Tuesday 25 August 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 6

ஏழாவது படிக்கும் போது தான் சுவாமி விவேகானந்தரின் அறிமுகம். விவேகானந்தா மிஷன் 'சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்" புத்தகத்தில் இருந்து ஒரு போட்டி நடத்தினார்கள். அப்போதிலிருந்தே சுவாமிஜி என்றால் ஒரு ஆர்வம். என் ஹிந்தி சார் வீட்டில் மூன்றடி உயரத்திற்கு விவேகானந்தரின் சிலை வைத்து இருப்பார்கள். டியூஷன் அப்போ, அந்த சிலைக்கு பக்கத்தில் தான் உக்காருவேன். கன்யாகுமரி விவேகானந்தர் பாறை போக போகிறோம் என்றதும், உற்சாகம் பீறிட்டது.திருவள்ளுவர் சிலையையும் பார்க்க போவது இதான் முதல் முறை.

26-June-2009 2PM

"நாலு மணிக்குள் போகலைன்னா, cruise டைம் முடிஞ்சுடும். அப்றோம் விவேகானந்தர் பாறையை எல்லாம் தூரமா இருந்து பாத்துட்டு வர வேண்டியது தான்" மறுபேச்சு பேசாமல் சொன்ன நேரத்துக்கு ரெடி ஆயிட்டேன்.

"இது தான் மருந்து வாழ் மலை. அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு போகும் போது, அதில் இருந்து கீழே விழுந்த ஒரு துண்டு. இங்க உள்ள கீரைய பறிச்சு சாப்பிட்டால் எந்த நோயும் குணமாகும்"
நாகர்கோயில் - கன்யாகுமரி வழியில்,ஒரு மலையை காண்பித்து அவரோட அத்தை சொன்னது.

உடனே cruise டிக்கெட் வாங்கிக்கொண்டு, ஏறி உக்கார்ந்தோம். கரையில் இருந்து பாறைக்கு செல்ல ஆகும் அதிக பட்ச நேரம் ஐந்து நிமிடம். அதற்குள் இரண்டு வட இந்திய குடும்பங்களுக்குள் சண்டை வந்து விட்டது. எதற்கு என்றால், ஒருவர் துண்டு போட்டு ரிசர்வ் செய்து வைத்து இருந்த இடத்தில், இன்னொருவர் வந்து உக்காந்து விட்டார். அப்பா அப்பாவுடன், அம்மா அம்மாவுடன், அண்ணன் அண்ணனுடன் என்று அவரவர் வயதில் உள்ளவர்களுடன் வாய்ச்சண்டையில் ஆரம்பித்தது கைகலப்பில் முடிய இருந்ததற்குள், இறங்க வேண்டிய இடமே வந்து விட்டது.
"சாலா" "பாகல்" என்றெல்லாம் திட்டிக்கொள்கிறார்களே? அப்டின்னா என்ன?" கேட்டது அவரோட அத்தை பெண்.

முதலில் கன்யாகுமரியின் நினைவகம். ஒரு ஜோடி பாத அடையாளங்களை கண்ணாடி சட்டம் போட்டு வைத்து இருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் எல்லாம் அதன் மீது காசு எறிகிறார்கள்.
"कौन है कन्याकुमारी? उसकी बाप कौन है?" கேட்டுக்கொண்டே காசை போட்டது சண்டை போட்ட குடும்பத்து பெண். அப்போது தான் கவனித்தேன். அங்கு குமரியின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் மாத்திரம் தான் எழுதி வைத்திருக்கிறார்கள்.விளைவு? குமரியின் அப்பா யாருன்னு கேட்கிற அவலம்.ஹிந்தியிலும் எழுதி தொலைத்து இருக்கலாம்.

