தூங்க கூடாது. பெண்கள் தலை விரித்து போட கூடாது.பொட்டு வைக்காம, வளையல் போடாம இருக்க கூடாது, ஐயோ ன்னு சொல்ல கூடாது, நைட் முழிச்சு டிவி பாக்க கூடாது, ஒன்பது மணிக்கு படுத்துடனும்.இப்படி நெறைய கண்டிசன் எங்களுக்கு.

தாத்தா என்றாலே எங்கள் அனைவருக்கும் ஒரு மரியாதை கலந்த பயம் தான். அவர் அலுவலகம் கிளம்பும் வரை அமைதியாக கழியும் எங்கள் காலை.அவருடைய கார் சவுண்டு அடங்கியதும் ஆரம்பிக்கும் ரகளையை திரும்ப சாயங்காலம் கார் சவுண்டு கேட்கும் போது தான் நிறுத்துவோம்.

இப்போதெல்லாம் எனக்கு வீட்டில் நான்கு விருந்தாளிகள் வந்துவிட்டாலே சமையல் வேலையை நினைத்து மலைப்பாக இருக்கும். ஆனால் நாங்கள்
அத்தனை பேரும் கூடி இருக்கும் நாட்களில் என் அம்மாச்சி எப்போவும் சமைத்து கொண்டே தான் இருப்பார். வீட்டில் குக்கர் விசில் சத்தம் எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும். ஒரு பெரிய பாயிலரில் வெந்நீர் கொதித்துக்கொண்டே இருக்கும்.காலையில் எட்டரை மணிக்கெல்லாம் முழு சாப்பாடும் தயார் ஆகிவிடும். தாத்தா சாப்பிடும் போதே எங்களையும் கூட அமர்ந்து சாப்பிட சொல்வார்.அப்போ மீல்ஸ் கட்டு கட்ட ஆரம்பித்த பழக்கம் தான் இப்போ நான் ஆந்திரா மீல்ஸ் சாப்பிடுவதை பார்த்து என் கணவர் பயப்படும் நிலைமையில் கொண்டு விட்டு இருக்கிறது.

அப்போதைக்கு மூன்று சித்திகள் கல்யாணம் ஆகாமல் இருந்தார்கள். அவர்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ள நாள் முழுக்க விளையாடிக்கொண்டே இருப்போம். காரம் போர்டு, பரமபதம், தாயம், சீட்டுக்கட்டு என்று களைகட்டும். அதிலும் சீட்டு கட்டில் நாங்கள் விளையாடாத விளையாட்டே இல்லை. இப்போதும் கூட ஆஸ், bluff இதில் இருக்கும் அத்தனை மொள்ளமாரிதனங்களும் அத்துப்படியா இருக்க காரணம் எனக்கு மே மாத பயிற்சிகள் தான்.லதா சித்தி நன்றாக பாடுவார்கள். பாட்டு கிளாஸ் எல்லாம் போவாங்க. சினிமா பாட்டு பாட சொல்லி தருவாங்க எங்க எல்லாருக்கும். நேற்று இல்லாத மாற்றம், கண்ணுக்கு மை அழகு பாட்டெல்லாம் அவங்க கிட்ட தான் கத்துகிட்டேன். சாந்தி சித்தி தான் பாலச்சந்தர் படங்கள் மீது பைத்தியம் ஆக்கினார்கள்.வேணி சித்தி பரத நாட்டியம் கத்துகிட்டாங்க. அவங்க அப்போப்போ எங்க எல்லாரையும் வரிசையில் நிற்க வைத்து தா தை ன்னு ஸ்டெப்ஸ் சொல்லி தருவாங்க.மொட்டை மாடியில் கிராக் விழ ஆரம்பித்ததால், எங்கள் நடன பயிற்சி நிறுத்த பட்டது.