விவேகானந்தர் பாறையின் சிறப்பம்சம் அங்கிருக்கும் சுத்தமும், அமைதியும் காற்றும் தான். அங்கு வரும் சுற்றுலா பயணிகளும், ஒரு ஒழுங்குக்கு வந்து விடுகிறோம். யாரும் குப்பை போடுவதில்லை, எச்சில் துப்புவதில்லை, தேவையில்லாத சத்தம் இல்லை. இத்தனைக்கும் நல்ல கூட்டம் வேறு. சண்டை போட்ட அந்த குடும்பங்கள் கூட, ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்ள வில்லை. குமரியின் பாத தரிசனம் முடிந்து, விவேகானந்தர் மண்டபத்துக்குள் நுழைந்தோம். தாஜ்மகாலை சினிமாக்களில் பார்த்து விட்டு, முதல் முறை நேரில் போகும் போது, "அட இவ்ளோ பெரிசா" என்று தான் முதலில் பிரம்மிப்போம். அதே தான் இங்கேயும். ஏற்கனவே சின்ன வயசில் பார்த்து இருந்தாலும் கூட, இந்த முறை "இவ்ளோ பெரிசா" என்று ஒரு ஆச்சர்யம் முதலில் ஏற்பட்டது. முதலில் ஒரு பெரிய அறை. அங்கே பளபளவென்று சுமார் பத்து பன்னிரண்டு அடி உயரத்தில் சுவாமிஜியின் சிலை. ஒருவர் அங்கே வருபவர்களை எல்லாம் பேசாதீர்கள் என்று செய்கை செய்த படி தூண்களை எல்லாம் துடைத்து கொண்டு இருந்தார். சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டும் என்ற ஆவலை அடக்கி கொண்டேன்.

அடுத்து தியானம் செய்யும் அறை. மெல்லிய வெளிச்சத்தில் ஓம் ஓம் என்ற மிக மெல்லிய ஒலியின் பின்னணியில், ॐ என்று எழுத பட்டு இருக்கும் ஒரு திரையை நோக்கி அமர்ந்து தியானம் செய்கிறார்கள். தியானம் செய்தோமா என்றெல்லாம் தெரியாது ஆனால் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு வெளியே வந்தோம்.

ஒரு கடை வைத்து விவேகானந்தர் சிலை, சிற்பம், புத்தகம் என நினைவுச்சின்னங்கள் விற்பனை செய்கிறார்கள். "Swamy Vivekananda on himself" என்று ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டேன். விவேகானந்தர் பாறையில் இருந்து பார்த்தால் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக நிற்கிறது வள்ளுவன் சிலை. அங்கே போவதற்கு படகு போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றம் தான்.

அடுத்ததாக குமரியம்மன் தரிசனம். அம்மனின் மூக்குத்தி தான் விசேஷம். கப்பல்களுக்கு எல்லாம் கரை காட்டும் விளக்காக இருந்ததாம் இந்த மூக்குத்தி. உண்மையில் ஏதோ விளக்கொளி சுடர் விடுவதைப்போல மின்னுகிறது.

கடற்கரையில் 'பொங்கி வரும் கடல் அலையை ஒரு கை தடுப்பதை' போன்று சுனாமி நினைவுச்சின்னம் அமைத்து இருக்கிறார்கள்.

திரும்பி வரும் வழியில் ஒரு குறுகலான சந்தில் பார்க் பண்ண போக, காரில் அடுத்த டென்ட். கண் திருஷ்டி.இந்த முறை தடம் பலம்.:-(

27-June-2009
அடுத்த நாள் சனிக்கிழமை,மாமியாரின் குடும்ப கோயில் விசிட். சில உறவினர்களை சந்தித்தோம். திருமணத்துக்கு முன்பு வரை எனக்கு ரஸ்தாளி, பூவன், கற்பூரவல்லி, பச்சை பழம் என்று வாழைப்பழ வகைகள் தான் தெரியும். அப்பறம் தான் பேயன், மட்டிப்பழம்,சிங்கம்பழம், செந்துளுவன் இதெல்லாம் தெரிய வந்தது. மற்ற ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களை மட்டும் தான் பெயர் சொல்லி சொல்கிறார்கள். மற்றபடி பழம் என்றாலே வாழைப்பழம் தான். காலை காப்பியில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை, எல்லா உணவுடனும் வாழைப்பழம் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அன்று மாலை ஒரு செட் ஊருக்கு கிளம்பினார்கள். விடை அனுப்ப railway station போன இடத்தில் குழந்தைகள் ஒன்றை ஒன்று கட்டி கொண்டு அழுது பிரியா விடை பெற்றன.

28-June-2009
ஞாயிறு அதிகாலை return பெங்களூருக்கு கிளம்பினோம். வரும் வழியில் மறுபடியும் திருநெல்வேலி அல்வா. காலை 7:30மணிக்கு வாங்கின போதும் அதே சூடு. கயத்தாறில் கட்டபொம்மன் சிலைக்கு கீழே உட்கார்ந்து கொண்டு வந்த காலை உணவு, வழியில் கோவில்பட்டியில் ஒரு மர நிழலில் மதிய உணவு. இரவு உணவுக்கு மறுபடி ஆனந்த பவன், என்று ஒரே மூச்சாக இரவு தூங்க வீட்டுக்கு வந்துவிட்டோம். உறவினர்கள், கடல், அருவி, குழந்தைகள், கோவில், திருமணம் என்று ஒரு வாரம் ஓடியதே தெரிய வில்லை.

So how is life now?
"அடுத்த கல்யாணம் எப்போ வரும்? இதே மாதிரி இன்னொரு ட்ரிப் போகலாம்" என்று பார்த்து கொண்டிருக்கிறேன்.

அட கண்ணனும் சஞ்சயும் இப்போ எதுக்கு இப்டி அழுவறீங்க? அப்டி என்ன ஆகி போச்சு? ஒரு தொடர் ன்னு ஆரம்பிச்சா அது முடிஞ்சு தான ஆகும்? இதுக்கு போயி மனச தளர விடலாமா??

......

என்ன அதுக்கு அழுவலையா? பின்ன என்ன?

......

என்னது? இன்னொரு முறை இப்டி ஒரு தொடர் எழுத மாட்டேன்னு சத்தியம் பண்ணனுமா?



-பயணம் சுபம்.

Tuesday 18 August 2009

From Today's Playlist :-)

இசை என்று ஒரு விஷயம் இந்த உலகத்தில் இல்லாமல் போனால், நிறைய பேருக்கு பைத்தியம் பிடிச்சுடும். ஏதோ ஒரு வடிவத்தில் இசைக்கு எல்லோருமே அடிமை தான்.

"இளையராஜாவின் "How to Name it?" கேட்டு இருக்கீங்களா??"
"இல்லை"
"கேட்டதில்லையா...ச்ச, வேஸ்ட் நீங்க"

இசையை பொறுத்த வரை என்னுடைய எல்லை ரொம்ப ரொம்ப சின்னது.
நம்ம எதுக்கு மியூசிக் கேக்குறோம்? மகிழ்ச்சியை பகிர்ந்துக்க, துக்கத்தை வடிக்க, தனிமைய போக்க, பொழுது போக, தூக்கம் வர, கடவுளை உணர...etc etc.
இந்த மாதிரி ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரியான தேடலுடன் மியூசிக் கேட்போம்.

இந்த தேடலுக்கு எல்லாம் விடை சிலருக்கு "How to name it"டில் கிடைக்கலாம். எனக்கு சினிமா பாட்டுலேயே கெடைச்சுடுது.
இதை 'குறுகிய ரசனை' ன்னு ஆதங்கப்படும்/'வளர்த்துக்கொள்ள சொல்லி' அக்கறைப்படும் நண்பர்களுக்கு நான் சொல்றது இதான்,
"எனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்...:-(
இப்போதைக்கு எனக்கு அதுவே போதுமானதா இருக்கு."

லகான் படத்துல "Radha kaise na jale" ன்னு ஒரு பாட்டு வரும். என்னோட சந்தோஷத்தை இரட்டிப்பாக்க அது போதும்."காதலின் தீபம் ஒன்று" பாட்டை விட ரொமான்டிக் ஆன ஒரு பாட்டு இன்னும் வந்துடலைன்னு எனக்கு ஒரு நம்பிக்கை. எப்போல்லாம் தனியா இருக்க மாதிரி உணர்கிறேனோ, அப்போல்லாம் "Tanhayee(Dil Chahta Hai)" பாட்டு எனக்காக அழும்.

சரி எனக்கு பிடிச்ச பாட்டு லிஸ்ட் சொல்லி பிட் போடுவதற்காக அல்ல இந்த பதிவு.
மேட்டர்க்கு வரேன்.

இந்த மாதிரியான என்னோட limited horizon னில் இருந்து சில கேள்விகள்.

கூகிள் பண்ணாம பதில் சொல்லுங்க பார்க்கலாம்.


1)உன்னி கிருஷ்ணனும், உதித் நாராயணனும் சேர்ந்து பாடின பாட்டு சொல்லுங்க.

2)அனுராதா ஸ்ரீராம், மாதங்கி சேர்ந்து பாடின பாட்டு?

3)"வளையோசை கல கலவென", "ஓ பட்டர்பிளை" இந்த ரெண்டு பாட்டுக்கும் என்ன ஒற்றுமை?

4)இசைஞானியின் நானூறாவது படத்துல, அவரே பாடின பாட்டு என்ன?

5)Musically Connect: அபூர்வ ராகங்கள். பதினாறு வயதினிலே, சிந்துபைரவி, மின்சாரகனவு,கருத்தம்மா, அழகி, பாரதி, ஆட்டோக்ராப்

Saturday 8 August 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 5

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இப்போது மணமகன் மணமகளுக்கு மங்கள நாண் அணிவிப்பார்.