செல்லம் சித்தியை பாப்பா என்று தான் அழைப்பார்கள். அதனால நாங்க எல்லாம் அவங்களை பாப்பா சித்தி ஆக்கிட்டோம். அவங்க வீட்டுக்கு பையன் மாதிரி.கார்லாம் ஓட்டுவாங்க.நாங்கள் ஊரில் இருந்து வந்து ராணி பாரடைஸ் ஸ்டாப்பிங்கில் இறங்கும் போது கார் கொண்டு வந்து பிக்கப் பண்ண ரெடி ஆக நிற்பார்கள். பின்னாளில் ஒரு friend சொன்னா, "அட எங்க வீட்டுலயும் ஒரு பாப்பா சித்தி இருக்காங்க"ன்னு. ராஜி என்ற நாய்குட்டி
இருந்தது எங்கள் வீட்டில். பாப்பா சித்தி "ஒன், டூ, த்ரீ" சொன்னால் எங்கிருந்தாலும் ஓடி வந்து மடியில் ஏறிக்கொள்ளுமாறு அதை பழக்கி
இருந்தார்கள்.அதை பார்த்து வியந்து போய் நாங்கள் அனைவரும் ஆளாளுக்கு "ஒன், டூ, த்ரீ" சொல்லவும் அது பயந்து போய் பாத்ரூமில் ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.

அம்மாச்சி வீட்டில் VCR இருந்தது. அதில் படம் போட்டு பார்ப்பது எங்களுக்கு மிகவும் பிடித்தது. வீட்டுக்கு பக்கத்திலேயே mohan videos
என்று ஒரு கடை இருந்தது. அவர்கள் வீட்டுக்கே வந்து கேசட் தருவார்கள். நாள் வாடகை பத்து ரூபாய். இது இல்லாமல் வீட்டில் சொந்தமாக சில
கேசட்கள் இருந்தது. சிம்லா ஸ்பெஷல், சகாதேவன் மகாதேவன் போன்ற படங்களை நாங்கள் எல்லாம் நூறு முறை பார்த்து இருப்போம். போர்
அடிக்கும் போதெல்லாம் , 'போடு சிம்லா ஸ்பெஷல்' என்று இந்த படங்களின் டயலாக்குகள் அவ்வளவும் மனப்பாடம். வாடகை கேசட் வாங்கும் போது சில நேரங்களில் ரஜினி படமா, கமல் படமா என்று போட்டி வந்து விடும். மொத்த குடும்பமும் உலக நாயகன் (அப்போ காதல்
மன்னன்)பக்கம்.என்னையும் சித்தி பெண் சூர்யாவையும் தவிர. நாங்கள் மெஜாரிட்டிக்காக, பக்கத்து வீட்டு பாலாஜி(இரண்டு வயசு அவனுக்கு),
எங்கள் வீட்டு ஜூலி,ஜானி எல்லாத்தையும் votingல சேர்த்து, இரண்டு கமல் படத்திற்கு ஒரு ரஜினி படம் என்ற அளவில் தேத்தி விடுவோம்.
இப்போ சூர்யா ஒரு மருத்துவ கல்லூரியில் இருந்து, "Akka, how about Endhiran on release day" என்று sms பண்ணுகிறாள்.

அம்மாச்சி வீட்டில் மரசம்பங்கி, நந்தியா வட்டை மரங்கள் இருக்கும்.செவ்வாய் வெள்ளி கிழமைகளில் காலை காபி முடித்து எல்லாரும் சேர்ந்து அதில் பூ பறிப்போம். சங்கு பூவும், செம்பருத்தியும் கூட இருக்கும். பிறகு அவற்றை எல்லாம் மாலையாக கட்டி வைப்போம். சாயங்காலம் தாத்தா வந்து குளித்து ஈர உடையுடன் வீட்டில் பூஜை செய்வார். பிறகு நாங்கள் அந்த மாலைகளை எல்லாம் எடுத்து கொண்டு பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு செல்வோம். செவ்வாய்கிழமைகளில் பிரச்சனை இல்லை. வெள்ளிக்கிழமைகளில் ஒளியும் ஒலியும் ஆரம்பித்து விடுமே என்று ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு திரும்புவோம். இவளா என் மனைவி, சக்தி-90 , ரயில் சிநேகம், குறிஞ்சி மலர் என்று அப்போதைய
சீரியல்களை பயங்கரமாக விவாதிப்போம்.