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று மணவிழா காணும் மணமக்களை...

இப்படியான ஒரு பகுத்தறிவு கல்யாணம் எனக்கும் கதிருக்கும்.

நோ ஹோமம், நோ மாங்கல்யம் தந்துனானே etc etc.

ஒரு விதத்தில் எனக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும் என் புகுந்த வீட்டு திருமண சடங்குகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல். சிலர் திருமண ஆல்பம்,DVD பார்த்ததில் ஓரளவுக்கு ஐடியா இருந்தாலும், நேரில் பார்க்க போவது இன்று தான் முதல் முறை. மூர்த்திக்கும் பூரணிக்கும் கல்யாணம். அம்மா அப்பா பார்த்து வைத்த மணமகள், மணமகன். சமத்து பிள்ளைகள்.

25-June-2009
அதிகாலையில் என் முதல் நாத்தனாரின் குடும்பம் வந்து சேர்ந்ததில் இருந்தே எல்லாருக்கும் கல்யாண பரபரப்பு தொற்றிக்கொண்டது.
'சீக்கிரம் குளிங்க எல்லாரும்'

'குழந்தைகளை குளிப்பாட்டி டிரஸ் பண்ணி அவங்கவங்க அப்பாவிடம் விட்டு விட்டு அப்றோம் நம்ம saree கட்டலாம்.'

'நம்ம கல்யாணத்தன்னைக்கு கட்டினது, அதுக்கு அப்றோம் இன்னைக்கு தான் இந்த பட்டு கட்டறேன்'
'iron பண்ண போன எடத்துல கூட "சார் saree ரொம்ப நல்லா இருக்கு, நீங்க எடுத்ததா சார்? உங்க wife குடுத்து வெச்சவங்க" ன்னு சொல்றான்.'
'அவனுக்கென்ன? அவன் சொல்வான். By the way, இந்த white and white வேஷ்டி சட்டைல அரசியல்வாதி மாறி இருக்கீங்க. துண்டு தான் மிஸ்ஸிங்.'

"கல்யாணத்துக்கு கல்யாணம் தான் தலையில் பூ வெக்குறது. அதை இன்னும் கொஞ்சம் தாராளமா வெச்சா என்ன?"

"இந்த necklace கொக்கி கொஞ்சம் மாட்டி விடேன்"

பெண்கள் எல்லாரும் புடவை கசங்காமல் மேக்கப் கலையாமல் மண்டபத்தில் கொண்டு விடப்பட்டோம். கதிருக்கும் அவருடைய காருக்கும் ஒரே பாராட்டுகள். Go Fida.

டிபன் முடிந்ததும் மாப்பிள்ளை அழைப்பு.

மாப்பிள்ளை வீட்டார் அதாவது நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி இருக்க, மணமகளின் தம்பி வந்து மாப்பிள்ளைக்கு மாலை போட்டு, பன்னீர் தெளித்து, கைகளில் சந்தனம் தடவி, (இதுவே வயதில் பெரியவர் ஆக இருந்தால் நெற்றியில் பொட்டு வைப்பார்களாம்) மேள தாளத்துடன் (உங்கள் யாருக்காவது ஒரு பலிகடா effect கிடைத்தால் நான் பொறுப்பில்லை.அங்கே நடந்ததை சொல்கிறேன்)எங்க எல்லாரையும் மண்டபத்துக்கு அழைத்து செல்கிறார்கள். மண்டபத்திற்குள் நுழையும் முன், மாப்பிள்ளைக்கு பாதம் கழுவுகிறான் மணமகளின் தம்பி. அதற்கு பரிசாக அவனுக்கு மாப்பிள்ளை ஒரு மோதிரம் போடுகிறார்.

நேராக மாப்பிள்ளையை மணமேடையில் கொண்டு போய் அமர வைத்து திருமண பொழுதில் அணிய வேண்டிய உடையை மணமகளின் தாய்மாமா தருகிறார்.
மாப்பிள்ளை உடை அணிய சென்று விட, மணமகளை மேடைக்கு அழைத்து அவளுக்கு முகூர்த்த புடவையை மணமகனின் அக்கா தருகிறாள்.அந்த பெண்ணும் உடை மாற்ற சென்று விடுகிறது. இதற்குள் மாப்பிள்ளை உடை மாற்றி (ஒரு வேஷ்டி சட்டை மாற்ற எவ்வளவு நேரம் ஆகி விட போகிறது, எங்களை மாதிரியா?)
வந்துவிட, மேடையில் அமர வைத்து 'உரிமா கட்டுதல்' என்று ஒரு சடங்கு நடக்கிறது.
அதாவது மாப்பிள்ளைக்கு உரிமை உள்ள ஆண்கள் அனைவரும், சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சான், அண்ணன், அத்தான், என்று ஏகப்பட்ட பேர் வரிசையில் வந்து மணமகன் தலையில் தலைப்பாகை கட்டுகிறார்கள். வயதான சிலர் பயபக்தியோடு சின்சியராக கட்ட, பலர் கேலியும் கிண்டலுமாக கலாய்த்தபடி.
கலர் கலராக blouse துணியில். மாப்பிள்ளை வீட்டு பெண்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு எந்த புடவைக்கும் matching blouse தேடி அலைய வேண்டியதில்லை. அவ்வளவு துணிகள் வந்து குவிகிறது.
"உங்க கல்யாணத்தில் கதிரை நல்லா ஓட்டனும் என்று இருந்தோம். வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது." என் நாத்தனார் கணவர் உரிமா கட்டும் வரிசையில் இருந்து விலகி வந்து என்னிடம் கிசுகிசுத்து விட்டு போனார்.

"இந்த சடங்கிலும் ஒரு நன்மை இருக்கு பாத்தியா?பொண்ணுக்கு புடவை மாற்ற நல்ல டைம் கிடைக்கும் இல்ல?"
"உங்கள் பகுத்தறிவு பார்வைக்கு திரிஷ்டி சுத்தி போடணும்ங்க."
"நக்கல் ஜாஸ்தி உனக்கு. பகுத்தறிவுக்கே திருஷ்டியா?இரு இதையெல்லாம் ஒரு நாள் எங்கப்பா கிட்ட போட்டு குடுக்குறேன்."
":-)"

ஒரு வழியாக பெண் உடை மாற்றி வந்து விடுகிறது. வழக்கமான விமர்சனங்கள். புடவை பற்றி, நகைகள் பற்றி, மேக்கப் பற்றி. இதெல்லாம் ஊருக்கு ஊரு மாறாது போல்.
என் அம்மா வீட்டு சைடு, தாய் மாமா, மாமிக்கு தான் சகல மரியாதை கிடைக்கும். மூணாவது முடிச்சுக்கு மட்டும் தான் அக்காவை அழைப்பார்கள்.
ஆனால் இங்கோ மாப்பிள்ளையின் அக்காவுக்கு அதி முக்கித்துவம் கொடுக்கிறார்கள். மேடையில், புரோகிதர், மணமக்களுடன், அந்த அக்காவுக்கு மட்டும் தான் இடம் கொடுக்கிறார்கள். எல்லா சடங்கையும் அவளை விட்டு தான் செய்ய சொல்கிறார்கள். ஆனால் இந்த கல்யாணத்தின் அக்கா ஒரு சாப்ட்வேர் அக்கா. புரோகிதரின் கட்டளைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல், புடவையை இழுத்து பிடித்துக்கொண்டு தடுமாறியது.
டும் டும் டும். தாலி கட்டியாகி விட்டது. அடுத்து திருநீறு பூசும் படலம். அதற்கும் ஒரு பெரிய வரிசை. ஆனால் இதில் பெண்களும் உண்டு. கதிர் தான் மணமகனுக்கு ஒரே அண்ணன், அதனால் மைனி (அண்ணி) திருநீறுக்கு, என்னை தான் அழைத்தார்கள். ரொம்ப பெருமை எனக்கு.