எங்கள் ரகளையை அடக்க ஒரே வழி. எங்க எல்லாருக்கும் பகல் நேரத்தில் மருதாணி இட்டு விடுவார்கள். கை கால் என்று முழுக்க மருதாணி
போட்டு, மூன்று மணி நேரம் அமைதியா ஒரே இடத்தில் இருப்போம். ராஜிக்கும் நெற்றியில் மருதாணியில் பொட்டு. அது வெள்ளை கலர் நாய்.
ஆனால் blacky க்கு மருதாணி வைக்க முடியாததால நக பாலிஷ். மருதாணி போட்ட மதியங்களில் யாராவது ஒரு சித்தி தட்டில் சாதம் போட்டு
பிசைந்து எல்லாருக்கும் ஆ கொடுப்பார்கள்.அப்போது அன்றைக்கு இரவு Doordarshan செய்திகள் வாசிக்க போவது ஆணா பெண்ணா என்று போட்டி
வைத்து கொள்வோம். இரவு நேரங்களில் சில சமயம் திருட்டு தனமாக மெல்லிய சத்தத்தில் TV பார்த்து கொண்டு இருப்போம். டிவி ஹாலில் தான்
பாய் விரித்து படுத்துக்கொண்டே பார்ப்போம். பாத்ரூம் போவதற்கு தாத்தா அவருடைய ரூமில் இருந்து எழுந்து ஹாலை தாண்டி தான் போக
வேண்டும். திடீர் என்று வந்து விடுவார். உடனே அத்தனை பேரும்(என் சித்திகளும் இதில் அடக்கம்) போர்வையை தலை வரை இழுத்து கொண்டு
உள்ளே திரு திருன்னு கிடப்போம். அவர் "டிவியை ஆப் பண்ண மறந்துட்டு தூங்குதுங்க" என்று கடிந்து கொண்டே டிவியை நிறுத்தி விட்டு போவார்.
நாங்கள் அத்தனை பேரும் சிரிப்பை அடக்க படாத பாடு படுவோம்.

இத்தனை பேருக்கும் நொறுக்கு தீனி தருவது என்பது எங்க அம்மாச்சிக்கு ஒரு நிஜ சவால்.கிழங்கு, சோளம் என்று அவித்து தருவார்கள்.பஜ்ஜி, போண்டாவில் வித்தியாசமாக பசலிக்கீரை பஜ்ஜி, முருங்கைக்காய் போண்டா என்று சத்தானதாக்குவார்கள். செய்ததையே செய்து போர் அடிக்காமல் புதிது புதிதாக கண்டு பிடிப்பார்கள். கடலை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாம் நறுக்கி போட்டு நீர்க்க கரைத்து தோசைக்கல்லில் ஊற்றி எடுத்தால் ஆம்லேட் மாதிரி இருக்கும். இது மாதிரி எங்க அம்மாச்சி கண்டு பிடித்த ஒரு விஷயம் தான் ரோஸ்மில்க் ஐஸ்க்ரீம். இதன் செய்முறை:
ரோஸ்மில்க் எசன்சை பாலில் கலந்து கொள்ளவும்.
நிறைய சக்கரை சேர்த்து கொள்ளவும்.
இந்த ரோஸ் பாலை, பிரிட்ஜில் ஐஸ் கட்டி செய்யும் அச்சுகளில் ஊற்றி, பிரீசரில் வைத்து விடுவார்கள்.
காலையில் வைத்தார்கள் என்றால், குழந்தைகள் அனைவரும் பிரிட்ஜையே பார்த்து கொண்டு இருப்போம். மதியம் மூன்று மணி அளவில் ஆளுக்கு
மூணு நாலு ரோஸ்மில்க் ஐஸ் கட்டிகளை ஒரு கிண்ணத்தில் போட்டு தந்து விடுவார்கள். எங்களுக்கு எல்லாம் ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.
விடுமுறைக்கு வந்து இருக்கும் எங்களை எல்லாம் சந்தோஷமாக வைத்து கொள்ளுவது மட்டும் தான் அவர்களுடைய ஒரே நோக்கமாக இருக்கும்.