மதிய உணவில் பருப்பு சாதத்தில் அப்பளம் உடைத்து போட்டு சாப்பிடுகிறார்கள். கலர்கலராக மூன்று பாயசம் வைக்கிறார்கள்.
அன்றைக்கு மாலை reception. அதாவது முகூர்த்த நாள் அன்று நிறைய திருமணங்கள் நடைபெறும் என்பதால், காலையில் வர இயலாதவர்கள், வாழ்த்த வருவதற்காக ஏற்படுத்தப் பட்டது தான் இந்த reception பழக்கமாம். இப்போது அது ஒரு போட்டோ session என்ற அளவில் மாறி விட்டு இருக்கிறது. Orchestra வைப்பதும் சமீபத்திய முன்னேற்றம். reception முடிந்து வைக்கும் சடங்குக்கு பேர் 'நாலாம் நீர்'. இதென்ன நாலாம் நீர் என்றால், அந்த காலத்தில் திருமணத்தின் ஒவ்வொரு சடங்குக்கு முன்னதாகவும் மாப்பிள்ளையும் பெண்ணும் நீராட்ட படுவார்களாம். இது நாலாவது நீராட்டு என்பதால் அந்த பெயர். இப்போது வெறும் பெயர் மாத்திரம்.பெண் தலையில் மாப்பிள்ளையும், மாப்பிள்ளை தலையில் பெண்ணும் அப்பளம் உடைக்கிறார்கள். பின்னாளில் ஒருவர் மண்டையை ஒருவர் உடைப்பதற்கு ஒரு நல்ல ஒத்திகை.பிறகு பித்தளை தேங்காய் உருட்டுகிறார்கள்.இதை பார்த்துக்கொண்டே இருந்த அர்ஜுன் விடு விடுவென்று மேடைக்கு போய் ஒரு அப்பளத்தை எடுத்து தன் தலையில் தானே உடைத்து கொண்டான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க, "உன் புள்ளைக்கு பொண்ணு பாருடீ, கல்யாண ஆசை வந்து விட்டது" என்று என்னையும் சேர்த்து வாரினார்கள்.

"சுருள்". மாப்பிளைக்கு உறவுக்காரர்கள் எல்லாரும் மொய்ப்பணம் வைக்க வேண்டும்.
"நீ மைனி சுருள் வை" என்று எனக்கு பணம் கொடுத்தார் கதிர். இந்த பணம் எல்லாம் மாப்பிளையின் அக்காவுக்காம். கொள்ளை வசூல்.இது முடிந்து எல்லாருக்கும் முறுக்கு தருகிறார்கள். பெண் வீட்டில் செய்தது. "முறுக்கு நல்லா இருக்கு" என்று பெண் வீட்டாரும் "இன்னும் கொஞ்சம் உப்பு போட்ருக்கணும்" என்று மாப்பிள்ளை வீட்டாரும் சொல்லி கொண்டே நொறுக்குகிறார்கள்.
பிறகு இரவு உணவு. தீயலும் சோறும். தீயல் என்பது தேங்காய், மிளகாய், மல்லி எல்லாம் வறுத்து செய்யும் ஒரு குழம்பு. வத்தகுழம்பின் ஒரு வடிவம். என் மாமியார் சமைப்பதில் எனக்கு ரொம்ப பிடித்தது இது தான்.

உணவிற்கு பிறகு மாப்பிள்ளையை பெண் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.எங்கள் ஊரில் சாந்தி கல்யாணம் மாப்பிள்ளை வீட்டில் நடக்கும். "பெண் என்பவள் வளைந்து கொடுக்க தெரிந்தவள்.எங்கும் சமாளித்து விடுவாள். ஆண்களுக்கு தான் புது இடம் பழக நேரம் ஆகும்" என்று காரணம் சொல்வார்கள். இவங்க அப்டியே மாத்தி சொல்றாங்க. Good actually.

மறுநாள் காலை, நாங்கள் சிலர் மாத்திரம் கிளம்பி பெண் வீட்டுக்கு சென்றோம். அடுத்த சடங்குக்கு பெயர் "ஏழாம் நீர்" . "ஐந்தாம் ஆறாம் நீர்லாம் எங்க?" என்று கேக்க வில்லை நான். ஏற்கனவே ஏகப்பட்ட கேள்வி கேட்டு நச்சரித்ததால் என் பக்கத்தில் வருவதற்கே என் புகுந்த வீட்டினர் சற்று பயந்த மாதிரி தோணுச்சு.அங்கே பொங்கல் வைத்து, படைத்து, பெண்ணையும் மாப்பிள்ளையையும் அமர வைத்து ஒரு பொம்மையை தட்டில் வைத்து அவர்கள் கையில் குடுத்து, "சரி புள்ளைக்கு எல்லாரும் பணம் போடுங்கள்" என்கிறார்கள்.என்னது ஒரே இரவில் புள்ளையா? பகுத்தறிவுவாதிகளை ஒரேடியாக குறையும் சொல்லி விட முடியாது...:-)
அட மறுபடியும் வசூல். அந்த பணமும் பையனின் அக்காவுக்கு தானாம்.என் தம்பி கல்யாணத்தை நாகர்கோவிலில் வைக்க சொல்ல வேண்டும்.

மூர்த்தி கல்யாணம் இனிதே நிறைந்தது. இல்லை இல்லை இனிமே தான ஆரம்பம்...:-)

- இன்னும் பயணம்(கன்னியாகுமரி)

Sunday 2 August 2009

பெங்களூர் to கன்னியாகுமரி - 4

எப்போதும் நட்ட நடுநிசியில் ராக்கோழி மாதிரி முழிச்சு உக்காந்து பதிவு எழுதி தான் பழக்கம். ஒரு மாற்றத்துக்காக இன்னைக்கு காலங்கார்த்தால.

சுசீந்திரம் தரிசனம் முடிந்து "முட்டம்" (அடி ஆத்தாடீ...என்று முட்டம் சின்னப்பதாசும், ஜெனிஃபர் டீச்சரும் டூயட் பாடுவாங்களே மறக்க முடியுமா?)போவதாக தான் பிளான்.முட்டம், சங்குத்துறை, சொத்தவளை இதெல்லாம் வங்காள விரிகுடா, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொடுத்திருக்கும், குட்டி குட்டி கடற்கரைகள். இதில் எங்கள் திருமணம் முடிந்த ஓரிரு நாட்களிலேயே, DVD outdoor ஷூட்டிங் க்காக, (இப்டின்னா என்னன்னு புரியாதவர்கள் பின்னூட்டத்திலோ, சாட்டிலோ, கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.இப்போதைக்கு சிரிப்பை கட்டுப்படுத்தி கொள்கிறேன்) சொத்தவளை போய் இருந்தோம். அதனால் "இந்த முறை முட்டம் போவோம், படத்தை பதினைந்து தரம் பாத்துட்டே, அந்த பீச்சை நேரா கொண்டு போய் காட்டுறேன்" ன்னு சொல்லிருந்தார். ஆனால் நான் சுசீந்திரத்தில் உருகி மருகி, கேள்வியெல்லாம் கேட்டு முடிந்து வந்து சேருவதற்குள், நேரமாகி விடவே, ஒரு சின்ன முறைப்புடன் பக்கத்தில் இருக்கும் சங்குத்துறைக்கே போவதாக முடிவாகி விட்டது.

"கடல், நிலா, ரயில் மூன்றும் எவ்வளவு முறை பார்த்தாலும் மனிதனுக்கு அலுக்கவே அலுக்காது" என்று படித்து இருக்கிறேன். எனக்கு இந்த லிஸ்டில் யானையை சேர்க்கணும் என்றால், கதிரை பொறுத்த வரை இந்த லிஸ்டை 'கடல், கடல், கடல்' என்று மாற்றி விடலாம். ஆனால், நான் இந்த முறை, "நான் கால் கூட நனைக்க மாட்டேன், எனக்கு இப்டி கடற்கரையில் உக்காந்து அலையை வேடிக்கை பார்க்க தான் பிடிக்கும்" என்று நல்ல பிள்ளையாக (பின்ன, மாமனார், மாமியார் எல்லாம் கூட வந்து இருந்தார்களே!) உக்காந்துட்டேன். ஆனால் உண்மையில், கடலில் நனைந்து விளையாடுவதை விட, உக்காந்து வேடிக்கை பார்ப்பது தான் அதி சுகம். அங்க நாங்கள் போட்டோ எடுப்பதை பார்த்து, "நம்ம ஊரு கடலை photoல்லாம் எடுக்கறாங்கப்பா" என்று நக்கல் அடித்தது ஒரு மீனவ இளைஞர் கூட்டம். நான் பாரிஸ் போய் இருந்தப்போ, "Eiffel டவர் போறேன் என்று கிளம்பிய போது, பிரெஞ்சு colleague ஒருத்தர், பதினேழு வருஷமா இதே ஊரில் இருக்கேன், ஆனா அந்த டவர் மேல ஏறினது இல்ல, அங்க அப்டி என்னதான் இருக்குன்னு நீ அங்கே போற?" என்று கேட்டதும், இப்போது எங்க வீட்டுக்கு வரும் உறவினர்கள் "லால்-பாக் போகணும்" என்று சொல்லும்போது, நானும் கதிரும் பரிமாறிக்கொள்ளும் நமுட்டு சிரிப்பும் ஞாபகம் வந்தது. கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் வரை யாருடைய/எதனுடைய அருமையும் நமக்கு தெரிவதில்லை.

25-June. Wednesday.
அதிகாலையில் சென்ற இடம் தேரூர். சில உறவினர்களை drop பண்ண போன போது, "நீயும் வாயேன்" என்று அழைத்தார். நாகர்கோயில் பகுதி மக்களிடம் நான் கவனித்த ஒரு விஷயம் யாரு வீட்டுக்கு போனாலும், அவங்க வீட்டில் இருக்கும் போட்டோ ஆல்பம் எடுத்து காண்பிப்பார்கள். காபி,snacks கொடுப்பதை போல, இதும் விருந்தோம்பலில் ஒரு விஷயம் போலும். நோட் பண்ணிக்கிட்டேன், நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்தால் நானும் பண்ணனும் இல்ல?