ஒவ்வொரு விடுமுறையிலும் எங்களுக்கு மூன்று outing உண்டு. காலையில் சாப்பிட்டு விட்டு கையில் எதாவது பார்சல் எடுத்து கொண்டு தஞ்சை பெரிய(பிரகதீஸ்வரர்) கோயிலுக்கு கிளம்புவோம். கோயிலின் ஒவ்வொரு கல்லும் எங்கள் குடும்ப குழந்தைகள் அத்தனை பேருக்கும் அத்துப்படி. வராகி அம்மன் சன்னதியில் எங்கள் சித்திகள் 108 சுற்றும் போது நாங்களும் கூட ஆரம்பிப்போம். சுற்றி முடியும்போது எங்கள் எல்லாருக்கும் தலை சுற்றி இருக்கும். கருவூரார் சந்நிதிக்கு பின்னாடி இருக்கும் மரத்தில் மரப்பல்லி பார்த்தால் விசேஷம் என்று சொல்வார்கள். பல்லியை யார் முதலில் கண்டு பிடிப்பது என்று ஒவ்வொரு முறையும் போட்டி தான்.ஒவ்வொரு முறை போகும் போதும், எவ்வளோ பெரிய கோபுரம் என்று நான் வாய் பிளப்பதும், "கோபுரத்தை பார்த்து கும்பிடு, கோடி புண்ணியம்" என்று லதா சித்தி சொல்வதும் தவறாமல் நடக்கும். "ஆமா போன முறை பார்த்ததுக்கு நந்தி வளர்ந்துடுச்சு" என்று பேசிக்கொள்ளுவோம். யானைக்கு பழம் குடுத்துட்டு அப்படியே சுற்றிக்கொண்டு நடந்து சிவகங்கை பூங்காவுக்குள் நுழைவோம். பூங்கா என்றதும் ஏதோ மரமும், சறுக்கு விளையாட்டும் மட்டும் என்று நினைச்சுடாதீங்க. அது ஒரு விலங்கியல் பூங்காவும் கூட. படகு சவாரி எல்லாம் உண்டு. கையில் இருக்கும் பார்சலை பிரித்து சாப்பிட்டு விட்டு ஆரம்பிப்போம். பூங்கா முழுக்க ஒளிந்து பிடித்து, ஓடி பிடித்து என்று விளையாடி முடித்து களைத்து உட்காரும் நேரத்தில் வேர்கடலை. வாங்கி சாப்பிட்டு விட்டு மறுபடி கோவிலை ஒரு விசிட் அடித்து விட்டு வீட்டுக்கு வருவோம். ஒவ்வொரு முறையும் என் தாத்தா கேட்பார். "காலைல போன புள்ளைங்க, இப்போ தான் வரீங்களா?".இதே மாதிரி சாப்பாடு பார்சல் கட்டி கொண்டு தஞ்சாவூர் அரண்மனை ஒரு நாள். பிறகொரு நாள் காலங்கார்த்தால குளித்து முடித்து நடந்தே தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில். ஆரம்பத்தில் சில வருடங்கள் அருளானந்த நகரில் இருந்த அம்மாச்சி வீடு, அப்புறம் மெடிக்கல் காலேஜ் அருகில் மாறிய பிறகும் கூட நடந்தே போய் விட்டு நடந்தே வருவோம்.


நாங்கள் வளர வளர எங்கள் ரசனைகளும் மாறிக்கொண்டே வந்தது. பெண் பிள்ளைகள் சீட்டுக்கட்டு போய், dumbcharades,anthakshari ஆட ஆரம்பித்தோம்.தம்பிகள் கிரிக்கெட் ஆட வெளியே செல்ல ஆரம்பித்து விட்டார்கள். கல்லணை, பிச்சாவரம், பூம்புகார் என்று outing upgrade ஆனது. ஒவ்வொரு விடுமுறையிலும் ஒரு சினிமா கட்டாயம் ஆனது. அதிலும் வாலி ரிலீஸ் அன்றைக்கு போனோம்.அப்போ ரிலீஸ் அன்று படம் பார்ப்பது என்பது எங்களை பொறுத்த வரை நடக்கவே முடியாத ஒரு விஷயம், "இன்னும் போஸ்டரை கூட ஆடு திங்கலை, அதுக்குள்ள நம்ம படம் பார்க்க போறோமா?" சூர்யா குஷியில் சொன்னது.

அரசன் ஆண்டியாகி விடாமல் தன பெண்களுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்ததும் தஞ்சையில் தான். அரசன் பெற்ற ஏழு பெண்கள் ஆறாக குறைந்ததும் அதே தஞ்சையில் தான். இப்படி ரசனைகளை மட்டும் இல்லாமல், வேறு சிலவற்றையும் சேர்த்து தான் நினைவுறுத்துகிறது தஞ்சாவூர்.
ஏழெட்டு வருடங்களுக்கு  முன் தாத்தா அம்மாச்சி தஞ்சையை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பியதும், அற்று போன தஞ்சைக்கும் எங்களுக்கும் இருந்த பந்தம், அடிக்கடி நினைவுகளிலும் கனவுகளிலும் தலை காட்டும். நேற்றைய டிவி விளம்பரம் கிளறிய ஞாபகங்களில் ஆழ்ந்து இருந்த போது கலைத்தது என் கணவரின் குரல்.

"கேட்டுக்கிட்டே இருக்கேன், பதில் சொல்லாம என்ன யோசிச்சுட்ருக்க?"

"ம்,என்ன? என்ன கேட்டிங்க?"

"கடைக்கு போறேன். அர்ஜுன் ஐஸ்க்ரீம் கேக்கறான். அம்மாக்கு வனிலா, எனக்கு லிச்சி, அர்ஜுன்க்கு strawberry . உனக்கு என்ன வேணும்?"


.
.
.


"ரோஸ்மில்க் ஐஸ்க்ரீம்"

Wednesday 10 February 2010

உப்புமா(வும்) சாம்பியன்

விதி விளையாடியது என்று சொல்வார்கள். ஆனால் என்னிடம் விதி விளையாடியதே நான் விளையாட வேண்டும் என்று தான். புரியலையா?? மேலே படிங்க...

நான் வசிக்கும் அபார்ட்மெண்டில் "அபார்ட்மென்ட் டே" கொண்டாடினார்கள். அதன் பொருட்டு நிறைய விளையாட்டு போட்டிகள். அதில் ஒன்று தான் டேபிள் டென்னிஸ் மிக்சட் டபுள்ஸ். என் கணவர் சற்று, சற்று என்ன சற்று... நன்றாகவே TT விளையாடுவார். நான் சுமார் ஏழு வருடங்களுக்கு முன், டெல்லியில் இருந்த போது, TT டேபிளை பார்த்து இருக்கிறேன். TT விளையாடுபவர்களுக்கு பந்து பொறுக்கி போட்டு இருக்கிறேன். விளையாடுபவர்கள் ரெஸ்ட் எடுக்கும் போது TT ராக்கெட்டை வைத்து "இப்படி தான் தட்டனுமா?" என்று தட்டி பார்த்து இருக்கிறேன். அவ்வளவே.அதனால் என் கணவர் என்னை பார்ட்னராக சேர்த்து கொள்ள ரொம்ப பயந்தார். பின்ன அவர் ஜெயிக்க வேண்டாமா? இங்க தான் விதியின் விளையாட்டு ஆரம்பமானது. அவருக்கு வேற பார்ட்னர் கிடைக்காமல் போனது. ஹோட்டலில் சாப்பாடு எல்லாம் தீர்ந்து போனால், உப்புமா போட்டு சமாளிப்பார்களாம். நான் உப்புமா ஆக்க பட்டேன். விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் என் கணவர் எனது பெயரை பார்ட்னராக போட்டு பெயர் கொடுத்து விட்டு வந்துட்டார்.

மொத்தம் நாலு அணிகள். Kathir/Priya, Ranjan/Nirja, Sudeer/Swarna, Mohit/Latha. Ranjan/Nirja தவிர மற்ற மூவரும் கணவன் மனைவியர்.அதனால் Ranjan/Nirja அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தோன்றியது.ஜனவரி இருபத்தாறு குடியரசு தினம் அன்று நாள்(!) குறித்தார்கள். எனக்கு அன்றிலிருந்து தூக்கம் போனது. விளையாடும் நேரத்தில் என் மானம் போக போகிறது என்பதற்கு மேலாக, எங்கள் அபார்ட்மென்ட் அழகிகள் மத்தியில் என் கணவருடைய இமேஜ் ஒரேடியா உயர்ந்துருமேன்னு தான் எனக்கு கவலை அதிகமா இருந்தது. "நான் காமெடி பீஸ் ஆகிட போறேனே" என்று அலுவலக நண்பர்களிடம் புலம்பினால், "பேசாம ரிடயர்ட் ஹர்ட் ஆயிடு" என்று ஐடியா குடுத்தார்கள்.

எனக்கும் TTக்கும் சம்பந்தம் கம்மி என்பதால் எங்கள் வீட்டில் ஒரே ஒரு TT ராக்கெட் தான் இருக்கும். சரி நானும் விளையாட வேண்டியதால் 25ஆம் தேதி இரவு போய், இன்னொரு ராக்கெட் வாங்கி வந்தார். "எதுக்கும் கீழ TT ரூமில் போய் practise பண்ணுங்க" - இது என் மாமியார். எனக்கு அழுகையும் சிரிப்பும் சேர்ந்து வந்தது. கீழே போனால், அங்கே Sudeer/Swarna ஜோடி படு தீவிர பயிற்சியில் ஈடு பட்டு கொண்டு இருந்தார்கள்.இப்போ எனக்கு பயம் வந்தது. "ரூல்ஸ்லாம் தெரியுமா?" - கேட்ட என் கணவரை பார்த்து பாவமா இருந்தது. இப்படி நவரசங்களில் நாலு ரசத்துடன் நானும் ஏதோ தட்டு தட்டு ன்னு practise பண்ணேன்.



"என்னோட சர்வீஸ் பாய்ண்ட்ஸ் எல்லாம் நமக்கு தான். நீ ஜஸ்ட் ball return
மட்டும் பண்ணிடு. சர்வீஸ் கரெக்டா போடு. பாத்துக்கலாம்"
என் அப்பா அடிக்கடி சொல்வார்கள். ஒரு நல்ல ஆசிரியருக்கு பெருமை முதல் மார்க் வாங்குபவனால் அல்ல...அவன் யார்கிட்ட படித்தாலும் வாங்குவான். பெயில் மார்க் வாங்கிட்டு இருக்கவனை பாஸ் பண்ண வைக்கிற மாதிரி சொல்லி தர்றது தான் உண்மையான பெருமை". என் கணவரும் ஒரு நல்ல ஆசிரியராக ஆக முயற்சி செய்து ஏதேதோ சொல்லி தந்தார்.
ஜனவரி 26.
"ஏங்க...அந்த ப்ளாக் டாப்சும், Grey ட்ராக் சூட்டும் போட்டுக்கட்டுமா?"
என் கணவர் என்னை பார்த்த "ரொம்ப முக்கியம்" பார்வையை எழுத்தில் கொண்டு வருவது கடினம் தான்.நான்கே அணிகள் என்பதால், knock out முறை வேண்டாம். "ரவுண்டு ராபின்" என்று முடிவானது. அதாவது ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணியுடனும் விளையாட வேண்டும். பாயிண்ட்ஸ் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்க படும்.

முதல் ஆட்டம் Kathir/Priya Vs Mohit/Latha.
டாஸ் அவர்கள் ஜெயித்தார்கள். TT யில் டாஸ் போடுவது எப்படி என்று தெரியும் அல்லவா? டாஸ் போடுபவர் TT டேபிளுக்கு அடியில் இரு கைகளிலும் பந்தை மாற்றி மாற்றி வைத்து பின் ஏதாவது ஒரு கையில் பந்தை வைத்து கொண்டு டாஸ் கேட்பவரிடம் எந்த கையில் பந்து இருக்கிறது என்று கேட்பார். சரியாக சொன்னால், டாசில் ஜெயிச்சதா அர்த்தம். Latha serves Kathir என்றார்கள். பாவிகளா...அப்போ Mohit எனக்கு
serve பண்வார். லதாவினுடைய சர்வீஸ்கள் முடிந்து, என்னுடைய ஐந்து
சர்வீஸ்கள் முடிந்த நிலையில் நாங்கள் தான் முன்னிலையில் இருந்தோம். ஆனால் இப்போதல்லவா ஆரம்பிக்க போகிறது காமெடி.

Mohit serves Priya. பார்வையாளர்களில் இருந்த அந்த அணியின் ஆதரவாளர்கள் சற்று நிம்மதி மூச்சு விடடார்கள். முதல் ஒரு பந்து மிஸ் பண்ணிட்டேன். சுற்றி இருந்த கூட்டம் ஓஒ என்றது. சிலருக்கு உற்சாகம். சிலருக்கு கவலை. எல்லாத்துக்கும் ஓஒ தானே நம்ம ஊரில். அதுக்கு பிறகு அவருடைய நான்கு சர்வீஸ் களையும் நான் return பண்ணி விடுவேன் என்று நானே எதிர் பார்க்க வில்லை. அப்புறம் அந்த லதா எப்படி எதிர் பார்த்து இருக்க முடியும்? என்னுடைய return களை எல்லாம் 'ங்கே' என்று பார்த்து கொண்டு நின்றார்கள். பாவம். என் கணவரை திரும்பி பார்த்தால் அவர் அதற்கு மேல் அதிர்ச்சி ஆகி நிற்கிறார். என் மேல 'பாகம்பிரியாயாயாயா' ஏதும் வந்துடுச்சோன்னு அவருடைய பகுத்தறிவையும் மீறிய பயம் வந்துருக்கும் போல...இருக்காதா பின்ன...ஆக முதல் கேம் சுலபமாகவே ஜெயிச்சுட்டோம்.

அடுத்து Kathir/Priya Vs Sudeer/Swarna.கடவுள் எங்களை டாஸ் ஜெயிக்க
வைத்தார். டாஸ் போடுபவர் கேட்கவும், Sudeer "Ball in left hand" என்று சொல்லி, டாஸில் தோற்றார். Kathir serves Swarna.Swarna ஓரளவுக்கு நல்ல பிளேயர். முதல் நாள் பிராக்டிசில் என்னை செமத்தியாக ஓரங்கட்டி இருந்தார்கள்.. ஆனால் கதிரின் சர்வீஸ்களுக்கு தடுமாறினார்கள். சற்று அன்னியோன்னியமான ஆனால், சீரியசான தம்பதிகள். கணவர் சொதப்பும் போதெல்லாம் மனைவி 'ஆப்னே பில்குல் ப்ராக்டிஸ் நஹி கியா...'என்று கடிந்து கொண்டது எல்லாருக்கும் கேட்டது தற்செயலே.... முதல் கேம் அளவுக்கு சுலபம் இல்லன்னாலும் கூட, 21 -18 என்று டென்ஷன் இல்லாமல் ஜெயிச்சுட்டோம்.


அடுத்து Kathir/Priya Vs Ranjan/Nirja.இது வேலைக்காவாது என்ற நிலைமை. அந்த Nirja தான் womens singles இல் வெளுத்து வாங்கி ஜெயித்து இருந்தது. ரொம்ப சின்ன பெண்.போன முறை கடவுள் டாஸ் ஜெயிக்க வைச்சார். இந்த முறை டாஸ் ஜெயிக்க வைச்சது நான். டாஸ் கேட்கும் வாய்ப்பு எங்களுக்கு. என்னை கேட்க சொன்னார் கதிர். நம்ம strategic மூளையை உபயோகிச்சு, போன முறை வலது கையில் பந்து வைத்து இருந்தார். இந்த முறை மாற்றி தான் இருப்பார் என்ற நம்பிக்கையில் "Left " என்றேன்.இல்லாத ஸ்டைலுடன். "You won the toss" என்ற பதில் வந்தது. So Kathir serves Nirja என்றேன்."How mean" என்றது Nirja. ஸ்டைலாக."Lucky guys" சொன்னது Ranjan. 21-20 என்று மேட்ச் பாயிண்டில் வந்து கதிர் ஒரு சர்வீசில் கோட்டை விட்டு deuce ஆக்கினார். பெடரர் ஆடும் மேட்ச்களில் deuce என்றதும் ரெண்டு கண்ணையும் மூடி கொள்வேன். Advantage-Federar என்ற சத்தம் வந்தால் ஒரு கண்ணை மட்டும் திறந்து லேசா பாப்பேன். ஆனா இங்க deuceக்கு கண்ணை மூடினா என்னாவது...நம்ப மாட்டீங்க...நாலு முறை deuce ஆனது.

நாலாவது advantage - எங்களுக்கு வந்த போது என்னுடைய சர்வீஸ்.
"Focus!A proper service" - கதிர் அழுத்தமாக சொன்னதும், கை லேசா நடுங்கியது. Serve பண்ணிவிட்டு கண்ணை மூடிக்கொண்டேன். "Match won" சத்தமும் கைதட்டலும். அட மறுபடியுமா ஜெயிச்சுட்டோம். பவுல் அவுட்டில் wide போட்ட Afridi மாதிரி போயும் போயும் என்னோட சர்வீசை, தவற விட்டிருந்தார் Ranjan. மேட்ச் பாயிண்ட் எடுத்தது சாட்சாத் உப்புமாவாகிய நான். என்ன செய்வது, சில நேரங்களில் உப்புமாவும் ருசியாக இருந்து விடுகிறது.