அன்றைய பிளான் திற்பரப்பு அருவி. குற்றாலம் போவதாக இருந்தது, சீசன் காலை வாரிவிடவே, திற்பரப்பாக மாறி விட்டது. நாகர்கோயில் - திருவனந்தபுரம் சாலையில், இந்த அருவிக்கு போவதற்கு diversion கிடைக்கிறது. நான், கதிர், அர்ஜுன், எனது நாத்தனார், அவருடைய கணவர், குழந்தைகள். போகும் வழியிலேயே பத்மநாபபுரம் அரண்மனை. 'பொங்கலை பொங்கலை வெக்க மஞ்சளை மஞ்சளை எடு...' 'வருஷம்-16' படத்துல வர்ற வீடு, இந்த அரண்மனை தான்.அங்க இருக்கும் guides எல்லாம்,அரண்மனையை சுற்றி காட்டும் போது, "இது தான் குஷ்பூ மேடம் குளித்த இடம், தலை வாரிய இடம்" ன்னு சொல்லுவாங்களாம். குஷ்பூ மேடம் க்கு திருமணம் ஆகி குழந்தைளும் பெரிசாகி விட்டதாலும், அருவி மீது இருந்த ஆர்வமும், எங்கள் எல்லாரையும் "அரண்மனையை வரும் போது பார்த்து கொள்ளலாம்" என்று சொல்ல வைத்தது. பாவம் நாங்கள் யாரும் அறிந்திருக்க வில்லை, 'வரும் போது நாங்க பதறி அடித்து டாக்டர் தேடி ஓட போகிறோம், இந்த அரண்மனைய பாக்க முடிய போவதில்லை' என்று.

திற்பரப்பு - ஒரு சிறிய அருவி தான். ஆனால் அதிக கூட்டம் இல்லை. தண்ணீரும் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. நாத்தனார் பிள்ளைகள் இருவரையும், அர்ஜுனையும் அவரவர் அப்பாக்கள் நேரடியா கொண்டு போய் அருவியில் நனைக்கவும், குழந்தைகள் பயந்து கத்த ஆரம்பித்து விட்டன. அப்பாக்கள் வேஸ்ட். புள்ளைங்க psychology தெரியலை. மூணு பேரையும் கூட்டி போய், கொஞ்சமா தண்ணீர் வர்ற இடத்துல விளையாட விட்டேன் சற்று நேரம் தான். படு குஷியாக விளையாட ஆரம்பித்தார்கள்.அதிலும் அர்ஜுன் செம ஆட்டம்.

பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு. ஒரு தனி அருவி. :-)
நானும் நாத்தனாரும் குழந்தைகளும் மட்டும் தான் அப்போது அங்க. அருவியில் தலை நனைக்கும் போது, யாரோ பட் பட்டென்று முதுகில் சாத்துவதை போல இருக்கும். அவ்ளோ வேகம். 'உண்மையில் யாரவது இப்டி அடித்தால் விட்டுடுவோமா?' என்று பேசிக்கொண்டே நனைந்து கொண்டு இருந்தோம்.

அழகாக போய் கொண்டிருந்த பயணம், திருஷ்டி பட்டதை போலாகி விட்டது.
நாத்தனாரும், அவருடைய இரண்டாவது பெண்ணும் பாசியில் வழுக்கி விழுந்து காயமாகி விட்டது. அதிலும் குழந்தைக்கு நெற்றி பொட்டில் ரத்தம் நிற்கவே இல்லை. காரில் இருந்த முதலுதவி சமாச்சாரங்களை வைத்து அப்போதைக்கு சமாளித்து விட்டு, திரும்பி நாகர்கோயில் விரைந்தோம் டாக்டரை தேடி.

-இன்னும் பயணம்.(மூர்த்தி கல்யாண வைபோகமே)

எச்சரிக்கை: 'உங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் விழறதுன்னா ரொம்ப பிடிக்குமா?' ரீதியில் பின்னூட்டங்கள் வரவேற்க படவில்லை'. :-)

With that I wish each of you, a ver happy Friendship Day! நண்பன் ஒருவன் வந்த பிறகு, விண்ணை தொடலாம் உந்தன் சிறகு, வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே....